2.5.10

மட்டஹாரி முதல் மாதுரிகுப்தா வரை.

ரகசிய போலீஸ் 115,சிஐடி சங்கர், இப்படித்திரைப்படங்கள் அறிமுகப்படுத்திய உளவுத்துறை மனிதர்களின் பிம்பம் இருட்டுக்குள் ஒரு சின்ன சூட்கேசுடன் பதுங்கிப்பதுங்கி அலைகிற மாதிரிப் பொதுப் புத்தியில் நிலைத்துவிட்டது.
பின்னர் தொன்னூறுகளில் பார்த்த சிபிஐ யின் டைரிக்குறிப்பு மம்மூட்டியின் வழியே மேதாவிலாசத்தைக்காட்டியது.அப்புறம் திருடா திருடா எஸ்பி பாலசுப்ரமணியன், இந்தியன் நெடுமுடிவேனு பாத்திரங்களும் கூட வித்தியாசமான உருவங்களில் உளவுத்துறையின் மேண்மை சொல்லும் மனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டனர்.

raw போன்ற நிறுவணங்களுக்கு ஆள் எடுக்கும் போது விண்ணப்பதாரரின் ஏழு தலைமுறைக் கதைகளும் தோண்டித்துருவப்படும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.அப்படித் துருவப்படும்போது தட்டுப்படுகிற காவல்துறை வழக்குகள்,விடுதலைப் போராட்டத் தொடர்பு, இன்னும் சில அரசுக்கு ஒவ்வாத குணங்கள் அவரை தகுதியற்றவராக்கிவிடுமாம்.இன்னும் கூடுதலாக ஒரு கதை சொன்னார்கள் அந்த எழுதலைமுறைத் தேடலில் விண்ணப்ப தாரருடைய ரத்தசம்பந்த உரவுகள் யாருக்காவது எதாவது சிவப்பு சித்தாந்த தொடர்பு இருக்குமேயானால், அதோகதிதானாம். இப்படித்தான்  இந்திய அல்லது தமிழ் சினிமாத்துறைக்கும் ஆள் எடுக்கிறார்கள் என்று பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.

உளவுத்துறைக்கோ அல்லது ராணுவ உயர் அதிகாரத்துக்கோ, இல்லை ஆட்சிப்பணிக்கோ ஆள் எடுக்கும்போது ஒரு  காலனி  அரசு இப்படி அடிமைகளைத்தெரிவு செய்யலாம் ஒரு சுதந்திர அரசுக்கு அப்படி நிர்ப்பந்தம் இருக்குமா என்பது தெரியவில்லை.ஆனால் இவர்களையெல்லாம் ஆட்டிப்படைக்கிற ஆட்சியாளர்கள் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் அவர்களைத்தேர்வு செய்கிற அதிகாரம் சாமான்யர்களின் ஆட்காட்டி விரலில் இருக்கிறது. இன்னும் சரியான உபயோகமில்லாமல்.

மாதுரி குப்தா இப்படி சல்லடைபோட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தூதரக இரண்டாம் நிலை அதிகாரி.இஸ்லாமாபாத்திந் தூதரகத்தில் பணிபுரியும் அவர் இந்தியாவின் ரகசியங்களை விற்றார் என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதினைந்து நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.அவரும் அவரது வழக்கறிஞரும் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.செய்திகளின் பரபரப்பை விழுங்கிக்கொண்டு முதலிடத்துக்கு வந்துகொண்டிருக்கிறார் மாதுரி குப்தா.இந்தியாவின் பிரதமர் அலுவலகம் இதுவரை சோரம் போனவர்களின் பட்டியலை பிரிதமருக்கு சமர்ப்பித்திருக்கிறது.மாதுரி குப்தா பத்தாவது ஆளாக வரிசையின் கடைசியில் நிற்கிறார்.இதில் எத்தனைபேருக்கு தண்டனை கிடைத்தது எத்தனை பேர் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்ட நாட்டுக்கு குடிபோனார்கள் என்கிற தகவல் இல்லை.தேடினால் கிடைக்கலாம்.ஆனால் மாதுரி குறித்த தொடர் செய்திகளில் அனுமானங்களில்,விமர்சனங்களில் அவர் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதாக ஒரு தகவல்  சொல்லப்   பபட்டிருக்கிறது.

அதுமட்டும் அவரால் ஒப்புக்கொள்ளப்பட்டு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

அவர் ஏன் இஸ்லாத்துக்கு மாறினார் என்றகேள்விக்கு அதன் சியா தத்துவம் அவரை ஈர்த்தது எனப்பதில் சொல்லுகிறார்.அதை விவரிக்கிற செய்தியாளர் 'honey trap' என்கிற பதத்தை உபயோகப்படுத்துகிறார்.மீண்டும் நாம் தமிழ் சினிமாவுக்குள்ளே போகலாம். புதிய பறவை படத்தில் சிவாஜியைக் காதலித்த சரோஜா தேவி ஒரு பெண் உளவாளி என்கிற அதிர்ச்சித் திருப்பம் சினிமாக்கதைகளுக்கு பெருந்தீனியையும்,தயாரிப்பாளர்களுக்கு கட்டுக்கட்டாய் பணத்தையும் பாமரஜனங்களுக்கு ஒரு புதிய இலக்கியத்தையும் விட்டுசென்றது.மதம், ஜாதி, இசங்கள், இலக்கியம்,கல்வி,கலவி என எல்லாவற்றிற்கும் உடனடி விளம்பரதாரராக மனிதனே இருக்கிறான்.அவன் நெருக்கமான நண்பனாக,உருக்கமான தாயாக,உயிர்குடிக்கும் காதலனாக இருப்பதில் வியப்பேதுமில்லை.எதுவும் சுயம்புவாகத்தோன்றி வளர்வதில்லை,வளரவே முடியாது. அப்படிப்பட்ட  தேன் தடவிய பொறிக்குள் சிக்கிக்கொண்ட மாதுரியை விட்டுவிட்டு இதே போன்ற பொறியில் சிக்கிய உலகின் முதல் பெண் உளவாளி மட்டா ஹரியை நாம் பின்தொடராலாம்.


மட்டா ஹாரி முதல் உலகப்போரின் முடிவில் பலிகொடுக்கப்பட்ட விலையுயர்ந்த அழகுப்பெட்டகம்.1917 ஆம் ஆண்டு அக்டோ பர் மாதம் பதினைந்தாம் நாளின் இளங் காலைப்பொழுதில் தனக்குப்பிடித்தமான நீள நிற கவுனை தேர்ந்தெடுக்கிறாள்.க்ரீடம் போலிருக்கும் முக்கோண தலைமாட்டியை அணிந்துகொள்கிறாள். பனிரெண்டு காவலர்களோடு புறப்படுமுன் தனக்கு ஆறுதல் சொல்ல வந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கும்,தனது வழக்கறிஞனும் கடைசிக்காதலனுமான வுக்கும் முத்தங்களைக் கொடுக்கிறாள்.  ராணுவ வாகனத்தில் ஏறி தான் நேசித்த அந்த நகரத்து வீதிகளின் காலைத்தென்றலை ஆழ்ந்து உள்ளிழுத்துக்கொண்டு பயணமாகிறாள் 'மார்க்கரெதா கீர்த்ருய்டா செல்லி'. அவளுக்குத்தெரியும் அது உயிரோடு போகும்  அவளது கடைசி ஊர்வலமென்று.

நெதர்லாந்தில் பிறந்து தாயும் தந்தையும் கைவிட்டு காலமானதும் எதிர்கொண்ட வறுமையையும் வாழ்க்கையையும் வெற்றிகொள்ள தனது அழகை ஈடுவைத்தாள் மர்க்கரெதா. தனது பதினாறாவது வயதில் உடலின் அதிர்வுகளை மீட்டிவிட்ட  தலைமை ஆசிரியன் தான் முதல் ஆடவன்.அங்கிருந்து தனது மாமன் வீட்டுக்கு இடம்பெயர்ந்த போது மணமகள் தேவை விளம்பரத்துக்கு விண்ணப்பித்து 45 வயதான டச் காலனி அரசின் ராணுவ அதிகாரியான ரூடால்புக்கு மனைவியானாள். மிகுந்த சந்தோஷமான குடும்பவாழ்வுதானென்றாலும் ராணுவக்குடியிருப்பில் இருந்த
ஏனைய அதிகாரிகளும் அவளது சந்தோஷப்பார்வையில் விழுந்தார்கள். இன்னொரு அதிகாரியோடு ஆறுமாதங்கள் வாழ்ந்த பின்னர் இந்தோனேசியக் கலாச்சரத்தைப் படிக்க ஆரம்பித்தாள். அங்கிருந்த நடனக்குழுவில் சேர்ந்து
அந்த ஈர்ப்பில் தனது பெயரை மட்டா ஹாரி என மாற்றிக்கொண்டாள். இந்தோனேசிய மொழியில் கண் என்று
பொருள்படும் மட்டா ஹரிக்கு 'பகலின் கண்' என்பது தான்  கவிதைப்பெயர்.

நடனத்தில் ஆடைக்குறைப்புடன் கவர்ச்சியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது அவளது மேடைகள்.அதோடு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பயணமானாள்.1905 ஆம் ஆண்டு மார்ச் 13 அவள் ஏறிய மேடை ஒரே இரவில் உலகுபுகழ் நடனகாரியாக மாற்றியது. ஆதரவும் எதிர்ப்புமான விமர்சனங்களின் மூலம் புகழின் உச்சானிக் கொம்புக்கு ஏறிப் போனாள்.அவளது கவர்ச்சியும்,அழகும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள்,அரசர்கள்,மந்திரிகள்,தொழிலதிபர்கள்,பிரபலங்களின் கனவைக்கெடுத்தது.ஆள் அம்பு சேனை,சொத்து,அடிமைகள்,வெற்றி இவற்றோடு மட்டா ஹரியின் இரவுகளும் பெருந்தனக்காரர்களின் பெருமிதங்களின் பட்டியலில் இடம் பெற்றது. இப்படி நாடு விட்டு நாடு பறக்கும் பயணங்களை தடையற்றதாக்க அப்போதைய ராணுவ அதிகாரிகளின் படுக்கை அறையே அவளுக்கு, விசா, எமிக்ரேசன், அலுவலகங்கள் ஆனது.அதுவே அவளது  பயணங்களுக்கு மட்டுமல்ல உயிருக்கும் முற்றுப்புள்ளியானது.

முதல் உலகப்போர் உச்சக்கட்டத்திலிருந்தபோது,லடசக்கணக்கான வீரர்களின் உயிர்கள் பலியிடப்பட்ட குருதி ஆறாமல் கிடந்த அந்த நேரத்தில்  ஜெர்மன்,பிரான்ஸ் இரண்டு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும்
தங்களின் சதைப்பசியைத் தீர்த்துக் கொள்ள மட்டா ஹரியை நாடினார்கள்.இந்த போக்கு வரத்தில் இரண்டு நாட்டு ராணுவ ரகசியங்களை உளவு பார்க்கலாம் என்று ஆசைப்பட்டன. பிரான்ஸ் நாட்டு ராணுவ உயர் அதிகாரி  ஜார்கெஸ் லடாக்ஸ் தனது ராஜீய உளவாளியாக  ஒரு நடனக்கரியான மட்டா ஹரியை நியமித்தான்.தனது கடைசிக்கதலன் 23 வயது நிறம்பிய ரஸ்ஸிய நாட்டு இளம் ராணுவ அதிகாரியின் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள துடித்துக்கொண்டிருந்தாள் அதுவும் நிரைவேறியது. அவனோடு தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டாள் உளவு பார்க்கப்போன இடத்தில் பிரான்சின் ராணுவ ரகசியங்களை கசிய விட்டதாகவும் அதானால் ஏறபட்ட ராணுவ இழப்புக்கும் அவளே காரணம் எனக்குற்றம் சாட்டி மரணதண்டனை விதித்தது.

ஆனால் மட்டா ஹரி சாகும் வரை தான் ராணுவ அதிகாரிகளுக்கு தனது ரகசியங்களை மட்டிலும் தெரியப்படுத்தியதாகவும், ஒருபோதும் ராணுவ ரகசியத்தை காட்டிக்கொடுக்கவில்லையென்றும் சொல்லிக்கொண்டே இருந்தாள்.ஆனால் அவளிடம் சராணாகதியான ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படவே இல்லை.அன்றும் சரி இன்றும் சரி இது போன்ற குற்றங்களில் பலிகொடுப்பதற்கென ஒருவர் குறிவைக்கப்படுவதும். அதில் மறைந்து போன நிஜக் குற்றவாளிகள் தைரியமாய் வெளிவந்து அடுத்தகுற்றத்துக்கு நகர்வதும் வாடிக்கையாகிறது.

'ஒரு வீட்டின் சுவர்களுக்குச் சொந்தமானவளல்ல,சூரிய ஒளியில் சிறகசைக்கும்  வண்ணத்துப்பூச்சி  நான்'அவளே சொன்னதுபோல கண்டங்கள் தாண்டிய வண்ணத்துப்பூச்சி சுட்டுப் பொசுக்கப்பட்டது.கண்டங்கள் ஆளும் வெறியில் நடந்த சண்டையில் கொட்டியது குருதி. அந்தக்குருதியின் சாபத்தை அப்பாவி நடனக்கரியின் உயிர்ப்பலியிமூலம் பரிகாரம் தேடிக்கொண்டது  பிரான்ஸ் ராணுவம். அரசு உயர் அதிகாரிகள் தாங்கள் கொறிக்கும்கொழுத்த முந்திரிக்கும்,விலை உயர்ந்த மதுவுக்கும்,விலை உயர்ந்த விலைமாதுவுக்கும் விற்றவை ஏராளம்.

ஆனால் அப்பாவி ஜனங்களின் உயிர்ப்பலியிலும் தேச,பிரதேச வெறியிலும் அவை காலங்காலமாய் கரைந்துபோய்க்கொண்டே இருக்கிறது.

14 comments:

ராசராசசோழன் said...

வரலாறுகள் படிக்க மட்டுமே சுகம் தரும்... உண்மைகள் உறைந்து கிடப்பதால்....இந்த பெண் உலகம் காவு வாங்கிய பல உயிர்களில்...நமக்கு தெரியவில்லை கணக்கு....

ராசராசசோழன் said...

உங்கள் இணையதளத்தில் உள்ள எனது முகவரியை மாற்றவும் :

இது தான் புதிய முகவரி...

அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு... (http://tamil-for-tamilpeople.blogspot.com/)

வானம்பாடிகள் said...

பலி ஆடுகள். :)

அன்புடன் அருணா said...

மட்டா ஹாரி எனக்குப் புதுத் தகவல்!

இரசிகை said...

//
மட்டா ஹாரி எனக்குப் புதுத் தகவல்!
//

m....yenakum!

nantri......

சந்தனமுல்லை said...

Very Good article,anna!!

புருனோ Bruno said...

// சிபிஐ யி டைரிக்குறிப்பு மம்மூட்டியின் வழியே மேதாவிலாசத்தைக்காட்டியது.//

புலனாய்வுத்துறைக்கும் (சிபிஐ), உளவுத்துறைக்கும் வித்தியாசம் உள்ளது தானே !!!

உளவுத்துறை குறித்த படம் - குருதிப்புனல்

காமராஜ் said...

வாங்க ராச ராசசோழன்.
கருத்துக்கு நன்றி.இதோ முகவரி மாற்றிவிடுகிறேன்

காமராஜ் said...

நன்றி பாலா சார்.

காமராஜ் said...

நன்றி அருணா.

காமராஜ் said...

நன்றி ரசிகை.

காமராஜ் said...

நன்றி முல்லை.

காமராஜ் said...

வாங்க வணக்கம் புருனோ.
சுட்டிக்காட்டியதற்கும் வருகைக்கும் நன்றி.

தாரணி பிரியா said...

//மட்டா ஹாரி எனக்குப் புதுத் தகவல்!//

எனக்கும் .

அறிய செய்ததுக்கு நன்றி அண்ணா