24.6.10

வானம் அறிந்ததணைத்தும் - ஒற்றைக் கதவு.

இப்படிக்கற்பணை செய்துகொள்ளலாம்.அடர்ந்த பசிய காடு.அப்பொழுதுதான் மழைபெய்து ஓய்ந்த இளம் மாலை.அருகே பெண்குரலில் பேசியபடி நடக்கக்கிடைக்கிற சிலாக்கியம் எப்பொழுத்தாவது வாய்க்குமானல் அதை நான்
தோழர் ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்பான ஒற்றைக்கதவு என்றே சொல்வேன்.அதிர வைக்கும், அல்லது விடுகதை  முடிவாய்த்தான் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏதுமில்லாமல்.கதைகளை இயல்பாகச் சொல்லி முடிக்கிறார்.சந்தோஷ் ஏச்சிக்கானம்.மலயாள மூலமான இந்த சிறுகதைத் தொகுப்பை.அப்படியே தமிழ் மயமாக்கி விட்டிருக்கிறார் ஜெயஸ்ரீ. ஒரிஜினாலிட்டி வேண்டுமென்பதற்காக 'மச்சி,ஙொய்யால' என்று கதை வசனம் பேசுவதாய் மொழி பெயர்க்கிற ஹாலிவுட் மொழிமாற்றப் படங்களைப் பார்த்தவுடன் வடிவேலு இல்லாமலே சிரிப்புவரும்.

இன்னொரு நாட்டின் இலக்கிய வளங்களை சொந்த மொழிக்குக் கொண்டு வரும்போது நாம் வெறும் கதைகளை மட்டும் உள்வாங்கிக் கொள்வதில்லை. அந்த நிலப்பரப்பு,அதன் மொழி,அங்கு சாப்பிடுகிற உணவு,உடை உள்ளடக்கிய எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும். தெரியவழி செய்ய வேண்டும். கண்ணைமூடிக்கொண்டு யோசித்தால் ஸ்தெப்பிப் புல்வெளியும்,மணப்பாடு கடலும்,அன்னைவயலின் கோதுமை வரப்புகளும்,எக்கத்தரினா பாவலவ்னாவும், சோக எழில் ததும்பும் ஒற்றையடிப் பாதையும் காட்சியாக ஓடவேண்டும்.ராஜாக்களையே பார்த்திராத நூற்றாண்டுகள் தாண்டிய தலைமுறைகளுக்கு அவர்களின் முகபாவங்களைக் கூடச் சித்தரிக்கமுடிகிற வல்லமை எழுத்துக்கு மட்டுமே சாத்தியம்.

அப்படித்தான் மலயாள மண்ணின் சுகந்தத்தையும்,செடிகளின் பசிய வாடையையும்,அந்த மக்களின் மேல் இயல்பாய்க் கவிழ்ந்திருக்கிற ஈரத்தையும் சொல்லுகிறது தோழர் ஜெயஸ்ரீயின் வலிமையான மொழி.
விருந்தாகும் உடல்கள் என்கிற கதையை எதற்காக முதல் கதையாக தெரிவு செய்தார் என்று தெரியவில்லை.நீச்சல் பார்க்க கரையில் உட்கார்ந் திருந்தவனை இழுத்துபோடும் அதிர்வுகளை உள்ளே வைத்திருக்கும் கதை.ஒருபெரு நகர மத்திய தரப்பெண்ணை ஒரு பல்பொருள் அங்காடிக்குள் பிரவேசிக்கச்செய்கிற பாவனையில், இந்தச்சமூகத்தின் ஆழ்மனத்தையும், சொகுசு தேடும் அதன் தவிப்பையும்,அதற்குப் பலிகொடுக்கிற இயல்பு களையும்.  இயலாமையையும்,குழைத்துக்கொடுக்கிறது இந்தக்கதை. டைனசரின் முட்டை,கோட்டை ஆகிய இரண்டுகதைகளும் அமானுஷ்யமான கதைப்போலத் தோன்றும் பெண்ணின் படிமங்கள்.

ஒரு நகர நெரிசலில் தற்செயலாய்க் கண்ணில் படுகிற ஊர்நண்பன் பீதாம்பரனோடு கழியும் ராமகிருஷ்ணனின் ஒரு இரவின் மதுநெடி மிகுந்த நினைவுகள் தூண்டில் முள்ளாய் அழுத்துகிறது.அங்கு நாம் நிச்சயிக்கப்பட்ட எந்த முடிவுகளையும்  அடையாதபடிக்கு மிகைப் போதையின் கடைநேர வாந்தி வந்து நிற்கிறது.

தொலைக்காட்சிப்பெட்டி இல்லாத ஒரு வீடு சில மணிநேரப் புலம் பெயர்தலை இயல்பாய் சொல்லி நகர்கிறது செய்திகளின் கூடெனும் சிறுகதை.அகதிகளின் கூடு,பழய்யமரங்கள் என்கிற கதைகளெல்லாம் அந்தப்பசிய வனங்களினூடே நிலைபெற்றுப்போன வீடுகளின் பெருமூச்சாய் நம்மை சூழ்ந்துகொள்கிறது.ஒரு பயணக்குறிப்பு போல சொல்லப்பட்டதாகினும்,ஆண்டாள்கோயில் பூசுபொடியின் சுகந்ததோடு நெடுநாட்கள் கூடவரும் கதை.நினைத்த நேரமெல்லாம் கோதுமை வயலின் வாசம் வீசும்.டமால் அதிர்வுகளோ,தத்துவ விசாரங்களோ இல்லையானாலும் அந்த மேலோட்டமான வார்த்தைகளில் நட்பின் ஆணிவேர் காணலாம்.ஒருபிடி கோதுமை என்கிற கதை.

இப்படியான கதைகள் ஏதும் அளவில் குறைந்தவையல்ல ஒரு தொகுப்பின் இருகரையையும் அடைத்துக்கொண்டிருக்கும் பதினான்கு கதைகளும் அதனதன் இடத்திலிருந்து வாழ்க்கையை உற்றுநோக்குகிறது.எதுவும் இளப்பில்லை காண் என்கிற குரலிருந்தாலும் ஒரு சிறுகதையைத் தலைப்பாக்குவதும் தலைமையேற்று நடத்தச் சொல்லுவதும் மனித மாண்பாகிறது.முன்னதாக தோழர் ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் சூர்ப்பநகை கதையைப்படித்துவிட்டு நானும்,மாதுவும்,மாப்பிள்ளை ஆண்டோ வும் பறிமாறிக்கொண்ட விசும்பல்களை நினைவு கொள்ளவைக்கிறது 'ஒற்றைக்கதவு'.

வரிவரியாய் உள்வாங்கவேண்டிய அந்தக்கதையை என்னால் முழுவதுமாக அறிமுகப்படுத்த இயலாது.
ஒரு ஜெயிலில் பரிதவிக்கிற அதிகாரி நேர்மையைப் பாரமாய்ச்சுமக்கிற வர்க்கீஸ்.காவல் கோட்டைகளையும் ஊடுறுவி அங்கு உலவுகிற வெளியுலகின் நாற்றத்தைக்கண்டு பிதற்றுகிறவனாகிறான்.தண்டனையை நிரைவேற்றுகிறவர்கள் பெருங்குற்றவாளியாக மாறும் போது நியதிகள் சின்னாபின்னமாகும். அப்படி நியதிகளின் மேல் தீராதகேள்விகளை வைக்கிறவனாக கடத்தல் குற்றவாளி அந்தோணி வருகிறான்.தனது மேலதிகாரி தன்னை குத்திக்குதறுவதற்கு மனசாட்சியை அடகுவைத்து அவர் செய்கிற தவறுகள்தான் என்பது தெரிகிறது.ஆனாலும் அந்த ஜெயிலுக்குள் கஞ்சாவும்,மதுவும் புழங்குவது அந்தோணியின் ப்ளாக்கில்தான் என்கிற வெறியோடு அவனைத்தேடிப்போய் அடித்து நொறுக்குகிறார். ஆனால் அவன் தழும்புகளிலிருந்து வெளியேறும் கதையிலிருந்து, தான் இது வரை சேர்த்துவைத்த கற்பிதங்களை நொறுக்கிவிட்டு வெளியேறுகிறார் வர்க்கீஸ். வெளியிலிருந்து ஒரு மம்பட்டியான் சினிமா,ஒரு நாவல்,ஒரு மனிக்குறவன் நடோ டிப்பாடல் சொல்லுகிற கதையை ஜெயிலுக்குள்ளிருந்து வெகு இயல்பாகச்சொல்லுகிறது இந்த ஒற்றைக்கதவு.

மகாநதி படத்தில் லேசாகத்திறந்து காட்டப்பட்ட அந்த ஜெயிலின் உட்புறத்தை மிக லாவகமாகத் திறந்து சாவகாசமாகப்  பிரவேசிக்க  விடுகிறார்கள் மூலமொழியாளர் சந்தோசும்,மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயும். ஆம் ஒரு படைப்பை உள்வாங்கும் போது மனிதர்களோடு நிலவியல் வரைபடமும் சேர்ந்து பதிந்து போவதுதான் எழுத்தின் மஹிமை.அது ஒற்றைக்கதவின் வழியே வலிமையாக விரிகிறது.

ஒற்றைக்கதவு

மூலம் -சந்தோஷ் ஏச்சிக்கானம்
தமிழில் -கே.வி.ஜெயஸ்ரீ
வெளியீடு -வம்சி புக்ஸ்
விலை- ரூ.80

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

many thanks for sharing this.

க.பாலாசி said...

மிகச்சிறந்த பகிர்வு... நன்றிகள்...

AkashSankar said...

பகிர்வுக்கு நன்றி...

க ரா said...

நல்ல பகிர்வுக்கு நன்றி சார்.

Unknown said...

சிறை பற்றிய அனுபவங்கள் எனக்கும் உண்டு என்பதால் இந்தப் புத்தகத்தை அவசியம் படிப்பேன் ..
நல்ல விமர்சனம் .. பாராட்டுக்கள்..

சீமான்கனி said...

//ஒரு படைப்பை உள்வாங்கும் போது மனிதர்களோடு நிலவியல் வரைபடமும் சேர்ந்து பதிந்து போவதுதான் எழுத்தின் மஹிமை.//

உண்மைத்தான் அண்ணே படிக்கும் பொது நம்மை அந்த நிகழ்வுக்குள் கொண்டு போகிற எழுத்துகள் அப்பா அந்த உணர்வே அலாதி...அதுவும் மொழி பெயர்த்து தரும் உணர்வுகளின் உருவம் பூஜிக்க படவேண்டியது...பகிர்வுக்கு நன்றி..வாழ்த்துகள்...அண்ணே...