( bank workers unity இதழுக்காக 12.01.2004 ல் எழுதியது.) அப்போது நானும் நடராஜனும் கிழக்கு ராமநாதபுரக் கிராமமான பாண்டுகுடியில் தங்கியிருந்தோம். நடராஜன் வெள்ளையபுரம் கிளையில் மேலாளராக இருந்தார். வங்கிக்கிளைக்கு எதிரே மாடியில் தான் எங்கள் அறை. வேலை தவிர்த்த நேரங்களில் சீட்டு விளையாடுவதும்,சினிமாப் பார்ப்பதும்,புத்தகம் படிப்பதுவுமாக இருந்த காலங்கள் அவை. அப்புறம் இருக்கவே இருக்கிறது காதலுக்காக அலைவதும் அதைப் பற்றிப் பேசுவதுவுமான நேரங்கள். அந்த ஊதா நிற இன்லாண்ட் லட்டரை வாங்கி வைத்துக்கொண்டு கிழிக்கவும் முடியாமல் படிக்கவும் முடியாமல் தவித்த காலங்களை இனி கதைகள், சினிமா மூலமாகத்தான் சொல்லமுடியும், உணரமுடியும். இப்போது அந்த இடத்தை அலைபேசியும் குறுஞ்செய்தியும் அபகரித்துக்கொண்டது. இதோ இந்த கணினி என்பதுகூட சுஜாதாவின் எழுத்துக்கள் மூலமாக மட்டும் அறிமுகமாகியிருந்த காலம். ஜீனோ கதையெல்லாம் ஞாபகம் வருது. எங்களுக்கு அங்கே ஒரு சித்த மருத்துவர் நட்புக்கிடைத்திருந்தது. அவர் வீட்டில் இரண்டு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட நேசனல் பானாசோனிக் டேப் ரிக்கார்டர் இருந்தது. அதில் இளையராஜா பாடல்கள் கேட்பதற்காக அங்கு போவோம். கவிதைபாடு குயிலே குயிலே பாட்டை ஸ்டீரியோவில் கேட்டுக்கொண்டே கண்ணை மூடி மிதக்கலாம். அவருக்கும் அவரது செவிலிக்கும் இடையிலான காதலில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்து வைத்த நாங்கள் இருவரும் அவருக்கு மிக நெருக்கமாகிப் போனோம். அவர்தான் அந்த நான்கு பேரை அவரது உறவினர்கள் எனச்சொல்லி எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். எல்லோருமே பதினைந்து முதல் பதினெட்டு வயதுக்குட்பட்ட விடலைகள். ஆனால் அந்த வயதுக்குண்டான எந்த புறச்செயல்களும் துருதுருப்பும் இல்லாததை நாங்கள் முதலில் சங்கோஜம் என்று நினைத்தோம். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தலையாட்டுவதன் மூலமாக மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் நாளில் சந்தேகம் ஊர்ஜிதமாகியது. அவர்கள் டெலோ அமைப்பின் ஆயுதம் தாங்கிய போராளிகள் என்பதை ஒத்துக்கொண்டார்கள். அப்போது அது ஒன்றும் குற்றச்செயலாக இருக்கவில்லை. பல ஞாயிற்றுக் கிழமைகளில் பச்சை ராணுவ லாரிகளில் வந்து ஆதரவும் நிதியும் திரட்டுவார்கள். அப்போது இபிஆரெல்எஃ., டெலோ, டெசொ,எல்டிடிஇ தவிர்த்து இன்னும் வேறு அமைப்புகளும் இருந்தது. அவர்கள் எல்லோருமே தமிழகத்தில் தங்குதடையில்லாமல் வந்துபோனார்கள். கூமாப்பட்டி மலையில்கூட அவர்களுக்கு கூடாரம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் அதை ரகசியமாக வைத்துக்கொண்டோம். ஒருநாள் அவர்களை சுப்பையாபிள்ளை கடைக்கு சாப்பிட அழைத்துச் சென்றோம். நான்கு இட்லிகளுக்குமேல் ஏதும்வேண்டாம் என்று கறாராக மறுத்துவிட்டார்கள். ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது, கல்லைத்தின்றாலும் செறிக்கிற காலம் அது. நீண்ட நேர நச்சரிப்புக்குப்பின் இப்படிச் சொன்னார்கள். இரண்டொரு நாளில் மீண்டும் காடு திரும்புவோம் அப்புறம் உணவென்பது கிடைக்கிற போது எடுக்கிற அரிய விசயமாகும். அதை இப்போது அதிகம் சாப்பிட்டால் காட்டிலும் இதே அளவு வயிறு கேட்பதற்கு வழிவகுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டுப் போனர்கள். பசிவந்திடப்பத்தும் பறந்து போகும், லட்சியம் அப்படியல்ல என்பதை அந்தச்சின்ன வயதுக்காரர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றார்கள். அதன்பிறகான நாட்களில் வயிறு முட்டச்சாப்பிடுகிற நேரங்களில் எப்படியாவது அவர்கள் நினைப்பு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. பத்து வருடம் கழித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வேறு நான்குபேர் குப்பியடித்து உயிர் மறுத்தபோது நாங்கள் மிக அருகிலிருந்த சம்பவம் நடக்கும் வரை. ஒரு இருபதாண்டு கடந்து விட்டது. பதுங்குகுழியிலோ,கடும்சண்டையிலோ,பிடிபட்டு சித்திரவதையிலோ இறக்காமல் உயிரோடிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனால் நிலைகுத்திய கண்களில், பாவாடை பறக்க ஓடிய பெண் சிநேகிதியின் உருவமோ, விளையாட்டுக்காகக் கொடுத்த முத்தமோ கடைசியாய் நின்றுபோயிருக்கலாம். அல்லது பேய்க்கதை கேட்ட இரவில் தாயின்மேல் கால்போட்டுத் தூங்கிய நாட்கள் நினைவில் வந்து போயிருக்கலாம். அவை கருமருந்து சிதறிக்கிடக்கிற அந்தக் காடுகளில் கட்டாயம் புதைந்து கிடக்கும், வலிமையாக.சண்டைகள் ஓய்ந்து நாடு திரும்பும் மக்கள் விறகொடிக்கவோ, விவசாயம் பண்ணவோ,கால்நடைகள் மேய்க்கவோ காட்டுக்குள் போகையில், மிதித்து விடாமல் கவனமாகக் கடந்து போகவேண்டும் |
10.8.09
பறிக்கப்பட்ட பதின்பருவத்து விளையாட்டுக்கள் சிதறிக்கிடக்கும் காடு.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
தீராத சோகங்கள் இவை. காடுகள் இல்லை தோழனே, அது.... இப்போது கல்லறை!
ஒரு கையலாகத் தனத்தோடு கூடிய மிக கொடிய, நெடிய மௌனத்தை தாண்டி....
வேறெதுவுமில்லை இப்போது
பனி மலைச் சிகரங்களில் துப்பாக்கிகள் உறைந்திருக்கும் சூழ்நிலையில், சாவை வரவேற்றுக் காத்துக் கிடக்கும் வீரர்களும், எப்பொழுது கணவனின் சாவுச் செய்திவரும் என்று பயந்து பயந்து தூக்கத்தை தொலைத்த அவன் மனைவியும், அடுத்தவர்களின் தந்தைகளை மட்டுமே பார்த்து வளரும் பிள்ளைகளும், இது போன்ற இழப்புகள் இங்கு ஏராளம்.துக்கங்களும் துரோகங்களும் ஏராளம்.
வா பகையே....வா.....
வந்தெம் நெஞ்சேறி மிதி...
பூவாகவும், பிஞ்சாகவும், மரம் உலுப்பிக் கொட்டு
வேரைத் தழித்து வீழ்த்து....
ஆயினும் அடிபணியோம்....
என்பதை நினைவில் கொள்.
நம் போன்ற அறிவுசார் குழுக்கள் தான் இது போன்ற எழுத்துக்கள், பேச்சுக்கள் மூலம் மக்களின் உணர்வுகளோடு விளையாடி வருகின்றன் என்பதையும் மறந்து விடக் கூடாது.
//கருமருந்து சிதறிக்கிடக்கிற அந்தக் காடுகளில் கட்டாயம் புதைந்து கிடக்கும், வலிமையாக.சண்டைகள் ஓய்ந்து நாடு திரும்பும் மக்கள் விறகொடிக்கவோ, விவசாயம் பண்ணவோ,கால்நடைகள் மேய்க்கவோ காட்டுக்குள் போகையில், மிதித்து விடாமல் கவனமாகக் கடந்து போகவேண்டும்//
சொல்ல தெரியாத ஒரு நெகிழ்வாக இருக்கு நண்பா
அவர்களின் கொள்கைகள் லட்சியங்களுடன் எனக்கு முரண்பாடு உண்டு. அனால் உங்களின் எழுத்து நடை மிக அருமை. உங்களின் எழுத்து நடைக்ககதான் படித்தேன், அருமையான எழுத்து நடை.
நெகிழ்வான இடுகை...
நன்றி என் தோழா...
நன்றி கதிர்,
நன்றி ஆரூரான், கவிதைக்கும் சேர்த்து.
நன்றி ஞானசேகரன்,
நன்றி அன்புமணி
எவ்வளவு நைச்சியமான,
பதவிசான பின்னூட்டம்.
நன்றி ராம்ஜி.
உயிர் பெரிது, இழப்பு கொடிது.
அத்துணை தியாகங்களுக்கும் இன்னும் ஓர் தீர்வு ஏற்படவில்லை என நினைக்கும் போது வலிகூடுகிறது.இன்னும் எத்தனை உயிர்களை நாம் பலி கொடுக்க வேண்டுமோ..? கண்ணீரை தவிற அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாத கையாலாகதவர்கள் ஆகிவிட்டோமே....
ஆமாம் மாப்பிள்ளை.
திரு அரூரன் சொன்னது போல நம் போன்றவர்கள்
மட்டுந்தான் புலம்புகிறோம். எழுதுகிறோம்.
உடனடியாக ஏதும் செய்ய இயலாதுதான்.
ஆனல் அம்பலப்படுத்துவதுதான் எழுத்தின் வேலை.
Post a Comment