14.2.09

வளர்சிதை மாற்றத்தில் இது ஒரு வசீகரமான படிநிலை.








இந்த வார்த்தை கொண்டுவரும் ஞாபகங்கள் முற்றிலும் அலாதியனது. உடனடி வெப்பம் ஊடுறுவி விடும். உடலின் உதிரிப் பாகங்களில் பௌதிக மற்றும் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். பூமிப்பந்தின் சகல ஜீவராசிக்கும் இது கட்டாயம் லவிக்கும்.நாடுகள் தோரும் இது வெவேறு அளவைகளில் வைத்து அளக்கப்படுகிறது. இந்தியா தவிர்த்த ஏனைய நாடுகளில் காதல் என்றவார்த்தையைத்தேடினால் குறைந்த பட்சம் உதடுகள் தழுவிக்கொள்கிற காட்சிகள் கிடைக்கும்.



ஆனால் இங்கோ கடிதம், உருகல், தாடி, கண்ணீர், கடைசியில் தற்கொலை என்ற காட்சிகள் தவிர்க்க முடியாமல் வந்துசேர்கிறது. இந்தியாவிலிருக்கும் கவிஞர்களையும், திரைப்படத்துறையினையும் காதலை நீக்கி கவனித்தால் மொத்தம் பத்துப் படைப்பாளிகள் மட்டுமே தேரலாம். காதல் தோல்விக்காகவும், பரீட்சைத்தோல்விக்காகவும் தற்கொலைசெய்துகொள்கிற செய்திகள் இந்தியாதவிர வேறெங்கும் இல்லை. இங்கு ஆன்மீகம், கலாச்சாரம், இரண்டும் கலந்து காதல்மீகமும், அல்லது காதலாச்சாரம் என்றுதன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. அகமணமுறையும் ஒருதார மணம் என்னும் கற்பிதமும் இங்கு சகல எல்லைகளையும் ஊடறுத்து புரையோடிவிட்டது. காதல் என்பது நூறு சதவீத கலப்பு என்பதே பொருள். உடல், ஜாதி, மதம் பிரதேச எல்லைகள்நொறுங்கி புதியதோர் பரிமாணம் எடுக்கிற அறிவியல் நிகழவேண்டும். இதில் எதையும் இழக்காமல் காதல் என்கிற வார்த்தைமுற்றுப்பெறாது. காதலா மதமா என்றால் மதம்தான் பெரிது என்பதை உணர்வுபூவமானதாக மாற்றிக் களவாணித்தனம் பண்ணிய படங்கள் சகலாராலும் போற்றப்பட்டது. நீயும் நானும் ஒரேதெரு உனது தந்தையும் எனது தந்தையும் ஒரே ஜாதி சைவப்பிள்ளைமார், இனி நாம் கதலிக்கலாம் என்று கவிஞர் மீரா சொன்னவை. யுத்த களத்தில் சொன்ன உபதேசத்தில் கூட அகமணமுறையைக் கடைப்பிடிக்காவிட்டால் இந்த நால்வகை வர்ணம் என்பது சீரழிந்து விடும் என்கிற புராணக்கவனம் இப்பொழுதும் கூர்ந்து அவதானிக்க வேண்டியதாகிறது.

இருப்பினும் இந்த கட்டமைப்புகளை மீறிய செயல்கள் காலங்காலமாக நடந்து வருகிறது. அந்த மீறல்களில் எண்ணிறந்த ஜதைகள் கலப்பலியானது. அவர்களில் பிரபலங்களான, அம்பிகாபதி-அமராவதி, மதுரைவீரன்- பொம்மி, காத்தவராயன் - ஆரியமாலா, முதுப்பட்டன்- பொம்மக்கா, திம்மக்கா, முதலானோர் காதல்குரியீடுகளாக அல்லது காதல் கடவுள்களாக மாற்றப்பட்டார்கள். முடிந்தவரை தடுத்து நிறுத்துவது மிறி நுழைபவர்களைப் போட்டுத்தள்ளிக் கடவுளாக்கு என்பதே இங்கு எல்லாவற்றிற்குமான உயர் தொழிநுட்பமாகிறது. கவனிக்கப்படத கொலைகள் மண்மூடிப்போனது. மீறிப்பிறந்த குழந்தைகள் அனுலோமாக்களாகவும், பிரதிலோமாக்களாகவும் வர்ணமிடப்பட்டது.



ஆடுகிற மயிலும், துள்ளிஓடுகிற மானும், கூவுகிற குயிலும் தங்கள் காமத்தைக் காதலாக்கியது. ஒருகால் நீட்டி ஒரு ரெக்கை விரித்து அரைவட்டமடிக்கிற சேவலின் கெக்கெக் சத்தம் காதல் கவிதை அல்லது காதலிசை. மனிதனும் அப்படியாகவே. கவிதை எழுது புல்லாங்குழல் இசை, கள்ளுண்ணாது கிறக்கம் எய்து. வளர்சிதை மாற்றத்தில் இது ஒரு வசீகரமான படிநிலை. எதையும் ஒளிவட்டமிடாமல் அணுகுகிற அறிவியலைக் கற்றுக்கொள்ள இந்த சமூகத்து அணுமதி கொடுங்கள்.காதல் கார்ப்பரேட் கம்பெனிகளின் விற்பனைச்சரக்குமல்ல, காவிச்சட்டைக்காரர்களின் அரசியலும் ஓட்டுப்பெட்டியுமல்ல என்பதை உரக்கச் சொல்லுங்கள். கொடூரச்செயல் செய்துவிட்டு கோவிலுக்குள் தஞ்சமடையும் கூட்டம் பெருகிவருகிறது. உன்னையும் என்னையும் அறியாத மதச்சாயத்தில் மயங்கிவிடாமல் காதலைக்கப்பாற்றுங்கள்.

2 comments:

மாதவராஜ் said...

அருமை. சொல்ல வந்ததை தெளிவாக, வெப்பம் குறையாமல் சொல்லியிருக்கிறாய். எழுத்துப் பிழைகள் அதிகம். அனுஜன்யாவுக்கும் இதே போலத்தான்.அங்கிருந்துதான் இங்கு வந்தேன்.

காதலர் தின வாழ்த்துக்கள் நண்பா!

காமராஜ் said...

நன்றி மாதவராஜ்.