19.5.10

சமன்பாடு.

உச்சி வெயில் தலைப்பாத்துண்டையும் தாண்டி மண்டைக்குள் இறங்கியது.நெடு நெடுவென மஞ்சனத்தி மரத்து நிழலுக்குப் போனான். மரத்திலிருந்த ஊதாக்காடை சடசடவெனப் பறந்தோடியது. கரட் டாண்டி ஒன்று பொத்தென அவனுக்குப் பக்கத்தில் விழுந்து காட்டு வழியே ஓடியது.ரெண்டுமே இவனைக் கெட்டவார்த்தயில் வைதிருக்க வேண்டும்.தலைப்பாகையை அவிழ்த்து உதறினான் அதிலிருந்த பீடிக்கட்டும் தீப்பெட்டியும் விழுந்தது.மண்டைக்குள் வேர்த்து ஈரமாகியிருந்தது அழுத்தி துடைத்துக் கொண்டு அதே துண்டை விரித்து மர நிழலில் உட்கார்ந்தான். தோழில் தொங்கிய வெளிரிப்போன பெப்சிப்பாட்டிலை கழட்டிக்கீழே வைத்தான்  முக்கால்  வாசிப்பாட்டிலில் தண்ணீர் கிடந்து கணத்தது. வீடு திரும்பும் வரை தாகம் தாங்கும்.

ஆடுகள் சப்பாணி நாயக்கரின் பருத்திக் காட்டுக்குள் மேய்ந்து கொண்டி ருந்தது.அதுதான் கடைசியாய் அழிந்த காடு.பூக்கிற பருவத்திலொருநாள் நெத்திவெள்ளை ரெண்டு செடியில் வாய்வைத்துவிட்டது.தூரத்தில் வந்து கொண்டிருந்த சப்பாணிநாயக்கர் ஓடோ டி வந்து கொடுத்த கொடமானம் ஏழு தலைமுறை தாங்கும்.மழை தவறிப் போனதுதான் மாசக்கணக்கா அவர் காட்டுப்பக்கம் வரவில்லை.முந்தாநாள் தான் காடு அழிந்தது பத்து மொய் ஆடும் அங்குதான் கும்மரிச்சம் போட்டது.

எழுந்து பார்த்தான் போரா போட்ட கிடாரி ஒரு ஆட்டையும் மேய விடாமல் கெடுத்தது. கிட்ணக்கோனார்ட்ட வாங்கிய கிடா அவனம்மாதிரியே வேட்டியத்தெரைச்சுக்கிட்டு அலையிது. இங்கிருந்தபடியே 'ட்ர்ர்ர்ர்ர்ரு இம்பெய்..இரு வக்காலி ஒன்யக் காயடிக்கம் பாரு'சத்தங்குடுத்தான். திரும்ப உட்கார்ந்து ஒரு பீடியெடுத்துப் பத்தவைத்தான் சுண்டி எறிந்த தீக்குச்சி விழுந்த இடம் பொசுபொசுவெனத் தீப்பிடித்தது அந்தக்காய்ந்துபோன புல்லுக்கடியில் இருந்து ஒரு கொரண்டிப் பூச்சி ஓடியது 'அடி ஞொஞ்ச இன்னேர வரைக்கு இங்கெயா கெடந்தெ' என்று கல்லெடுத்து வீசினான் அது பக்கத்து பனைமரத்துப் புதருக்குள் மறைந்து போனது.அவனுக்கு காட்டுவிலங்குகள் பத்திப்பயமேதும் இல்லை.எல்லாவற்றின் குணமறிவான்.அந்தப் பொட்டைக் காட்டுக்குள் மிஞ்சி மிஞ்சிப்போனால் கருநாகம்தான் மட்டும் தான் பயமுறுத்துகிற விலங்கு.அதுவும் கூட மனிதர்களைக் கண்டு பயந்தோடும்,மனிதர்கள் அதைக்கண்டு பயந்தோடும்.

இவனுக்குப் பயமெல்லாம் இந்த மழை தான் மூனு மாசமாச்சு ஒரு பொட்டு கீழ விழுகல.கருப்பூரணி வத்திப்போய் ஒரு மாசமாச்சு.பம்பு செட்டுக் கிணறுகளிலும் தரை தெரிகிறது. மணுசனுக்கு குடிக்கத் தண்ணியில்ல.இதில் ஆடுமாடுகளை எங்கே அமத்த.கண்ணுக் கெட்டிய தூரம் வரை பச்சைப் புல்லேதும் இல்லை.திரும்ப எந்திரித்துப்பார்த்தான் மூணு ஆடுகள் கருப்பூரணிப்பக்கம் ஓடியது.செருப்பைப் போட்டுக்கொண்டு ஓடும்போது பெப்சிப் பாட்டில் இடறி விழுந்தது வந்து பார்த்துக்கொள்ளலாமென்று ஓடினான்.அதற்குள் அந்த மூணும் ஊரணிக்குள் நின்னதுகள். கம்பை ஓங்கி எறியப்போனான்.ஏமாந்து நின்ன ஆடுகளைப்பார்த்து நிறுத்திக் கொண்டான்.பாலம் பாலமாய் விரிந்து கிடந்தது வண்டல் மண்.

திரும்பி வந்துகொண்டிருந்த போது நாலைந்து குருவிகளும் அந்த ஊதாக்காடையும்  மஞ்சனத்தி மரத்தடியிலிருந்து பறந்தோடின.பெப்சிப் பாட்டில் உடைந்து தண்ணீர் தரையில் ஊறிக்கிடந்தது எறும்புகள் அந்த ஈரத்தின் மேல் அலைந்து கொண்டிருந்தது.ஓடிப்போய் திரும்பி வந்த களைப்பில் நாவரண்டிருந்தது. ஒரு மணிநேரம் எச்சை முழுங்கிக் கொண்டு கடத்தினான் இன்னும் தாகமானது.அப்படியே ஆடுகளை ஒதுக்கிகொண்டு கனைஞ்சா நாயக்கர் பம்புசெட்டுக்குப் போனான்.கிணத்தின் தூரில் கொஞ்சம் போல தண்ணி கிடந்தது. அதிலேயும்கூட ஒரு பாம்பு செத்து மிதந்தது.

ஆடுகளை ஓட்டிக்கொண்டு பொட்டையூரணிக்கு வந்தான்.அங்கே தண்ணியில்லாவிட்டாலும் ஊருக்கு குடி தண்ணி சப்ளை செய்யும் ஆழ்துளைக் கிணறும் பம்புசெட்டும் இருக்கிறது.வெளிக்குழாயின் கசிவில் தண்ணீர் குடிக்கலாம்,அது ஓடி கிடக்கும் குட்டையில் ஆடுகளை அமத்தலாமென்று போனான்.மோட்டார் ரிப்பேராகி மூனுநாள் ஆகியிருந்ததால் தண்ணி கசியவில்லை. இனி ஒரே கதி, ஊருக்கு அருகே ,பேருந்து நிறுத்தத்தில் உள்ள காலணிக்காரங்க அடி பம்புதான்.அதற்கும் ரெண்டு கிலோமீட்டர் போகணும்.ஆடுகளைப் பார்த்தான் இன்னும் வயிறு ஒட்டிக்கிடந்தன. சோர்ந்து போய் ஓடைப் பாலத்து  அடியில் உட்கார்ந்து விட்டான். ஒண்ணுக்கிருந்தான் கடுத்தது.செத்த நேரம் கழித்து ஒரு பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது எழுந்து வந்து பார்த்தான்.

ஒரு கணத்த சூட்டுப்போட்ட ஆள் இறங்கி சிகரெட் பத்த வைத்தான்.அப்புறம் ஒதுங்கி ஜிப்பை அவிழ்க்கப்போனான்.பிறகு அப்படியே நாலெட்டு நடந்து பம்புசெட்டைத்திறந்து எதோ செய்தான் குடிநீர் வடிகால் வாரியத்து ஆளாயிருக்கவேண்டும்.இவனுக்கு நாக்கு இன்னும் வரண்டிருந்தது கருத்தநிறமுள்ள அந்த பைக்கின் டாங்க் கவருக்கு வெளியே தலையைத் துருத்திக் கொண்டு ஒரு பெப்சிப்பாட்டில் இவணைக் கூப்பிட்டது.எடுத்து வேஷ்டிக்குள் சொருகிக் கொண்டான்.

11 comments:

அமைதிச்சாரல் said...

அழகான நடை. எளிய வாழ்க்கையின் ஒரு வறண்ட பக்கத்தை அருமையா பதிவு செய்திருக்கீங்க.

அன்புடன் அருணா said...

சூழ்நிலை தவறுக்குத் தூண்டுவதென்பது மனதைச் சமாதானப் படுத்தாவிடினும் சமயங்கள் சத்தமற்றுப் போய்விடுகின்றது.

வானம்பாடிகள் said...

மண்வாசனையுடன் மீண்டு ஓர் அருமை. இப்படியும் காலம் வரக்கூடும். காசு கொடுத்துதான் குடிதண்ணீர் என்ற நிலை முத்திப்போனால் இல்லாதவன் என்ன செய்ய?:(

ராம்ஜி_யாஹூ said...

அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

ஆனால் முக்கியமான க்ளைமாக்சை விட்டு விட்டீர்கள்.

இருட்ட தொடங்கியதும் கிடைத்த காசை கொண்டு டாஸ்மாக்கில் தொலைத்து விட்டு வந்து உறங்கினான்.

நேசமித்ரன் said...

ஈரக் குலையை இறுக்குது உள்ளாடும் வலி

vasan said...

ம‌னித‌மும், வில‌ங்கும், தாவ‌ர‌ங்க‌ளும்
வாழ்வாதார‌ த‌ண்ணீரின்றி த‌விக்கையில்,
//வ‌ண்டியில் துருத்திக் கொண்டிருந்த‌ பெப்சி
இவ‌னைக் கூப்பிட்ட‌து//
எதை/என்ன‌, சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ள்?
நாம், எதை/என்ன‌ செய்ய‌?

இராமசாமி கண்ணண் said...

நல்லா இருக்கு காமு சார். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பூமில் தண்ணி இருக்கோ இல்லையோ பெப்ஸியும், கோக்கும்தான் இருக்கும் போல்ருக்கு.

சுந்தரா said...

வருங்காலத்தில் ஆடுமாட்டுக்குக்கூட அக்வாஃபினா வாங்கிக்கொடுக்கும் நிலைவருமோ என்னவோ?

மனசைத் தைக்கிறது கதை.

க.பாலாசி said...

வறட்சியில் பூத்த மலர்போல இக்கதை... அதிக தூரமில்லை... எனக்கும் இந்நிலை வரலாம்.... எவன் எனக்கான ஏமாளியாக வாய்க்கப்பெறுவானோ தெரியவில்லை....

கா.பழனியப்பன் said...

படிக்க படிக்க எனக்கும் தண்ணீர் தாகம் வந்துவிடடது.
அருமை.

V.Radhakrishnan said...

சிறு வயது தருணங்கள்.