ஒரு மாலை நேரம் நகரப்பேருந்துகாக் காத்திருந்த போது என்னருகே இருசக்கர வாகனம் வந்தது. ஏறிக்கொள்ளுங்கள்வீட்டருக்கே இறக்கிவிடுகிறேன் என்னும் உதவிக்குரல் அழைத்தது. தயங்கியபோது வாகன ஓட்டி அண்ணே என்னைத் தெரியலையா நான் ஸ்ரீரெங்கபுரம் உங்க பக்கத்தூர்க்காரன். நினைவுகளின் அடுக்கிலிருந்து கிளரிக் கிளரி எடுத்துப்போட்டகிளிச் சீட்டில், தனது தந்தையோடு மாட்டுத்தோல் கட்டிய பானைத்தாளத்தைச் சுமந்து வந்த சிறுவன் மங்களாக தெரிந்தான். அவன் பெயர் இன்னும் பிடிபடவில்லை. ஆனால் அவனது பேச்சில் ஒரு வசீகரப்பாடலின் சின்னச் சின்ன ஒலிவடிவம் அடங்கியிருந்தது. " காளியப்பத் தாத்தா மகனா " " ம்ம்...பாம்பாட்டிக் காளியப்பன் " ஆவாரம்பூ படத்தில் வரும் நாசரின் மீசை, காளியப்பத் தாத்தாவின் மீசைபோலிருக்கும். மேலாடை இல்லாத கிராமத்துசரீரம். பகலில் சிந்திய வியவையின் மேலே விசிறுகிற வசீகரக் குரல் . பாம்புகடிக்கு பாடலால் வைத்தியம் செய்த இசைமருத்துவர் அவர். காடுமேடுகளில் வெறுங்காலோடு உழைக்கிற சம்சாரிகளுக்கும் கூலிக்காரர்களுக்கும் பாம்புகள் எதிரியில்லை. மிதிபட்ட பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதற்கு ஏழை பணக்காரன் வித்தியாசமும் இல்லை. பின்னால் கைமருந்தும் வேப்பங்குலையும் தவிரக் கிராமங்களுக்கு வேறெந்த மருந்துமில்லை. விஷமுறிவு தீரும் வரை தூங்கக் கூடாது என்பது கட்டாய வைத்தியம். அன்று இரவு கடிபட்டவரின் வீட்டு வாசலில் ஊர் விழித்திருக்கும். சுத்துப்பட்டியில் யாரைப் பாம்புகடித்தாலும் " கூப்பிடு பாம்பாட்டிக் காளியப்பனை " என்ற குரல் ஆவலாக ஒலிக்கும். தீப்பந்தமோ, பெற்றோமாஸ்க் விளக்கோ, அரிக்கேன் விளக்கோ அவரவர் வசதிப்படி ஏற்றிவைக்கப்படும்.அந்த மங்கிய ஒளியில் இரவு முழுவதும் கடிபட்ட நோயாளியோடு வாழ்க்கையில் அடிபட்ட மக்களின் வேதனையை ஒத்திவைக்கிற கதைப்பாடல்கள் நடக்கும். முதல் வட்டத்தில் ஊர்ப் பெரியவர்களும் முதியவர்களும் , நடுக்கூட்டத்தில் மற்றவரும், ஓரத்தில் பெண்களுமாக மக்கள் அரங்கம் கூடும். பாடறியேன் படிப்பறியேன் படிப்புவகை நானறியேன் என்று முன்னிரவு தொடங்கி விடிய விடியமக்களைத்தூங்க விடாது தாலாட்டும் காளியப்பத் தாத்தாவின் குரல். வரிவடிவில் தனது கைவசம் எதுவும் வைத்திராத அவர் ஒரு நூறு கதைப்பாடல்களின் நடமாடும் ஆவணக்காரன். விராட பர்வம், கீமாயாணம், குறவன்பாட்டு, மதுரைவீரன் கதை,நந்தனார் சரிதம், கட்டபொம்மன் கதை, காத்தவராயன் ஆரியமாலா கதை, அரிச்சந்திர மயானகாண்டம், என்று பிரபல நாடோடிப் பாடல்களின் பெரும் பட்டியல் வைத்திருந்தார். கதையின் ஊடே நடப்புகளை ஊருக்குச்சொல்லும் கலைஞனின் தவிப்பு காளியப்பத் தாத்தாவிடமும் உண்டு.1969 ல் அறிஞர் அண்ணாவின் மரணத்தையும் அதைத் தொடர்ந்து இறுதி ஊர்வலத்துக்கு ரயிலில் போனவர்கள் இறந்த பரிதாபமும் செய்தித்தாளில்லாக் கிராமங்களுக்கு இசையோடு கொண்டு சேர்த்தவர். " அண்ணமாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே மன்னே மணிக்குறவன் மாண்ட கதையச்சொல்லிவாரேன் " சிட்டி பஸ்ஸு ஓட்டிவரும் டிவிஎஸ் டைவரவன் " என்று எழுச்சிக்காரன் மணிக்குறவன், தீச்சட்டிக் கோவிந்தன் இப்படி கணக்கிலடங்காக் கதைசொன்னவர். நடுச்சாமத்தில் தூக்கம் கண்சொக்கும் நேரத்தில் அந்தக்கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும் யாராவது ஒருவரின் ஊரறிந்த நடப்பைப் பாடலாக்கி கூட்டத்தை எழுப்பிவிடும் வித்தைக்காரர். ஓட்டமுந்தா பெருநடையா ஐயா ஓடிக்கொண்டு இருக்கிறானே என்று பாடும்போது பின்பாட்டுக்காரார் தன்னனன்னே னன்னன்னானே போடு தானன்னே தன்னத்தானே என்று சேர்ந்துகொள்வார். கூட்டம் ஆவலோடு கேட்டுக் கொண்டிருக்கும்போது. பாட்டைச் சுத்தமாக நிப்பாட்டிவிடுவார். கூட்டத்திலிருந்து பாட்டு நின்றுபோனதற்கான காரணம் கேட்கும் ஒரு குரல். " காப்பித்தண்ணி இல்லாமலே சும்மா கலங்குறானாம் ஊமத்தொர " என்று பாட ஆரம்பித்து விடுவார்." இந்தா வந்திருச்சி, ஏ எண்ணா வெக்கத்தக் கெடுக்காதெ " என்றபடியே ஐந்து நிமிட அவகாசத்தில் வரக்காப்பி வந்து சேரும். வந்த காப்பிக்கு வணக்கம் சொல்ல கதைகளில் வரும் பெண் பாத்திரங்களை காப்பி கொடுத்த நாச்சியா மாதிரி " கொனத்திலயும் தங்கக்கொனம் அல்லி..லே லேலோ, அவ கொளம்பு வச்சா நெய் மணக்கும் அல்லி..லே லேலோ" மனத்துலயும் நல்லமனம் அல்லி..லே லேலோ, ஒரு வெத போட்டா குருணி கொட்டும் அல்லிலே லேலோ " இப்படி இட்டுக்கட்டிப் பாட்டுச்சொல்லும் கலைஞன் காளியப்பத்தாத்தா. தனது பாடலெங்கும் சாதாரண ஜனங்களையே கவனப்படுத்தும் அவர் ஒரு போதும் நிகழ்ச்சிக்காக சன்மானம் ஏதும் பெற்றுக்கொள்வதில்லை. இரவில் பாடிமுடித்து விட்டுப் பகலில் காட்டுக்கு உழைக்கப்போகும் அவர் தனக்கென தன் பாடல்களைக் கூட சேமிக்கத் தெரியாத பொதுப்பாடகன். ஏடறியா ஏழைகளின் இலவச ஊடகமான அவரது பாடல்கள்வியர்வைக்கும் வேதனைக்கும் தற்காலிக நிவாரணி. நாட்கள் நகர்ந்துபோனது. ஒரு நாள் அலுவலர் குடியிருப்புப் பகுதியைக் கடந்த போது நான்குபேர் ஒலிபெருக்கி வைத்துக் கொண்டு கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தக்கூட்டத்தின் நடுவில் ஓசன்னா கீதம் பாடுவோம் என்று பாடிக்கொண்டிருந்த வாலிபன் காளியப்பத் தாத்தாவின் மகனேதான். |
20.2.09
நினவுகளின் அடுக்கிலிருந்து கிளரி எடுத்த குயில் சீட்டு
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//நினவுகளின் அடுக்கிலிருந்து கிளரி எடுத்த குயில் சீட்டு//
எப்படித்தான் உங்களுக்கு இப்படி கவித்துவமான தலைப்புகள் கிடைக்கிறதோ?
சிற்பிகள சிலைவடித்திருக்க சந்ததிகள் அம்மி கொத்துமாறு ஆயிற்று வாழ்க்கை
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
வேலன் சார் வணக்கம்.
பதிவு போட்டுவிட்டு திரும்பிப்பார்க்க
நேரம் வாய்க்கவில்லை.
எப்படியும் ரெட்டைப்பனைபோல்
நீங்களும், மாதவராஜும்
கருத்து எழுதியிருப்பீர்கள்
என்கிற உறுதிப்பாடு பொய்க்கவில்லை.
சாத்தூர் வெயில் ஆரம்பித்துவிட்டது.
உங்கள் அன்பிருக்கையில் எதுவும் சுடாது.
Post a Comment