25.5.10

தொடர் வண்டிப்பயணம். தொடரும் பொதுத்துறைகளைச் சீரழிக்கும் முயற்சி.

தொடர் வண்டிப்பயணம் என்பது எவ்வளவு திட்டமிட்டாலும் சௌகர்யமானதாக அமைய வாய்ப்பில்லை.காலை எட்டுமணிக்கு திறக்கும் முன்பதிவு அறையின் முன்னால் இரவு எட்டுமணிக்கே வந்து காத்துக் கிடந்தால் மட்டுமே சாமான்யர்கள் ரயிலில் பயணம் செய்யமுடியும் என்கிற நிலைமை பொதுவாகிவிட்டது.இது கணினிமற்றும் வியாபாரிகளினால் வந்த இன்னொரு பிரச்சினை. முன்னமெல்லாம் சென்னைக்கோ வேறிடங்களுக்கோபோக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னால் முன்பதிவு செய்தால் கிடைக்குமென்கிற நிலை இருந்தது. இப்போது தொன்னூறு நாட்களுக்கு முன்னாலே எல்லா ஊருக்குமான இருக்கைகள் விற்றுத்தீர்ந்துவிடுகின்றன.

ஒரு ரயில் பயணத்தை தொன்னூறு நாட்களுக்கு முன்னாலேயே திட்டமிடுகிற வாதியும் வாய்ப்பும் இருக்கிறவர்கள்
மட்டுமே பயணம் பற்றிய கனவுகூடக் காணமுடியும் என்பது எழுதாத சட்டமாகிவிட்டது.பெருகிவரும் மக்கள் தொகையைச் சமாளிக்க கூடுதல் வசதிகளையும் பணியாளர்களையும் நியமிப்பதற்குப் பதிலாக அதை ஏலத்திற்கு விடுவதுதான் சிறந்த தீர்வென நம்புகிறது அரசும்,அதன் திட்டமும்.ஒரு டோ ல் கேட்டில் ஆறு பயணச்சீட்டு அலுவலகம் அமைத்து நொடிப்பொழுதில் காசை வசூலிக்கிற வல்லமை மட்டும் இந்தியர்களுக்கு எப்படி வந்தது.பொது ஜனங்களின் மத்தியில் தனியார் துறைகள் சரியாக இயங்குக்கிறது, பொதுத்துறை அப்படியில்லை என்கிற மனநிலையை நஞ்சுபோல் ஏற்றிவைக்கிற சூழ்ச்சி இது. ஒன்றை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் அரசு அலுவலகத்தில் வேலை செய்வதற்கும்,தனியார் நிறுவணத்தில் வேலை பார்ப்பதற்கும் தனித்தனிப் பிரஜைகளை இந்தியா உருவாக்க வில்லை.ஒரு அரசு நிறுவண ஊழியன் வாங்குகிற காசுக்கு வேலைபார்த்தாலே போதும் அவன் தனியாக தேசப்பற்றை கடையில் போய் காசுகொடுத்து வாங்கவேண்டிய அவசியமில்லை.சம்பளமோ,சொத்தோ,சோறோ,நீதியோ எதுவானாலும் சரி. சரியான விகிதத்தில் பங்கிட முயற்சிகள் நடக்கிற வரை கொஞ்சம் அப்படி இப்படி காலம் கடத்த முடியும்.

எழுபதுகளில் தென்பகுதியிலிருந்து சென்னைக்கு இரண்டு வண்டிகள் இயங்கிக்கொண்டிருந்தது. நாற்பது வருடம் கழித்து ஐந்து வண்டிகளாக உயர்ந்திருக்கிறது. ஜனத்தொகை அடிப்படையிலும் பணப் புழக்கத்தின் அடிப்படியிலும் பார்த்தால் இது யனைப்பசிக்கு சோளப்பொறி.நூத்திப் பத்துக் கோடிக்கு மேலிருக்கும் ஜனத் தொகையிலிருந்து பயணச்சீட்டுக் கொடுக்க போதிய பணியாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா? அவர்கள் என்ன அரிய விலங்குகள் பட்டியலில் சேர்ந்து அழிந்தா போனார்கள்.வெறும் பதினோரு பேர் மட்டும் ஆட அதைப்பார்க்கிற சனங்களின் பாக்கெட்டிலிருந்து காசை உருவும் சூதாட்டம் மாதிரியே பொதுத்துறை நிறுவணங்களிலும் நடக்க வேண்டுமென ஆசைப்படுகிறதா அரசாங்கம். நான்கு வழிச்சாலை எட்டுவழிச்சாலை என்று பளபளக்கும் ஓடுபாதைகளை நாலைந்து வருடங்களில் உருவாக்க முடிகிற அரசுக்கு, ரயில்வே போக்குவரத்துக்கு போதுமான தண்டவாளப் பாதைகளை உருவாக்க முடியாமல் போனதன் சூட்சுமம் என்ன?. இன்னும் லட்சக் கணக்கான மோட்டார் வாகனங்களை தனியார் நிறுவணங்கள் உற்பத்தி செய்வதற்கு அமைக்கிற ராஜபாட்டை அது என்பதை புரிந்துகொள்ளலாம்.அந்த ராஜபாட்டையில் கணினியில் உருவேற்றப்பட்ட தொகையைத் தரமுடியாத யாரும் டோ ல்கேட்டைத்தாண்டிப் பயணம் செய்ய அனுமதிக்கபடுவதில்லை.அப்புறம் கம்பின் நுனியில் ஒரு பொட்டலம் நூடுல்சைக் கட்டிக் கொண்டு காட்டுப் பாதைவழியே பாட்டுப்படிக்கொண்டு மதுரைக்கும் கோவில்பட்டிக்கும் நடப்பதற்கு மக்களைத் தயார்செய்யவேண்டும்.

பல பொதுத்துறை நிறுவணங்களை கள்ள விலைக்கு விற்று விட்ட மாதிரியே ரயில்சேவையை தனியாருக்கு விற்றுவிடத் துடிக்கிறது இப்போதிருக்கும் இந்திய ஜனநாயக அமைப்பு. அதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.அந்த எதிர்ப்பையெல்லாம் தாண்டி அரசு விற்றவை எராளம்.அந்தப் பட்டியலில் இடம்பெறாதது நாடாளுமன்றமும்,சட்டசபைகளும் மட்டுமே.அதையும் விற்றுவிட்டால்,அம்பானிநாடு, அழகிரிநாடு, லட்சுமி மிட்டல்,நாராயணமூர்த்தி,தயாநிதிநாடுகள் உருவாகி மீண்டும் இது அம்பத்தாறு தேசங்களாக மாறிவிடும்.அப்புறம் அழகிரி சாலையெங்கும் போஸ்டர் நட்டினார்.அம்பானி வீட்டுக்கொரு செல்போன்
வழங்கினார் என்று வரலாறு எழுதலாம்.

அப்போது நாம் இப்படிப் பதிவெழுத முடியுமாவெனத் தெரியவில்லை.

28 comments:

பூங்குழலி said...

அப்புறம் அழகிரி சாலையெங்கும் போஸ்டர் நட்டினார்.அம்பானி வீட்டுக்கொரு செல்போன்
வழங்கினார் என்று வரலாறு எழுதலாம்.

இப்போதே இந்த நிலை தான் .இவர்கள் எல்லோரும் பட்டம் கட்டி பல வருடம் ஆகிவிட்டது .ஆனால் இப்போது தான் இவர்களின் செல்வாக்கு வெளியிடையாக தெரிகிறது

வானம்பாடிகள் said...

எனக்கு ரொம்ப நாளாக இது குறித்து விளக்கவேண்டும் என்ற அவா உண்டு. ரயில்வே நிர்வாக அமைப்பு இதரத் துறைகளிலிருந்து மாறுபட்டது. போதிய வண்டிகள் இல்லாமைக்கும், முன்பதிவு குறித்த பிரச்சனைகளுக்குமான காரணங்கள் வேறு. எழுதப்பார்க்கிறேன்.

செ.சரவணக்குமார் said...

எந்த விவசாயியும், கூலித் தொழிலாளியும் தங்கள் பயணத்தை ஒரு மாதத்திற்கு முன்பாக திட்டமிடுவதில்லை. நாடெங்கும் எளியவர்களுக்கு விதிக்கப்பட்டிருப்பது மூன்றாம் வகுப்புப் பெட்டியே. இடிபட்டு, மிதிபட்டு, நசுங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதே நம் நிலை.

நம் ஊரிலிருந்து சென்னை செல்வதற்கு முத்துநகர், கன்னியாகுமரி, நெல்லை, அனந்தபுரி என்று நான்கு ரயில்கள் இருக்கின்றன. ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்பாக சென்றாலும் ஒன்றில் கூட இரண்டாம் வகுப்பு டிக்கட் கிடைப்பதில்லை.

செ.சரவணக்குமார் said...

//எனக்கு ரொம்ப நாளாக இது குறித்து விளக்கவேண்டும் என்ற அவா உண்டு. ரயில்வே நிர்வாக அமைப்பு இதரத் துறைகளிலிருந்து மாறுபட்டது. போதிய வண்டிகள் இல்லாமைக்கும், முன்பதிவு குறித்த பிரச்சனைகளுக்குமான காரணங்கள் வேறு. எழுதப்பார்க்கிறேன்.//

எனது 'தெற்கே போகும் ரயில்' பதிவிலேயே சில விளக்கங்களை சொல்லியிருந்தீர்கள். தயவுசெய்து விரிவாக ஒரு பதிவிடுங்கள் பாலா சார். என்ன தான் பிரச்சனை என்பதை தெரிந்துகொள்கிறோம்.

Deepa said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அங்கிள்!
தொடர்ந்து கலக்குங்கள்!!

Mahi_Granny said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

padma said...

இந்த தக்கல் என்ற அநியாயம் இருக்கே ! நல்ல வேலை எங்க ஊர்ல ட்ரெயின் இல்ல .நாங்க எத்தன தூரம் ஆனாலும் பஸ்ல போயி பழக்கம் ஆயிட்டு .என்ன ஊருக்கு போயிட்டு வந்து மேலும் ரெண்டு நாள் லீவ் extension தான்

ச.செந்தில்வேலன் said...

நட்சத்திர வாழ்த்துகள் காமராஜ் சார்.

நாங்கு வழிப்பாதைகளை அமைக்கும் வேகத்தில் ரயில்வே பாதைகளை அமைக்க முடியாது போனதற்கு 'அமெரிக்க உதாரணம்' தான் காரணம்.

ஆரம்பத்தில் ஜி.எம்., ஃபோர்டு நிறுவனங்களுக்கு தண்டவாளத்தைப் போடுவதற்கே அங்கிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் Mass Transportஐ விட கார்கள் தான் காசு பார்க்கும் வழி என்பதால் கார்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள்.

நான் சென்னையில் இருந்த பொழுது பெரும்பாலான வார விடுமுறைக்குக் கோவைக்குப் பயணச்சீட்டை வைத்திருந்தேன். பயணச்சீட்டு இல்லாமல் திண்டாடுவதை விட அதை தேவையில்லாத போது ரத்து செய்வதே மேல். நான் செய்தது சரியான அனுகுமுறை இல்லை என்றாலும் வேறு வழிதெரியவில்லை.

மிக அருமையான பதிவு. நட்சத்திர வாரத்தைக் கலக்குங்கள்.

திலிப் நாராயணன் said...

//நான்கு வழிச்சாலை எட்டுவழிச்சாலை என்று பளபளக்கும் ஓடுபாதைகளை நாலைந்து வருடங்களில் உருவாக்க முடிகிற அரசுக்கு, ரயில்வே போக்குவரத்துக்கு போதுமான தண்டவாளப் பாதைகளை உருவாக்க முடியாமல் போனதன் சூட்சுமம் என்ன?.//
உலகமயமாக்கலின் விளைவாக அன்னிய நாட்டு கார்கள் அவர்களின் நாட்டு வேகத்துக்கு ஒட வேண்டி வந்ததுதான் நமது தங்க நாற்கர சாலைகள். தவிரவும் நமது நாட்டு 'மன்னர்கள்' அதிகப்படியான ரயில்கள் இல்லாமல் தவிப்பதால் வாஜ் பாயிகளுக்கோ மன்மோகன்களுக்கோ எந்த வருத்தமும் ஏற்படப்போவதில்லை

அகல்விளக்கு said...

//அப்புறம் அழகிரி சாலையெங்கும் போஸ்டர் நட்டினார்.அம்பானி வீட்டுக்கொரு செல்போன்
வழங்கினார் என்று வரலாறு எழுதலாம்.//

ஏறக்குறைய அதே நிலையில்தான் நாடு இருக்கிறது...

~~Romeo~~ said...

அண்ணே இன்னும் நாம எழுதுபதிலே இருந்தால் எப்படி. டெக்னாலஜி முன்னேறி கொண்டு இருக்கு. அப்போது பார்த்த சென்னையா இப்போ இருக்கு, இல்ல அப்போது பார்த்த தென் தமிழகமா இப்போ இருக்கு.

\\வானம்பாடிகள் said...
முன்பதிவு குறித்த பிரச்சனைகளுக்குமான காரணங்கள் வேறு. எழுதப்பார்க்கிறேன்//

ஐயா மறக்காம எழுதுங்க ..

க.பாலாசி said...

வாய்திறந்து எந்த கருத்தையும் சொல்ல முடியலைங்க... இந்த தொடர்வண்டி பயண நெரிசல்ல மாதமொருமுறை அகப்பட்டுகொண்டுதானிருக்கிறேன். என்போன்று இம்மண்ணுக்கு வாக்கப்பட்டவர்கள் எத்தனையோபேர். ஒவ்வொரு இடத்துலையும் பார்த்துப்பார்த்து பழகி மனசும் மறத்துப்போச்சுங்க...

//உருவாகி மீண்டும் இது அம்பத்தாறு தேசங்களாக மாறிவிடும்.//

ஓரளவுக்கு இந்த நிலை வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன்..

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு, இதில் உள்ள சூட்சுமம் எல்லாரும் அறிந்தது தானே.

பேருந்து, வாகன உற்பத்தியாளர்கள், எண்ணெய் நிறுவன பன்னாட்டு நிறுவனகள், பன்னாட்டு அரசுகள் கொடுக்கும் கையூட்டு, நெருக்கடி போன்றவை தானே ரயில்வே துறையை முன்னேற செல்ல முடியாமல் தடுக்கிறது.,

அருப்புகோட்டையில் ஜெயவிலாஸ் பஸ் கம்பெனி , அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொடுக்கும் கையூட்டு குறைந்த அளவு, வட்டார அளவு.

வளைகுடா நாடுகளும், பிரிட்டிஷ் , அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்களும் நம் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் கொடுக்கும் கையூட்டு உலக அளவு, அதுதான் வித்தியாசம், வேறு ஒன்றும் இல்லை.

நம் தேசம் ஆவது பரவா இல்லை. நீங்கள் வளைகுடா நாடுகள் சென்றால் பெட்ரோல் சார்ந்த பொருளாதார அரசியல் சூழ்ச்சி பட்டவர்த்தனமாக விளங்கும். வளைகுடா நாடுகளில் பொருளாதார வசதிகள் பல இருந்தும், ஆயில் விற்பனை இறங்கி விடும் என்பதற்காக ரயில் போக்கோவரத்தை சுத்தமாக நிறுத்தி வைத்து உள்ளனர்.,

You might be knowing this b4 but still want to inform this.

When vaazappadi ramamoorthy was announed as Indian Petrolium minister, within 2 hours, Shell & BP sent BMW, Benz cars to his Delhi home.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

நல்ல பதிவு..
என் வீட்டில் வேலை செய்பவர்கள் ஊருக்கு செல்ல முடிவெடுத்த போது டிக்கெட்டுக்கு தவித்தார்கள். முன்பெ திட்டமிடமுடியாமல் போகிறவர்களுக்கு பயணம் ஒரு கனவு என்பதை அன்று உணர்ந்தேன்.
:(

ஈரோடு கதிர் said...

மிக அருமையான இடுகை

45 வருசத்துல 2லிருந்து 5 என்பது மிகப் பெரிய சாதனைதான்(!!!!)..

அதே சமயம் வானம்பாடியும் எழுதட்டும், ஆனா என்ன எழுதினாலும் சரி, வண்டி வந்தாகனும், வெறும் காரணம் மட்டும் வந்தாப் போதாதுங்ணா

காமராஜ் said...

தொடர்ந்து என்னோடு பயணிக்கும் வலைத்தோழர்கள் அணைவருக்கும்.வாழ்த்துச்சொல்லிய அணைவருக்கும்.
எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.ஒரு வாரமாக ப்ரௌசர் கோளாறு. பின்னூட்டமிடவும் எதிர் பின்னூட்டமிடவும் நீண்ட நேரம் எடுக்கிறது.ஆதலின் மொத்தமாக எனது அன்பும் நன்றியும்.பாலா சார் நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

சுந்தரா said...

அநேகரின் ஆதங்கத்தைச் சொல்லுகிற சிறப்பான இடுகை.

நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணா!

காமராஜ் said...

பூங்குழலி,
பாலா,
சாவணக்குமார்,
பத்மா,
தீபா,
செந்தில்வேலன்,
திலீப் நாராயணன்(ஆபீசர்)
ரோமியோ,
பாலாஜி,
ராம்ஜி,
முத்துலட்சுமி,
கதிர்,
சுந்தரா,
Mahi_Granny,
அகல்விளக்கு

எல்லோருக்கும் நன்றி.

கல்வெட்டு said...

.

காமராஜ்,
ஏன் தொடர் வண்டிகளின் எண்ணிக்கைகூடவில்லை? ஏன் இருப்புப்பாதைகள் அதிகரிக்கப்படவில்லை? ஏன் பொது மக்களுக்கு பயண வசதிகள் இல்லை?

நீங்கள் கேட்பது எல்லாம் விளிம்பு நிலை மக்களுக்கும் அதைத்தாண்டிய ஒரு அப்பாவி வர்க்கத்திற்கும்தான். மிடில் கிளாஸ் எனப்படும் மக்களும் அவர்களுக்கு மேலே உள்ள கடவுளர்களுக்கும் இவை தேவை இல்லை. அவர்களின் பயணத்திற்கு கார் வந்துவிட்டது. அது இல்லாவிட்டால் டூரிஸ்ட் லைசன்ஸ்களுடன் இயங்கும் தனியார் சொகுசுப் பேருந்துகளும் உண்டு. ( டூரிஸ்ட் லைசன்ஸ்களுடன் இயங்கும் தனியார் சொகுசுப் பேருந்து அரசுக்கும் பண ஆர்வலர்களுக்கும் இவை பணம் காய்ச்சி மரங்கள்)

அமெரிக்காவில் இரயில் பாதைகளை அதிகரித்து தொடர் வண்டிகளை அதிகப்படுத்த ஒரு காலத்தில் கிளிண்டன் முயற்சித்தார். அவருக்கு ஆப்பு கார் கம்பெனிகள் வழியாக வந்தது.

1. ஜெயலலிதா ஏன் காஞ்சி சாமியாரை கைது செய்தார்?

2.கம்யூனிஸ்ட் கட்சி ஏன் சிறுதாவூர் பங்ளா தீர்ப்பு வந்தபின்பும் அடக்கி வாசிக்கிறது?

3.சன் டீவீ ஏன் நித்யானந்தா ஃபுளூ பிலிமை குழந்தைகளுக்கு பிரைம் டைமில் போட்டுக்காட்டியது?

4. அப்புறம் ஏன் மக்களுக்கு இரயில் வசதிகூடவில்லை என்பது எல்லாம்...சாமான்யனுக்கு தெரியாத இரகசியங்கள்.

இந்த நாடு இப்படித்தான் இருக்கும். புல்லினஙக்ளிடம் புரட்சி வந்ததாகச் சரித்திரம் இல்லை. அது எல்லாம் சொரணை உள்ள மக்களுக்கு.

அமர பாரதி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் காமராஜ் அவர்களே. இருப்புப் பாதைகளை புதிதாகப் போட வேண்டியதில்லை. இருக்கும் பாதையில் புதிதாக ரயில் வண்டிகளை விட்டாலே போதும்.

ஹரிஹரன் said...

நல்ல பதிவு...

முன்பெல்லாம் சாலைகளில் பயணிக்க தனியாக வரி செலுத்தத் தேவையில்லை, இப்போது தங்க நாற்கரசாலை, ஆறுவழிச்சாலை என்ற பெயரில் அர்சுக்குப் பதிலாக தனியார் நிறுவனங்கள் சாலைகளை தங்கள் செலவில் அமைக்கிறார்கள், அந்த செலவை ஈட்டுவதற்கு தலைமுறை தலைமுறையாக சுங்கம் வசூலிக்கப்போகிறார்கள். நாம் செலுத்தும் சாலைவரி,டீசல் மீதான செஸ் வரி எங்குதான் மாயமாகிறதோ தெரியவில்லை.

தனியார் தொலைக்காட்சிகள் சமீபத்தில் டில்லியில் ஒரு தனியார் விமானம் சக்கர கோளாரால் தரையிறக்கப்பட்ட போது அந்த விமான நிறுவனத்தின் பெயரை சொல்லவில்லை அந்த விமானம் அரசுத்துறையாக மட்டும் இருந்திருந்தால் தனியார்மயம் தான் தீர்வு என ஆரம்பித்து கடைநிலை தொழிலாளிவரை நாறடிதிருப்பார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளியே கிடையாதா?

அரைகிறுக்கன் said...

எழுதாமல் விட்டது இன்னுமின்னும் அதிகம்.

தட்கால் அநியாயம்
நாற்பது சதம் வரையிலான தட்கால் ஒதுக்கீடு
அதில் யாருக்கும் அடையாள அட்டை ஏதும் தேவை இல்லை
(எஜன்ட்டுகளுக்காகவே உருவாக்கப்பட்டது போல)
அதிலும் காத்திருப்போர் பட்டியல்

தட்காளில் நாற்பது சதம்வரை ஆன பின்பும் பொதுவான முன்பதிவுகளில் காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கையை குறைக்காமல் அப்படியே பழைய எண்ணிக்கையில் வைத்திருப்பது

வட மாநிலம் வந்தால் இந்த டிடிஆர் கள் ஆர் ஏ சி காரர்களையே பின்னுக்குத் தள்ளி விட்டு அடுத்தவர்களுக்கு இடம் கொடுக்கும் அநியாயம்

எரியாத விளக்குகள் ஓடாத விசிறிகள்
மட்டமான நாற்றமெடுக்கும் கழிவறைகள்

அதிலும் குறிப்பாகதொலைதூர வண்டிகளில் காலை எழுந்து பார்த்தால் அதிலும் தண்ணீர் இருப்பதில்லை

தரப்படும் உணவின் தரம் குறிப்பாக தேநீர் என்ற பெயரில் விற்கப்படும் சுடுநீர்

ஓரத்திலும் மூன்று படுக்கைகள் போட்டு ஆபத்துக் கால சன்னல்களையே மூட்டி வைத்திருந்தார்கள். நல்லவேளையாக தீதீ மம்தா வந்து அதை திறந்து வைத்துவிட்டார்.

இவ்வளவும் செய்து விட்டு பயனச்சீட்டின் விலையை பல்லாண்டுகளாக உயர்த்தவில்லை என்று மார்தட்டிக் கொள்ளும் அரசு.

நான் மிஸ்டர் பொதுஜனம்ங்க. ஏ சி காருக்கா கனா காண்க முடியும் ஏதோபின்னூட்டம் போட்டமா. அடுத்து ஊருக்கு போற வழி எப்படின்னு பார்ப்போம்.

அரைகிறுக்கன் said...

என்னமோ விமான டிக்கட்டல்லாம் வேலை கொறைஞ்சிட்டுதுங்கராங்க. மங்களூர் விஷயம் மட்டும்தான் ஒதைக்குது. ஆனாலும் அதுல செத்துப்போனா பத்து லட்சமாம். (மத்ததுலனா வெறும் ஒரு லட்சம் மட்டும் கொடுக்கறாங்க)பரவாயில்லை ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்கலாம்னாலும் நம்ம கானாடுகாத்தனுக்கெல்லாம் பிளைட்டு இல்லைங்களே.

Ravi said...

இது மட்டும் எனக்கு புரிந்ததே இல்லை. ஒரு சாதாரண ரயில் டிக்கெட் வாங்குவதற்கு அரை நாள் செலவழிக்க வேண்டும் என்பது அராஜகம். ஒவ்வொரு கவுன்ட்டர் -லும் 100 பேர் காத்திருக்கிறார்கள் என்றால் counter எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஏன் செய்யக்கூடாது? எத்தனையோ தண்ட செலவு செய்யும் அரசு உள் கட்டமைப்புகளை ஏன் முன்னேற்றாமல் இருக்கிறார்கள்? இதை நாம் எப்படி கேட்பது?

மாதேவி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

உயிரோடை said...

நீங்க‌ சொல்வ‌து நூற்றுக்கு நூறு உண்மை. ரொம்ப‌ க‌வ‌லையாக‌ இருக்கு. அழ‌கிரி போன்றோர் இப்போதே ம‌ன்ன‌ர்க‌ள் போல‌ தான் இருக்கின்றார்க‌ள். முழுமையாக‌ பேச‌க் கூட‌ தெரிய‌த‌வ‌ர்கெல்லாம் ம‌ந்திரி ப‌தவி. இங்கே சிரிப்பா சிரிக்கிது டெல்லி. ம்ம் என்ன‌ செய்ய‌?

☼ வெயிலான் said...

இவ்வார நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்ண்ணே!

அன்புடன் அருணா said...

ம்ம்ம் கொஞ்ச நாள் வெளியூர் போயிருந்தேன் வந்து பார்த்தால் தமிழ் மண நட்சத்திரமாமே!பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்!