30.5.10

பீரோ'க்ரேசி இன் இண்டியா.

அவர் ஆபீசராகப்பதவி உயர்வு வாங்குவதற்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ஜகதலப்ரதாபன்,மேனேஜர் என்கிற ரப்பர் ஸ்டாம்பை செய்து பத்திரப்படுத்தியவர்.சொல்லியடிச்ச மாதிரி ஒன்னரை வருடத்தில் பதவி உயர்வை வாங்கிவிட்டார்.ஆங்கில வருடப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு,தெலுங்கு வருடப்பிறப்புகளுக்கு எம்.டி வீட்டுக்குப்போவது. வீட்டில் ஆளில்லாவிட்டாலும் போட்டோ வின் காலில் விழுவது.காதலர் தினம் தவிர எல்லா தினங்களுக்கும்  எம்.டிக்கு வாழ்த்து அட்டை அனுப்புவது.காரைக்குடியி வசிக்கிற அவர் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருக்கும் நண்பருக்கு போன் பண்ணி பால்கோவா வாங்கி அதை கிப்ட் பார்சல் கட்டி எம்.டிக்கு  மீண்டும் அனுப்புவார்.ஸ்ட்ரைக் நடந்தால் போதும் அவருக்கு அப்படி ஒரு கொண்டாட்டம் முதல் நாளே ஓடிப்போய்
ஆபீஸில் படுத்துக்கொள்வார் அந்த நிமிஷத்திலிருந்து தலைமை அலுவலகத்துக்கு குறிப்பாக எம்.டி கேபினுக்கு நேரடி ரிப்போர்ட் கொடுப்பார். எம்.டியோடு போனில் பேசுகிற கறாராக எழுந்து நின்றுகொண்டே தான் பேசுவார்.அவ்வளவு மரியாதை.

ஒருநாள் சுவாரஸ்யமாக யாருடனோ போனில் கதைபேசிக்கொண்டிருந்தார் பிரதாபன்.அது பகல் பதினொன்னே முக்கால் மணி.கால்மணிநேரம் பெசிக்கொண்டிருந்த பின் சரியாப் பண்ணிரெண்டு மணிக்கு மின்சாரம் மாற்றி விடுவார்கள்.அப்போது ஒரு அரை நிமிஷம் மின்தடை வரும். வந்தது. நம்ம ஜெகதலப்ரதாபன் படீரென்று கடுங்கோபத்தோடு அந்த லேண்ட் லைன் போனை வைத்துவிட்டு 'ச்சேய்,.. இந்த ஈபிக் காரெய்ங்கெ, எப்பப்பாத்தாலு இப்டித்தான் பொசுக்கு பொசுக்குன்னு நிப்பாட்டிப்புடுவாய்ங்கெ, ஒழுங்கா போனக்கூட பேசவிட மாட்டாய்ங்கெ' என்று அங்கலாய்த்தார்.உடன் வேலை பார்த்த க்ளார்க் 'கரண்டில்லாட்டாலும் போன் ஒர்க் பண்ணுமே சார்' என்று சொன்னதற்கு.'அது எனக்குத் தெரியும், இங்க நா மேனேஜரா நீ மேனேஜாரா' எனச்சொல்லி அடக்கிவிட்டார்.அதன்பிறகு 'தண்ணிக் குழாயில தண்ணீ நின்னுபோனாக் கூட போன் கட்டாயிரும் சார்' என்று கோரஸ் பாடினார்கள்.

எம்.டி யின் ஒண்ணுவிட்ட பெரியப்பா இறந்து போனதுக்கு எம்.டி மொட்டை போடவில்லை,அட ஏங்க இறந்தவரின் மகன் கூட மொட்டை போடவில்லை. ஆனால் நம்ப ஜெகதலப்ரதாபன் மொட்டை போட்டுவிட்டார் என்றால் பாருங்களேன்.ஜெககதலப்ரதாபன் ஒரு முறை  தலைமை அலுவலகத்துக்கு மாறுதல் விண்ணப்பம் அனுப்பினார்.As I am the only 'gent' member in my family,I have to look after my age old parents' என்று எழுதி அனுப்பினார்.அதற்குப்பிறகு அவரது விண்ணப்பம் உலகப் புகழ்பெற்றதாகிவிட்டது.அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா.'ஆங்கிலம் என்பது வெள்ளைக்காரெய்ங்க பாஷை, நான் ஒரு  சுதந்திர இந்தியன்' என்று வசனம் பேசினார்.

தமிழில் அவரது பாண்டித்தியமும் பெயர் போனது.வராக் கடன்களுக்கு நினைவூட்டல் கடிதம் எழுத வேண்டும். கையால் தான் எழுத வேண்டும்.அப்பெல்லாம் கம்ப்யூட்டர் உள்ள வல்ல.அவர் அன்புள்ள ஐயா என்று எழுதுவதற்குப் பதிலாக அன்புள்ள 'ஜயா' எழுதுகிற பாண்டிதியம் கொண்டவர்.ஒருதரம் கோபக்கார சந்திரசேகரன் சண்டைக்கு வந்துவிட்டார்.'நான் லோன் வாங்கினா எனக்கு லட்டர் போடலாம் என் பொண்டாட்டிக்கு எப்படி நீ லட்டர்  போடலாம்' என்று அடிக்க அடிக்கப் போனார்.கூட வேலை பார்த்தவர்கள் பழைய்ய கோப்புகளை எடுத்து வந்து எல்லாக்'கடிதங்களையும் காண்பித்த பின் கடன்கார சந்திரசேகரன் விருட்டென்று திரும்பிப் போய்விட்டார். போனவர் அதே வேகத்தில் திரும்பிவந்து ஒரு ரெட்டைக்கோடு நோட்டை கொடுத்து தினம் உங்க மேனஜரை எழுதிப் பழகச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்,அவர் தமிழ் வாத்தியாராம்.   

12 comments:

ஷிர்டி.சாய்தாசன் said...

நல்லா எழுதுறீங்க. ஹிஹிஹி

வானம்பாடிகள் said...

ஒரு இனிய விடுமுறைக்காலை வெடிச்சிரிப்புடன்:)).

ராஜ நடராஜன் said...

பீரோக்கிரேசின்னு நினைச்சு வந்தா அன்புள்ள ஜயான்னு முடிச்சிட்டீங்களே!
அப்புறம்தான் தலைப்பு கொக்கியை பார்த்தேன்:)

செ.சரவணக்குமார் said...

சிரித்துக்கொண்டிருக்கிறேன் இன்னும்கூட. முக்கியமாக ரெட்டைக்கோடு நோட்டு வாங்கிக்கொடுத்த தமிழ் வாத்தியார் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார்.

நட்சத்திர வாரத்தில் கலவையான பதிவுகளின் அணிவகுப்பு அசத்துகிறது காமராஜ் அண்ணா.

கே.ஆர்.பி.செந்தில் said...

எல்லா அலுவலகங்களிலும் இதைப் போல் ஒரு காமெடியன் தேவை..
நமக்கும் பொழுது போகணும்ல ..

padma said...

அருமை சார் .சிரிச்சு மாளல.அதும் ஜெயா செம காமெடி போங்க ....அட்டகாசம்

இராமசாமி கண்ணண் said...

தொடர்ந்து வருகின்ற நகைச்சுவை வெடிகள் சிரித்து சிந்திக்கவும் வைக்கின்றன. ரொம்ப நன்றி சார்.

அன்புடன் அருணா said...

Crazy people!

VijayaRaj J.P said...

இவற்றை எல்லாம் நட்சத்திரவாரத்துக்காக
வைத்து இருந்தீர்களா?

சீரியசாக மட்டுமே எழுதி வந்த உங்களுக்கு
இவ்வளவு சிரிப்பாகவும் எழுத வருகிறதே/

ஹரிஹரன் said...

சீரியசான விஷயங்களுக்கு நடுவே காமெடியும் கூட.. சூப்பர்.
அவர் பெயரே பிரதாபன் தானோ?

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

இந்த மாதிரி ஆட்கள் ஒவ்வொரு ஆஃபீசிலும் இருக்கத் தான் செய்கிறார்கள்?

வடிவேலன் ஆர். said...

சூப்பர் நல்லாவே எழுதுறீங்க வாழ்த்துக்கள்