13.9.10

பெரியார் பேரனுக்கு பிடித்த பேய்.

ஓடையைத்தாண்டி தனியாக கட்டப்பட்டிருந்த வீட்டில் கல்யாணம்.மணமகன் தூரத்து சொந்தம்,ஆனால் ஊரைவிட்டு தூரமாகி இருபது வருடங்கள் ஓடிப்போனதால்,ஊரின் ஒதுக்குப்புறத்தில் பயமுறுத்திக்கொண்டிருந்த பாழடைந்தமண்டபம் கூட மிக மிக நெருக்கமாகிப்போனது. சொன்னபடி தாலிகட்ட   இன்னும் ஒரு மணிநேரம் காத்திருக்கனும்.அதற்குள் காலாற வயக்காட்டுக்குள் நடந்து ஒதுங்கிவிட்டு வரலாம் என்று நடந்தான்.கல்மண்டபம் வந்தது. அங்குதான் செத்துப்போன பண்ணக்காரன் சன்னாசியும்,பண்ணையார் பொண்டாட்டி  சீதேவியம்மாவும் ஆவியாகச் சுத்துவதாக ஊர்பேசும்.

கொஞ்சம் கூட நடந்து வாங்க அந்த ஆவிகளைப் பார்த்த முனியராஜைப்பத்திச் சொல்றேன்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான்.பந்துவார்பட்டியில் இருக்கும் ஜெயம் மாமாவீட்டில் ஒரு குட்டிச்சாக்கு அடுப்புக்கரி வாங்கிவரச்சொல்லிய அம்மா சாயங்காலம் பத்தாவது தடவையாக திட்டினாள். சாயங்காலம் போய் தேடிப்பிடித்து வாங்கி வருவதற்குள் இருட்டியிருந்தது.ரோடு வழிபோனால் ஆள் நடமாட்டம் இருக்கும். குறுக்கால ஒத்தைப்பாத வழி வந்தால் ரெண்டுகிலோமீட்டர் சுத்து மிச்சம். ஆனால் அந்த வழியிலேதான் பேய் மண்டபம் இருக்கு.கண்ண மூடிக்கிட்டு அழுத்தினால் நொடியில் கடந்து ஆனால் அந்த வழியிலேதான் பேய் மண்டபம் இருக்கு. விடலாம். அப்புறம் தங்கக்குருநாடார் தோட்டம் அங்கே விடிய விடிய ஆள் நடமாட்டம் இருக்கும்.மண்டபத்துக்கருகே வருவதற்குள் சைக்கிள் பஞ்சராகிப் போனது. இறங்கி என்ன ஏதுவென்று பார்க்கிற அவகாசத்துக்குள்ளே சூரியன் பொசுக் கென்று மேற்குத்தொடர்ச்சி மலைக்குள் ஒளிந்துகொண்டது.ஒரு நாள் முழுக்க கொளுத்து கொளுத்தென்று கொளுத்திய பாழாப்போன சூரியன் ஒரு பத்து நிமிசம் மெதுவாப் போகக்கூடாதா என்று எரிச்சல் வந்தது.இறங்கி ஓட்டமும் நடையுமாக சைக்கிளை உருட்டிக்கொண்டு போனான்.எதோ பசக்கென்று பின்னலிருந்து இழுக்கிற மாதிரி இருந்தது.

சீதேவியம்மாதான் பிடிச்சி இழுக்கா என்று பயந்து போய் குபீரென்று உடம்பு வேர்த்தது.திரும்பிப்பார்த்தால் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்து குட்டிச்சாக்கு கீழே விழுந்து கிடந்தது.சரி இன்னைக்கு பேயோடு தான் ஊருக்குப்போகனும் என்கிற முடிவோடு ஸ்டாண்டைப்போட்டு,சாக்கை எடுத்து கேரியரில் வைத்துக் கட்டினான்.தெற்குப்பக்கம் இருக்கிற மண்டபத்தை பார்க்கக்கூடாது என்கிற நினைப்பு பிரசவ வைராக்கியமானது. விதி விடவில்லை. அந்த மண்டபத்திலிருந்து படபடத்துக்கொண்டு வெளியேறிய பறவைகளின் சத்தம் கொலைப்பதற வைத்தது. திரும்பிப்பார்த்தான். ரெண்டு உருவம் நிழலாடியது.வியர்வையோடு சேர்த்து ஒண்ணுக்கும் முட்டிக்கொண்டு வந்தது.

நிறைவேறாத ஆசையோடு செத்துப்போனால் பேயாய் அவர்கள் அலைவார்களாம்.பேய்க்கதைகள் சொல்லுகிற பாட்டிதாத்தாமார்கள் பேயை எப்படி எதிர்கொள்வதென்றும் சொல்லித் தந்திருந்தார்கள்.இரும்பைக்கையில் வைத்திருந்தால்,தீயைக்காட்டினால்,சூலாயுதமோ,சிலுவையையோ எடுத்து ஏந்திக்கொண்டால் எந்தப்பேயும் காத தூரம் ஓடுமென்கிற ஊர் நம்பிக்கை நினைவுக்கு வந்தது.சடசடவென்று கீழே கிடந்த பருத்தி மாரை சேர்த்துக் கட்டினான்,அதன் நுனியில் கீழே கிடந்த கந்தல் துணியை எடுத்துச்சுற்றினான். சிகரெட் குடிக்கவைத்திருந்த தீப்பெட்டியெடுத்து உரசினான். பற்றிக்கொண்டது தீ.வெளிச்சத்தில் நம்பிக்கை கூடியது. என்னதான் நடக்கிறதென்று பார்க்க குருட்டு தைரியம் வந்தது. மண்டபத்தை நெருங்கினான். ஆம்பிளையாள் மாதிரித் தெரிந்தது.இது எதோ களவு சோலியென்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு உள்ளே போனான்.

அந்தச்சாயங்கால குளுமையில் வேர்க்க விறுவிறுக்க ரெண்டு உருவம் தலை கவிழ்ந்த படி இருந்தது.அவர்கள் தான் பேயறைந்தத அதிர்ச்சியிலிருந்து  மீளமுடியாமல் இருந்தார்கள்.லஜ்ஜையாக இருந்தது.ஏதும் சொல்லாமல் மௌனத்தால் மன்னிப்புக்கேட்டு விட்டு வெளியேறினான்.பின்னாடி காலடிச் சத்தம் தொடர்ந்தது.'தம்பி' என்கிற தடுமாறுகிற குரல் கேட்டது. 'பயப்படாதீங்க, எங்கம்மா சத்தியமா நா இங்க எதையும் பாக்கல'. சொல்லிவிட்டு  திரும்பிப் பார்க்காமல் சாவகாசமாக நடந்தான்.ஊரை அடுத்து உள்ள பம்புசெட்டுக்கு வந்த போது நிலாத்தெரிந்தது.

சட்டைப்பையில் இருந்த கோல்டு ப்ளேக் சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். நண்பர்களிடம் சொல்லுவதா வேண்டாமா என்கிற கயிறு இழுப்பு நடந்தது. ஊர்மடத்திலும், களத்து மேட்டிலும் பொழுதுபோகப்புறணி பேசக்கூடிய விஷயமா இது. வேண்டம், அப்படியே மண்ணைப்போட்டு மூடுவதுதான் சரி என்கிற தீர்மானத்துக்கு வந்தான்.தேரம் போனது தெரிய வில்லை.டார்ச் லைட் வெளிச்சம் பதையில் நடந்து வந்தது. பழக்கமான பேச்சுச் சத்தமும் கேட்டது. வேலவர்,பவுல், தேடிவந்தார்கள்.இறங்கி அவர்களை நோக்கி நடந்து போனான். மீதி இருந்த இன்னொரு சிகரெட்டைக் கொடுத்தான் பத்தவைத்துப் பகிர்ந்து கொண்டார்கள். 'என்னப்பா மூஞ்சி ஒரு மாதிரியா இருக்கு ஒங்காளு நெனப்பு வந்துர்ச்சா' என்று கேட்டதற்கு ஆமாம் என்று பதில் சொன்னான்.

மறுநாள் அம்மாவிடம் சன்னாசியும் சீதேவியும் எப்படிச் செத்தார்கள் என்று கேட்டான்.'மாடு மேய்க்கிறவன்  சானிக் கூடைக்கு ஆசப்படலாம்,காராம்பசுவுக்கு ஆசப்படலாமா,அததுக்கு தராதரம் வேண்டாமாய்யா?.அடிச்சுக்கொன்னு போட்டுட்டு பேயடிச்சிருச்சுன்னு பொரளியக் கெளப்பிட்டாங்க. இதெதுக்கு கேக்க ? எய்யா இப்பிடி வெள்ளிக் கெழமயும் அதுவுமா பேயலையுற மண்டபத்த தாண்டி வராட்டி என்ன ரோட்டு வழிய வரக்கூடாதா. நானே கருகமணி  கெனக்க ஒத்தப்பிள்ள வச்சிருக்கேன்' அம்மா புலம்பிக்கொண்டிருந்தாள்.மறுநாள் கிழவங்கோயில் பூசாரிய வீட்டுக்குக் கூப்பிட்டு வந்து திண்நீறு போடச் சொன்னாள்.

அப்புறம் ஒரு வாரத்தில் அது மறந்து போயிருந்தது.அதற்குப்பிறகு எங்காவது பேயிருக்கா இல்லையா என்கிற வாதம் நடந்தால் ஆமாம் இருக்கிறதென்று சொல்லி ஜகா வாங்கிவிடுவான்.பெரியார் பேரங்கெனக்கா வாய்கிழியப் பேசுவான் இப்படி பல்டி அடிக்கானே என்று சேக்காளிகள் தடுமாறினார்கள். அதற்கப்புறம் அந்த ரெண்டு உருவத்தில்  இவனே தலையைக் கவிழ்த்திக் கொண்டு கடந்து போய்விடுவான்.

நிறைவேறாத ஆசையோடு மனிதர்களும் கூட அலையவேண்டாமே.

10 comments:

velji said...

கடைசி வரி...ஆயிரம் பேய்களை கட்டிப்போட்டு விட்டது!

vasu balaji said...

/கொஞ்சம் கூட நடந்து வாங்க அந்த ஆவிகளைப் பார்த்த முனியராஜைப்பத்திச் சொல்றேன். //

ஆடு சதையில் புல்லுரசி குறுகுறுக்க காலாற நடந்து, எப்பவோ அம்மா கைபிடிச்சும் சறுக்கி சறுக்கிப் போன வரப்பும், வயலும், பாராத ஊரும் சனமும், கதையும்..கடைசியில்..பெரியாருக்கு இன்னோரு அர்த்தமும் உண்டே. அருமை காமராஜ்

ராம்ஜி_யாஹூ said...

தலைப்பை பார்த்ததும், ஈ வே கே எஸ் இளங்கோவன் பற்றி தான் எழுதி உள்ளீர்கள் என்று நினைத்தேன்

காமராஜ் said...

அன்பின் வேல்ஜி...

ப்ரிய பாலாண்ணா

அன்பின் ராம்ஜி

எல்லோருக்கும் வணக்கமும் நன்றியும்.

ஆ.ஞானசேகரன் said...

//நிறைவேறாத ஆசையோடு மனிதர்களும் கூட அலையவேண்டாமே.//

உண்மை...

கதை ஜம்முனு இருக்கு

Unknown said...

//ராம்ஜி_யாஹூ said...தலைப்பை பார்த்ததும், ஈ வே கே எஸ் இளங்கோவன் பற்றி தான் எழுதி உள்ளீர்கள் என்று நினைத்தேன்//
mee too...

சிங்கக்குட்டி said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

நன்றி.

hariharan said...

//தலைப்பை பார்த்ததும், ஈ வே கே எஸ் இளங்கோவன் பற்றி தான் எழுதி உள்ளீர்கள் என்று நினைத்தேன்//

me tooo..

ஹேமா said...

பேயைச் சாட்டிப் பேய்க்காட்டிக் கொண்டு திரியும் பேயர்கள்.
கடைசி வரி உண்மை.

பத்மா said...

பேய்கள் இருக்கோ இல்லையோ ..
ஆசை நிறைவேறாது அலையும் மன ஆவிகள் நிறையத்தான் இருக்கு ..
உணர்ந்த நேரம் தான் ஜோரான நேரம் ..
அருமையான சொல்லோவியம் சார்

look at last i read ..as i promised :))