17.6.09

விளிம்பு மனிதரையும், போராட்ட குணத்தையும் பரிகசிக்கும் நகைச்சுவைகள்








சாமி படத்தில் விவேக் தனது தெரு நண்பர் வீட்டுக்குப் போவார். அங்கே திண்ணையில் இருக்கும் இரண்டு பையன்களில் ஒருவன் படிப்பான் ஒருவன் காலனிகளை துடைப்பான். வழக்கம்போல சின்னக்கலைவாணர் அந்த செருப்பு துடைக்கும் சிறுவனுக்காக வாதாடுவார். இன்னின்ன மாகான்கள் பிறந்த இந்த பூமியில் சின்னதுகளை செருப்புத்துடைக்க வைக்கலாமோ என்று சொல்லிவிட்டு பின்னர் வாடா உன்னை நான் படிக்க வைக்கிறேன் என்று சொல்லி அவனிடம் உனக்கு என்ன படிக்க பிடிக்கும் என்று கேட்பார அவன் லா என்று சொல்லுவான் '' அநியாயமா ஒரு சட்டமேதையை இப்படி பண்ணிட்டேளே ''லா வுல என்ன லா படிக்கப்போறே சிவிலா, கிரிமினலா ? இப்படிக் கேட்கிற வரை எல்லாம் சரியாகப்போகிறமாதிரித்தோன்றும். அந்த விளிம்பு நிலைச்சிறுவன் சகீலா என்று சொன்னதும் ஒரு உலக மகா சிரிப்பாக மாறும்.


கொஞ்சம் உற்றுக்கவனித்தால் அதில் படிமமாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது. கீழ்சாதிப்பெண்கள் மட்டுமே அவர்களுக்கு போகப்பொருளாக இருக்கிறார்கள் என்பதுவும், என்னதான் படிக்க வைக்க முயற்சி செய்தாலும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பதும். இப்படியான ஆதிக்க மனோபாவக் கருத்தோட்டத்தை ஊர்ஜிதம் செய்கிற மாதிரியான பிரச்சாரத்தை ஒளித்து வைத்திருக்கும் அந்த வசனம். கிறிஸ்தவப் பெயர் கொண்ட பெண்கள் கற்பு நெறிகளில்லாத பெண்களாகவும், தீவிரவாதிகள் குல்லா தாடி வைத்திருப்பவர்களாகவும், திருடர்கள் பனியன் கைலிகட்டிக்கொண்டு கருப்பாக இருப்பதாகவும், என்ன பகுத்தறிவுப் படம் எடுத்தாலும் பூஜை போட்டுத்தான் படம்துவக்க வேண்டும் என்கிற சினிமா மூடநம்பிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த காமெடிகள் இருக்கிறது.



பொதுவாகவே விவேக்கின் காமெடிகள் ஒரு மேல்தட்டு, அல்லது மத்திய தர மனோபாவத்தை மெச்சுகிற, அல்லது சிலாகிக்கிறவைகளாகவும் விளிம்பு மக்களை, பெண்களை பரிகசிக்கிறவைகளாகவும் இருக்கிறது. '', மூன்றாம் பாலினத்தை கேலி பண்ணாவிட்டால் அவருக்கு ஜென்மமே சாபல்யம் அடையாது. 'வாலிபர்களே போட்டிருக்கிற ட்ரெஸ்ஸப்பாத்து டீசெண்டான பொண்ணுங்கனு நம்பிறதீங்க வாயத் தொறந்தா ஒரு கூவமே ஒடுதப்பா' என்று இன்னொரு படத்தில் ஒரு கருத்துசொல்லுவார் அவர். பெண்களை மிகக்கேவலமாக அதுவும் குப்பத்துபெண்களை, கூவம் நதிக்கரையில் வசிக்கிற பெண்களை மட்டமாக பேசுவது, " நடைபாதை என்பதே நடக்கிறதுக்கு தானே'', எனும் அறிவார்ந்த மேல்தட்டு கேள்விகளையும் நையாண்டியையும் தமிழ் திரையுலகில் பரப்பும் ஒரு பிற்போக்கு சிந்தனை மிகுந்தவர். நலிந்த கலைகளில் ஒன்றான சாவு மேளத்தை இளக்காரமாக்குகிற, 'இதுக்குத்தான் இன்னும் சங்கம்' ஆரம்பிக்கவில்லை என்று தொழிற்சங்கங்களை கேவலப்படுத்துகிற ஒருவர் விவேக். அவரை கலைவாணர் என்எஸ்கே வோடு ஒப்பிடுவது தான் மிகச்சிறந்த காமெடி. ஆனாலும் தமிழ் சூழலில் புரட்சி என்கிற சொல்லுக்கு வேறுவிதமான அர்த்தங்கள் வரக்காரணமாக இந்த திரைப்படம் தான் இருந்தது என்பது கசப்பான வரலாறு. அதற்குள் கிடக்கும் அவர் அப்படித்தானே சிந்திக்க முடியும்.



விவேக் ஒருபோதும் ஆட்சி அதிகாரங்களை, கேலிப்பொருளாக்கியது கிடையாது அப்படி ஆரம்பத்தில் இருந்திருந்ததாக வைத்துக்கொண்டாலும் கூட ஒரு பலத்த கண்டணத்துக்குப்பின் அவர் தனது திசையை நலிந்த நாட்டார் தெய்வங்கள் பக்கம் திருப்பிக்கொண்டார். அதற்குப் பின்னர் தனது சொந்த தாத்தாவைக்கூட அவர் '' பெரியார் '' என்று சொல்லவில்லை. மாறாக நான் ஒரு போதும் மதத்துக்கு எதிரானவன் இல்லை என்று நேரிலும், பூடகமாகவும் அறிவித்துக் கொண்டார். கலைஞர் கருணாநிதியை கேலிசெய்கிற அவர் வேறு அரசியல் கட்சிகளை பெரும்பாலும் கேலி செய்வதில்லை.



ஆட்சி அதிகாரங்களை, உலகமயத்தை, சர்வாதிகாரத்தை, இனவாதத்தை, கேலிப்பொருளாக்கிய மகா கலைஞன் சாப்ளின், மகாப்பெரும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கண்டணத்தையே அசட்டை செய்தபடி மேடையேறிய மதுரகவி பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் அன்றைய அரசங்கமான காங்கிரசை எதிர்த்தும் சுயமரியாதையை ஆதரித்தும் பிரச்சாரம் செய்த NSK, MR.ராதா எல்லாம் தங்களின் சமரசமற்ற கருத்துக்களால் மட்டுமே தனித்து நின்றார்கள். கலைவடிவங்கள் காலந்தோறும் அதிகார பீடங்களின் மீதான எதிர்க்குரலை உயத்திப்பிடித்தபடியே வளர்ந்து வந்திருக்கிறது. இந்த வரலாறுகளை மிரிண்டா போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விளம்பரம் செய்கிற விவேக் எப்படி அறிய முடியும்.

12 comments:

அக்னி பார்வை said...

அப்படியே வழிமொழிகிறேன், நல்ல பதிவு

சதுக்க பூதம் said...

//கிறிஸ்தவப் பெயர் கொண்ட பெண்கள் கற்பு நெறிகளில்லாத பெண்களாகவும், தீவிரவாதிகள் குல்லா தாடி வைத்திருப்பவர்களாகவும், திருடர்கள் பனியன் கைலிகட்டிக்கொண்டு கருப்பாக இருப்பதாகவும்//

பெரும்பாலும் மோசமான போலிஸ் அதிகாரியை காட்டும் போது அவர் கருப்பாகவும் பின்புறம் அம்பேத்கார் படமும் இருக்கும்.
தசாவதாரம் படத்தில் நம்பியை அடித்து கொடுமை படுத்தி கட்டி இழுத்து செல்லும் போது அவரை அடிப்பது பெரும்பான்மையாக கருப்பான உருவங்களாகவும் அவருக்காக வருந்துவது சிகப்பான உருவங்களாகவும் இருக்கும்.உண்மையில் அப்போது நடந்தது சிவனை வழிபடும் ஐயர்களுக்கும், விஷ்ணுவை வழிபடும் ஐயங்காருக்கும் அடிப்படை சண்டையாக இருந்தாலும் சிவனை வழிபடும் ஐயர்கள் மறைக்கபட்டிருப்பார்கள்.(சோழர்கள் ஆட்சியில் தான் வருணாஸ்ரமம் மிக உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல பட்டது.

அதிக மார்க் எடுக்கும் உயர் ஜாதி பையனுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றால் அருகில் கருப்பு நிறத்துடன் உள்ள ஒருவருக்கு சீட் கிடைத்து குதிப்பதை போல் இருக்கும்

காமராஜ் said...

ரொம்ப நன்றி அக்கினிப்பார்வை.
வணக்கங்கள்.

காமராஜ் said...

வணக்கம் சதுக்க பூதம்,
வருகைக்கு நன்றி.
அடர்த்தியான பின்னூட்டம்.
பிரக்ஞயில்லாமலே செரித்துக்கொண்ட
நச்சு கருத்துக்கள் இவை. இதை
சொல்லப்போனால் அப்படியே
அரை வட்டம் அடித்துவிடுகிறது
பொதுவற்ற பொதுஜனம்.

ஆ.ஞானசேகரன் said...

//அவரை கலைவாணர் என்எஸ்கே வோடு ஒப்பிடுவது தான் மிகச்சிறந்த காமெடி.//

நானும் பலமுறை எண்ணியதுண்டு நண்பா

அழகிய நாட்கள் said...

அன்றாடம் போராடி வாழ்க்கை நடத்துகிற நிலையிலும் நம்மைப்பற்றி யார் என்ன சொன்னால்தான் என்ன என்ற மன நிலையிலும் ஜீவித்துவருபவர்கள்தான் விளிம்பு நிலை மனிதர்கள். இது நமது நகைச்சுவைக்கலைஞர்களுக்கு போதாதா? வடிவேலு என்ற கலைஞரும் இப்படித்தான்."அட! சண்டாளா!! அடி சண்டாளி" என்கிற வசன உச்சரிப்பை அனேகமான அவரது படத்தில் கேட்டிருக்கிறோம். 1989 ஆம் வருடத்திய வன் கொடுமை தடுப்புச்சட்ட்த்தின் அடிப்படையில் வழக்குத்தொடர வேண்டிய வசனம் இது. அட்டவணைப்படுத்தப்பட்ட 76 சாதிகளுல் 15 ஆவது இடத்தில் இருக்கும் ஒரு சாதிப்பெயர் இது. (சண்டாளா). சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களை சாதியின் பெயரைக்குறித்து திட்டுவது வன் கொடுமைதானே. நகைச்சுவை என்ற பெயரில் இது போன்ற அவலங்களை அனுமதிக்கும் உயர்சாதி மனோபாவம் கொண்ட குழுக்களை நாம் முதலில் கண்டனம் செய்ய வேண்டும்.

IKrishs said...

Yedhu nagaisuvai yengira puridhal varuvadhu konjam kkastam dhan...Palam perum yeluthalar thiru saavi avargalin "Washington" l thirumanam ippodhu padithen..Adhil narikuravargal sitharikka patta vidham romba adhirchiyaga irundhathu...Andha velinatu ammani nari kuravargalai yum koodave theru naygalai US varavalaithu naaygal Kuravargalai paarthu kuraivillye yena kavalai paduvaar...Andha kaala yelthil adhuvum periya yeluthalar padaipil ippadi oru vakkira nagaisuvaiya? yendru varuthapatten..Krish

காமராஜ் said...

வாருங்கள் நாராயணன் வணக்கம்.
கலைஞன் அதுவும் நகைச்சுவைக்கலைஞன்
மிகவும் கவனப்படுத்தவேண்டிய சமூக முன்மாதிரி.
ஆனால் அவர்கள் பெரும்பாலும் தங்களின்
பொறுப்பை உணர்வதில்லை.

காமராஜ் said...

வாருங்கள் ஞானசேகரன்.
காலையில் அலுவலகம் போக
தாமதம் ஆனது இப்போதுதான்
பார்த்தேன். நன்றி.

காமராஜ் said...

அனபுள்ள UM (க்ரிஷ்)
போகிற போக்கில் நானும் நகைச்சுவை
செய்கிறேன் என்று நான்காம்தரமாக
சிந்திப்பவர்கள் இங்கு ஏராளம். துரதிஷ்டவசமாக
அவர்கள் பிரபலமாகிப்போவது தான் பெரும் கஷ்டம்.

மு. மயூரன் said...

தமிழ் வணிக சினிமா-அதன் நகைச்சுவைகள்- விவேக் குறித்த தங்கள் விமர்சனங்கள் எனக்கு உடன்பாடானவையே.

அந்த வகையில் இப்பதிவும் எனக்கு உடன்பாடானதே.

சின்ன நெருடல்..

இங்கே முதலாவதாக எடுத்துக்காட்டப்பட்ட நகைச்சுவைக் காட்சியில் அந்தச் சிறுவன் "ஷகீலா" என்றதும் அந்த வீட்டுக்காரரைப்பார்த்து விவேக் சொல்லுவார்,

"ஏன்டா, இரவில மிட்நைட் மசாலா பாத்து பாத்து இந்தப் பையனையும் இப்பிடி கெடுத்து வச்சிருக்கியேடா" என்று.

இப்படி இதை முழுமையாகப்பார்க்கும் போது தங்கள் எடுத்துக்காட்டு முழுப்பொருத்தமானது என்று சொல்லமுடியாமற்போகிறது.

காமராஜ் said...

வாருங்கள் மயூரன்..
மொத்தமாக இருக்கும் இளைஞர்களீன்
மத்தியில் அவ்......., என்கிற குரலும் , பீட்டர், அப்பீட்டு
என்கிற சொற்களும் புழங்குவது அவர்கள் அதன்பால்
வெகுவாக. ஈர்க்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.
ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே நேரத்தில் சில
காட்சிகளைப்பார்க்கிரார்கள் என்பதையும் சேர்த்து
மனதில் வைத்துக்கொண்டு வார்த்தைகளை உபயோகப்படுத்த
வேண்டும்.
பெண்கள் மதுபாட்டில் வைத்திருப்பதாக, கழிப்பறை சுத்தம் செய்யும்
பெண்கள் குடை பிடித்து வருவதாக, பிச்சைக்காரர்கள் MLA ஆவதாக,
அவர்கள் செல்போன் வைத்திருப்பதாக காட்சிப்படுத்துவது தவறில்லை.
அதை காமெடியாக்குவதுதான் வேதனையான விஷயம். அது பார்வையாளனின்
கலங்களான மனதை மிகத் துள்ளியமாகத் தெளிவு படுத்திவிடும்.
ஒரு பிற்போக்குத்தனமன, மூட நம்பிகைகளையும், ஜாதிய மத அடிப்படை
வாதத்தையும் அது கெட்டிப்படுத்திவிடும்.
இதை நாம் ஒருபோதும் எஸ்விசேகர்,
ஒய்.ஜி.மகேந்திரன், SS.சந்திரன் போன்றவர்களிடம் எதிர்பார்ப்பதில்லை.