29.9.10

தீபாவளி,சிறார்கள்,எந்திரன் துப்பாக்கி.

ராமர் வில்லெடுப்பார் அம்பை நாணில் வைத்து இழுக்காமலே விடுவார் அது பறந்து போகும், பறந்து போகும் போய்க்கொண்டே இருக்கும்.நம்ம தமிழ்சினிமாவில் மாதிரி  தலைவாசலில் இருந்து கதாநாயகன் ஓடிவருவார்.அடுப்பங்களையிலிருந்து கதாநாயகி ஓடிவருவார். அது ஒரு அஞ்சு நிமிசம் ஓட்டம் இருக்கும்.அஞ்சஞ்சும் பத்து நிமிஷம் ஓடிக்கடக்கிற அளவில் வீடுகள் இந்தியாவில் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை. அதே போலத்தான் ராமரின் வில்லும் மதுரைக்கு ஜவுளி எடுக்க போகிற மாதிரி கிளம்பிப்போகும். அதுக்குள்ளாற அடுப்பில் உலை நத்த்து விட்டு கடைக்குப் போய் விட்டுவந்து விடலாம்.கிளம்பிப் போன அம்பு ஒன்று பத்தாகும். பத்து நூறாகும்.அது வேற கதை.அதோடு நில்லாமல் அம்பிலிருந்து தீ ஜுவாலைகள் கிளம்பும்.அந்தப் பக்கமிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கும்.சாத்தூரில் அப்போது தண்ணிப்பஞ்சம். ராமாயணம் பார்க்க வந்த ஒரு அம்மா 'இம்பூட்டு தண்ணியும் வீணாப்போகுதே'என்று ஆதங்கப்பட்டார்.'என்னதான் சண்டன்னாலும் இப்பிடிக் குடிக்கிற தண்னிய நாசமாக்குறது நல்லால்ல' என்றும் தீர்ப்புசொன்னார்.

ஆனால் குழந்தைகள் அப்படியில்லை.தொலைகாட்சிக்கு முன்னாடி கட்டிப்போட்ட மாதிரிக்கிடக்கும்.
ஒண்ணுக்குத் தண்ணிக்கு கூடப்போகாமல் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும்.நம்ம குடும்பங்களுக்கு பிள்ளைகளை டியூஷனுக்கு அணுப்ப வேண்டும் அல்லது அவர்கள் சமத்தா இருக்கவேண்டும்.அப்படியில்லாமல் ஓயாம சண்டைபோட்டும்,எதாவது கேட்டு நச்சரிக்கும் குழந்தைகளைத் திசை திருப்ப ராமாயணம் போட மாட்டானா என்று ஏங்குவோம்.அந்த அளவுக்கு அது அவர்களை entertain பண்ணும்.அப்படியான காலச்சூழலில்தான் இந்த விளம்பரங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.ராமாயணத்தில் இருக்கிற குழந்தைகளுக்கான ஈர்ப்பை சுவீகரித்துக்கொண்டு அப்படியே முன்னேறி விட்டன.அவ்வளவு fantacy நிறைத்து தருகிறார்கள்.

சோப்புக்கள் எல்லாம் பாதாம்,பிஸ்தா,ஏலக்காய்,முந்திரி எனப்பாயசம் தயாரிக்கிற பொருளில் தாயாராகிறதாம்.இன்னொரு சோப்பில் பப்பாளி,ஆரஞ்சு,ஆப்பிள் கலந்து பழரசத்துக்கான சேர்மானம் இருக்குமாம்.சாப்பிடுகிற பொருட்களெல்லாம் கேடு விளைவிக்கும் ரசாயணக் கலவைகளில் தயாரிக்கிற (ம_ராண்டிகள், மன்னிக்கவும்) பன்னாட்டுக் கம்பெனிகள் இப்படி நமது காதுகளில் டிஜிட்டல் பூச்சுற்று நடத்துவாகள்.அதை விட அதிசயம் என்னவென்றால்  வழுக்கைத் தலையில் முடி முளைக்குமாம். இப்படிச் சொல்லுகிற சொக்குப்பொடிகள்.இதை அங்கீகரிக்கிற மாதிரியும் ஆமோதிக்கிற மாதிரியும் விற்பனை அமோகமாக நடப்பதால் இன்னும் என்னென்ன சொல்லுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

அப்படியொரு அங்கீகாரம் தான் எந்திரன் படத்துக்கான ஒலிப்பேழை,முன்னோட்டக் காட்சிகள் வெளியீடும் அதற்கடுத்து தற்போது களேபரப்படுத்திக் கொண்டிருக்கும் முன்பதிவுத் திருவிழாவும்.கண்ணில் தட்டுப்படுகிற முன்னோட்டக்காட்சியில் ரஜினியின் இடுப்பைச்சுத்தி ஆயிரங்கண்ணுப்பானை போல கணக்கிலடங்காத ஏகே 47 துப்பாக்கிகள் துருத்துகிறது.எல்லாவற்றையும் இயக்கி குண்டு மழைபொழிவார் கணினியுக ராமர்.வில்லுக்கும் சரி துப்பாக்கிக்கும் சரி நியூட்டனின் விதி நிரூபணமாகவேண்டும்.பின்னோக்கி எவ்வளவு இழுக்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் முன்னேறிப்பயணிக்கும் விசை.ஒரு துப்பாக்கியை தமிழ்ச்சினிமாவில் காட்டுகிறதைப்போல சொகுசாய் கையாளமுடியுமா?. ராணுவ வீரர்கள் தான் சொல்லவேண்டும்.  தானியங்கித் துப்பாக்கிகளை இயக்க stand வேண்டும் அல்லது புஜங்களில் தாங்கிப்பிடிக்கவேண்டும்.அகஸ்துமகஸ்தாக இருந்தால் வெடிக்கிற போது கிளம்புகிற எதிர்விசை தோள் புஜத்தை கலக்கிவிடும் என்று ராணுவவீரர்கள் சொல்லக் கேட்கலாம்.

அதுவெல்லாம் கிடக்கட்டும் ஓரமாய்த்தூக்கி வைத்துவிடுவோம்.ஒரு கலிக்கிண்டுகிற துப்பாக்கி.அதாங்க குருவி சுடுகிற துப்பாக்கியைச் சொந்தமாக வைத்திருப்பதற்குக் கூட ஆறுமாசம்,ஒரு வருஷம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டும். ஆயிரம் காரணம் சொல்லி உரிமம் வாங்க வேண்டும்.வாங்குகிறவருக்கு சமூக அந்தஸ்து வேண்டும். பண்ணையார், பெருமுதலாளி,அமைச்சர் போன்ற அந்தஸ்து.அதையும் மீறி வைத்திருந்தால் அதைக்கள்ளப் பணத்தோடு பதுக்கித்தான் வைத்திருக்கமுடியும்.போலீஸ் கண்டு பிடித்துவிட்டால் கதி அதோகதிதான்.இதை எந்த சினிமாவாவது சொல்லியிருக்கா?.இங்கே தான் அப்படிக் கிடையவே கிடையாது.மக்களை சிந்திக்க வைக்கிற அறிவை உயர்த்துகிற எந்தக் காரியத்தையும் செய்யப் போவதில்லை என்று சத்தியம் பண்ணுகிற வைபவம்தான்,(பெரிய பதாகைத்) தமிழ்சினிமாக்களுக்குப் பூஜைபோடுகிற வைபவம்.

விளையாட்டுத் துப்பாக்கி வாங்குவதற்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் மட்டும்தான் இங்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை.தீபாவளி வருகிறது கொஞ்சம் சகாயமாகவும் கிடைக்கும்.அப்படி துப்பாக்கிகள் வைத்திருக்கிற ரஜினியை சிறுவர்களுக்கு ரொம்பப்பிடிக்கும்.நிஜத்தில் மனிதர்களின் ஆழ்மனத்தில் அற்புதங்களுகான ஏக்கம் தூங்கிக்கொண்டே இருக்கும்.அதைக் காசாக்குகிற வித்தைதான் ஒரு அடியில் பத்து, இல்லை இல்லை நூறு பேரை அடித்துப்பறக்க விடும் டெக்னிகல் தரம் உயர்த்தப்பட்ட சினிமா.நிச்சயம் அவர்களுக்கான பொழுதுபோக்கு 200 சதவீதம் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற படச்சுருள்களின் வரிசையில் எந்திரனும் சேரலாம். சிறுவர்களுக்குத்தானென்றாலும் டாம் அண்ட் ஜெர்ரி,ஹாரிபாட்டர் போன்றவற்றை நாமும் பார்ப்பதில்லை ?.

5 comments:

Anonymous said...

fantasy இல்லாத மனிதன் இல்லைதான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பதை நாம் புரிந்துகொண்டால் நலம்

க.பாலாசி said...

எளிமையாய் வித்யாசமாகவும் எழுதியிருக்கீங்க..

//சோப்புக்கள் எல்லாம் பாதாம்,பிஸ்தா,ஏலக்காய்,முந்திரி எனப்பாயசம் தயாரிக்கிற பொருளில் தாயாராகிறதாம்//

அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க... இவனுகளுக்கு அந்த ஒத்தை எழுத்துவிட்ட ‘வார்த்தை’யை பயன்படுத்துவதில் தவறில்லை.

டிஜிட்டல் யுகத்தில் நியூட்டனின் எந்த விதிகளும் பொருந்தாது... எல்லாவற்றிற்கும் ஒரே நேர்விசைதான்.

Unknown said...

இது வியாபார உலகம்.. பணக்காரன் தன்னை மேலும் பணக்காரன் ஆக்கிக் கொள்ள என்ன தந்திரம் வேண்டுமானாலும் செய்வான்.. நாம் பல்லக்குகளை தூக்கிசெல்ல தயாராக இருக்கும்போது அவன் அப்படித்தான் நடந்து கொள்வான் ....

hariharan said...

//மக்களை சிந்திக்க வைக்கிற அறிவை உயர்த்துகிற எந்தக் காரியத்தையும் செய்யப் போவதில்லை என்று சத்தியம் பண்ணுகிற வைபவம்தான்,(பெரிய பதாகைத்) தமிழ்சினிமாக்களுக்குப் பூஜைபோடுகிற வைபவம்//

நல்லாச் சொன்னீங்க தோழர்..

vinthaimanithan said...

//நிஜத்தில் மனிதர்களின் ஆழ்மனத்தில் அற்புதங்களுகான ஏக்கம் தூங்கிக்கொண்டே இருக்கும்.//

உண்மைதான் தலைவரே! மக்கள் எப்போதுமே மேய்ப்பனுக்காக எதிர்நோக்கும் மந்தை மனோபாவத்திலேயே இருக்கிறார்கள். எனவேதான் அந்த ஏக்கங்களை வெண்திரையின் மாயபிம்பங்களின்மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள். தோல்பாவைக்கூத்தில் பொம்மைகளை ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகளைப் போல இந்த பிம்பங்களைப் பின்னிருந்து இயக்கும் ஒரு வர்க்கம் அதன்மூலம் மக்களை எப்போதும் தாம் விரும்பும் வலையில் விழவைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஊதிப் பெருக்கப்பட்ட பிம்ப பலூன்களின் தேவை முடியும்போது அவற்றில் அவர்களே ஊசியும் ஏற்றிவிடுகிறார்கள்.

ரஜினியாகிய பலூனுக்கு அரசியல்சாயம் பூசி ஊதினார்கள். அதற்கான தேவை முடிந்தபின் இப்போது அவரிடம் எஞ்சி இருக்கும் சினிமா என்ற வண்ணத்தை விற்பனைக்கு வைக்கிறார்கள். இந்தச்சாயமும் நிலைத்ததல்ல. இன்னும் கொஞ்சகாலத்தில் அவரை லைம்லைட்டிலிருந்து இறக்கும் செயலையும் அவர்களே கனகச்சிதமாகச் செய்வார்கள்.