20.9.09

இடமாற்றம் - வாதம் செய்யுமிடத்திலிருந்து குற்றவாளிக் கூண்டுக்கு

இரண்டு நாள் விடுப்பு. எதாவதொரு கோவிலுக்குப் போகவேண்டுமென்ற சந்தோசக் கோரிக்கையோடுதான் எங்கள் குளிர் இரவு விடிந்தது. அந்த தேநீர்க் குவளையின் ஆவிப்போல மிதந்து மிதந்து உரையாடல் ஒரு பயணத்திற்கான திட்டமிடுதலாக அமைந்தது. சுற்றுச்சுவருக்குள் இருந்த மரங்களில் அமர்ந்தபடி பறவைகளும் அணில்களும் எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வெயில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறியது. காலை உணவுக்கான தயாரிப்பில் ஒரு சின்ன அபிப்ராய பேதம் உருவாகிச் சரியானது. முழு இரவிலும், இளம் காலையிலும் எட்டிப் பார்க்காத அந்தசனியன் அப்போதுதெல்லாம் எங்கோ கிடந்தது. உன்னிடம் எவ்வளவு மிச்சமிருக்கிறது எனக்கேட்ட போது அது தலை நீட்டியிருக்கணும்.


மாதச்சம்பளர் வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத அந்தச்சனியன் எழுந்து ஆடத் துவங்கும்போது தொலைகாட்சியில் லலிதாவின் பாட்டுக்குப்பாட்டு நடந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமை கவிச்ச வாடையில்லாமல் கழிந்து போனால் அண்டை வீடுகளுக்குக் காரணம் சொல்ல முடியாது. மீன் வாங்க காசு யார் கொடுப்பதென்பதில் தகறாறு முற்றிக்கொண்டது. சனியனுக்கிப்போது ஏகக்கொண்டாட்டம். இந்தத் தாவாவில் நடுவர் தீர்ப்பு ஒரு போதும் எடுபடாது.எல்லா நடுவரும் எங்காவதொரு பக்கம் சாய்ந்திருப்பது தெரியாத அரசுச் சட்டம் அவர்களுக்கு நடுவர் என்கிற பொய்ப்பட்டம் கொடுத்துக் கெடுத்திருக்கிறது.


சண்டையின் துவக்கம் சிறு சினுங்களாக இருந்தபோது இருந்த குதூகலத்திற்கு அது பெருங்கலவரமாக மாறுமெனத் தெரியாது. பெருங்கலவரமான பிறகு சமாதானத்துக்கான தடைகளை வார்த்தைகளே பிரமீடுகளாக்கியிருந்தது. அந்தச்சனியன்வந்து எங்கள் நடுவில் கணவன் - மனைவி, சம்பாதிப்பவன் - சமைப்பவள், ஆணாதிக்கம்- அடிமைஎதிர்ப்பு எனும் பேதங்களைஉருவாக்கிவிட்டுச் சிரித்துக்கொண்டிருந்தது. சிந்திவிட்ட ஒரு கண்ணீரில் சிதிலமான கோபங்கள். திரும்பிப் பார்க்கையில் எனது பழய்ய வார்த்தைகளில் அருவருப்பு ஒட்டிக் கொண்டிருந்தது. கழுவி கலைய முடியாத அழுக்கு. ஒரு தலை கோதலில்ஒரு கோணங்கிச் சிரிப்பில், இப்படியான சந்தோசத்தில் மறைந்து உயிர் வாழும் அவ்வார்த்தைகள். எழுந்து வாழவிடாமல் தடுப்பது இன்னொரு சண்டை வராமல் காப்பதே.


வாசலில் வந்து பார்த்தேன் வெயில் உக்கிரமாக இருந்தது. மரங்களில் பறவைகளைக் கானோம். காலையில் உட்கார்ந்து கதை பேசிய வாசற்படியில் குடித்தபோது சிதறிய தேநீரின் ஒரு சொட்டு படிந்திருந்தது. கீழே கிடந்த தூசிகளோடுகோவிலுக்குப் போகத் திட்டமிட்ட பயண வாத்தைகள் சிதறிக்கிடந்தது. அவள் மீளச்சிரிக்கும் வரை என் மீது பெரிய்ய கைவிலங்கு கவிந்திருக்கும். செல்லமகள் சிந்துபாரதி வந்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள். அது சண்டைக்காக அல்லஎன் எழுத்துக்களுக்காக.

8 comments:

velji said...

//திரும்பிப் பார்க்கையில் எனது பழய்ய வார்த்தைகளில் அருவருப்பு ஒட்டிக் கொண்டிருந்தது. கழுவி கலைய முடியாத அழுக்கு. ஒரு தலை கோதலில்ஒரு கோணங்கிச் சிரிப்பில், இப்படியான சந்தோசத்தில் மறைந்து உயிர் வாழும் அவ்வார்த்தைகள்//

சராசரியாக இருக்க இயலாத எழுத்தாளன் மனதின் அவஸ்தை இது

மகளின் சிரிப்பில் சட்டென மீளும் வரமும் எழுத்தாளனுக்கு இருக்கிறது.

அன்புடன் அருணா said...

/அவள் மீளச்சிரிக்கும் வரை என் மீது பெரிய்ய கைவிலங்கு கவிந்திருக்கும்/
அந்தக் கைவிலங்கை உடைத்தெறியும் வித்தைகளையும் கற்றுத்தானே இவ்வளவு நெடுந்தூரப் பயணம் சாத்தியப் படுகிறது...

ஈரோடு கதிர் said...

//அவள் மீளச்சிரிக்கும் வரை என் மீது பெரிய்ய கைவிலங்கு கவிந்திருக்கும்.//

ஆஹா.... அந்த இறுக்கத்தை கவிதையாக வடித்திருக்கிறீர்கள்

//அது சண்டைக்காக அல்லஎன் எழுத்துக்களுக்காக.//
இஃகிஃகி

அருமை தலைவா

காமராஜ் said...

நன்றி வேல்ஜி,

நன்றி மேடம்,

நன்றி கதிர்.

Deepa said...

:-) வெகு யதார்த்தம்.

ஆரூரன் விசுவநாதன் said...

பல நேரங்களில், பெண் ஒரு புதிர். அதைவிட நாம். அன்பில், அழுகையில்,அரவணைப்பில், காதலில், காமத்தில், இப்படி எல்லாச் சூழல்களிலுமே, பெண் ஆணைவிட மாறித்தான் இருக்கிறாள்.ஆனால் அவளின் மாறுதல், அவள் கோபத்தில் மட்டுமே நமக்குத் தெரியவருகிறது.


பிறப்பின் குறையல்ல தோழர், நம் வளர்ப்பின் குறை.

உங்கள் வரிகளில் மெருகு கூடுகிறது.
ரசனை மிகுந்த, நிதானமான வரிகள்

அருமை

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

காமராஜ் said...

நன்றி தீபா,

காமராஜ் said...

நன்றி ஆரூரான்.