12.11.09

பனியில் விழித்திருக்கும் நரகச் சாமம்.

தேநீர்க் கொப்பறைகளின் வெப்பத்தில்
வாழ்வு துவக்கும் டீ மாஸ்டர்கள்.
கடந்துபோன பேருந்துக்கும்
வரப்போகும் பேருந்துக்குமான
நிச்சயமற்ற இடைவெளியில்
கண்ணசரும் ஆட்டோக்காரர்.


அணைத்த பீடியைமீளக் கொழுத்தி
இச்சைக் கதையும் ஹெர்பல்புகையும்
விட்டதிலிருந்து தொடரும் ரிக்சாக்காரர்.
மரவட்டப்பூச்சிகளை ஞாபகப்படுத்தியபடி
படுத்துறங்கும் இலக்கமில்லா தெருவாசி.
முதல் பேருந்துக்காக விநாடி விநாடியாய்
கழித்துக் காத்திருக்கும் கிராமவாசி.


ஒற்றை விசில் அலறலோடு
மிதிவண்டிகளைப் பின்னிழுக்கும்
கூர்க்காவின்மலைப் புலத்து ஏக்கங்கள்.
நேற்றைய சுவடுகளில் மஞ்சள்
கவியெழுதும் நியான் ஒளியும்

உறங்கக் காத்திருக்கும் விடியல்தேடி.


14 comments:

லெமூரியன்... said...

நல்ல இருக்கு....!

சன்னமான ஓசைல எங்கோ ஒரு மூலைல வானொலியில் பாட்டுச் சத்தம் கேக்குமே.....அத சேர்க்காம விட்டுடீங்களே...!

க.பாலாசி said...

//மரவட்டப்பூச்சிகளை ஞாபகப்படுத்தியபடி
படுத்துறங்கும் இலக்கமில்லா தெருவாசி.//

இயல்பான விசயங்கள் ஆயினும் பார்வை கணமாக உள்ளது கவிதையாய்.

நந்தாகுமாரன் said...

அட! கவிதை நல்லா இருக்குங்க

ராகவன் said...

அன்பு காமராஜ்,

இது தான் காமராஜ் வாய்க்கப்பெற்றவர் என்பது. கவிதை வாய்க்கப்பெற்றவர்கள் கைப்பிடிக்குள் அடங்குவர்.

கூர்க்காவின் மலைபுலத்து ஏக்கங்கள்! எத்தனை பேர் வேர்களை விட்டு எங்கெங்கோ தனது கிளைகளை பரப்பி ஆசுவாசப்படும் முயற்சிகள் கூர்க்காவுக்கு மட்டுமா?

உங்களின் எல்லா கவிதைகளிலும் அடி நாதமாய் ஓடும் ஒரு மனிதரைப்பார்த்தல், எல்லா காலத்திலும் ஒரு நிகழ்பனுவத்தை விதைத்து விட்டு செல்கிறது.
புரிகிற படைப்பு ஒரு சுகானுபவம் காமராஜ்!

சுகப்படுத்தவும்,சொஸ்தப்படுத்தவும் உங்களுக்கு வாய்க்கிறது தப்பாமல் ஒவ்வொரு படைப்பிலும்.

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

ராகவனைப்போலவே என் அறைகுறை கவிதைகளைச் செழுமையாக்குகிறீர்கள் லெமூரியன்.

காமராஜ் said...

நன்றி பாலாஜி

velji said...

உணர்வுகளின் சிதறலாய் இரவுக்காட்சிகளின் கவிதை.உறங்க காத்திருக்கும் விடியல் தேடி..இந்த வரி நிறைய உணர்வுகளை தருகிறது.அருமை.

காமராஜ் said...

நன்றி நந்தா,
நன்றி ராகவன்
நன்றி வேல்ஜி.

காமராஜ் said...

எனது வலைத்தளத்தின் பின்தொடர்பவர்கள் பட்டியலை நூறாக்கிய பாலகுமாருக்கும் அவரை முந்திக்கொண்ட ஏனையோருக்கும் நன்றி.

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

காமராஜ் said...

என் வீட்டுக்குள் புழங்கும் நானறியா நிழலாய்
அடர்காட்டுக்குளிருந்து என் திசை முடுக்கும் ஏகலைவ குரலாய்
என் வலையை பின் தொடரும் தமிழ் நெஞ்சத்துக்கும்
நான் சொல்லமறந்த நன்றிகள்.

அன்புடன் அருணா said...

யதார்த்தங்களின் தொகுப்பு!

ஆ.ஞானசேகரன் said...

உண்மையில் நல்ல அழகும் எதார்த்தமும் உள்ளது நண்பா

உயிரோடை said...

//வரப்போகும் பேருந்துக்குமான
நிச்சயமற்ற இடைவெளியில்
கண்ணசரும் ஆட்டோக்காரர்.//

பாவ‌ம் தான் ஆனால் சென்னை ஆட்டோகார‌ர்க‌ள் எல்லாமே ஒரே மாதிரி கொஞ்ச‌ம் வில்ல‌ங்க‌மான‌வ‌ங்க‌