'' ஏய் இங்க என்னடா பண்றீங்க ''அந்த மூன்று பேரும். ரோட்டை ஒட்டிய பாலத்துச்சுவரில் உட்கார்ந்து காலாட்டிக்கொண்டு முந்திய இரவு பார்த்த சினிமாவைப்பற்றியோ, குடித்த சிகரெட்டைப்பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள். அலட்சியமாகத் திரும்பிப்பார்த்தார்கள். மாடத்தி டீச்சரை அங்கு துளியும் எதிர் பார்க்கவில்லை.'' டே பேச்சிமுத்து, வீடெங்க இருக்கு.. ஸ்கூலுக்கு வராம... ராஸ்க்கல் '' மாடத்தி ரோட்டை விட்டு இறங்கி அவர்களை நோக்கி நகரவும், குதித்து ஓடி, தெரு முடிவிலிருந்த சுவரில் ஏறிக்குதித்து தண்டவாளப்பக்கமாய் மறைந்துபோனார்கள். துரத்தி ஓடமுடியாத ஆத்திரமும், காந்திநகருக்கு அலையாய் அலைந்து சேர்த்த ஒருவன் வீனாப்போனதும் சகிக்கமுடியவில்லை எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறாள் அவனை பேர் சேர்க்க. தீப்பெட்டி ஆபீசுக்கு போக இருந்தவனை நிறுத்தி குடும்பத்தாரிடம், வெள்ளத்தால் அழியாது, வெந்தனழால் வேகாது என்று கல்வியின் பெருமை சொன்னபோது அவன் வேலைக்குப்போகலைன்னா அடுப்புல சோறு வேகாது என்று அவனது தாயும் தகப்பனும் பதில் சொன்னர்கள். நிப்புக்கம்பெனி மூடியதால், பழைய பேப்பர், பிளாஸ்டிக், பழைய பாட்டில் வாங்கி விற்கும் அப்பா.தீப்பெட்டிக்கட்டு வாங்கி ஒட்டும் அம்மா. வாஸ்த்துப்பாத்து கட்டிய படிகளைப்போல வரிசையாய் ஆறு குழந்தைகள். அவர்களின் வயிறு நிறைக்க முடியாமல் ரெண்டுபேர் சம்பாத்தியம் நொண்டியடித்தது. பிள்ளைகள் படிப்பார்கள் பேரெடுப்பர்கள் கை நிறையகொண்டு வந்து கொட்டுவார்கள் என்கிற கனவுகள் தோற்றுப்போய் எதார்த்த வறுமை எட்டு வயசிலேயே பையனை வேலைக்கனுப்ப வைத்தது. இந்தக்கதையெல்லாம் செல்லாதபடிக்கு திரும்பத் திரும்ப படிப்பினால் உயர்ந்தோரின் பட்டியலைச்சொன்னார்கள். படிக்கிறவயசில் சிறார்களை வேலைக்கு அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்று லேசாக கலங்கடித்தார்கள். மசியவில்லை. மாசம் நூறு ரூபாய் ஸ்டைபண்ட் கொடுப்பார்கள் மதியம் சாப்பாடு உண்டு என்று சொன்னதும் கண்கள் லேசாக விரிந்தது. யோசிக்க ஆரம்பித்த தாயை மடக்கி ஒரு எதிர்கால கம்ப்யூட்டர் எஞ்சினீயரை மீட்டெடுத்தார்கள். அதற்கென நாலு நாள் சாயங்காலம் செலவானது, இருட்டிய பின்னால் வீட்டுக்கு வந்தார்கள் . விளக்குப்போடக்கூட ஆளில்லாமல், பூட்டிக்கிடந்த வாசலில் மாடத்தியின் மகன் வீட்டுப்பாடம் எழுதமுடியாமல் காத்துக்கிடந்தான். சிவகாசி அச்சுத் தொழிற்சாலையில் கணக்கெழுதுகிற கணவன் பதினோருமணிக்கு வந்தபோது பையன் சொல்லியதைக்கேட்டு வீட்டில் ஒருவாரம் சண்டை நடந்தது. இவ்வளவு மெனக்கெட்டுச் சேர்த்த பேச்சிமுத்து மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டான். எல்லாம் வீனாகிப்போனது. கோபம் கோபமாக வந்தது மாடத்தி ட்டீச்சரின் கணவன் நாகரீகமாகக் கேட்ட சில கேள்விகள் இப்போதுகூட முள்ளாகக்குத்தியது. அந்த அதிகாலை வேலையில் காளியம்மன் கோவிலுக்குப்போய்விட்டுத்திரும்பி வந்த சந்தோசம் கானாமல்போனது. உடனடியாக ஐந்து புள்ளிக்கு ரத்த அழுத்தம் கூடியது. கூட வந்த வார வட்டி முருகேசன் மனைவி '' போனாப்போகட்டும் விடுங்க டீச்சர், அவன் படிக்கலைன்னா அவனுக்குத்தானே நட்டம் ''என்று சொன்னாள். அவளுக்கென்ன தெரியும் இப்படியே நாலைந்து பேர் வராமல் நின்றுபோனால் இவளுக்கு கிடைக்கிற ஆயிரத்து ஐநூறும் நின்னுபோகும் என்று அவளுக்கெப்படித்தெரியும். உண்மையைச்சொன்னால் ஆத்திர அவசரத்துக்கு கிடைகிற இருநூறு ஐநூறு கைமாத்தும், டீச்சர் பட்டமும் பறிபோகும் என்று மாடத்தி பயந்தாள். அந்த உண்மை, " பேரு பெத்த பேரு தாக நீலு ரேது " என்பது போலத்தான். ஊரும், பிள்ளைகளும் அவளை டீச்சர் என்று கூப்பிடுவார்கள். எதிர்ப்படுகிற தீப்பெட்டியாபீஸ் பெண்களெல்லாரும் மரியாதைகொடுத்து ஒதுங்கிப்போவார்கள்.அது மட்டும் தான் இப்போது ஆசுவாசமாக இருக்கிறது. எண்பத்தெட்டாம் வருசம் பதிந்து வைத்த பட்டப்படிப்பு, தட்டச்சு பட்டயப்படிப்பு, ரெண்டும் சேர்ந்து எப்போதாவது வேலை தருமென்கிற நம்பிக்கை சுத்தமாக மண்மூடிப்போனபோது. ஜீவனம் தள்ள இந்த இடத்துக்கு வந்தாள். இதற்கும் கூடப் பெரும்போட்டி , சில பேர் வட்டிக்கு வாங்கி பத்தாயிரம் லஞ்சமாகக் கொடுத்தார்களென்று பேசிக்கொண்டார்கள். ஒரு காலத்தில் முறைசாராக்கல்வி என்று பேயரிடப்பட்டு கல்லூரியில் படிக்கிற என் எஸ் எஸ் மானவர்களைக்கொண்டு சேவை நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வேலையில்லா ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இப்போது தொண்டு நிறுவணங்களின் கையில் அந்தப்பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடைகோடிக்கும் கல்வி போக வேண்டுமெனும் உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் இப்போது ரொம்ப பிரபலம். கொள்கைகள் சுருக்கமாக வெளிப்பக்கம் எழுதப்பட்ட டாடா சுமோவின் உள்புறத்தில் குளிரூட்டப்பட்டிருக்கும், எப்போதும் மாறாத செண்டு வாசம் வாகனம் முழுக்க பரவியிருக்கும். செண்டு வாசத்தோடு தொண்டு நிறுவனத்தலைவர் வருவார். '' நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேர'' பாட்டுப்போட்டு பிள்ளைகளை டிரில் வாங்கி, ஆடவைத்து குஷிப்படுத்தவேண்டும். அவரோ பிள்ளைகளைப் புழுக்களைப்பார்ப்பது போல் பார்ப்பார். அவர் வந்து போகிற வரை ஆசிரியைகள் உட்பட எல்லோரும் கைகட்டிக்கொண்டு கால்கடுக்க நிற்கவேண்டும். படியளக்கிற புண்ணியவானாச்சே?. சம்பளம் எண்ணூரில் ஆரம்பித்து இந்தப்பத்து வருசத்தில் ஆயிரத்து ஐநூறில் வந்து நிற்கிறது. இந்த ஆயிரத்து ஐநூறு சம்பளத்துக்கு வாரத்தில் ஐந்து நாள் இன்ஸ்பெக்சன் நடக்கும், மாதத்தில் ஐந்து நாள் மீட்டிங் நடக்கும். அந்த கூட்டங்களில் நாடு போற்றும் பேச்சாளர்கள் வந்து பேசுவார்கள். வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், குழந்தை தொழிலாளர் அவலம், எல்லாம் பிரதானப்பொருளாகப் பேசப்படும். சில நேரம் நாடகங்கள் கூடப்போடுவார்கள். அரை மணிநேரம் தாமதமாகப்போனாலோ தலைவலி காய்ச்சல் என்று மத்தியானம் வீட்டுக்குப்போனாலோ, அந்த நாளுக்குறிய சம்பளம் கழிக்கப்படும். வேலை என்பது ஊரிலுள்ள குடிசைப்புறத்து வீடுகளாகப்போய் படிப்பு பாதியில் நின்று போன குழந்தைகள் தேடவேண்டும். அந்தப்பிள்ளைகள் படிப்பதற்கு வெறும் ஐநூறு ரூபாயில் வாடகைக்கட்டிடம் தேட வேண்டும். மழைக்காலத்தில் ஒழுகும் ஓட்டுக்கூரைக்கடியில் நனையாமல் குழந்தைகளைக் காக்க வேண்டும். அந்த ஐம்பது பிள்ளைகளுக்கு சாப்பாடு போட அரிசி பருப்பு தேட வேண்டும். நிர்வாகியின் பிரதிநிதி வந்து '' என்ன செய்வீகளோ ஏது செய்வீகளோ குழம்புச்செலவு ஒரு நாளைக்குப் பத்து ரூபாய்க்கு மேலே போகக்கூடாது, போனால் சம்பளத்தில் பிடிச்சிருவேன்''என்று சொல்லிவிட்டு விறைப்பு மாறாமல் பைக்கில் ஏறிப்பொய்விடுவார். சம்பளமும் மூனு மாசம் நாலு மாசம் சேர்த்து சேர்த்துத்தான் பட்டுவாடா பண்ணப்படும். அது வரை ஏதாவது நகைகளை அடகு வைத்துத்தான் அடுப்பெரிக்க வேண்டும்.அதுவுமில்லாதவர்கள் அண்டை அயல் வீடுகளில் குறைந்த வட்டிக்கு வாங்கி காலம் தள்ளவேண்டும். இதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு டவுசர் கிழிந்த பிள்ளைகளுக்குப்பாடம் சொல்லித்தரவேண்டும். ஐஸ் விற்கிறவனையும், வடை விற்றுக்கொண்டுபோகிற பெண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கிற அவர்களைக் கம்பெடுத்து அடிக்கவேண்டும். அடிவிழுந்த இடத்தில் வலி குறைவதற்குள் அவர்களுக்கு ஆறுவது சினம் சொல்லிக்கொடுக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு காலையும் ஸ்கூல் வாசல் நுழகிற போது நாற்பது சுரத்தில் சேர்ந்து குட்மார்னிங் டீச்சர் சொல்லும் போதும், எங்காவது பொது இடங்களில் பார்க்கும் போது எழுந்து நின்று மரியாதை செய்யும் போதும் உருவாகிற போதையில் இந்தப்புலப்பமும் வலிகளும் தீர்ந்துபோகும். பேசிமுத்து வராதது ஒரு வாரத்துக்கு திக் திக்கென்று இருந்தது. அந்தப்பக்கமாகக் கடந்து போகிற எல்லா ஜீப்பும், பைக்கும் லேசான உதறலை உண்டுபண்ணிப்போனது. வேலிக்காட்டுக்குள் சாராயம் காச்சுகிறவர்கள் கூடக் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்க முடியும். இந்த நூறு ரூபாய் பள்ளிக்கூடத்தில் எந்த நேரமும் நெருப்பைக்கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். வேலை அப்படி.போக்குவரத்து துறை தவிர, தமிழக அரசின் முக்கால் வாசி இலாக்கக்களிலிருந்து ஆய்வுக்கு வருவார்கள்.புதிதாக வந்த சப்கலெக்டர் ஒரு வெளிமாநிலத்துக்காரர். இளம்பெண் அதிகாரி. அந்தப்பக்கமாக போன ஜீப்பை நிறுத்தி மடமடவென உள்ளே வந்தது. இந்தமாதிரி ரொம்பப்பேர் வருவாங்க. வெளிநாட்டு, உள்நாட்டு தொண்டு நிறுவணங்கள். அப்புறம் மனித வள மேம்பாட்டுத் துறையிலிருந்தெல்லாம் வருவார்கள்.புரியாத மொழியில் புரியாத விஷயங்கள் பேசிவிட்டு.கையடக்கமான வீடியோ கேமராவில் ஒளியற்ற முகங்களைப்படம் பிடித்துக்கொண்டு போவார்கள். அதுபோலத்தான் அந்த சப்கலக்டெர் வந்தது. பசங்களிடம் கேள்வி கேட்டது தமிழுக்கே தரிகனத்தான் போடுகிற பிள்ளைகள் இங்கிலீஸுக்கேள்விகளால் நிலைகுலைந்து போனார்கள்.அவ்வளவுதான் அம்மா வேபங்கொலையில்லாமல் சாமியாடியது. தாட் பூட், கக்கிரி,புக்கிரி என ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் ஏதேதொ திட்டியது. பசங்களுக்கு அந்த மொழி புதிராக இருந்தது.மனநிலை சரியில்லாத காதர் என்கிற நாலாவது படிக்கிற பையன் சப்கலெக்டருக்கு பதில் சொல்லுகிற மாதிரி அவனும் இஷ்ட மிஷ்ட டிரிங்,புரிங் என்று சொல்லவும் பிள்ளைகள் ஒட்டுமொத்தமாக சிரித்துவிட. அம்மா ஓட்டைச்சேரில் உட்கார்ந்து மெமோ எழுத ஆரம்பித்தது அதுவரை பேசாதிருந்த உதவியாளர் அவரது ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார். பேச்சிமுத்துவை முற்றிலுமாக மறந்துபோயிருந்த ஒரு நாளில் கலை இலக்கிய இரவு பார்க்கப்போனாள் மாடத்தி டீச்சர். நிகச்ழ்சி ஆரம்பிக்கும் முன்னாள் கூட்டத்திற்குள் ஒரு சிறுவன் சம்சா விற்றுக்கொண்டு அலைந்தான். தூரத்திலிருக்கும் வரை காட்சியாக இருந்த அவன் பக்கத்தில் வந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அவன் பேச்சிமுத்துவே தான். கூப்பிட்டு விசாரித்தபோது அப்பாவுக்கு தீராத வயிற்று வலியெனவும் வேலைக்கு போகவில்லை அதனால் சம்சா விற்க வந்துவிட்டேன் என்றும் சிரித்துக்கொண்டே சொன்னான். ஹோமியோபதி டாக்டரிடம் காட்டச்சொல் ஐம்பது ரூபாய்க்குள் சொஸ்தமாகிவிடும் என்று பேருக்கு சொல்ல மறுநாள் பேச்சிமுத்துவின் அப்பா ஸ்கூலுக்கே வந்து விட்டார். டீச்சர்கள் எல்லாம் சேர்ந்து ஆளுக்குப் பத்துரூபாய் போட்டு அவரை ஹோமியோ டாக்டரிடம் அனுப்பி வைத்தார்கள். ஒருவாரத்தில் ஆச்சரியம் ஒன்று நடந்தது. சைக்கிளின் முன்பக்கம் உட்காரவைத்து அவரே பேச்சிமுத்துவைக் கூப்பிட்டு வந்தார். வயித்து வலி சரியாப்போச்சு டீச்சர் என்பதை வார்த்தைகளிலும் நன்றியைக்கண்களிலும் சொல்லிவிட்டு பின்னாலிருந்த மரப்பெட்டியிலிருந்து ஐந்து கொய்யாப் பழங்களைக் கொடுத்துவிட்டுப் போனார்.அன்றைக்குப் பூராவும் டீச்சர்கள் பேச்சிமுத்து வந்த சந்தோசத்தில் அவனைப்பற்றியும்,அவனைக் கூப்பிடப்போன சம்பவங்களையும் அசைபோட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்பொதெல்லாம் காலை எட்டுமணிக்கே பேச்சிமுத்து வந்துவிடுகிறான். மூணுதெரு தள்ளியிருக்கும் குளோரி டீச்சர் வீட்டுக்குப்போய் சாவி வாங்கி வருவது.அவனே திறந்து அந்த கைப்பிடி போன பெருக்குமாறால் பள்ளிக்கூடத்தை பெருக்குவது. ஒவ்வொரு டீச்சர் வரும்போதும் ஓடிப்போய் பையை வாங்கி வருவது. எங்காவது கடைக்குப் போகச்சொன்னால் அடம்பிடித்து சண்டைபோட்டு முந்திக்கொண்டு தானே போவது. டீச்சர்கள் இல்லாத பொழுதுகளில் பிள்ளைகளைக்கவணிப்பது என்று அந்த பள்ளிக்கூடத்தில் அவன் எல்லாமுமாகிப்போனான். கொடைக்கானல் சுற்றுலாவுக்கு கூட்டிக்கொண்டு போனப்பிறகு அவன் இன்னும் கூடுதல் பிரியமானவனாக மாறிப்போனான். ஒருமாதத்துக்கு முன்னமே கொடைக்கானல் போகிறோம் வேன் செலவுக்கு ஆளுக்கு ஐம்பது தரவேண்டும் என்று சொன்னதிலிருந்தே அவன் சுறு சுறுப்பாகி விட்டான்.ஒவ்வொரு நாளும் மாடத்தி டீச்சரிடம் ஒரு ரூபாய் கொடுத்து சேர்த்து வைத்தான். ஐஸ் வண்டி வரும்போது வெளியே வராமல் உள்ளேயே இருந்து புஸ்தகம் படிப்பதாகப் பாவனை பண்ணிக்கொண்டான். கொடைக்கானல் போக இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்பதையும், எவ்வளவு பணம் சேர்க்கவேண்டு மென்பதையும் தினம் தினம் மாடத்தி டீச்சரிடம் நச்சரிப்பான். அப்போது அவன் கண்களில் இருக்கிற ஏக்கம் அதள பாதாளங்களையும் தாண்டிய பாதாளத்தில் இருக்கும். பிறகு அவனே மனதுக்குள் ஒரு கணக்குப் போடுவான் பிறகு சோர்ந்து போவான். கொடைக்கானல் போக இன்னும் நான்கு நாட்கள் தான் இருந்தது. அப்போது அவன் கணக்கில் இருபத்தி எட்டு ரூபாய் தான் இருந்தது. அதைக்கேட்டதிலிருந்து மிகவும் சோர்வாய்க் காணப்பட்டான். எந்த நேரமும் மற்ற பிள்ளைகளை அதட்டிக்கொண்டும், அடித்து அழவைத்துக்கொண்டுமிருக்கிற பேச்சிமுத்து இப்போது மூலையில் உட்கார்ந்து நிறையச்சிந்திக்க ஆரம்பித்து விட்டான். பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து அவனைக்கேலி செய்ய அழுதுகொண்டிருந்தான். கனகா டீச்சரிடம் 'துட்டு கொறைய்யாக்குடுத்தா கொடைக்கானல் கூட்டிக்கிட்டு போகமாட்டீங்களா டீச்சர் ' என்று கேட்டான் " டிக்கட்டுக்கு ஐம்பது செலவுக்கு வேற பணம் இருக்கு அதனால எழுபது ரூபாயாச்சும் இல்லாயின்னா நீ கிடையாது " என்று கட்டன் ரைட்டாச் சொல்லியயதும் சுத்தமாக நொறுங்கிப்போனான். கொடைக்கானல் போவதற்கு இன்னும் இரண்டு நாள் தானிருந்தது. படந்தால் ரோட்டில் இருக்கிற இதேமாதிரியான இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு ஆள் அனுப்பி எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டியதிருந்தது. ஓட்டு கூறை வாய்பிளந்து கிடக்கிற அந்தப்பள்ளிக் கூடங்களில் தொலை பேசி என்பது எட்டாக்கனி. தூதனுப்ப பேச்சிமுத்துவைத் தேடும்போது தான் அவன் ரெண்டு நாள் வராதது தெரிய வந்தது. பக்கத்து வீட்டு கனிமொழியைக் கேட்டதற்கு எங்கம்மாவுக்கும் அவங்கம்மாவுக்கும் சண்டை எனக்குத்தெரியாது என்று சொல்லிவிட்டாள். சிவக்குமாரை அனுப்பி கூடிவரச்சொன்னதற்கு பள்ளிக்கூடத்துக்குத்தான் போயிருப்பதாக அவன் அம்மா சொன்னதாகச் சொன்னான். இதைக்கேட்டதும் டீச்சர்மாரெல்லாம் ஆடிப்போனார்கள். நாளைக்கு தாய் தகப்பன் வந்து பிள்ளையைக்காணோம் என்று கேட்டாள் என்ன செய்ய எனும் உதறல் வந்தது. கொடைக்கானல் போக இன்னும் ஒரு நாள் தானிருந்தது இந்த நேரத்தில் இதென்ன சோதனை என்று ஆளாலுக்கு அங்களாய்த்தார்கள். மறு நாள் மதியச் சாப்பாட்டுக்கு பிள்ளைகள் தயாராகிகொண்டிருக்கும்போது ஒண்ணுக்கிருக்கப்போன பக்கத்து வீட்டுக் கனிமொழி ஓடி வந்து மூச்சிறைக்க ' டீச்சர் டீச்சர் பேச்சிமுத்து ' என்று சொல்லி நிறுத்தினாள். பள்ளிக்கூடம் மொத்தமாகத் திரும்பிப்பார்த்தது. திரும்பவும் டீச்சர் டீச்சர் பேச்சிமுத்து என்று சொன்னாள். ஆயாம்மாதான் ' ஏ சொல்லுடி ஒடைஞ்ச ரிக்காடு மாரி சொன்னதெயே சொல்லிக்கிட்டு ' என்று அரட்டினார்கள். ரோட்டில் தையல் கடை நிழலில் பேச்சி முத்து இருப்பதைச்சொல்லியதும் அப்பாட என்றிருந்தது. பையன்களை அனுப்பிக்கூட்டி வரச்சொன்னதற்கு பயந்து கொண்டு வரவில்லை. மாடத்தி டீச்சர் போய்பார்த்தது. வெண்டைக்கய் மாதிரி வதங்கி அழுக்குச்சட்டையோடு பிச்சைக்காரனைப் போலிருந்தான். மாடத்தி டீச்சரைப் பார்த்ததும் கண்கள் நிரம்பியது. சாப்பிட்டிருக்கமாட்டான் என்று தெரிந்தது " சாப்பிட்டயாடா " கேட்டதற்கு ஆமாம் எனத் தலையாட்டினான்." இல்ல வா சாப்பிட " என்று சொல்லித் தலையைத் தொட்டதும் கேவிக்கேவி அழுதான். ரெண்டு நாள் பள்ளிக்கூடம் போகிறேனென்று சொல்லி விட்டு சம்சா விற்கப்போயிருக்கிறான் அவனுக்கு சரக்குக்கொடுக்கமாட்டேனென்று கடைக்காரர் சொல்லியதோடல்லாமல் " நீங்க தான் படிச்சு கம்ப்யூ..ட்டர் எஞ்சினீராகப் போறீகள்ள போங்க " என்று குத்தலாகப்பேசியது அவன் கண்முன்னே இன்னொரு பேச்சிமுத்துவுக்கு சம்சா எண்ணிப்போட்டது. பிறகு தேவி தியேட்டருக்குப்போய் கெஞ்சிக் கெதறிக் கேட்டு இண்டர்வெல்லில் முறுக்கு விற்றது. பேப்பர் பொறுக்கி கடையில் போட்டது எல்லாம் சொல்லிவிட்டுப்பைக்குள் கைவிட்டு பதினைந்து ரூபாய் சில்லறையாக மாடத்தி டீச்சரிடம் நீட்டினான். " இத வச்சிக்கிட்டு என்னியக் கூட்டிக்கிட்டுப் போங்க டீச்சர், நா எப்டியும் சேத்து வச்சி ஒங்களுக்கு மிச்சத்துட்ட தந்துருவேன் " சொன்னதும். மாடத்தி டீச்சருக்கு மட்டுமல்ல அங்கிருந்த பிள்ளைகளும் ஆயாவும் வார்த்தைகள் மறியல் பண்ண கண்ணைக் கசக்கிக்கொண்டு நின்றார்கள். சமூகம்,குழந்தைத்தொழிலாளர்,சிறுகதை |
24.11.09
சிறுபிள்ளைகள் என்னருகே வர தடைசெய்யாதிருங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
சமூகப்பர்வையில் நீங்கள் எழுதும் யாவும் மிக அருமையாயிருக்கிறது. இணைத்து ஓட்டும் போட்டுவிட்டேன்.
பிரபாகர்.
இந்த அவலம் தென் ஆசியாவில் தான் அதிகம்
இங்குதானே அரசியல்வாதிகள் தேர்தலின் போதுமட்டும் கண்விழிக்கிறார்கள்
ஆஹா...! அண்ணா...... முடியல அண்ணா.....இதில் வரும் அத்தனை கதா பாத்திரங்களின் வலிகளையும் யதார்த்தமாக பதிந்திருக்கிறீர்கள்......
\\அந்தப்பக்கமாகக் கடந்து போகிற எல்லா ஜீப்பும், பைக்கும் லேசான உதறலை உண்டுபண்ணிப்போனது. வேலிக்காட்டுக்குள் சாராயம் காச்சுகிறவர்கள் கூடக் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்க முடியும்....//
ஒரு நொடி சிரித்து விட்டேன்....பின்பு கண்முன்னே காட்சியை விரிய விட்டு பார்த்த பொது ஏதோ ஒன்று மனதை அழுத்துவது உணர முடிந்தது..!
\\போக்குவரத்து துறை தவிர, தமிழக அரசின் முக்கால் வாசி இலாக்கக்களிலிருந்து ஆய்வுக்கு வருவார்கள்....//
கிண்டலான வரிகள் என்றாலும்....அரசாங்கத்தின் அதிகார வர்கத்துக்குதான் எவ்ளோ ஒரு அக்கறை....அரசாங்க பணத்தை பாதுகாக்க வேண்டுமென்பதில்...!
சொல்ல மறந்துட்டேன் அண்ணா ஏழாயிரம் பண்ணையில் என் நண்பன் அரசு உதவி பெரும் பள்ளியில் பணியாற்றுகிறான்.....இப்போது அவர்களும் மாணவர் சேர்க்கைக்காக ஓடிக் கொண்டிருக்கிறாகள்..! போதிய அளவு மாணவர்கள் இல்லையென்றால் இப்போது அரசாங்கமே அங்கீகாரத்தை ரத்து செய்து விடுகிறதாம்.
நன்றி ப்ரபாகர். உங்கள் ஊக்கமும் உறுதுணையும் தொடர வேண்டுகிறேன்.
அன்பும் வணக்கமும்.
வாருங்கள் தியா
வணக்கம்.
ஆம். பஞ்சப்படி என்ற ஒன்றே ஆசிய நாடு தவிர்த்து வேறெங்கும் இல்லை.
வா ரமேஷ், உன் நண்பன் பேர் ப்ரபாகாரனா ?
ரொம்ப நெருங்கிவிட்டாயே.
சரி ரெட்டிப்பு சந்தோசம்.
அற்புதமான பதிவு,
அருமையான கரு, மிக அற்புதமான எழுத்து நடை, மொழி லாவகம்.
எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். இந்த மாதிரி (நீங்கள், அய்யனார், லேகா, மாதவ், ஜ்யோவ்ராம் ....) பதிவுகள் இருந்தால் போடும், வார இதழ்களோ, இலக்கிய இதழ்களோ தேடி போக வேண்டாம்.
மொழியும் வார்த்தைகளும் கட்டுக்குள் வந்து விட்டது உங்களுக்கு. அற்புதம்.
மாதவராஜின் - வலைப்பூ புத்தகத்திற்கு நான் இந்த பதிவை பரிந்துரை செய்கிறேன்.
ஒரே ஒரு விஷயம்- குறை அல்ல- கமலஹாசன் படம் போல, ஒரே பதிவில் பல விஷயங்களோ (ஓவர் டோஸ் என்பார்களே) .
நல்ல பதிவு , கடைசியில் கண்களின் ஓரம் கண்ணீர் வந்ததை ஏனோ தடுக்க முடியவில்லை .
ஆகா,.. நண்பா.. உங்களின் பார்வை... தொலைநோக்கு என்னை மகிழசெய்கின்றது,.. பார்ராட்டுகள் நண்பா...
கதை நல்லா வந்திருக்கு. டிச்சர் மாடத்தியும் சரி பேச்சிமுத்துவும் கண்ணில் கண்ணீரை கொண்டு வந்தனர். அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களில் ஆசிரியராக வேலைப்பார்ப்பது மிகவும் சிரமம். பள்ளிக்கு ஆள் சேர்க்க பக்கத்து கிராமங்களுக்கு அவர்கள் சென்றால் பிள்ளை பிடிக்க வந்துட்டாங்க என்று சொல்வார்களாம்.
வணக்கம் குப்பன் யாஹூ சார்.
கருத்துக்கு நன்றி.
கொஞ்சம் அதீதமாக இருக்கிறதா.
சுட்டிக்காட்டலுக்கு நன்றி திருத்திக்கொள்கிறேன்.
வருக வணக்கம் மதார்.
உங்கள் முதல் பின்னூட்டத்துக்கு நன்றி.
தொடர்ந்து வாருங்கள்.
வணக்கம் என் அன்புத்தோழா ஞான்ஸ்.
நன்றி.
நன்றி லாவண்யா.
அரசுப் பள்ளிகளுக்குக்கூட இதுமாதிரி ஆள்(பிடித்த)சேர்த்த அனுபவங்களை ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களாக இருந்த என் அப்பா அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்.
ஆசிரியர் என்ற பதவியையும்தாண்டிவந்து பள்ளிக்கூடப் பிள்ளைகளின் படிப்புக்காக நிறையத்தான் பாடுபட்டிருக்கிறார்கள்.
//விளக்குப்போடக்கூட ஆளில்லாமல், பூட்டிக்கிடந்த வாசலில் மாடத்தியின் மகன் வீட்டுப்பாடம் எழுதமுடியாமல் காத்துக்கிடந்தான்.//
இதை நானேகூட அனுபவித்ததுண்டு.
மாடத்தி டீச்சரும்,பேச்சிமுத்துவும் மனசில் நிறைகிறார்கள்.
அரசு ப்ள்ளிகளில மே மாசமே பிள்ளைகளை கூப்பிட வீடுவீடா செல்வாங்க்க ஆசிரியர்கள்.நானே பார்த்திருக்கிரேன்/
ஆம் சுந்தரா. பள்ளிக்கூடம் படத்திலும்,அழகி படத்திலும் தோழர் தங்கர்பச்சான் அந்த படிப்புவேட்டையக்காண்பித்திருப்பார்.
அது அறுபதுகளில் அந்த மகான் கல்விகண் திறந்த மாமனிதன் காமராஜரும் எங்கள் நூற்றாண்டுப்புரட்சிக்காரன் பெரியாரும் திறந்து வைத்த அறிவுக் கதவு. இன்னும் கூட கிராமங்களில் புழக்கத்தில் இருக்கிறது.
பதிவு மிக அருமை.
எப்படி எனக்கு சொல்வது என்று தெரிய வில்லை.
நாயகன், தேவர் மகன், உன்னால் முடியும் தம்பி திரைப்படங்கள் எப்படி. மூன்று அல்லது நான்கு சினிமாவில் மற்ற இயக்குனர்கள்/நடிகர்கள் செய்யும் வேலையை கமல் ஒரே படத்தில் பண்ணுவாரே, அது மாதிரி என்று சொல்ல வந்தேன்.
பல வாக்கியங்கள் மிக அருமை.
வெள்ளத்தால் அழியாது, வெந்தனழால் வேகாது என்று கல்வியின் பெருமை சொன்னபோது
வாஸ்த்துப்பாத்து கட்டிய படிகளைப்போல வரிசையாய் ஆறு குழந்தைகள்.
அதற்கென நாலு நாள் சாயங்காலம் செலவானது
கொள்கைகள் சுருக்கமாக வெளிப்பக்கம் எழுதப்பட்ட டாடா சுமோவின் உள்புறத்தில் குளிரூட்டப்பட்டிருக்கும், ....
உருவாகிற போதையில் இந்தப்புலப்பமும் வலிகளும் தீர்ந்துபோகும்.
மிக யதார்த்தமான, சமூகம் சார்ந்த கதை....படிப்பதற்குத்தான் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது.
அழுத்தம்...அருமை....
வாருங்கள் திருமதி ஜெயசீலன்,
வணக்கம் உங்கள் கருத்துக்கும் அன்புக்கும்
நன்றி.
சார், செல்லம் என்றாலும், அடக்கழுத என்றாலும் அன்பின் மிகுதியே.
குப்பன் யாஹூ சாரின் பாசம் ஒரு போதும் குறைவு படாது.
பாலாஜி வங்க அன்புக்கு வணக்கம்
கலைந்த நினைவுகளை மீட்டெடுத்தது.
கலங்கி விட்டேன்.
கண்கலங்கியது...பூங்கொத்து!
நன்றி வெயிலான்.
நன்றி அருணா மேடம்
தாங்கலை காமராஜ்..கதையில் இருந்து பிசகவிடாத நடையில் கொண்டு போய் கலங்க அடித்து விட்டீர்கள்.கண்கள் பொங்கி போச்சு.இந்தமாதிரி எழுதுகிற மனிதர்களை எனக்கு நண்பர்கள் ஆக்கி தந்த இந்த வலை உலகிற்கு எது. கொண்டு நேர் செய்ய போகிறேன்...
பாரா...
வாங்க.
இனி நிம்மதியா
அடுத்த பதிவுக்கு போகலாம்.
Post a Comment