16.9.10

தோல்வி எனும் பாடம்.

ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள அந்த தெருவில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் எழுத்தறிவு தினக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.பேசப்போகிற மூன்று பேரில் நீங்களும் ஒருவர் கட்டாயம் வரவேண்டும் என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் தோழர் மாடத்தி சொல்லியிருந்தார்கள்.தங்கை மாடத்தி ஒரு இருபதாண்டுகாலமாக எழுத்தறிவு இயக்கத்தில் தன்னைக் கறைத்துக் கொண்ட சமூக போராளி.எழுத்தறிவு இயக்கத்தோடு தொடர்புடைய எல்லா முற்போக்கு இயக்கங்களிலும் அவரது தலை தெரியும்.தமுஎகச வின் மாவட்டக் குழு உறுப்பினர்.மாதர் சங்க  உறுப்பினர் இப்படி பல பொறுப்புக்கள்.

எப்பொழுதாவது கிராமங்களில் நடக்கும் பட்டிமன்றங்களில் அணியின் மூன்றாவது பேச்சாளராக பேசுவார்.மூன்றாவது பேச்சாளர் என்பது ஒரு freelance ஏற்பாடு.தங்களின் குழுவில் உள்ள யாரும் வரவில்லை என்றால் அவருக்குப்பதிலாக இட்டு நிறப்ப அமர்த்திக்கொள்ளும் பேச்சாளர். ஒன்றிரண்டு முறை நானும் தோழர் மாடத்தியும் இப்படி மூன்றாவது பேச்சாளராக எதிரெதிர் அணியில் நின்று கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி கூட்டத்தைக் கலைத்திருக்கிறோம்.எழுத்தறிவு இயக்கத்தில் கிடைத்த குறைந்த பட்ச வாழ்வாதாரமும் அறுந்து போனதால் ஒரு புதிய தொண்டு நிறுவனத்தில் களப்பணியாளராக் இணைந்திருந்தார். அந்த நிறுவணம் ஏற்பாடு செய்திருந்த அந்த எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து பேச அழைத்திருந்தார்கள்.தேர்ந்த பேச்சாளர் இல்லை என்றாலும் அதை ஒப்புக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பெண்கள் குறித்து பேச வேண்டும் என்கிற ஆசை.ரெண்டு பெண்கள் பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை.

அவர்கள் சொன்ன அமீர்பாளையம்  பகுதியில் எதிர்த்திசையில் போய் கல்யாண மண்டபத்தை தேடிப்பாத்துவிட்டு
தோற்றுப்போய் வீடு திரும்பிய பிறகு பத்து போன் வந்தது.வேண்டா வெறுப்பாகத்தான் அங்குபோக நேந்தது.

அந்த கல்யாண மண்டபம் சாத்தூர் சலவைத் தொழிலாளர் சங்கத்தின் கட்டிடம்.ஆகையால் ஒரு சின்ன வீடுபோல இருந்தது.இருபதுக்கு பத்து ஹாலில், தரையில் ஐம்பது அறுபது பெண்கள் உட்கார்ந்திருந்தாகள்.எல்லாமே அடித்தட்டுப்பெண்கள் என்பதை சாட்டிலைட் மூலமாகப் பார்த்தாலும் கண்டுபிடித்துவிடலாம்.அவர்களிடம் நான் தயாரித்து வைத்திருந்த பேசுபொருளை எப்படி கொண்டு செல்வது என்று குழப்பமாகிவிட்டது.அதில் பெரும்கஷ்டம் இருக்கிறது. தமிழகம் முழுக்க முழங்குகிற பேச்சாளர் ஒருவரோடு ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். அவர் வழக்கமாக வீசும் சரவெடி சிரிப்பலையாய் பொங்கும்,அவர் சொல்லுகிற கதை படித்தவர் மத்தியில் புருவங்களை உயர்த்தும். அதை நேரிடையாக உணர்ந்திருக்கிறேன்.ஆனால் அந்தக் கிராமத்தில் ஒரு மணிநேரம் பேசினார் தனக்கு தெரிந்து உலக மகா விகடங்களையெல்லாம் எடுத்து விட்டார். கூட்டத்தில் சலசலப்பே இல்லை.காரணம் கிட்டத்தட்ட  அது  அவரது சொந்த ஊர்மாதிரி. அதுபோன்ற ஊரிலிருந்து சேகரித்த கதைகளையெல்லாம் தான் அவர் தமிழ்நாடு முழுக்க விற்றுக்கொண்டிருந்தார்.எள்ளல், பாடு, பழமையெல்லாம் அவர்களுக்கு  அன்றாடம் சந்தித்த நிகழ்வுகள்.'selling a refrigirator to the eskimo'.

அப்படி நிகழக்கூடாது என்று உள்ளுக்குள் கங்கணம் கட்டிக்கொண்டேன்.அப்படியே பகீரதப் பிரயத்தனப்பட்டு பேச்சை ஆரம்பித்தேன்.இந்த உலகம் பெண்களால் ஆனது,இந்த உணவு,இந்த உடுக்கை,இந்த இருப்பிடம் எல்லாமே அவர்கள் கண்டு பிடித்து உலகுக்கு சொன்னது என்பதை எளிய வார்த்தைகளில் சொன்னேன்.  ஆனாலும்  அன்புக்குறிய எழுத்தாளர் பிரபஞ்சன்,எங்கள் ஆசான் எஸ் ஏ பி,இன்னும் பலபேர் பெரிய அரங்குகளில் சொல்லி ஆரவாரக் கைதட்டு வாங்கிய அந்தக் கதையைச் சொல்லியே தீரவேண்டும் என்று அவக்காச்சியெடுத்தது.'ஒரு பெண் நாயைக் கல்யாணம் பண்ணிக்கொண்ட' கதையைச் சொன்னேன்.எந்த சலசலப்பும் இல்லை. அதற்கு அந்த நேரம் கொடுத்த டீயும் பிஸ்கட்டும்,அதைத்தொடர்ந்து உள்ளே நுழைந்த அந்த ஊரின் பிரபல பெண்டாக்டர்  வருகையும்  காரணமாக இருந்தது என்று நானும் என்னைச் சேர்ந்தவர்களும் சமாதானம் செய்துகொண்டாலும் அதையும் தாண்டிய பெரும் பாடம் அதற்குள் இருப்பதாக உணரமுடிகிறது.

8 comments:

ஈரோடு கதிர் said...

நாய் கதையே எடுபடலையா!!!?

என்ன கொடுமையிது

vasu balaji said...

சஞ்சய் சுப்பிரமணியன் சொன்னா மாதிரி கலைஞன் ரொம்ப ரசிச்ச ஒரு இடத்துல கைதட்டல் வரும்னு நினைச்சா வராது. ஒன்னுமே இல்லாத லகுவா பாடின ஒரு ஸ்வரத்துக்கு வானம் இடிச்சா மாதிரியான ஒரு ஸ்லாகிப்பு.ரசனை:)

/ ஈரோடு கதிர் said...
நாய் கதையே எடுபடலையா!!!?

என்ன கொடுமையிது//

எங்கப் போனாலும் எனக்கு முன்ன கமெண்டிகிட்டு என்னா இது?

அன்புடன் அருணா said...

புரிகிறது!

Unknown said...

அன்னைக்கு அந்த மக்கள் என்ன பிரச்சனையோட உட்கார்திருந்தாகளோ ! உங்க பின்னாடி எவனோ போலீஸ் காரனோ அரசாங்க அதிகாரியோ இருந்திருக்கபோறாங்க. மீடிங்க்கு அப்புறம் டின்னு கட்டிட்டாங்கனா. தனியா விசாரிச்சிங்களா.
தனியார் மகளிர் குழுக்கள் அரசிற்கு அதிகம் பயபடுவதாகவே கேள்வி.

velji said...

இயல்பாய் நாம் அவர்களுடன் இல்லை என்பதும்,அவர்களுடன் ஒன்றாவது வலிந்து செய்யும் முயற்சியாகவும் தெரிகிறது...

க.பாலாசி said...

இவுதும் ஒரு அனுபவம்தானே... வேறென்ன சொல்றது..

காமராஜ் said...

நன்றி

கதிர்,
பாலாண்ணா
சேது சார்
வேல்ஜி
பாலாசி
மேடம் அருணா

பத்மா said...

ஒரு முறை s v சேகர் கூறியது ,,
ஒரு நிகழ்ச்சியில் முழுக்க சின்ன பசங்களாய் வந்திருந்தனராம்..இவர் சொன்ன எந்த ஜோக்
கும் புரியாமல் சிரிக்காமல் இருக்க அனைவருக்கும் சவாலாகிபோனதாம் .அப்போது நாடகத்தில் யாரோ தடுக்கி விழ அதை பார்த்து குழந்தைகள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம் ..உடனே அவர் நாடகத்தையே மாற்றி இதுபோல பல சேஷ்டைகள் செய்ய குழந்தைகளும் மகிழ்ந்து பெரிய வெற்றியை ஆகிப்போச்சாம்