20.11.09

மனசுக்குள் சலசலக்கும் பனங்காடு - ( நெடுங்கதையிலிருந்து ஒரு பகுதி )







ஆறுகச்சாமி நாடாருக்கு வெத்திலைதான் உயிர். அந்த அழுக்கேறிப்போன கைவச்ச பனியனும், வெத்திலை வாயும் தான் அவரது அடயாளம். வெத்திலைக்காக அவர் வெள்ளியிலான டப்பாவோ, காடாத்துணியில் அடுக்கு வைத்துத்தைத்த சுருக்குப்பையோ, வைத்திருக்க வில்லை. அதுக்கான தேவையும் இல்லாமலே அவருக்கும் வெத்திலைக்குமான தொடுப்பிருந்தது. அவருக்கு முன்னாலுள்ள மண் கொப்பறையில் ததும்பத் ததும்ப கருத்த வெத்திலை நிறைந்திருக்கும். கொஞ்சம் தள்ளி அஞ்சரைப்பெட்டியில் கொட்டப்பாக்கு கிடக்கும். சுண்ணாம்பிருக்கிற தகர டப்பாவும், அங்குவிலாஸ் போயிலையும் கைக்கெட்டுகிற தூரத்திலேயே இருக்கும். மேல்பரப்புக்கு வந்து மீன்கள் வாய் பிளக்கிற மாதிரி வாயைத்திறந்து கொர் கொர் என தொண்டையிலிருந்து சத்தம் எழுப்பி வெத்திலைச் சாறை வாய்க்குள் தக்கவைத்துக் கொள்வார்.


தூங்குகிற நேரம் போக எந்நேரமும், கன்னத்தின் இடது பக்கம் சிலந்தி மாதிரி பொடப்பா இருக்கும். சாப்பிட, வரக்காப்பி குடிக்க மட்டும் வெளியே வந்து வாய் கொப்பளிப்பார். அது தவிர நாள் முழுக்க சரப்பலகையிலே உட்கார்ந்திருப்பார். குத்துக்காலிட்டு, சம்மணம் கூட்டி, ஒருக்களிச்சு மாறி மாறி உட்கார்ந்து கொண்டு குண்டி காந்தலை தள்ளிப்போடுவார். கருங்காலி மரத்தாலான அந்தக் கல்லாப்பெட்டியில் அய்யாணார் கோயில் எண்ணச்சட்டி மாதிரி அழுக்கேறியிருக்கும். அதற்கு மேலே நீளவாக்கிலுள்ள கணக்கு நோட்டு இருக்கும்.


சாமுவேல் வாத்தியார், காலேஜ் மாடசாமி, பைபிளம்மா, பிரசண்டுசுந்தராசு, பேர்களில் தலைப்புபோட்டு அவருக்கான தமிழில் ஊச்சி ஊச்சியாய் கணக்கெழுதியிருப்பார். காலேஜ் மாடசாமி பொண்டாட்டி வந்து புஸ்த்தகத்தை தூக்கி 'இதென்ன மொலாளி கக்கூசுல எழுதுற கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் கணக்கு நோட்டுல எழுதிவச்சிருக்கீரு எங்க மாமா பேரு அஞ்சந்தான'. என்று சொல்லுவது குறித்தெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. அதற்கவர் மீண்டும் மீன் வாயைப்பிளக்கிற மாதிரி சிரிப்பார். எதிரே நிற்கிரவர்கள் மீது செகப்பா தூறல் விழும். அவர் எழுதுகிற அ வுக்கு கு வுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.


'எனக்கென்ன தாயி ஓங்க வீட்டுக்காரு மாறி காலேஜிப்படிப்பா கெட்டுப்போச்சு அந்தக்காலத்துல எங்கைய்யா பனைக்கி போயிட்டு வந்து பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப்போவாரு பிள்ளமாரு வீட்டுப்பிள்ளைகளெல்லாம் பெஞ்சில ஒக்காரும் நாங்க பின்னாடி தரையில அதுக்கும் ப்஢ன்னாடி ஒங்க தெருக்காரப்பிள்ளைக ஒக்காரனும், அதெல்லாம் படிப்பாம்மா' வெத்திலைச்சாறை கொர் கொர் என்று காறி வெளியில் வந்து செகப்பு உருண்டையாய் வெத்திலையைத் துப்பி விட்டு திரும்பவும் ஆரம்பிப்பார். அது இரண்டு தலைமுறைச் சரித்திரம்.


அந்தக் காலத்தில் ஆறுமுகச்சமியின் அய்யா இசக்கிமுத்து நாடார் பனையேறுவதில் நாடறிந்த கெட்டிக்காரர். சுத்துப் பட்டியிலெல்லாம் "பனைக்கி இசக்கி" என்று சொலவடை சொல்லுகிற அளவுக்கு பெரிய வித்தைக்காரர். காலாக்கை இல்லாமல் நிமிசத்தில் பனையுச்சிக்குப் போவதும். கண்மூடி முழிக்குமுன்னே பதினிக்கலயத்தோடு கீழே நடப்பதுவும் பார்ப்பதற்கு கண்கட்டி வித்தை மாதிரி இருக்குமாம். சில நேரங்களில் அருகருகே இருக்கும் பனைகளில் ஒன்றிலிருந்து இறங்காமலே இன்னொரு மரத்துக்குத்தாவி விடுவதால் அவருக்கு ''மாயாவி'' ங்கிற பாட்டப்பெயரும் உண்டாம். அந்தக்காலத்தில் பனை ஏறத் துவங்குகிற எல்லாரும் அவருடைய காலைத் தொட்டுக்கும்பிட்டு விட்டுத்தான் பனையேறுவார்களாம்.


அதுமட்டுமில்லெ தெக்கத்தி கம்புக்கு அவராலாலேயே பேர் வருமளவுக்கு கம்பு விளையாட்டில் அவரே பல புதிய அடிகளையும் அடவுகளையும் உருவாக்கினார். அவர் கம்பு சுத்துவதைப்பார்க்க கொடுத்துவைக்கணும். கம்பைக்கையில் வாங்கி குருவணக்கம் சொல்லி தரைதொட்டுக் கும்பிடுகிற வரைதான் கம்பும் கையும் கண்ணுக்குத்தெரியும். சுத்த ஆரம்பித்ததும் காத்தைக்கிழிக்கிற சத்தம் மட்டுமே உய்ங் உய்ங் என்று கேட்டுக்கொண்டே இருக்குமாம். சில நேரங்களில் சுத்தியும் பத்து எளவட்டங்களை நிற்கச்சொல்லி அவர்களிடம் கல்குமியைக் கொடுத்து எரியச்சொல்வாராம். எல்லாக் கல்லும் கம்பில் பட்டு சிதறுமாம். அவரிடம் வெங்கலப் பூன்போட்ட பிரம்பு போக, சுருள் வாளும், மான் கொம்பும் கூட பள பளப்பாக இருக்குமாம். அந்தக் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கையில் அவர் கண்களுக்குள் ஒரு பனைக்கூட்டம் கிடந்து சலசலக்கும்.


சின்னப்பிராயத்தில் கஞ்சி கொண்டு போகும்போது ஒவ்வொரு பனைமரத்தையும் எண்ணிக்கொண்டே போவதும் கூட ஆறுமுகச்சாமியின் விளையாட்டுகளில் ஒன்று. முதல் முதலாக அய்யாவோடு பனைக்கூட்டத்துக்குள் நடக்கும்போது காத்தும் பனையோலைச் சலசலப்பும் எங்காவது ஒரு பனை மரத்திலிருந்து இன்னொரு பனையிலிருக்கிற ஆட்களோடு பேசுவது எல்லாமே அமானுஷ்யமாகத்தெரியும். ஒரு பயம் உண்டாகும். ஆனால் அய்யா பக்கத்திலிருப்பதால் அந்தப்பயம் தெரியாது. பழகிப்போன பிறகு பனைகளெல்லாம் சேக்காளி ஆகிப்போனது. அந்தச்சலசலப்பு அவனைக் குசலம் விசாரிக்கிற மாதிரியே இருக்கும். அது அப்பாவின் சேக்காளிகள். அவருக்குப்பிடித்த அந்த மரத்துக்குப் பக்கத்தில் வந்ததும் கஞ்சிச் சட்டியை இறக்கி வைத்து விட்டு அன்னாந்து பாளைகளையும், நுங்குகளையும் பார்த்து பார்த்து தனக்குள்ளே பேசிக்கொள்வது.


திரும்பி வரும் போது எக்குப்போடு ஆறடி ஏழடி ஏறி, பிறகு சறுக்கிக் கீழே விழுந்தது எல்லாம் ஆறுமுகச்சாமிக்கு நினைவுக்கு வந்து போகும். பனையோலைக் குச்சல் தான் வீடு. பனங்காய் வண்டியும், பனமட்டைச் செருப்பும் அய்யா செய்து கொடுப்பார். அந்த வீட்டில் எப்போதும் பதினி வாடையும் கருப்பட்டி வாசமும் அவர்களோடே குடியிருக்கும். பதினிக்காலம் போனபின்னால், பனம்பழம். ஒரே ஒரு பழம் கிடந்தாலும்கூட கனவிலும் கூட இனிக்கிற வாசம் அந்தப் பிரதேசம் முழுக்க பரவியிருக்கும். அப்புறம் அவிச்ச பனங்கிழங்கு. இப்படி திங்கவும், விளாத்திகுளம் சந்தையில் கொண்டுபோய் விற்கவுமாக வருசம் பூராவும் அந்தப் பனைக் கூட்டம் அவர்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அய்யாவும் வீடு திரும்புகிற போது பதினிக் கலயத்துக்குள்ளோ, கையிலோ பண்டமில்லாமல் வரமாட்டார். காலையில் பனங்காட்டுக்குப் போகிற அய்யாவோடு இனிப்பு வடைகள் எப்படி வந்தது என்கிற சந்தேகம் தனக்குப் பிள்ளைகள் பிறக்கிற வரை தீராமலே இருந்தது.

14 comments:

அன்புடன் அருணா said...

பனம்பட்டையில் பதினியும் நுங்கும் இப்பவும் தமிழகம் வந்தால் ரசித்து ருசிக்காமல் செல்வதில்லை!

லெமூரியன்... said...
This comment has been removed by the author.
லெமூரியன்... said...

\\காத்தும் பனையோலைச் சலசலப்பும் எங்காவது ஒரு பனை மரத்திலிருந்து இன்னொரு பனையிலிருக்கிற ஆட்களோடு பேசுவது எல்லாமே அமானுஷ்யமாகத்தெரியும்....//

எவ்ளோ உன்னிப்பான கவனிப்பு இது...! அப்டியே சின்ன வயசு நியாபகங்களுக்குள்ள போக முடியுது......முழுஆண்டு பரீட்சை விடுமுறைக்கு தாத்தா ஊருக்கு போனா பணங்காட்ல கண்டிப்பா ஐயனார் கோவில் கட்டி விளையாடுவோம்..! சமயங்களில் மறைந்து விளையாடும்விளையாட்டு.

\\பனங்காய் வண்டியும்...//
தாத்தா செய்து கொடு அதை தெரு முழுவதும் உருட்டிச் சென்றது நினைவில் நிழலாடுகிறது...

சந்தனமுல்லை said...

காட்சிகள் விரிகிறது கண்முன்னே!! பனைகள் என்றால் எனக்கு சிறுவயதில் வந்த கனவு மறக்க முடியாதது...:)))...ராட்சஸன் கதைகள் கேட்டு உறங்கிய ஒரு நாளில், ராட்சஸன் வந்து வீட்டின் கொல்லையில் இருக்கும் பனை மரத்தை பிடுங்கி பல் விளக்குவதாக!! :))) கோடைகாலங்களில் காலையில் சாப்பாடே நுங்குதான்..இப்போதெல்லாம் ஊருக்குப் போனாலும் நுங்கெல்லாம் வெட்ட ஆள் கிடைப்பது இல்லை..:(

நல்ல இடுகை..பல நினைவுகளை கொண்டு வந்தது!!

க.பாலாசி said...

பனைமர நினைவலைகள் மீண்டும் வருவதை தடுக்க முடியவில்லை. ஊருக்கு செல்லும்போது கண்டிப்பாக நான் விரும்பி உண்பது. கதையைப்படிக்கும்போது படிக்கும் போது அந்த பாத்திரங்களுடன் பயணப்படுவதுபோன்ற உணர்வு மேலோங்குகிறது.

கதை நன்று....

ers said...

நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?

காமராஜ் said...

அருணா இந்த விவரிப்பை எழுதிவெச்சு எந்த புத்தகத்துக்கும் அனுப்பமுடியாமல் பொத்திப்பொத்தி வைத்திருக்க நேர்கிறது.
அவை அந்த இருட்டு மரங்கள்தான் எத்தனை ப்ரியமானது. பட்டை மனமா, பதினிமனமா ரெண்டும் ஒன்னொன்னை தொறத்துது. இழுத்து மூச்சு வாங்கித்தேக்கி வைக்க வேண்டுகிறது பனங்காட்டின் சுவாசத்தை.

காமராஜ் said...

அன்புத்தம்பி லெமூரியன் வாங்க வணக்கம்.
ஒவ்வொரு தரமும் பதிவிடுவீர்கள் எனத்திறந்து
ஏமாந்து போகிறேன் என்னாச்சு எழுதுங்க,
காத்திரமான சேதிகளை.

காமராஜ் said...

சந்தன முல்லை, பதினி நொங்கு பழம் கருப்பட்டி கிழங்கு இப்படி வாசம் வந்துட்டே இருக்கு பனையை நினைத்தால்.

காமராஜ் said...

நன்றி பாலாஜி.

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு காமராஜ்.முழுக்க எழுதி முடிச்சிட்டீங்களா?ஆம் எனில் பதியுங்களேன்.பெருசு சிறுசு என யோசிக்க வேணாம்.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு காமராஜ்.

சுந்தரா said...

நேரில் பார்க்கிறமாதிரி அருமையான விவரிப்பு...

படிக்கப்படிக்க மனசில் அந்த மறக்கமுடியாத கூப்பினி(சரியான்னு தெரியல)வாசனை...

மஞ்சள் போட்டு வேகவச்ச பனங்கிழங்கும், மதுரமான அந்த தவுணின் ருசியும் ஞாபகத்தில் வந்துபோகுது.

காமராஜ் said...

நன்றி பாரா.

காமராஜ் said...

நன்றி சுந்தரா