22.1.12

மதுவழிப்போதை தற்காலிகம்.

பெரும்பாலும் அந்த தேநீர்க்கடையின் வாசலில்தான் முடிவாகும்.அல்லது சில நேரம் தொலைபேசியின் வழியா கவும் அழைப்பிதழ் அனுப்பப்படும். ஒவ்வொருத்தராக வந்து இணைந்து கொள்ள ஒரு அரைமணிநேர காத்திருத் தலில்  கூட்டம் கூடி விடும்வார்கள். வீட்டைவிட்டுக் கிளம்பும் ஒரு மத்தியதர வர்க்க கணவனுக்கு யாரும் வெற்றித் திலகமிட்டு  வழியனுப்பு வதில்லை. அது மதுக்குடிக்கவா இல்லை விலைவாசிக்கெதிரான  ஆர்ப் பாட்டத்துக்கா என்பதில் பேதமிருக்காது. யூனியன் மீட்டிங்கா ? சத்தியா ஓட்டலுக்கா ? இந்த ரெண்டு  கேள்வி களுக்கும் ஒரே மாதிரியான எகத்தாளம் தான் இருக்கும். கனி ஓட்டலைத் தேர்ந்தெடுக்கிற வரையில் எங்கே கூடுவதென்கிற பிரச்சினை இரண்டாண்டுக்கு ஒருமுறை  விவாதப் பொருளாகும். கவிஒர்க்‌ஷாப், சங்கிலி ஸ்பேர்பர்ட்ஸ், ஆதிசக்தி எஸ்டிடி பூத் என்கிற இடங்கள் எல்லாம் இப்போது ஞாபகங்களாக மட்டும் வந்துபோக கனி ஓட்டல் மட்டுமே சந்திப்புகான மையமாகிப் போனது.

அதுபோலவே இந்த  இருபத்தைந்தாண்டுகளில் எத்தனையோ குடிமகன் களோடு உட்கார்ந்து  மதுவருந்தியாகி விட்டது. ஒருசினிமாக்காரன், ஒரு மிலிட்டரிக் காரன்,ஒரு துருக்கிதேசத்தான்,டெல்லி ரயிலில் சிகரெட்  புகைத் ததற்காகப் பிடித்துக்கொண்டுபோன  ரயில்வே போலீஸ்,பாட்டிலைத் திறந்த வுடன் அழுக ஆரம்பிக்கும் மனிதர் கள்,பாடுபவர்கள்,சண்டைபோடுவபவர்கள் என ரக ரகமானவர்களுடன் போதைப் பொழுதைப் பங்கிட்டுகொள்ள முடிந் திருக்கிறது. அது மட்டுமல்ல அவர்களின்  சமூகப் பொருளாதார தத்துவங் களையும் எதிர்கொள்ள  நேர்ந் திருக்கிறது. ’ஒக்காலி இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதாய்யா லாயக்கு’ என்றோ சவுதி மாதிரிக் கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தாதான் நாடு உருப்படும் என்றோ கூறும் அவர்களின் முடிவு களை  எதிர்கொள்ள நேரிடும். அவர்களின் அசாத்திய  அறிவுத் திறனையும் அறிவியல் திறனையும்கூட வியக்க நேர்ந்துவிடும்.

கிழக்கு ராமநாதபுரத்து பாண்டுகுடியில் அம்மாசி என்கிற ஐம்பதுவயதுக்காரர் முதன்முதலில் காலிப்  பாட்டி லுக்குள் தீக்குச்சியை உரசிப்போட்டார்.அப்படிப் போட்டதும் குபீரென்று தீக்கிளம்பியது. அதைவிடக் குபீரென்று அவர்மீதான ஆச்சரியமும் பொங்கியது. எல்லோரும் வங்கி பற்று வரவு என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் தலைத் துண்டைக் கையில் ஏந்தியபடி ஒரு ஓர மாக  நின்று பீடி குடித்துக் கொண்டிருந்தார். பின்னே  சினிமாப் பற்றி பேச்சு திரும்பியது.அப்புறம் அதுபாடலாக  பற்றிக் கொண்டது. அப்போது சொக்க லிங்கம் சார்தான் ’அம்மாசி நீ படிடா’ என்றார். பதினாறும் நிறையாத பருவ மங்கை என்கிற பாடலைப் பாடினார். குணாவுக்கு அப்போது  அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை என்கிற பாடலுக்கு நிகர் ஏதுமிலை  என்கிற கட்டுப்  பெட்டித் தனம்  மேலோங்கி யிருந்தது.  ஆனால் அவனுக்குப்பிடிக்காத அந்தபழய்ய  பாடலைக்க்கூட கூடுதல் ரம்மிய மாக்கினார் அம்மாசி. அதன் பிறகுதான் எனக்கு அப்படிப்பட்ட பழய்ய பாடல்களின் மேல் குணாவுக்கு அபார ஈர்ப்பு வந்தது. 

அவர் பாடி முடித்ததும் அந்த இடம்  ஒரு நிமிடம் மௌனத்தால் உறைந்து போனது. அவரது திறமையை அங்கீ கரிக்க  ஏற்றுக் கொண்டு பாராட்ட மதுவில் வழியும் சமத்துவம் கூட கொஞ்ச நேரம் கூசியது என்றே பொருள் கொள்ளலாம். நாகராஜுதான் 'பெய  நல்லாப் பாடுவான் ஆனா அவனுக்கு  குளிக்கிறது மட்டும் ஆகவே ஆகாது சார்வாள், பாருங்கோ துணி எவ்வளோ  அழுக்கா  போட்ருக்காண்ணு' என்று அவனது துதியை துவக்கி  வைப் பான். 'நாகராசு கோழி ரெடியாயிடுச்சான்னு பாத்துட்டுவா' என்று சொக்கலிங்கம் சார் சொல்லவும் நாகராஜு ’அம்மாசி போடா போய் சட்டுனு எடுத்துட்டுவா’ என்பார்.

பிறிதொரு நாள் நாகாராஜு இல்லாது குடிக்க  நேர்கை யில் குணா தனது பங்கை வாங்கி அம்மாசியிடம்  கொடுத்தான். வேண்டாமென்று சொல்லிக் கொண்டே வாங்கி ஒரே மடக்கில் குடித்து முடித்தார்.யாழென்றும் குழல் என்றும் சிலர் கூறுவார் எனை அறியாமல் எதிர்த்தோர்கள் எழுந்தோடுவார் என்கிற வரிக்கு முன்னாடி சரளி சொல்லவேண்டுமல்லவா அதை அட்சர  சுத்த மாகப் பாடினார். அம்மாசிக்கு அவ்வளவு நுணுக்கங்கள் கேள்வியின் வழியேதான் வசமாகியிருக்க வேண்டும். அன்று கிட்டத்தட்ட ஒரு ஜுகல் பந்தி நடத்திக் காட்டினார் அம்மாசி. அதிசயமென்னவென்றால் பந்தியில் அந்த மாதம் வெளிவந்த புதிய திரைப்படங்களின் பாடல்கள் கூட இருந்தது. மறுநாள் காலையில் இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களை  எடுத்துக் கொண்டு  உணவு விடுதிகளில்  கழனித் தண்ணீரை வாங்கி அவரது மாடுகளுக்கு கொண்டு போனார். அவர்கொண்டுபோன கழிவுதண்ணீருக்குள்ளேயே  சுர,லய நுணுக்கங்களோடு அவரது இசை அமிழ்ந்துபோனது.

5 comments:

Rathnavel said...

நிஜம் தான். திறமை எல்லா இடத்திலும் இருக்கிறது.

ஓலை said...

Arumai.

kathir said...

எழுத்தே போதையாய்! :)

புதுவை செல்வம் said...

குடத்துள் இட்ட விளக்கு’... தண்ணி அடிப்பதில் கூட, எளியவரை உபயோகிக்கும் வலியோர்.... இல்ல?

santhanakrishnan said...

கானகத்தில்
வழியும்
புல்லாங்குழலின்
இசைப் போல்.