7.9.10

செப்டம்பர் 7 வேலை நிறுத்தம். ஊர்கூடி நடத்தும் பொதுக்காரியம்.

அந்த மீசைக்காரர் வந்ததும் 'சார் டீ சப்பிடாச்சா  வாங்கியாரவா' என்று கேட்டுவிட்டுத்தான்  பணம் கட்டுவார்.கூட்ட நெரிசலில் சளைக்காமல் காத்திருந்துவிட்டு கடைசியில் பணம்கட்டுவார்.அந்த நேரம் பார்த்து தேநீர் வரும். வாங்கி ஓரம் வைத்துவிட்டு அவரது சலான் வாங்கி பணம் எண்ணுவேன்.'ஆறமின்ன குடிங் சார் நா ரெண்டு நிமிஷம் லேட்டாப் போறேன்' என்பார்.தன் மனைவி கட்டவேண்டிய மகளிர் கடன் பணத்தைக்
கட்டவந்து மேனேஜரிடம் வசவு வாங்கி சோர்ந்திருந்த போது அவரைத் தேற்றி அவரிடம் பணம் வாங்கி அனுப்பிய நாளில் இருந்து என்னோடு ஒட்டிக்கொண்டார்.ரெண்டாவது முறை லோன் வாங்கியபோது வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஆளுக்கொரு கூல்றிங்ஸ் வாங்கி வைத்துவிட்டுப் போய்விட்டார்.பேருந்தில் பார்த்துவிட்டால் எழுந்து உட்கார இடம் தருவார்.தன் பெண்டு பிள்ளைகளிடம் நல்லவிதமாக அறிமுகம் செய்து வைப்பார்.

நேற்று அவர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்த நேரம் மணி ஐந்துக்கு மேலாகிக் கொண்டிருந்தது.வங்கி கிளையை மூட இருந்தோம். 'அப்ப நாளை வரட்டா' என்று கேட்டார்.'இல்ல நாளைக்கு ஸ்ற்றைக் நாளாண்ணிக்கு வாங்க' என்றேன். 'என்ன சார் ஓயாம இப்டி ஸ்டைக் பண்றீங்க சம்பளம் இண்ணுமா பத்தல' என்றார்.சுரீர் என்றது.'இல்லங்கய்யா நாளைக்கு  பண்ணபோற வேலை நிறுத்தம் விலைவாசிக்கு எதிராக,நாளைக்கு பண்ணப்போறது ஆள் பற்றாக்குறைக்கு எதிராக,சம்பள உயர்வுக்காக அல்ல. இன்னொன்னு தெரியுமா நாளைக்கு பண்ணப்போற வேலை நிறுத்தத்துக்கு ஒரு நாள் சம்பளத்தை நாங்கள் கட்டாயம் இழந்து விடுவோம் என்று சொன்னப்பிறகு அவருக்கு பதிலேதும் சொல்லத் தோணவில்லை.ஏஞ்சார் இப்பிடி ஒங்களயே நட்டப்படுத்திக்கிட்டு நாட்டத்திருத்த முடியுமா? என்று கேட்டார்.

ஊர்ல ஒரு கெட்ட காரியம் நடந்தா எல்லோரும் அந்த நாள்ல வேலக்குப்போகாம, இருக்றத குடிச்சிக்கிட்டு இருப்போமில்ல என்று கேட்டேன். 'ஆமா சார் அன்னைக்கு மனுசன் வேலைக்கு போவானா' என்றார் வீராப்பாக.அதும்மாதிரித்தானய்யா இந்த ஸ்ட்ரைக்கும் என்று சொன்னதும் புரிந்துகொண்ட மாதிரி சிரித்துவிட்டு 'எலே வாடா புதங்கெளமெ வருவோ, ஒரு நா பிந்துனா என்ன உலகமே பிந்திரவா போகுது,ஒத்தாளாக்கெடந்து அங்கெயு இங்கெயு தவ்வித்தவ்வி வேல பாக்காங்க ஆள் போடவேண்டாமா கூறுகெட்ட பய கவுர்மெண்டு' என்று சொல்லிக்கொண்டே பக்கத்தூருக்கு நடந்துபோனார்.அந்த மக்களிடம் எடுத்துச்சொல்ல வழியில்லை.திசை திருப்ப ஊடகங்கள் இருக்கிறது.அய்யணார் அண்ணாச்சி புரிந்துகொண்ட மாதிரி அறுபதுகோடிச் சனங்களுக்கு புரிய வைக்க இங்கே என்ன ஏற்பாடு இருக்கிறது ? அது வரை வேலை நிறுத்தம் கூட மூட நம்பிக்கைதான் கிராமத்து மக்களுக்கு,ஏன் படித்தவர்களுக்கும் கூடத்தான்.     

5 comments:

Unknown said...

Yes. அருமை சார் . உங்கள் எழுத்தோடு கொஞ்சம் ஒன்றிப் போய்விடலாம் .

சீமான்கனி said...

//ஏஞ்சார் இப்பிடி ஒங்களயே நட்டப்படுத்திக்கிட்டு நாட்டத்திருத்த முடியுமா?//

//ஊர்ல ஒரு கெட்ட காரியம் நடந்தா எல்லோரும் அந்த நாள்ல வேலக்குப்போகாம, இருக்றத குடிச்சிக்கிட்டு இருப்போமில்ல என்று கேட்டேன்.//

//அது வரை வேலை நிறுத்தம் கூட மூட நம்பிக்கைதான் கிராமத்து மக்களுக்கு,ஏன் படித்தவர்களுக்கும் கூடத்தான்.//

இப்போ படித்தவர்களுக்குதான் அண்ணே அது மூட நம்பிக்கையா போச்சு...பொதுக்காரியம்=சுயநலம் கருதாமை...அருமை அண்ணே...வாழ்த்துகள்...

kashyapan said...

நல்ல பதிவு காமராஜ்! Well done! வாழ்த்துக்கள்--காஸ்யபன்.

vasu balaji said...

நல்ல விளக்கம். ரொம்ப எளிமையா சொன்னதால புரியறதும் இயல்பா அமைஞ்சு போச்சு:)

பா.ராஜாராம் said...

என்னத்த சொன்னாலும் ஏத்துக்கிற மாதிரி சொல்றீர் ஓய்.

வெற்றி பெறட்டும் மக்கா.