7.6.10

வெயிலில் தெரியும் நிழலின் அருமை

மூட்டுக்கள் வலியெடுத்து,பசிகுறைந்த போது அசதி வந்தது. வீட்டுக்கு வந்ததும் படுக்கச்சொல்லும் உடம்பில் காய்ச்சலின் தூதர்கள் நுழைந்துவிட்டார்கள்.காலருகே பந்து வந்தும் உதைக்க மனசில்லாதது
போல சோறுதண்ணி மீது நாட்டமில்லாமல் இருந்தது.ரெண்டாம் நாள் கய்ச்சலில் உடம்பு முழுக்க தனலள்ளிப் போட்டதுப்போலக் கொதித்தது.
கருப்பட்டிக்  காப்பியும்  அனாசின் மாத்திரையும் வயித்துக்குள் போன வேகத்தில் திரும்பி வந்தது. கொட்டாரப் பக்கம் போய் கொடங்கொடமா வாந்தியெடுத்தேன்.  குடலில் தசை நார்கள் தவிர எல்லாம் வெளிவந்து விழுந்தது. வயித்தில் ஒன்னும் இல்லை. உடம்பு லேசாகியது. தொண்டைக்குழிக்குள் நிற்கும் நினைவுகள் தவிர உடம்பில்  எசக்கு ஏதுமில்லை. பின்னாடியிருந்து அம்மா வந்து நெற்றியைப்பிடித்தாள். வாந்தியெடுத்தவுடன் தலை வின் வின்னென்றுதெறிக்கும் என்பதை அவள் அறிந்திருந்தால் போலும்.

தூக்கமும் போர்வையும் மூன்றுநாள் துணையிருக்க. வெளித் திண்ணையிலும் வீட்டுக்குள் பாயிலுமாகத்தேரம் போனது தெரியவில்லை.ஒரு சாயங்காலம் எழுந்து கொட்டாரப்பக்கம் போய் கோபால் பல்஡பொடியெடுத்து பல் விளக்கினேன். 'வாய் ரொம்பக்கசக்குதாய்யா' 'இல்லம்மா''பின்னெதுக்கு பொழுதடைய பல்வெளக்கணு'அப்போதுதான் பார்த்தான் சின்னச் சுப்பையப் பெரியா மாடுகளைப் பத்திக் கொண்டு கூனையைச் சுமந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எதுத்த வீட்டு லச்சுமி மதினி என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே மசாலை அறைத்தாள்.'என்ன கொழுந்தனாரே எதப்பாத்து பயந்த' மதினியின் கேலிக்குள் ஒளிந்துகிடந்தது தவசெல்வியின் கன்னத்துக்கருகில் மினுங்கும் பூனைமுடியின் தகதகப்பு.பாக்கியக்கிழவி சிம்னியைக் கழற்றிச் சாம்பல் வைத்து துடைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் காளிமார்க் சோடா பாட்டிலில் காத்திருந்தது சீமத்தண்ணி.
அப்போதுதான் தீப்பெட்டியாபிசில் இருந்து வந்த வள்ளிச்சித்தி வாசலைப் பறட்டு பறட்டுன்னு கூட்டித்தள்ளினாள்.மொளகாச்செடிக்கு தண்ணிபாய்ச்சி விட்டு ஈரவேட்டியைக் காயப்போட்டபடி திரும்பி வந்த கந்தசாமி மாமாவின் உதட்டில் பீடியில்லை, பதிலுக்கு ஏரிக்கரையின்மேலே பாட்டின் சீட்டி ஒலி தவ்வி விழுந்துகொண்டிருந்தது.

எல்லோருக்கும் நான் பொழுதுசாயப் பல் விளக்கிய சங்கதியைக் காற்றுக்கொண்டு போய் சேர்த்தது. கீழத்தெரு முழுக்க சிரித்துக் கொண்டிருந்தது. செத்த நேரத்தில் பதினைந்து வீடு தள்ளியிருக்கும், தெய்வானைச் சித்தி  'யக்கா இந்தா இருக்கங்குடித்திநீரு,போட்டுவிடு காத்துக்கருப்பிருந்தா சொல்லாமக் கொள்ளாம ஓடிரும்' .அடுப்பில் தும்பை துளசி வேகப் போட்டுக்கொண்டிருந்த அம்மா. 'ஏடி அத நீயே பூசிரு ஒம்மகனுக்கு'.அந்த ஒம்மகனுக்குள் கொட்டிக்கிடக்குது எனக்கும் தேவான சித்திக்குமான ,பந்தம்.வளத்த தாய் அவதான். பிறந்த ஒரு மாதத்தில் இதே காய்ச்சலால் அம்மா படுக்க, எனக்காக மடிசுறந்த இன்னொரு தாய்.அதிலிருந்து நேரங் கிடைக்கிற போதெல்லாம் என்னை மடியில் வைத்துக் காலம் தள்ளுவாளாம். சாத்தூருக்கு தூக்கிப்போய் என்னோடு நிழற்படம்  எடுத்து மாட்டிக்கொண்ட பாசமும் போட்டோ வும் அவளது வீட்டுச்சுவத்தில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது. வீட்ல வெண்ணி வச்சாலும் அதிலொரு டம்ளர் எனக்கென்று எடுத்துவைக்கும் பிரியத்தை ரகம் பிரிக்க எந்த அளவுகோளும் இல்லை.

தேவானச்சித்தி வெளிக்காட்டிய இந்த பாசத்தை சொல்லத் தெரியாமல் கிடந்தது மிச்சமிருக்கிற ஊர் மொத்தமும்.இந்த மூன்று நாட்களில் வீட்டுவாசலில் நின்று யாராவது ஒருவருக்கு காய்ச்சலின் கதை சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.சில நேரம் ,'ஏடி இந்தா இந்த மல்லிச் சட்னி அறைச்சிரு,ஞொண்ணனுக்கு காய்ச்சல்னா வெல்லக்கட்டி கூடக்கசக்கும், இந்த சட்னியு,சுடுகஞ்சியு வச்சாத்தா தொண்டைக்குள்ள எறங்கும்'.விசாரிக்க வந்தவளை வேலைவாங்குவாள் அம்மா.அவளும் தலைமேலேந்திக்கொண்டு ஆளில்லாத அம்மி தேடிப்போவாள், அங்கு அறைத்துக்கொண்டே காய்ச்சல் சேதி பரப்புவாள்.கேட்கிற காதுகளுக்குள் ஒன்று தவசெல்வியுடதாகவும் இருக்கும். நேத்துலருந்து மூக்கு கணகணன்னு இருக்கு மயினி,மல்லிக்காப்பி போற்றுப்பீகள்ல,ஒரு கிளாஸ் குடுங்க ஒங்க கைராசிக்கு ஒரே தேரத்துல ஓடிப்போகும் என்று,சுக்குக்காப்பி குடிக்கவரும் ஆட்களும்.போனவாரம் மெட்ராஸ்லருந்து வந்த ஒங்க கொழுந்தன் கொண்டுவந்தார் இந்தாக்கா டைகர்பாம் தம்பிக்கு நெத்தியில அரக்கிவிடுங்க' என்ற அன்புக்குள்ளே புதைந்து கிடந்தேன்.இந்தக் காய்ச்சலில் புதைந்துகிடந்த நேசத்தைத் துடைத்துக் கொண்டு வந்து கொட்டியது ஊர்.போன வாரம் நாறவசவு வஞ்சு சண்டைப் போட்ட பூமாரியத்தை கூடஎம் மருமகனுக்கு காய்ச்சலாமில்ல என்று கேட்டபடி பகை மறந்து போனார்கள்.

என்னடா மூனுநாளா தெருவ அளக்க ஆளக்காணுமேன்னு பாத்தா காலெஜ்காரரு காய்ச்சல்ல படுத்துருக்காராக்குமென்று சொல்லிப் போனார் மேலத்தெரு கருப்பைய்யா பிள்ளை.ஆளில்லா மதியங்களில் மூன்று வாரத்துக்கு முந்திய ஆனந்தவிகடனை வைத்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்தபடி வெறிச்சோடிக்கிடக்கும் தெருப்பார்க்கவும்,கீழக்கோடியில் குரைக்கும் செவலை நாயின் குரல்கேட்கவுமாக எழுத்துக்கள் உள்ளிறங்கும். பொட்டிக்கடையில் உட்கார்ந்து கொண்டு நேற்றைய தினத்தந்தி நாளிதழை ராகம்போட்டுப் படிக்கும் முத்தையாக் கிழவனும், அதை உள்வாங்கி கேள்விகேட்கும் கண்தெரியாத பெரியசாமித்தாத்தாவும் மதிய மௌனத்தை கலைக்க எத்தனிப்பார்கள்.உடல் முழுக்க கசப்பேறிக்கிடக்க காய்ச்சி வைத்த கஞ்சியும்,மல்லித்துவையலும் குடிப்பதற்காகவேணும் காய்ச்சல் வேணும்.இரண்டு நாள் வேலைக்குப் போகாமல் கூடவே இருந்த அம்மா சுருக்குப்பை கணம் குறைந்ததாலும், எனக்கு கொஞ்சம் காய்ச்சல் குறைந்ததாலும் நெத்தியில் கைவைத்துவிட்டு வேலைக்குப்போய் விட்டாள். அவளின் அடையாளமாக காப்பியும், மாத்திரையும் மூலையில் மூடிவைக்கப்பட்டிருந்தது.

பொட்டிக்கடையில் தாவணி தெரிந்தது. அதில் தவசெல்வியின் சாயல் தெரிந்தது.அவளுக்கு இந்தத்தெருவில் என்ன வேலை ? அவளாக இருக்காது. அதுவும் ப்ளஸ்டூ பரீட்சைக்கு இன்னும் ரெண்டுநாள் தான் இருக்கிறது அவள் எட்டுக்குதிரை போட்டு மறிச்சாலும் போகாமலிருக்கமாட்டாள். அவளாக இருக்காது.தூக்கம் வருகிற மாதிரி கண்சொருகியது உள்ளே போய் படுத்தேன்.கனவு வந்தது. தவசெல்வி வந்தாள்.நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.என்னைக் கட்டிக்கொண்டாள்.விக்ஸின் வாசனையையும், காய்ச்சலின் நெடியையும் என்னிடமிருந்து எடுத்துக்கொண்டு  ஒரு பிரிட்டானியா பிஸ்கெட்  பாக்கெட்டைப்  பக்கத்தில் வைத்து விட்டு போய்விட்டாள். நெடு நேரம் தூங்கியிருக்க வேண்டும்.அம்மாவின் சத்தமும், அடுப்பங்கறையின் சத்தமும்.

'வச்சது வச்சபடியே கெடக்கு எய்யா மதியம் கஞ்சி குடிக்கலையா மாத்தரையு அப்டியே இருக்கு'

நெத்தியில் கைவைத்தது அம்மாவா தவசெல்வி யாவெனத் தெரியவில்லை. கண்முழிந்தேன்.

'இதேதுப்பா பிஸ்கட்டுப்பாக்கெட்டு யாருவந்தா'.

அம்மாவின் கேள்விக்கு எப்படிப்பதில் சொல்வேன்.

29 comments:

Mohan said...

கதை மிகவும் நன்றாக இருந்தது.

vasu balaji said...

இது சிறுகதையில்லை. ஒரு காலத்தில் வாழ்ந்து இப்போது தொலைத்துவிட்ட பெருவாழ்வு. இத்தனை பிரியமும் தொலைத்து கண்டதுதான் என்ன? மொத்தப் பிரியத்திலும் ஒத்தைப் பிரியத்தைப் பிரிப்பது எப்படி? தவச்செல்வியின் பிரியம்,ப்ரேமை,காதல் ஹா.மனம் தித்திக்கிறது. நாள் முழுசும் இப்படியே இருக்கவேணும்:)

நேசமித்ரன் said...

இந்த முறை உங்களை சந்தித்தாக வேண்டும் காமு சார்

அடிச்சு ஆளை சாய்க்குதுங்க . இந்தப் பிரியம் இந்த மொழி

யப்பே ! கொல்றாருய்யா மனுஷன்

***********************************
வெய்யிலில் உலரும் சாண வாசம் வீசும் தரையில் ஒட்டுப்போட்ட லைப்ரரி புத்தகம் படித்துக் கடந்த நோய்க் காலத்திற்கு திண்ணையில் 4 நாள் துணையிருந்த மீனாக்கா இப்போ இல்லை

தாய்ப்பாலை பகிரும் நேசமும் மருந்தரைத்து வரும் புகையிலை கரங்களின் வாசமும் கிராமந்தோறும் கிடக்கத்தான் செய்கிறது

அன்பு நிறைய மக்கா

கிச்சான் said...

வணக்கம் தோழர் ,
கிராமத்து வாசனையுடன் இருக்கிறது உங்களின்
இந்த படைப்பு !


அன்புடன் கிச்சான்!

க.பாலாசி said...

அடேங்கப்பா... இதுக்காகவே அப்பப்ப காய்ச்சல் வரணும்னு தோணும்... என்ன இனிமையான அனுபவம் அல்லது புனைவு... கொஞ்சநேரம் சொக்கித்தான் கிடந்தேன்...

க.பாலாசி said...

தவச்செல்வி இப்ப எப்டி இருக்காங்க..??

Anonymous said...

அருமை சார். இன்னும் கிராமங்கள் இப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். இன்னும் கூட ஊருக்கு வந்த எங்க பக்கத்து வீட்டு லட்சுமிக்கா எனது அம்மாவிடம் அக்காடி ராமுக்கு கத்திரிக்கா கூட்டு பிடிக்கும் இந்தா அவனுக்கு போடு என்று கொண்டு வந்து கொடுப்பதும், எதிர் வீட்டிலிருந்து மிளகு கொழம்பு அவனுக்கு பிடிக்குமே என்று செய்து கொண்டு வந்து கொடுப்பதும்.. ம்ம் என்னத்த சொல்ல. ஒரே ஒரு விசயம் என்னன்னா ஊருல பக்கத்து வீடு, எதிர் வீடு எல்லாம் நம்ம வீடுதான். ஒரு பெருமூச்சு மட்டும்தான்.

ரோகிணிசிவா said...

nalla command of local language superb .,

பத்மா said...

இத்தனை பிரியத்தையும் வார்த்தையில கொட்ட முடிஞ்சுதே அதுக்கே என்ன கைம்மாறு?
ஒரு டம்பளர் தண்ணி எடுத்து கொடுக்க ஆள் இல்லாத வீட்ல இருமிகிட்டே தண்ணி குடிச்சுட்டு இத வந்து படிச்சு பாக்கும் போது மனசுக்கு பெரிய ஒத்தடம் ..
எழுத்தும் மருந்தாயிட்டு ..

காமராஜ் said...

வாருங்கள் மோகன்.
கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி.

காமராஜ் said...

பாலாண்ணா.
வாஸ்தவம். தொலைந்து போன வாழ்க்கை அது.

காமராஜ் said...

தாங்க்ஸ் நேசன்.

காமராஜ் said...

நன்றி கிச்சான்
0
பாலாஜி வணக்கம்.
0
வாருங்கள் சித்ரலேகா,
0
வாருங்கள் ரோஹிணி சிவா

சீமான்கனி said...

சிறுகதை சாயலில் கொஞ்சம் கவிதைவாசமும்,கிராமத்து வாசம் பூசிக்கொண்ட கதை சிறப்பா இருக்கு அண்ணே...உங்களுக்கும் மதுரை பக்கமா??

Anonymous said...

கிராமங்களில் இந்தியா வாழ்கிறது என காந்திஜி சொன்னது இப்ப புரியுதா?
கிராமம்சொர்க்கம்தான்.பக்கத்துவீட்டுக்காரர்கள் மாமா அத்தை அக்கா, தங்கச்சி, அண்ணன்,சித்தப்பா சித்தி என்று ஜாதிபார்க்காமல் உறவு முறை வைத்து உரிமையுடன் பழகுவதில் கிடைக்கும் சந்தோஷம்! அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த பதிவு என்னை சிறு வயதுக்கு அதாவது 50 வருடத்திற்கு பின்னோக்கி கொண்டு சென்று விட்டது.

பா.ராஜாராம் said...

பிரமிப்பாய் இருக்கு காமு!

வாழலாம்.

அதை அப்படியே பிரதி எடுக்க இயலுமா?

என்னங்கடா ராஸ்கல் நீங்க..

கட்ட்ட்டடி முத்திக் கொள்ளனும், காமு. :-)

GREAT!

காமராஜ் said...

சீமான் நன்றி. மதுரை இல்லை சாத்தூர்.

காமராஜ் said...

வணக்கம் ஐயா திரவிய நடராஜன். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

நன்றி பாரா.

vasan said...

கிராம‌த்தின் காய்ச்ச‌ல் விவரித்த‌வ‌ருக்கு,
காய்ச்ச‌ல் வ‌ந்த‌ கார‌ண‌ம் க‌டையில‌தானே
தெரியுது.
க‌ன‌வு நினைவாகும் போதும்
நிக‌ழ்வும் நிழ‌லாய்த் தான் நினைவில்.

Vidhoosh said...

ரொம்ப அருமையா இருக்குங்க சார். மண் வாசனை ஆஹா.. மழை பொழிந்தால் கூட நன்றாக இருக்கும் என்றே படித்துக் கொண்டே வந்தேன், அதுவும் பொழிந்தது கடைசியில். ரொம்ப அருமைங்க.

ஆடுமாடு said...

கிராமம் தந்திருக்கிற அனுபவங்களை, மனதுக்குள் அடைகாத்து வாழ வைத்திருக்கிறது நகரம்.

மூக்கு சிந்தினாலே, ''ஏய்யா சளியா புடிச்சிருக்கு. சுக்கு தண்ணி குடிக்க வேண்டியதான" என்று கேட்கிற ஊர்க்காரர்களின் பாசத்துக்கு இணையாக எதையும் சொல்லிவிட முடியாது.

லச்சுமி மதினியும் வள்ளிச்சித்தியும், தெய்வானைச் சித்தியும் காட்டுகிற பாசத்தில் நானும் காய்ச்சலில் விழுகிறேன். உங்களுக்கு தவச்செல்வி வைத்துப்போகிற பிஸ்கெட் பாக்கெட் என்றால் ஆடுமாடுவுக்கு ஏதோ ஒரு லட்சுமி வைத்துவிட்டு போன கருவாட்டுத்துண்டும் கத்தரி வத்தலும். எல்லாருக்குள்ளும் இருக்கிறது அவரவர்களுக்கான அனுபவங்களும் ஏக்கங்களும்.

உங்களுடனே வந்து காய்ச்சலில் படுத்து எழுந்தது போல் இருக்கிறது. கதையாக இருந்தால் கதை, அனுபவமாக இருந்தால் அனுபவம்.


அனுபவம்தானே கதை!

வாழ்த்துகள்.

காமராஜ் said...

நன்றி வித்யா.

காமராஜ் said...

நன்றி வாசன்.

காமராஜ் said...

ஆடுமாடு said..

//கதையாக இருந்தால் கதை, அனுபவமாக இருந்தால் அனுபவம். //

நன்றி தோழர்

எல்லாரும் அந்த எடத்திலேயே நின்னு ஆடனுமா. கொஞ்சம் தள்ளி வரக்கூடாதா ?

பத்மா said...

என்ன விட்டுடீங்க காமராஜ் சார் போங்க

அன்புடன் அருணா said...

/"வெயிலில் தெரியும் நிழலின் அருமை"/
தெரிந்தது நிழலின் அருமை.

காமராஜ் said...

ஆஹா...வாஸ்த்தவம்தான்
இந்த அன்பு
அணிச்சமலரால் ஆனது.
எவ்வளவு மெல்லியது பாசம்.
சாரிப்பா பத்மா.
ரொம்ப ரொம்ப சாரி.

பத்மாவுக்கு ரெண்டு நன்றி.

காமராஜ் said...

நன்றி அருணா மேடம்.