8.6.09

நெருங்கி வரும் பழைய குலக்கல்வி முறை.




இந்தப் பதிவிற்கு வருகை தந்த வலை உள்ளங்களுக்கும்,வாக்களித்த அன்பர்களுக்கும், வழக்கம் போல என்னை உற்சாகப்படுத்தயூத்புல் விகடனில் மறுமொழி சேர்த்த நண்பர்கள். ஞானசேகரன், விஷான்வின்,svv, பெரியாரை விமர்சிக்கிற நண்பர்,முனைவர் கல்பனா,கலையரசன் ஆகியோருக்கும்,குட்பிளாக்கில் இணைத்த யூத்புல் விகடனுக்கும். என்னை இந்த வலைத்தளத்துக்குள்தள்ளிவிட்ட எனது உயிர் நண்பன் மாதுவுக்கும் நன்றி.





ஆயிரத்து நூறு மதிப்பெண்கள். கவுன்சிலிங்கில் நல்ல கல்லூரி கிடைப்பதற்கான நூறு சதவீத வாய்ப்பிருந்தது. எனினும்தனது பெண் மெப்கோ கல்லூரியில்தான் படிக்கவேண்டுமென்கிற பிடிவாதத்துக்கு ஐந்து லட்சம் பணம் தயார்செய்துவிட்டு" என்ன, கண்டும் கானாததுக்கு கல்விக்கடன் வாங்கிக்கொள்வேன் " என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் ஒரு வங்கி அதிகாரி.



இந்த நிமிடம் வரை மேல்நிலைப் பள்ளிக்குள் ஒருவர் கூட நுழையமுடியாத மேட்டுப்பட்டிக் கொத்தனாரின் வம்சாவளியில் முதல் பெண் ஒன்பதாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கிறாள். தகுதிகாண் தேர்வில் தோற்றுப்போக அவளது தந்தை " நல்லவேளை இடம்கிடைக்காமல் போனது கிடைத்திருந்தால் சாகுமட்டும் சாந்துக்கரண்டி தேயத்தேய பாடுபட்டுப்போடணும், இனி அவளை தீப்பெட்டி ஆபீஸுக்கு அணுப்பிப்பிட்டு அக்கடான்னு அலையலாம் " என்று சந்தோசப்படுகிறார்.
ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலும், அமைச்சர் பொன்முடி நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் கட்டணம் வசூலிக்கிற தொழில் நுட்பக்கலூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கறாராக அறிக்கைவிடுகிறார். அது அறிக்கையா அல்லதுஅழைப்பா என்பதை அறியாத ஜனங்கள் ஏழுகோடிக்குமேல் தமிழகத்தில் இருக்கிறார்கள். மருத்துவக்கல்லூரிக்கான நன்கொடையாக நாற்பது லட்சம் வசூலிக்கிற கல்வித் தந்தைகளும் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கல்லூரி வளாக முகப்பில் சிலையும் இருக்கிறது.

தேடு கல்வியிலாத ஊரைத் தீயினுக்கிறையாக்குவோம், பள்ளித்தலம் அணைத்தும் கோவில் செய்குவோம் என்று சொன்ன மகாகவி பாடத்திட்டத்தில் மட்டும் இருக்கிறான்.

மண்ணெண்ணை விளக்கினில் படித்து கலெக்டர் ஆன கதையெல்லாம் என் சின்ன வயதில் கேட்டிருக்கிறேன். மண்ணெண்ணை வாங்கவும் வக்கில்லாத என்போன்றோருக்கு தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தது. படிக்க நினைக்கிற யாருக்கும் சமூக பொருளதாரா ஏற்றத் தாழ்வுகள் தடையாக இருக்கக் கூடாது என்னும் மிக உயர்ந்த லட்சியத்தால் காமராஜர் மதிய உணவும், கல்வி உதவித்தொகையும், மாணவர் விடுதிகளும் கொண்டு வந்தார். வறுமையும் உழைப்பும் உரமான அணுபவக்கல்வியோடு ஏட்டுக்கல்வி இணைந்து ஒரு புதிய சமூகம் உருவானது ஒருகாலத்தில். அப்போதுதான் இந்த தேசத்தை நேசிக்கிற நிஜ மனிதர்களும் நிஜக் கல்வியாளர்களும் உருவானார்கள்.



இன்று நிலைமை தலைகீழ். ஆங்கில வழிக்கல்வி பயிலாத மாணவர்கள் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டவர்களாவதும் தொழில் நுட்பக்கல்லூரியில் தன் மக்களைச் சேர்ப்பதற்கு சம்பளமோ கிம்பளமோ சேர்த்துவைக்காத தகப்பன் தறுதலையாவதும்.பத்துப் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் அரசாங்க ஆசிரியர்கள் அந்தச் சம்பளத்தைத் தனது மகனைத் தனியார் பள்ளியில் படிக்கவைக்கச் செலவு செய்வதும் நாகரீகமாகிப்போனது. ஒரு அரசு தனது குடிமக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் பாதுகாப்பு, நீதி போன்றவற்றை இலவசமாக மட்டுமே வழங்கவேண்டும். அது மட்டுமே சரியான அரசையும் மக்களையும் நிர்மானிக்கும். அதை விடுத்து எல்லாவற்றையும் விற்பனைக்கு கொண்டுவந்தால். கொக்காக்கோலா க்ரூப் ஆப் போலீஸ் ஸ்டேசன், டாடா ஜுடிசியல் நீதிமன்றம் (பி)லிட், காட்கேபட்டில் அன் சன்சுக்குச்சொந்தமான கங்கை நதி என் நீண்டுகொண்டே போய் கடைசியில் அரசாங்கமும் தனியார்மயமாகும். அப்புறம் ''லாடு ரிப்பன் எங்கப்பன்'' என்று மறுபடியும் பள்ளிகளில் கடவுள் வாழ்த்துச்சொல்ல வேண்டியது வரும்.

13 comments:

ஆ.ஞானசேகரன் said...

இது ஒரு வேடிக்கை நண்பா! கல்வியை தனியார்துறை நடத்துவதும், மதுக்கடையை அரசாங்கம் நடத்துவதும். டாக்டர் புரட்சி தலைவர் MGR ஐ இந்த விடயத்தில் பிடிக்காத ஒன்று, கல்வியை தனியாருக்கு தாரைவார்த்த பெருமையை தட்டிசென்றவர்...

காமராஜ் said...

அமாம் ஞானசேகரன்.
ஒரு எம்பிபிஎஸ் சீட் நாற்பது லட்சம் என்பதை இந்த சமூகம்
எந்த அதிர்ச்சியும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும்படியான
சூழலும் மனோ நிலையும் வேடிக்கை.

அட்மிசனுக்கு முந்துங்கள் என்று காபரே வுக்கு அழைப்பது போல்
கல்வி நிறுவணங்கள் விளமபரம் செய்வது இன்னும் வேடிக்கை.

Vishalivinh said...

படிக்க காசில்லாமல் என் தந்தை என்னை மன்னித்து விடு என்று சொல்லி விட இருந்த போது, கில்டு சர்வீஸ் எனும் ஓர் அமைப்பு மூலம் படிப்பை பெற்றவள் நான். ஆனால் அந்த அமைப்பை இன்று நடத்தக்கூடாது என்று தடை செய்த அரசாங்கத்தை என்ன செய்வது. (காரணம் அந்த அமைப்பு வெளி நாடுகளில் இருந்து பணம் அனுப்ப்பும் நல்ல இதயங்களை கொண்டது என்பதே)

venu's pathivukal said...

அன்பு காமராஜ்

நேரத்தே செய்யப்பட்டிருக்கும் ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
எம் ஜி ஆர் பற்றிப் பேசும் போது குமுதம் இதழில் அந்தக் காலத்தில் வெளிவந்திருந்த குறுங்கவிதை நினைவுக்கு வருகிறது.

வேருக்கு வெந்நீர்
விழுதுக்குப் பன்னீரா
அப்பனுக்குச் சாராயம்
பிள்ளைக்குச் சத்துணவா?

எஸ் வி வேணுகோபாலன்

Unknown said...

கோடிஸ்வரர்களும் OBC பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற்று பலன் அடைவதை ஆதரிக்கும் இடதுசாரிகள் இதையெல்லாம் எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது.
பணக்கார மைனாரிட்டிகளுக்கும், பணக்கார OBC களுக்காக குரல்
கொடுத்தவர்கள் இடதுசாரிகள். இட ஒதுக்கீட்டின் கீழ் வராதவர்களில் உள்ள பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களுக்காக நீங்கள் என்ன
செய்துள்ளீர்கள். அவர்கள் குறித்து
நீங்கள் காட்டிய அக்கறை என்ன.
40 லட்சம் நன்கொடை கேட்கும்
குடும்பமும் ‘சமூக ரீதியாக, கல்வி ரீதியாக' பின் தங்கிய வகுப்பு என்ற
பிரிவின் கீழ் இட ஒதுக்கீட்டில் பயன் பெறுவதை நீங்கள் என்றைக்கு எதிர்த்திருக்கிறீர்கள். உங்கள் போலி
அக்கறைகள், போலிக் கண்ணீர்களுக்கு அளவே இல்லையா?.

காமராஜ் said...

வாருங்கள் வணக்கம் svv.
ஒவ்வொரு வருடமும் கிராமத்து நடுநிலைப்பள்ளி
மாணவிகள் எளிதில் போய்வந்து படிக்கிற மாதிரியான
உயர்நிலைப்பள்ளிகள் கிடைப்பதில்லை. இப்படி
இடைநின்று போகும் அவலம் இங்கே தொடர்கிறது.

காமராஜ் said...

வாருங்கள் வணக்கம் விஷால்வின்.
உங்கள், என் போன்றவர்கள் பதிவர்களாக
வருவதைக்கூட சகிக்கமுடியாத
விமர்சகர்கள் இருக்கும் இந்த
தேசத்தில், ஏகலைவன்களின் பெருவிரலறுக்கத்
துடிக்கும் வெறி நிறைந்த இந்த தேசத்தில்,
சம்யூகனைச் சிரசறுக்கிற இந்த தேசத்தில்
புராணகால ஆதிக்க வெறி பேண்ட் சட்டை
போட்டுக்கொண்டு சிந்தனைகளில் அறிவாள் கோடாரி
வைத்திருக்கும்.
அவர்கள் வேறு என்ன செய்வார்கள் ஐஎம்எப் ல் கடன்
வாங்கி லட்சுமி மிட்டல் அனில் அம்பானிகளின்
சொத்தைப்பெருக்கும்போது மூச்சுவிடமாட்டார்கள்.
அண்ணிய முதலீடுகளை கையேந்தி வாங்குவார்கள்.
ஆனால் ஆதி வாசிகள், தலித்துகள் பிற்படுத்தப்பட்டவர்கள்
படிப்பதற்கு பணம் வருவதை மட்டும் எல்லாவிதத்திலும் தடுப்பார்கள்.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

கல்வி என்பது ஒரு சாராருக்கு மட்டும் என்ற நிலை என்று மாறுமோ?
ஆங்கில வழி கல்வி மோகம் என்று குறையுமோ? உங்களின் இந்த பதிவு குட்ப்ளாக்கில் வந்துள்ளது வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

//பெரியார் விமர்சகர்//
வணக்கம் நண்பரே,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

நன்றி முனைவர் கல்பனா.

கலையரசன் said...

உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...
வாழ்த்துகள்!

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

காமராஜ் said...

நன்றி கலை அரசன். நன்றி முனைவர் கல்பனா.இளமை விகடனை
இப்போதுதன் பார்த்தேன்.

Subu said...

நல்ல பதிவுக்கு நன்றி

குற்றம் குறை நிறைய இருக்குது... எளிதில் சொல்லிவிடலாம்...

இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம் ? புது யுத்திகள் ... வழிகள் சொல்லுங்களேன் ...

சில உதாரணங்கள்
-------------------------

அரசு வரிப்பணித்தின் சிறு பகுதியை மட்டுமே கல்விக்கு செலவிடுகிறது..அதை அதிகரிக்க வேண்டும். வருதத்துக்கு ___% செலவிடவேண்டும்

தனியார் கல்வி மையங்களை அதிகமாய் திறக்கவேண்டும் ... போட்டியை அதிகரிக்கவேண்டும்.., அல்லது தனியார் கல்வியை மூடிவிடவேண்டும் ....

வெளிநாட்டவர் கல்வி மையங்களில் மூலதனம் செய்தல் வேண்டும் / கூடாது ... ??

இன்ன பிற .. ??