25.6.10

இது இலவசங்களின் காலம்.

சுமார் ஒரு கிலோ மீட்டருக்குமேல் அலங்கார வளவுகளும்,அதில் வாழைமரங்களும் நட்டி பிரதானச்சாலை அமர்க்களப்படுத்தப்பட்டிருந்தது. குறைந்த பட்சம் ஒருகிலோமீட்டர்தூரம் வளைவுகள் நட்டு குழல் விளக்கு எரிய விட்டால் மட்டுமே மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதாக கற்பனை செய்துகொண்டு அரசியல் மற்றும் ஜாதிக்கட்சிகள் காசைக் கரியாக்குகிறார்கள். நேற்று சாத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடந்தது.ஆனி மாதம் நடக்கும் தேரோட்டத்துக்கு இணையான மக்கள் கூட்டமும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.இப்போதெல்லாம் அரசியல் கூட்டம் நடந்தால் காசுகொடுத்து ஆளைக் கூப்பீட்டு வருகிற கட்டாயம் ஆகிவிட்ட இந்தச்சூழலில் ஆச்சரியத்தோடு ஆர்வமும் கூடியது. பிறந்த நாளுக்கு பரிசாக பிரியாணிப் பொட்டலமும்,படிக்கிற பிள்ளைகளுக்கு இலவச நோட்டும் வழங்கியதால் இவ்வளவு கூட்டம் என்று பேசிக்கொண்டார்கள்.

புறநகரில் உள்ள முருகன் திரையரங்கம் முழுக்க மக்கள் வெள்ளம். கட்டுக்கடங்காத கூட்டத்தில் கொண்டுவந்திருந்த நோட்டுகளை விநியோகிக்க முடியாமல் பாதியிலேயே கட்சிக்காரர்கள் போய்விட்டார்களாம். ஆனாலும் மீதமிருக்கிறநம்பிக்கையில் மக்கள் அங்கிருந்து அமீர்பாளையம்,பழய்ய பாலம்,நகர் முழுக்க கிராமத்து தய்மார்கள் குழந்தைகளும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார்கள். கையில் பையைக் கணமாகத் தொங்கவிட்ட குழந்தைகள் ஜார்ஜ் கோட்டையைப் பிடித்துவிட்ட சந்தோசத்திலும்.கிடைக்காத குடும்பத்தார் அதைக் கோட்டை விட்டுவிட்ட மனநிலையிலும் கடந்துபோனார்கள்.

சாத்தூர் நகரில் உள்ள தெருக்களில் இருந்து குறைச்சலாகவும் சுத்துப்பட்டு கிராமம் முழுக்க உள்ள குழந்தைகள் அடர்த்தியாகவும் வந்திருந்தார்கள்.இவ்வளவு ஜனங்கள் ஒரு நான்கு நோட்டுக்கூட வாங்க முடியாத வக்கில்லாதவர்களாக காலம் கடத்துகிறார்களா என்பதை நினைக்கும்போது நடுக்கம் வருகிறது.ஒரு சட்டசபைத்தொகுதியே கையேந்தி நிற்கிற மாதிரித்தோன்றியது.47 முதல் 67 வரை காங்கிரஸும் அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை மாறி மாறித் திராவிடக்கட்சிகளும் நடத்திய ஆட்சியின் நிகரப்பலன் என்ன என்றால், ஒரு கட்சியில் சேர்ந்து சம்பாதித்த தனி நபர்கள் தொகுதி தொகுதியாய் தரும காரியங்கள் செய்ய முடிகிற முதலைகள் ஆனதுதான். அதுவும் அடுத்த தேர்தலுக்கான அச்சாரமாகவும்,சம்பாதிக்கப்போகும் ஆசைக்கு முதலீடாகவும். கேள்வரகு,கம்பு சோளத்திலிருந்து ரேஷன் அரிசிக்கும்,தெருச்சண்டை ஓசிச் சினிமாவிலிருந்து இலவச தொலைக்காட்சிப் பெட்டிக்கும் கொட்டப்பாக்கு வெத்திலையில் இருந்து பான்பராக்குக்கும் கிராமங்களின் பொருளாதாரம் நகர்ந்திருக்கிறது.

20 comments:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு....

சீமான்கனி said...

//ஒரு சட்டசபைத்தொகுதியே கையேந்தி நிற்கிற மாதிரித்தோன்றியது.//

அப்போ கொடுப்பதற்கு ஒரு கூட்டம் இருப்பதுபோல் பெறுவதற்கு என்று மட்டு ஒரு கூட்டம் தனியா இருக்குனு நினைக்குறேன்...மொத்தத்தில் தேவையானவர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை...

ராம்ஜி_யாஹூ said...

nice post.

Unknown said...

பொதுவாகவே இலவசம் என்றால் வரிசைகட்டி நிற்பதுதான் மக்களின் மனோபாவம்

சசிகுமார் said...

அப்படியாவது தர்றாங்களே

AkashSankar said...

ஆட்டு மந்தையாய் மாற்றிவிட்டார்கள்...இனி அவர்கள் பாடு கொண்டாட்டம் தான்...

vasu balaji said...

//47 முதல் 67 வரை காங்கிரஸும் அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை மாறி மாறித் திராவிடக்கட்சிகளும் நடத்திய ஆட்சியின் நிகரப்பலன் என்ன என்றால், ஒரு கட்சியில் சேர்ந்து சம்பாதித்த தனி நபர்கள் தொகுதி தொகுதியாய் தரும காரியங்கள் செய்ய முடிகிற முதலைகள் ஆனதுதான். அதுவும் அடுத்த தேர்தலுக்கான அச்சாரமாகவும்,சம்பாதிக்கப்போகும் ஆசைக்கு முதலீடாகவும். கேள்வரகு,கம்பு சோளத்திலிருந்து ரேஷன் அரிசிக்கும்,தெருச்சண்டை ஓசிச் சினிமாவிலிருந்து இலவச தொலைக்காட்சிப் பெட்டிக்கும் கொட்டப்பாக்கு வெத்திலையில் இருந்து பான்பராக்குக்கும் கிராமங்களின் பொருளாதாரம் நகர்ந்திருக்கிறது.//

ஒரு கட்சிக்காரனாவது, பொதுஜனமாவது இதை மறுக்கட்டும் பார்ப்போம். இதுதான் சத்தியம்.

தமிழ் உதயம் said...

கேள்வரகு,கம்பு சோளத்திலிருந்து ரேஷன் அரிசிக்கும்,தெருச்சண்டை ஓசிச் சினிமாவிலிருந்து இலவச தொலைக்காட்சிப் பெட்டிக்கும் கொட்டப்பாக்கு வெத்திலையில் இருந்து பான்பராக்குக்கும் கிராமங்களின் பொருளாதாரம் நகர்ந்திருக்கிறது.


இது போதாதா என்று அரசியல்வாதிகள் கேட்கப்போகிறார்கள்.

VELU.G said...

//கேள்வரகு,கம்பு சோளத்திலிருந்து ரேஷன் அரிசிக்கும்,தெருச்சண்டை ஓசிச் சினிமாவிலிருந்து இலவச தொலைக்காட்சிப் பெட்டிக்கும் கொட்டப்பாக்கு வெத்திலையில் இருந்து பான்பராக்குக்கும் கிராமங்களின் பொருளாதாரம் நகர்ந்திருக்கிறது.
//

தமிழ்நாடு முன்னேறிவிட்டது

க.பாலாசி said...

என்ன அவலம் பாருங்க.. தங்களின் சுயநலனிற்காக இலவசங்கள், உதவிகள் என்ற போர்வையில் இவர்கள் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவில்லாமல்தான் இருக்கிறது...

hariharan said...

இலவசமாக எதையும் பெறுவதை பிச்சை/எச்சில் என்று மக்கள் உணர வேண்டும். கோடிகோடியாக கொள்ளையடித்த பணத்தில் கடுகளவு பணத்தை இறைத்து வள்ளல் ஆகிறார்கள். அதன் மூலமும் பயனடைவதற்காக....

vasan said...

//கிராம‌ங்க‌ளின் பொருளாதார‌ம் ந‌க‌ர்ந்திருக்கிற‌து//
இல்லை, காம‌ராஜ்.
பொருளாதார‌மும், த‌ன்மையும் "த‌க‌ர்ந்து" இருக்கின்ற‌து,
ந‌க‌ர‌ப் பூச்சுட‌ன்.

Jayadev Das said...

அதுசரி, ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம், கோழி பிரியாணி, சாராயம் கொடுப்பதையும், ஒரு ரூபாய் அரிசி, இலவச எரிவாயு, இலவச தொலைக் காட்சி [பெண்டாட்டி தவிர மற்றதெல்லாம் இலவசம்] என்று முக்கியத் திட்டங்களுக்கு ஒதுக்கப் படும் பணத்தையெல்லாம் இலவசத்துக்கு அள்ளி வீசுகிரவர்களை விட்டு விட்டு யாரோ படிக்கிற பசங்களுக்கு நோட்டுப் புத்தகம் கொடுத்ததை போயி பூதக்கண்ணாடி வச்சிக்கிட்டு பாக்குறீங்களே இது நியாயமா? அட ஜனம் அப்படி இலவசத்துக்கு அடிச்சிகிட்டு பிடுங்குதுன்னே வச்சிக்குவோம், மக்களை ஜன்னல் உள்ள தாடிக்காரன் எட்டிப் பாத்ததும் தாடியை எட்டி கவ்வி இழுத்ததே தெனாலி ராமன் குதிரை அந்த மாதிரி நிலையில் யார் வைத்துள்ளார்கள் ? . அது பற்றி ஒண்ணுமே எழுதலியே?

க ரா said...

மக்களுக்கு இலவசங்களின் மேல் உள்ள மோகம் குறையாது என்றென்றும். அம்மா கட்சி ஆளுங்களுக்கு கூட்டம் சேர்த்து , அம்மா கிட்ட காட்டி நல்ல பேர் வாங்கனும். என்னத்த சொல்ல.

அன்புடன் நான் said...

இலவசங்களை தவிர்க்க பழக்க வேணும்... அப்போதுதான் விடியல்.

Unknown said...

அரசாங்கத்தின் திட்டம் என்னிக்குமே எளிய மக்களை சுலபமா அடைந்ததில்லை. அது election சமயத்திலும், தலைவர்/தலைவி குடும்பத்தினர் பிறந்த நாள் அன்றும் தான், கொள்ளையடித்த பணம் சேர வேண்டிய மக்களை இலவசமா சேருது . இதனால் அதை வாங்குகிற அந்த ஏழை மக்களை மட்டும் குறை சொல்லனுமான்னு தெரியலை. அவங்க வாங்கிறதா நிறுத்திட்டா , கொள்ளியாடிப்பவர்கள் கொள்ளை அடிக்காமலா இருக்கப் போகிறார்கள்.

Election சமயம் ஒன்றில் தான் நாடு பூரா ஊழல் பணம் வெளியே வருகிறது. அது நல்லா வெளியே வரட்டும். கொஞ்சம் மக்களும் பலன் அடைவர், பணப்புழக்கமும் இருக்கும், கொஞ்சம் economy-ம் முன்னேறும்.
ஒரே முரண்பாடா இருக்கில்லே இது!

அன்புடன் அருணா said...

ஓட்டுக்காக எதுவும் இலவசமாக வீதிக்கு வரும் கொடுமை.

பத்மா said...

அந்த பணம்லாம் எப்படிங்க அவங்களுக்கு மட்டும்?

சுந்தர்ஜி said...

முதல் வணக்கம் காமராஜ்.

இந்த இலவசங்களில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது.ஒரு ரூபாய்க்கு அரிசி பொங்கிச்சாப்பிட்டு நாள் முழுதும் இலவசத்தொலைக்காட்சியில் மூழ்கி,மாலையில் அன்றைய வரும்படியில்(தினசரி இலவச வேலைக்கு 100ரூ)கள்ளு,சாராயத்துக்குப் பாதி,வீட்டுக்குப் பாதி,இலவச சத்துணவு,இலவச சைக்கிள்,இலவசக்கல்வி,வேலையில்லாத இளைஞர்களுக்கு அலவன்ஸ்-இப்படிப் போகிறது.நல்லவேலை இலவச 2 ஏக்கர் நிலத்துக்கு மண்ணில்லை.

யாருமே எதுவுமே கேட்க வேண்டிய அவசியம் எழாமல் அனஸ்தீஷியாவிலேயே வைத்திருந்தால் அடுத்த 5 வருடங்கள் கியாரண்டி.

இதே போல் கூட்டணிக்கட்சிகளுக்கு சில இலவசம்-மத்திய அரசுக்கு சில இலவசம்-இலங்கைப் பிரச்சினை-பெட்ரோல் விலையேற்றத்தில் கண்டுகொள்ளாதிருத்தல் போன்ற இலவசக் காணாதது போலிருக்கும் இலவசம்.

வாழ்க விலைமதிப்பற்ற இலவசம்.

சுந்தர்ஜி said...

என்னுடைய ”வசம்” கவிதைக்கான இந்தச் சுட்டியை நேரம் வாய்க்கும்போது பாருங்கள் காமராஜ்.
http://sundarjiprakash.blogspot.com/2010/03/blog-post_5909.html