9.6.09

காக்காச்சோறு - விமலனின் சிறுகதைத்தொகுப்பு




வீடு என்பது அகமா ? புறமா ? இரண்டும் சந்தித்துக்கொள்கிற களம் என்றே நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது.


வீட்டிலிருந்து வெளிக் கிளம்புகிற சரியான மனிதனும் அவன் புரிதலுமே, புற உலகம் குறித்து தெளிவாக முடிவெடுக்க முடிகிறது. கணவர்களின் உடனடி ஆலோசகர்கள் மனைவிகள். குழந்தைகளின் உடனடி உதாரண மனிதர்கள் பெற்றோர்கள். அவர்களுக்குள் உரையாடல் தீர்ந்து போன பின்னர் முகட்டு வளையைப் பார்த்தபடிதான் எல்லோரும் காலம் தள்ள நேரிடும். நமது சமூக ஏற்பாட்டில் உறவுகளுக்குள் உரையாடல்கள் குறைந்தே காணப்படுகிறது. காரணம், இங்கு எல்லா உறவுகளுமே ஆண்டான், அடிமை கோட்பாட்டில் தான் தீர்மானிக்கப்படுகிறது, செயல்படுகிறது. ஆதலால் தான் அந்த இடத்தை பாட்டிகளும் நண்பர்களும் பிடித்துக் கொள்கிறார்கள். தோழர் மூர்த்தி உறவுகள் குறித்து ஒரு மிகப்பெரிய இலக்கிய ஆரய்ச்சியே நடத்தியிருக்கிறார்.


இடக்கரடக்கல் வனராஜன் வீட்டை விட்டுக்கிளம்பும்போது துணிப்பை நிறையக் கோரிக்கைகளோடு கிளம்புகிறார். நிராதரவான நிலைநமையில் கிடந்து அல்லாடுகிற மனது மண்குழியில் கிடக்கிறதான கற்பனையும் வர்ணனையும் வாசகனிடம் மனசைப் பிசைகிற கிரக்கத்தை உண்டு பண்ணும். இறுதியில் தூக்குவாளி டீயுடன் இசக்கியின் வீட்டில் அவருக்கு ஒரு மாயக்கம்பளம் காத்திருக்கிறது அது இசக்கியின் முதுகு. அதில் ஏறித்தான் வாழ்க்கையின் வெறுமைகளைத் தாண்டிப் போகிறார்கள்.


குழந்தைகள் உலகம் ரொம்ப அலாதியானது, அதில் நீங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது, எதிர்கொள்ளவும் இயலாது. உங்களிடம் இருக்கும் அச்சடிக்கப்பட்ட பதிலுக்குள் இல்லாத கேள்விகள் உற்பத்தியாகும் வாழ்கைக்கான ஆராய்ச்சி சாலை அது. அதைத்தான் வண்ணத்துப்பூச்சி பேசுகிறது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு காண்க்ரீட் தளங்களிலும் தேனெடுக்கிற வல்லமை கூடிப்போகிறது கதையின் ஓட்டத்தில். படைப்பாளி எல்லாவற்றையும் கூடுதலாக உற்றுப்பார்க்கிறான் அதனால் தான் காகங்கள் அவனிடம் சொல்லாத சேதிகளெல்லாம் சொல்லுகிறது. காக்கை எப்போதுமே ஒதுக்கப்பட்டவைதான். எனவே அவை விடுபட்ட பறவைகளில் ஒன்றாகிப்போகிறது. அதனால் தான் அந்தக் காக்கைகள் ஒன்று திரண்டு மூர்க்கமாக ஆண்டனா கம்பிகளையும், கான்க்ரீட் சுவர்களையும் கொத்திக் குதறுகிறது. இது போலப் படிமமான பல இடங்கள் வாசிப்பினூடாக வந்து நம்மை யோசிக்க வைக்கிறது.


தேனீர்க்கடையில் அமர்ந்து, அல்லது நின்று, பொழுது கடத்துகிறவர்களை கூர்ந்து கவனித்தால் அவர்கள் கைக்கும் உதட்டுக்கும் இடையில் பயணமாகும் அந்த சுடு திராவாகத்தின் இனிப்பில் உலகத்தின் கசப்பைத் துடைகிற முயற்சி நடப்பதை அவதானிக்கமுடியும். அதனால் தானே கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் தேனீர்க்கடைகள் அதிகமாக வியாபித்திருக்கிறது. கசப்பைக்கடக்க வருகிற மனிதர்களை எதிர்பார்த்தபடி, அங்கே 24 மணிநேரமும் தேனீர்க் கொதிகலன்கள் கொதித்துக்கொண்டே இருக்கிறது. மூர்த்தியின் எழுத்துக்கள் அதிலிருந்து கிளம்பும் ஆவியைப்போல அலை அலையாய் வாழ்க்கையின் அடித்தளத்தை அர்த்தத்தோடு விவரிக்கிறது.


பெண்ணின் மனம் ஆழம் என்பதெல்லாம் மாய்மாலம், எட்டிப்பார்க்கவே தயங்குகிற ஆண் மனதுதான் குரூரமான ஆழம். மூர்த்தியின் கண்ணில் படுகிற பெண்கள், சோகக்கவிதையாய் பிணவறையில் கிடக்கிறவள், அவள் மீது போர்த்தப்பட்ட சந்தேகங்கள், வார்த்தை கொண்டு விரட்டுகிற கணத்த சரீரத்துக்கிழவி, அழுத்தமான நினைவுகளை வெள்ளை ஆடைகொண்டு போர்த்தியபடி உலவும் அம்மா, காய்ந்து கிடக்கும் கரிசல் தரிசை செருப்பில்லாத காலோடு கடந்துபோகிறவள், சிறைக்குபோன கணவனோடு சிதைந்து போகிற நம்பிக்கை, அதை எதிர்கொள்கிற கந்தனின் மனைவி, அடுப்பங்கரையிலும், குளியலரையிலும் வியர்வையோடு ஈர்க்கிற மனைவியின் பிம்பம், அதன் பின்னால் நிழலாடுகிற தொலைந்துபோன காதல். இப்படி ரக ரகமான பெண்களின் அருகில் போய் உறையாடுகிறது மூர்த்தியின் படைப்புகள். ஒரு ஆண், பெண் மனதோடு பேசுவது கடினம், ஆனால் அதற்கான முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது. மூர்த்தியின் கதைப் பரப்பெங்கும் அந்த முயற்சி நடக்கிறது.


யாரும் பொறாமைப்படுகிற மொழி மூர்த்தியுடையது. அன்றாடம் நம்மோடு பயணிக்கிற, நமக்குப் பிடிக்காமல் போனாலும், நமது மூஞ்சைச்சுற்றி வட்டமிடுகிற கொசுக்களின் ரீங்காரத்தைப்போல உரத்துக்கேட்கிற விளம்பர வரிகளை வம்புக்கு இழுக்கிற வரிகள் நம்மையும் சேர்த்து உரையாடலுக்குள் இழுத்துக்கொள்கிறது.


எழுத்துக்கு பிரச்சாரம் தேவையா என்னும் கலாச்சாரச் சண்டையில் மூர்த்தியின் எழுத்துக்கள் மிகத்துள்ளியமாக பிரச்சாரத்தின் பக்கமே நிற்கிறது. அது அடிமக்களின், அதாவது நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே, ஒதுக்கப்பட்டவர்களுக்கும் மேலே இருக்கிறவர்களைப் பற்றிய பிரச்சாரம். எல்லோரும் கஷ்டப்படுகிற தொழிலாளி பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், ஒரு வயோதிக சுமைத் தொழிலாளியின் அந்திம காலம் பற்றிப்பேசுகிறார். இப்படிச் சில கதைகள் நம்மை அதிர வைக்கிறது, சில கதைகள் வாசகனோடு உரையாடிக்கொண்டே கூட வருகிறது. சில கதைகள் படிமங் கலந்து வந்து கண்ணாமூச்சி காட்டுகிறது. காமம் குரோதம் நிறைந்த குடிகாரார்கள் அஞ்சு தலை நாகமாக, சந்தேகக்கணவன் சாக்கடையாக, வந்து அடிவாங்குகிறார்கள்.


இந்தப்புவிப் பரப்பில் தன் கண்ணுக்குள் படுகிற அவலங்கள் அணைத்தையும் மொத்தமாகப் படம்பிடிக்கிற ஆர்வத்தோடு கிளம்பியிருக்கிற எழுத்து, அவரது மனசைப் போலவே மென்மையானதும் விசாலமானதுமாகிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் அறிவொளி நாடகக்கலைஞானாக, பின்னர் தொழிற்சங்க பிரதிநிதியாக, எல்லாவற்றிலும் தனது செய்நேர்த்தியை உறுதிசெய்கிற மூர்த்தி, தன் கதைகளின் மூலமாக அகம் புறம் இரண்டையும் இன்னொரு தளத்திற்கு எடுத்துக்கொண்டு போகிறார்.


ஆசிரியர் - விமலன் அல்லது எஸ்.கே.வி.மூர்த்தி.வெளியீடு - வம்சி புக்ஸ்.விலை - ரூ 70.

6 comments:

கவி அழகன் said...

supper

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு நண்பா

காமராஜ் said...

நன்றி வணக்கம் கவிக்கிழவன்.

காமராஜ் said...

நன்றி ஞானசேகரன்

அன்புடன் அருணா said...

விமரிசனத்தைக் கூட கதையாய் உங்களால்தான் எழுதமுடியும்......அழகு.

காமராஜ் said...

வணக்கம் அருணா மேடம்.
ரொம்ப நாளா காணோம்
பல்புகள் இனி நிறைய எரியும்.
நன்றி..