23.11.09

கற்பிதங்கள் கழிந்து ஓடும் நேரம்.

அந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும்போதெல்லாம் எனக்கு தோழர் கந்தர்வனின் ' தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்' சிறுகதை தான் நினைவுக்கு வரும். மனிதர்களின் அபிலாஷைகளை அள்ளிக்கொண்டு வந்து தட்டுகிற இடமாக அந்த எழும்பூர் ரயில் நிலையம். முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு அங்குபோய் இறங்கினேன். மதுரை தாண்டி பயணம் செய்த முதல் அனுபவம் அது. அன்றும் கூட அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் போய் தாதார் எக்ஸ்பிரசைப் பிடிக்கனும், ஒருமணிநேர அவகாசத்தில். வெளியே வந்தபோது பீடியைக் கிழே போட்டுவிட்டு ஒரு தாத்தா அழைத்தார். அவரது வாகனத்தில் சென்ட்ரல் போவதாக உடன்பாடு. அவரைவிட வயதான குதிரையும் வண்டியும் எனக்காகக் காத்திருந்தது. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்னும் பாடலை மந்தமாகச்சுழலும் இசைத்தட்டின் லயத்தில் பாடிக்கொண்டு போனேன். இனிக் குதிரை வண்டி நினைவுகூறலில் மட்டுமே காணலாம்.


டெல்லி சென்று திரும்பி வந்த அந்த 1995 ஆம் ஆண்டையும் என்னால் மறக்க முடியாது. நானும் தோழர் நடராஜனும் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் இறங்கி உடனடியாக வைகையைப் பிடிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தோம். மனசு முழுக்கஇந்தியாவின் குறுக்கு வெட்டுத் தோற்றம் நிறைந்து கிடந்தது. உடலில் ஒரு பத்து நாளின் ரயில்புகை படிந்தது போல உணர்வு. பல்துலக்காதபோதும் பசி அரிசிச்சோறு தேடியது. சின்னவன் அப்பா எங்கே அப்பா எங்கே என்று கேட்பதாக அவள் சொன்னது. பயணவேகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ஒரு பணிரெண்டு மணிநேரத்தில் சாத்தூர் என்ஜிஓ காலனியில் இருக்கப்போகிறோம் என்னும் குறுகுறுப்பு வந்தபோது அவள் வாசம் அடித்தது. பலநேரங்களில் குழந்தைகள் துவர்களாகவும் இருந்துவிடுவார்கள்.


முன் பதிவு செய்யாத பயணிகளுக்கான வரிசை நீண்டு கொண்டே போனது. திருச்சிக்கு அம்மா அப்பவை அனுப்பிவைக்க,மதுரையில் சாயங்காலம் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள.நேற்று மகனின் வேலைக்காக மந்திரியைப்பார்க்க வந்தஇப்படி ரகரகமான பயணிகளின் கூடவே ஒரு ராணுவவீரன் தன் காதல் மனைவியோடு மிகமிக நெருக்கமாக. ஒன்பது மாதத்துக் கர்ப்பினியான அவளுக்கு எழும்பூர் இம்பாலாவில் நெய்த்தோசை வாங்கிவந்து கொடுத்தான்.ராணுவ கிட்பேக்குகளையும் பெரிய பெரிய சூட்கேசுகளையும் அடுக்கி அதன் மேல் அவளை உட்கார வைத்திருந்தான்.ஈக்கள் கூட அவளை நெருங்காதபடிக்கு அன்புவேலி சுற்றியிருந்தான். நெய்த்தோசையின் மணம் எங்கள் பசியைக் கூடுதலாக்கியது.


தயிர் சாதப் பொட்டலம் வாங்குவதற்காக நிலைய முகப்புக்குப் போனோம். ஐந்து பேர் தாடியோடு மரப்பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். பொட்டலம் வாங்கித் திரும்பும்போது அவர்கள் அந்த ஐந்து பேர் இந்த உலகின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவார்கள் எனத்தெரியாமல் கடந்துபோனோம். திரும்பும்போது அந்த இடம் ஒரே கலவரமாக இருந்தது.ஒற்றைப்பெண் காவலர் அதில் ஒருவரின் கழுத்தைப்பிடிக்க அவர் கத்திக்கொண்டிருந்தார். ஒரு ஐந்து நிமிட அவகாசத்தில் மூன்று பேரை சயனைடு விழுங்கிவிட்டிருந்தது. யாராவது ரயில்வே போலீசில் தகவல் சொல்லுங்கள் என வேடிக்கை மனிதர்களிடத்தில் முறையிட்டார்கள் அந்த போலீஸ். யாரும் போகவில்லை என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் நான் ஓடிப்போய் சொன்னேன். ரயில்வே போலீஸ் எந்த அவசரமும் காட்டவில்லை.


திரும்பவும் அந்தக் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தேன் இன்னும் கூட அங்கு நடப்பது என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. கூட்டத்தை விலக்கிக்கொண்டு போனேன். நான்குபேர் இறந்து கிடந்தார்கள். அவர்களது கண்களில் ஏக்கமும் கனவுகளும் நிலைகுத்தி நின்றது. மரணம் என்பது அவ்வளவு சடுதியில் லயிக்கும் என்பதை நம்பமுடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். இன்னும் கூடுதலாக இரண்டு மூன்று காவலர்கள் வந்திருந்தார்கள். பிடிபட்டவர் ஈழத்தமிழில் பேசிக் கொண்டிருந்தார். எங்களை வாழத்தான் அனுமதிக்கவில்லை சாகவாவது அனுமதியுங்கள் என்று கத்தி கத்திச் சொன்னார். எங்கட நாடு விடுதலை அடையும் என்று கோஷம் எழுப்பினார். வேலூர் சிறைச்சாலையிலிருந்து தப்பிவந்த ஈழப்போராளிகளை தமிழ்நாடு சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்த செய்தி அப்போது நினைவுக்கு வந்தது.


கூட்டத்திலிருந்தவர்கள் தங்கள் கற்பனைகளோடு செய்தியை வேறு வேறு நிகழ்ச்சியாக மாற்றிக்கொடுத்தனர். அதிரடிப்படை கவச வாகனம் வருவதற்கு முன்னமே செய்தித் தாள்களின் வாகனங்கள் அந்த இடத்தை அடைந்திருந்தன. காவலர்கள் தொலைக்காட்சி விளம்பரங்கள்; டீ காபி சாப்பாடு விற்போரின் குரல்கள்; போர்ட்டர்களின் அரைஓட்டம்; ரயில்வருகை அறிவிப்பு; வழியனுப்பும் நெகிழ்வும்; வரவேற்குமுற்சாகமும் ஆன எழும்பூர் ரயில் நிலைய வளமை சிதைந்து எங்கும் பரபரப்புசூழ்ந்து கொண்டது. இப்போது எங்குபார்த்தாலும் காக்கிச்சட்டைகள் நிறைந்திருந்தது. கூட்டம் கலைக்கப்பட்டது நாங்கள்வரிசைக்குத் திரும்பினோம். அந்த ராணுவவீரர் இன்னும் மனைவியோடு நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்.


" இந்த ரயில் நிலையத்தில் வெடுகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது எல்லோரும் கலைந்து ஓடுங்கள்" என்று காவல் துறை அறிவித்தது. தீப்பந்தமிட்டுக் கலைத்துவிட்ட தேன்கூடு மாதி கூட்டம் கலைந்தோடியது. சூட்கேஸ் எடுக்க மறந்தவர்கள்வாங்கிவந்த சப்பாட்டுப் பொட்டலத்தை எடுக்க மறந்தவர்கள் கையில் குழந்தையை துக்கிக்கொண்டு ஓடிய தாய்மார்கள் என உயிர்கள் பயத்தில் ஓடியது. நானும் நடராஜனும் கடைசியாய் உயிர்காக்க நடந்தோம். பின்னலே திரும்பிப் பார்த்தபோது வெறிச்சோடிக்கிடந்தது எழும்பூர் நிலையம். ஓட முடியாத - வேகமெடுத்து நடக்க முடியாத, அந்த ஒன்பது மாதக் கர்ப்பினிப்பெண் எங்களுக்கு முன்னால் நடந்து போனாள். ஒரு கையை இடுப்பிலும் ஒரு கையை அடிவயிற்றிலும் வைத்தபடி. அந்த ராணுவவீரன் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக் காணவில்லை.


எந்த வெடிகுண்டும் இல்லை பயணிகள் திரும்ப வரலாம் என்று மறு அறிவிப்பு வந்தது. போலீசின் முந்தைய அறிவிப்பு எஞ்சிய இருக்கிற போராளிகளைப்பிடிக்கிற உத்தி என்பது பின்னால் ஆனந்தவிகடன் படிக்கும்போது அறிய நேர்ந்தது. நாங்கள் இருந்த வரிசை மறுபடி உருவானது. நாங்கள் அந்த ராணுவ வீரனின் அருகில் இருந்தோம். அவன் அவளிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவள் எதிர்த்திசையில் திரும்பிக்கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான். பல கட்ட சோனைக்குப்பின் இரண்டு மணிநேர தாமதத்தில் வைகை கிளம்பியது.


நிலைகுத்திய கண்களோடு கிடந்த நான்கு பேர்: நெடுநேரம் வரை வராமல் வந்தும் ஓடவசதியாய் நின்றிருந்த காவலர்கள்; தலைதெறிக்க ஓடிய கூட்டம்: அவர்களை முந்திக்கொண்டு ஓடிய ராணுவவீரன்: ஒரு பெண் போலீஸ்: கண்ணீர் நிறைந்திருந்த கர்ப்பிணிப் பெண்னின் கண்கள் எல்லாம் இன்று வரை கூட வருகிறது. அதுவரை என்னோடு வந்த கற்பிக்கப்பட்ட இலக்கணங்கள் அருவருப்பாய் கழிந்தோடியது புகைவண்டி கழிப்பறையினூடாக.





25 comments:

சுந்தரா said...

உயிருக்கு முன்னால் உறவுகள் துச்சமாகிவிடுகிறதுதான்...

முந்திய வரிகளில் இதற்கு முரண்பாடான மனிதர்களும் தென்படுகிறார்கள்.

நாட்டுக்காகவே உயிர்விடத்துணிந்த போராளிகள்,கைக்குழந்தையுடன் ஓடிய தாய்மார்கள்...

இடையில் இப்படியும் சில மனிதர்கள்...இதில் வேடிக்கையே இவர் ராணுவவீரரென்றதுதான் :)

உயிரோடை said...

மிக‌ ந‌ன்றாக‌வும் அதே ச‌ம‌யம் வ‌ருத்த‌மாக‌வும் இருக்கின்ற‌து.

லெமூரியன்... said...

\\இனிக் குதிரை வண்டி நினைவுகூறலில் மட்டுமே காணலாம்....//
மனதை உறுத்திய விஷயம் இந்த குதிரை வண்டிகள் அண்ணா...! சிறு வயதில் பள்ளிக்கு போய் வந்த நியாபகம்..!

\\பலநேரங்களில் குழந்தைகள் துவர்களாகவும் இருந்துவிடுவார்கள்...//
உணர முடிகிறது..! :-)

\\மரணம் என்பது அவ்வளவு சடுதியில் லயிக்கும் என்பதை நம்பமுடியாமல் திணறிக் கொண்டிருந்தேன்...//
விருதுநகர் அருகே நான் பயணம் செய்த பேரூந்து விபத்தில் மாட்டிய போது இதை நான் அப்பட்டமாக உணர்ந்தேன்.

\\அந்த ராணுவவீரன் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக் காணவில்லை....//
அவன் ராணுவ கோழை..!

\\எங்கட நாடு விடுதலை அடையும் என்று கோஷம் எழுப்பினார். ...//
உயிர் அறுக்கும் கோஷம்...கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு நிற்கிறது அந்த கோஷம் இன்று.

\\அதுவரை என்னோடு வந்த கற்பிக்கப்பட்ட இலக்கணங்கள் அருவருப்பாய் கழிந்தோடியது புகைவண்டி கழிப்பறையினூடாக. ....//
புகை வண்டியில் சில மோசமான அனுபவங்கள்..!

காமராஜ் said...

வாருங்கள் வணக்கம்.
நல்லது சுந்தரா.

அதுதான் முரண்பாடுகள்.

வீரம் எனப்படுவது யாதெனில்
அது யாருடைய பூர்வீகச் சொத்துமில்லை.

என்னா கொழைவுன்னு தெரியுமா ?
நடராஜன் அவனை உலகக் கெட்டவார்த்தையில் வைதார்.

காமராஜ் said...

வணக்கம் லாவண்யா,
நன்றி லாவன்யா..

காமராஜ் said...

வா அன்புத் தம்பி ரமேஷ்..
நான் சொல்லவந்ததை
பிடித்துக்கொண்டாய்.
சந்தோஷம்.
ரொம்ப சந்தோஷம்.

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா,.. படிக்கும் பொழுது மனம் கொஞ்சம் கனக்க செய்த்தது

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்கு...அதே சமயம் கஷ்டமாகவும்!
அந்த ராணுவ வீரன்....ஹ்ம்ம்ம்!! ஹ்ம்ம்ம்!!நாட்டுக்காக உயிர்நீத்த அவர்கள் எங்கே..இவன் எங்கே!

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அண்ணா!!

velji said...

துருவிப்பார்க்க,மேல்பூச்சு கலைந்த எல்லாமும் இப்படித்தான் அருவருக்கும் சுயம் காண்பிக்கிறது.மேலோட்டமாய் இருப்பதே பிழைக்கும் வழி!

க.பாலாசி said...

உண்மையில் ஒரு எதார்த்தமான வாழ்க்கையை பார்த்திருக்கிறீர்கள் என்றுதான் சொல்லவேண்டும். இன்றுவரை மனிதன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான், அதே மனிதமில்லாமல்.

நல்ல அனுபவம்....

குப்பன்.யாஹூ said...

அருமையான பதிவு

பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.

மனதை மிகவும் தொந்தரவு செய்கிறது, பல மணி நேரம் சிந்திக்க வைக்கிறது.

இளவட்டம் said...

///அந்த ஒன்பது மாதக் கர்ப்பினிப்பெண் எங்களுக்கு முன்னால் நடந்து போனாள். ஒரு கையை இடுப்பிலும் ஒரு கையை அடிவயிற்றிலும் வைத்தபடி. அந்த ராணுவவீரன் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக் காணவில்லை.///

மனதில் காட்சி கனமாய் ஓடுகிறது.
அருமையான பதிவு சார்.

காமராஜ் said...

நன்றி நண்பா ஞானசேகரன்
வணக்கம்.

காமராஜ் said...

// velji said...
துருவிப்பார்க்க,மேல்பூச்சு கலைந்த எல்லாமும் இப்படித்தான் அருவருக்கும் சுயம் காண்பிக்கிறது.மேலோட்டமாய் இருப்பதே பிழைக்கும் வழி!//

இது பதிவை விட நூறுமடங்கு அழுத்தமாக இருக்கு. நன்றி வேல்ஜி.

காமராஜ் said...

வணக்கம் சந்தனமுல்லை நன்றிம்மா.

காமராஜ் said...

வணக்கம் பாலாஜி முன்னதாக எங்கள் bwu பத்திரிகையில் எழுதியது. கொஞ்சம் திருத்தி.
நன்றி பாலாஜி.

காமராஜ் said...

வணக்கம் குப்பன் யாஹூ சார்.
என்ன சார் பெரியவார்த்தைகள் எல்லாம் சொல்லி சங்கோஜப் படுத்துகிறீர்கள்.

காமராஜ் said...

//மனதில் காட்சி கனமாய் ஓடுகிறது//

வாங்க இளவட்டம்.
வணக்கம். அருகிருந்து பார்த்த நாங்கள் உண்மையை நம்பமுடியாமல் தவித்தோம்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அழகான பதிவு.

எதார்த்தசித்திரம் வரைய எத்தனை பேருக்கு முடியும், எத்தனையோ வண்ணத்தீற்றல்களில் கித்தானை விட்டு பிதுங்கி வழிகிறது முகத்திலறையும் நிஜம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தனி பத்தியாக எழுத முடியும். உங்கள் புள்ளிகளில் நெடுகி விரைகிறது ஒரு எனக்கான ஒரு நெடுஞ்சாலை பயணம்.

அன்பு காமராஜ் உங்கள் பதிவுகளில் வழியும் சமூக பார்வையில் 1/6 பங்காவது எனக்குக் கிடைக்க வேண்டும் என்று ஏங்குகிறேன்.

வாழ்த்துக்களும், அளப்பறியா அன்பும்,
ராகவன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்ந்தவிதம் மிகவும் அருமை!

அந்த ராணுவ... இல்லை.

காமராஜ் said...

நன்றி ராகவன் நன்றி.

காமராஜ் said...

வணக்கம் அமித்தம்மா.
கருத்துக்கு நன்றி

அம்பிகா said...

கட்டியமனைவியை, அதுவும் கர்ப்பிணியை காப்பாற்ற நினைக்காதவனா, நாட்டை காப்பாற்ற போகிறான்.
வாழ்க பாரதம்.

காமராஜ் said...

நன்றி அம்பிகா.

Deepa said...

//ஒரு கையை இடுப்பிலும் ஒரு கையை அடிவயிற்றிலும் வைத்தபடி. அந்த ராணுவவீரன் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக் காணவில்லை.//

இது புனைவு, வேறொரு விஷயத்தைச் சுட்டிக் காட்டச் செய்த அதீத கற்பனை என்றால் சரி.

நிஜம் என்றால்...நம்பப் பிடிக்கவில்லை காமராஜ் ஸார்.
அவன் ராணுவ வீரன் என்பதால் இல்லை.. ஏனோ தெரியவில்லை!

இது உங்கள் கற்பிதம் என்று உங்களைக் கோபித்துக் கொண்டு சமாதானமடைய விழைகிறேன்.
தயவு செய்து மன்னிக்கவும்.

அன்பு பொய்த்துப் போவதைக் கற்பனையில் கூடத் தாங்க முடிவதில்லை..