26.1.12

மருளாடியின் மேலிறங்கியவர்கள்

கருப்பு நிலாக் கதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிற சிறுகதை.மீள்பதிவு.

முக்குலாந்தக்கல்லில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையத்துக்கு கடைசிப் பஸ்ஸைப்பிடிப்பது போல ஒரு அவசர நடை நடந்துவிட்டு, அதே வேகத்தில் திரும்பி முக்குலாந்தக்கல்லுக்கு வரும் அவளைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. முகத்தில் பறவி இருக்கும் மஞ்சள், நெற்றியில் பதிந்திருக்கும் செந்துருக்கப் பொட்டுக்கும்  சம்பந்த மில்லாத கிராப் தலை.  நாலு அடி ஐந்தங்குள உயரம். அவளின் வயது மிஞ்சி மிஞ்சிப்போனால் இருபத்து  எட்டிருக் கலாம். ஆனால் நூறு வயது வாழ்ந்து கடந்து விட்ட கால முதிர்ச்சி அவளின் முகத்தில்  ஒட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றியிருக்கும் உலகத்தை அலட்சியப் படுத்துகிற அந்த பார்வையில் ஆயிரம் ஞானிகளின்  ஒளி குடிகொண்டிருக்கிறது.கடந்துபோன ஒரு நவீன வாகனத்துக்கார முதலாளியின் பார்வை இவள் பக்கம் திரும்பவில்லை. அது குறித்து அவளுக்குக் கவலை இல்லை. அந்த முதலாளி மாதிரியே நகரத்துப் பிரதானச் சாலையில் பல ஆண்கள் அவளைக் கடந்து போகிறார்கள். வெயில் சுள்ளென்று சுட்டெரிக்கிறது. செருப்பிலாத காலில் சாலையோரத்து மணல் ஒட்டிச்சிதற்கிறது. எல்லோர் பாதங்களையும் பதற வைக்கிற அந்தச்சூடு அவளை ஒன்றும் செய்யத்திராணியற்றுப் போனது.


காவல் நிலைய வாசலில் உட்கார்ந்திருந்த செவத்த வள்ளி இவளைக்கூப்பிட்டு ரெண்டு வெத்திலையையும் உடைத்த பாதி பான்பராக்கும் சேர்த்துக்கொடுக்கிறாள்.

'' சீ கருமம், இதப்போயி '' என்று தட்டி விடுகிறாள்.
'' ம்ம்ம்ம்.. ரெம்பத்தா சுத்தக்காரி மாதிரி சிலுப்பிகிராத ''
'' ஏ... சொன்னாலுஞ் சொல்லாட்டாலு நா சுத்தக்காரி தா அந்த ஆத்தாவ செமக்கமில்ல ''
'' ஆமா இடிச்சிப்போட்ட பழய டேசன் கக்கூசக்கேட்டாச் சொல்லும் '' 
'' சீ நாத்தம் பிடிச்சவா ஓண்ட மனுசி பேசுவாளா ''
 
சுருக்கென்ற கோபத்தில் அங்கிருந்து நடையைக் கட்டினாள். ப்ரியா ஸ்டுடியோவுக்குள் நுழையும் போது யாரோ கேலி சொல்வது கேட்டும் கேட்காமலும் நுழைந்தாள். உள்ளே மாடன்,  அலங்காரிக்கப்பட்ட சின்னக்குழந்தையை மரப்பெஞ்சில் உட்கார வைத்து படம் பிடிக்க குனிந்து, குனிந்து வசம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதும் கூட அங்கிருக்கிற யாரும் அவளைக் கவனிக்கவில்லை. ஏதாவது பேச்சுக் கொடுத்தால் உட்கார்ந்துவிடும் அபாயம் உணர்ந்த, கம்ப்யூட்டர் முத்து, தீபா யாருமே அவளோடு பேசவில்லை எல்லோர் முகத்தையும்  பார்த்து விட்டு திரும்பவும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அந்தக்குறுகிய வாசலின் வழியே ஒருவாரத்திற்கு முன்னாள் படம் எடுத்த எஞ்சினியரிங் மாணவன் வர யோசித்து நின்றதைக் கவனித்த தீபா ''சச்சி கொஞ்சம் தள்ளிக்கோ'' சொல்லவும். அய்யய்யோ பிள்ளாண்டன் நிக்குதா உள்ளபோங்க சாமி என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தாள். அந்தக் கம்ப்யூட்டர் மாணவனும் எஞ்சினியரைவிடப் பெரிய பட்டம் கிடைத்த  சந்தோசத்தோடு சாமிப் பட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளே போனான்.

இது ஒரு அன்றாட  வாடிக்கை தான் என்றாலும் அந்த புகைப்பட நிலையத்தோடு சம்பந்தமில்லாத ஒரு பெண்  அங்கு வந்துபோகிற எல்லோரோடும் மிக இயல்பாகப் பேசுகிற லாவகம் கற்றுக் கொண்டதும், வியப்பானவை. இன்னும் சில சாவகாசமான பொழுதுகளில் புகைப்பட நிலையத்தின் நடுக்கூடத்தில் செந்தில், மாடன், சூரியா, இன்னும்சில இளவட்டங்கள் உட்கார்ந்திருக்க நடுவில் உட்கார்ந்து கொண்டு வலமை பேசிக்கொண்டிருப்பாள் சச்சி. அந்த சச்சி யார் என்கிற ஒரு கேள்வி புதிதாய் நுழைகிற எல்லோருக்குள்ளும் எழுந்து அடங்கும்.


சரஸ்வதி என்கிற சச்சி.


மேட்டமலையில் ஒரு ஒதுக்குப்புறத்தில் பத்து வீடுகளுக்கும் குறைவாக இருந்தது அந்தக் குடிசைகள். அதில் ஒரு குடிசையில்  நாள், பொழுது, நட்சத்திர தேதிகளுக்குள்ளும் பஞ்சாயத்து ஜனனப்பதிவேடுகளிலும் பிடிபடாமலும் பதிவாகாமலும் பிறந்த சரசுவுக்கு ஒரு குடும்பம் இருந்தது. ரெண்டு வேளைச்சோறு  சாப்பிடு வதற்கு ஊரின் ஒட்டு மொத்த அழுக்கைச் சரிசெய்ய வேண்டும்.  வெயிலோடும், புழுதியோடும், பசியோடும் கடந்துபோன பால்யப்பருவத்து பசுமை நினைவுகளில் மிக அறிதாக விளையாட்டும், மழையும், சில இனிப்பு களும் தவிர வேறு ஏதும் பிரமாதமாக இல்லை.  மானம் பார்த்த இந்த கந்தக பூமியில் விவசாயம் காய்ந்து போனது.  மத்தியில் ஆட்சி செய்த  ஜனதா அரசு தீப்பெட்டிக்கான உற்பத்தி வரியைக்குறைத்து, குடிசைத் தொழிலாக அறிவித்தது அந்த எழுபதுகளில்தான் பருத்தி, மிளகாய் விளைந்த கிராமங்களில் தீப்பெட்டிகள் முளைக்கத் தொடங்கியது. விவசாயம் செய்த பண்ணையார்கள் தீப்பெட்டி முதலாளிகளானார்கள். அபோது எல்லா பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பத்து குழந்தைகளைப் போலவே இலவசக்கல்வி, இலவச உணவு எலாவற்றையும் தாண்டிய வறுமையை எதிர்கொள்ள உழைக்கப்போகிறாள் சச்சி.


கட்டை அடுக்குவதற்கும், தீப்பெட்டி ஒட்டுவதற்கும் கச்சாப்பொருள்களை வீடுகளில் கொண்டுவந்து  கொடுத்து விட்டு, அதைத்தயாரித்து முடித்த பின்னால் எடுத்துக் கொள்வதற்குமான ஏற்பாடுகள் இருந்தது. ஆனால் அப்படி உட்கார்ந்து வேலை பார்க்கக்கூட இடவசதியில்லாத வீடுகளில் உள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய தீபெட்டி ஆலைகளுக்கு உழைக்கப்போவார்கள். காமராஜர் மாவட்டத்து பெண்களின் சந்தோசம் துக்கம் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் கொட்டிக் குவிக்கப்பட்ட இடங்களாக தீப்பெட்டி ஆபீசுகள் மாறிக்கொண்டிருந்த காலம் அது.

ஒரே ஒரு ஆரம்பக் கல்வி நிலையம் இருக்கிற ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆபீசுகள் இருக்கிற வினோதம் உண்டு. புலர்ந்தும் புலராத இளங்காலையில் எழுந்து முகம் துடைத்து தீப்பெட்டி வாசத்துக்குள் நுழையும் அவர்கள் பொழுது சாயும் போதுதான் வீடு வரமுடியும். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. அன்றுதான் ஓடுகிறகிற பம்ப்செட் தேடி அலைவார்கள். மொத்தமிருக்கிற ரெண்டு அல்லது மூன்று ஜோடி உடைகளை துவைப்பார்கள், குளிப்பார்கள். பாதி கந்தக வாசமும் பாதி சோப்பு வாசமுமாக திங்கள் கிழமை வந்துவிடும். வீடு என்பது தூங்குவதற்கும் உணவு தயாரிப்பதற்குமான இடம் மட்டும் தான். மற்றபடி கனவு, காதல் துக்கம், சந்தோசம், சண்டை எல்லாவற்றையும் உள்ளடக்கிய உலகமாக தீப்பெட்டி ஆபீஸ் மட்டும் தான் இருக்கும்.


ரெண்டு பெண்களின் துணையோடு மத்தியான வேலைகளில் ஒருத்தி வீடு திரும்பினால், ஒரு கந்தகப்பூ மலர்ந்து விட்டது என்பது கோனார் நோட்ஸ் இல்லாமல் புரிகிற விசயமாகும். இதுகூட புரியாத சச்சிக்கு ராக் ரூம் இருட்டே இரவாகியது. பொதுவாக ஊர் சுத்தம் செய்யும் குடும்பத்து குழந்தைகளும் சுத்தம்செய்கிற வேலைக்கு நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.  எல்லோரும் போன பிறகு ''ஏத்தா சச்சி நீ இரு'' என்று  முதலாளி அவளை இருக்கச் சொன்னதற்கு அதுதான் காரணம் என்று நினைத்தாள். போகும் போது அலாதியாக கொஞ்சம்பணம் கிடைக்கலாம் என்னும் எதிர்பார்ப்பிமேல் மண் விழுந்தது. ராக் ரூமில் அந்த கணத்த எண்பது கிலோ உருவம் அவள் மேல் கிடந்தபோது அது காமம் என்று அறியாத பருவத்திலிருந்தாள்.

எதிர்க்க வலுவற்ற சமூகத்தில் பிறந்த அவளுக்கு அந்தக்கொடுமை கூட முதலாளிகளுக்கு செய்கிற ஒரு ஊழியமென்று  நினைத்திருந்தாள். அது போலவே பல முறை அது நடந்தது.  சாக்கடை சுமக்கிற, மலம் அள்ளுகிற, பொறுமையோடு சகித்துக்கொண்டாள். அதன் பின்னாள் முதலாளி மிளகாய்த் தோட்டத்துக்கு வேலைக்கு வரச்சொன்னார் அங்கேயும் கூட அவளுக்காக காமவெறி காத்துக்கிடந்தது. கால மாற்றமும் உடல் மாற்றமும் அவளுக்கும் கூட இச்சைகளை உண்டுபண்ணு கிற வேலையைக்காட்டியது. இப்போது முதலாளி எப்போது கூப்பிடுவார் என்கிற எண்ணம் உருவானது. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று கந்தக வாசமும், கழிவு, குப்பை வாசமும் சூழ வேலை பார்க்கிற நிர்ப்பந்தம்அவளுக் கில்லாமல் போனது. இரண்டு அந்த வேலைகள் இல்லாத போதும் கூட அவளுக்குத் தேவையான  எல்லாம் கிடைத்தது.  மகள் கெட்டுப்போன சேதியைக் கடைசியில் தெரிந்துகொள்கிறவர்கள் பெற்றோர்கள் தான் என்பது கிராமத்து சொலவடை. கடைசியாகத் தெரிந்த போது அவள் கருவுற்றிருந்தாள்.

அடுத்த சாதிக்காரன் கிண்டல் பண்ணினால் கூட போட்டுத் தள்ளுகிற சமூகக் கட்டமைப்புள்ள இந்த பூமியில் ஒரு பெரிய பாலியல் பலாத்காரம் அதுவும் அறியாத வயசில் நடந்திருக்கிறது அதுகுறித்துக் கோபப்பட வேண்டிய குடும்பம், மாற்று யோசனை மட்டுமே யோசிக்க முடிந்தது. கருவைக்கலைக்க சொந்தக்காரர்கள் ஊருக்கு அனுப்பினார்கள்.  அங்கேயும் ஆண்டைகளும், ஆதிக்கமும் குறைவில்லாமல் இருந்தது. எனவே மிகக்குறுகிய காலத்தில் அவள் அங்கேயும் ஆதிக்க சாதிப்பையன்களுக்கும் பெரியவர்களுக்கும் பொழுது போக்க கிடைத்த சாவடிபோல், பாஞ்சாம்புலி போலாகிப்போனாள். மீண்டும் பழைய ஊருக்கு வந்த போது இருந்த கொஞ்ச நஞ்ச மானமாவது மிஞ்சட்டும் என்று பெற்றோர்களே பிராது கொடுத்து விபச்சார வழக்கில் சிறைக்கு அணுப்பினார்கள். சட்டி சுடுகிறது என்று தப்பித்துக் குதித்து அடுப்பில் விழுந்த கதையாகியது சச்சியின் பொழப்பு. சிறைவாசம் எழுந்துவரமுடியாத புதைகுழியானது. அங்கிருந்து வெளி வரும்போது ஒரு புடம் போட்ட தங்கமாக வருவாள், மறு வாழ்வு வாழ வைக்கலாம் என்ற இன்னொரு மூட நம்பிக்கையும் தகர்ந்து பெற்றோருக்கு. மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பினாள்.


1985 வருசம் முதல் 1990 வரை ஒரு ஐந்தாண்டுகள் நகரத்தின் பிரபலங்களில் ஒன்றாகிப்போனாள்.அவளைப் பற்றியதான தகவல்கள் எந்த சுவரொட்டியிலும், எந்த ஊடகத்திலும் விளம்பரப் படுத்தப் படவில்லை  எல்லோ ருக்கும் அவளைப்பற்றித் தெரிந்திருந்தது. அவளைக்கடந்து போகிற யாரும் எளிதில் தவிர்க்க முடியாத வசீகர தோற்றம், இருபத்து நான்கு மணிநேரமும் வாடாத வரம் வாங்கியது போலவே அவள் சடையேறும்  மல்லி கைப்பூ, என வளைய வளைய வந்தாள். அந்தக்காலத்தில்தான்  எம்ஜியார் இறந்துபோனார். அப்போது மூன்று நாட்கள் தமிழகத்து நகரங்கள் சகஜ வாழ்கை இழந்து வெறிச்சோடிக் கிடந்தன. ஜனங்கள் போக்கிடமில்லாமல் வீடுகளுக்குள் அடைந்துகிடந்தார்கள். கடைகள்  மூடிக்கிடந்தன. மூடிய கடைகளின் முதலாளி நான்கு பேர் ஒரு காரில் அவளை எங்கெங்கோ கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்களில் மூன்றுபேர் நல்ல குடிகாரர்கள்  அப்படி யான நேரங்களில் அவளும் குடிப்பது தவிர்க்க இயலாததாகிவிடும்.


குடிப்பழக்கம் ஒரு புது அனுபவமாகவும், தாங்கும் சக்திக்கான மாற்று மருந்தாகவும் அவளுக்கு அறிமுகமாகியது. அதை அறிமுகப்படுத்திய மாரிக்கிழவி சரக்குச் சாப்பிடுவது பார்க்கப் பார்க்கப் பொறாமையாக இருக்கும். சும்மா பச்சத்தண்ணி குடிக்கிற மாதிரிக்குடித்துவிட்டு ஒரு செருமல் கூட இல்லாமல் இயல்பாகிவிடுவாள். குடித்த சரக்கின் வாசனை தவிர குடித்ததற்க்கான் எந்த தடயமும் அவளிடம் இருக்காது. முதலில் கொமட்டிக்கொண்டு வந்தாலும் பின்னர் கொஞ்சநாளில் சச்சியும் பழகிக்கொண்டாள். அப்போது கேட்ட சரக்கு கேட்ட துணிமணி,வாரி யிறைக்கிற பித்துப்பிடித்த பணக்காரர்களாக அவள் பின்னாலே அலைந்தார்கள். ஆனால்  யாரிடமும் பணம் கேட்டு வாங்க வேண்டும் என்கிற யோசனை அப்போது அவளுக்குத் தோன்றவேயில்லை. இந்த உடல், அதன் வசீகரம், அதன் மேலுள்ள ஈர்ப்பு எல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். அப்போது வயிறும் வாழ்கையும்  வழி மறிக்குமே என்கிற தூரத்து சிந்தனை இல்லாதவளாக காலம் கடத்தினாள்.

நகரத்து பிரமுகர்களும் அவர்களது மகன்களும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் அவளைத் தேடி வந்துபோகிற நாட்களில்  அவளுக்கு கர்வம் கலந்த புன்னகை குடிகொண்டிருக்கும். அதை மாரிக்கிழவியிடம் சொல்லிச் சிரித்திருப்பாள். தன்னைக்கடந்து போகிற யாரும் உற்றுப்பார்த்தாலோ அசடு வழிந்தாலோ ''இங்கஎன்னதொறந்தா கெடக்கு நாரக்கருவாட்ட பூன பாக்குற மாறி பாக்கான்'' என்று எடுத்தெறிந்து பேசுவாள். பார்த்தவன் தூரத்தில் போனதும் கெக்கலிட்டுச்சிரிப்பாள். அப்போது இந்த உலகம் தன் காலுக்கு கீழே கிடக்கும் ஆங்காரத் தோடு அலை வாள். குண்டு மஞ்சள் அறைத்துக் குளிக்கிற போதும் வாசனைச்சோப்புப் போடுக் குளிக்கிறபோதும் அவளே ரசிக்கிற இளமை மீது இன்னும் கூடுதல் கர்வம் மேலோங்கும்.தெருவுக்குள் யாரேனும் நடத்தை பற்றிப்பேசினால் காளியாட்டம் ஆடி எதிராளியை நிலைகுலையச் செய்வாள். அந்தச் சொல் மீண்டும் ஒரு முறை தன்னை நோக்கி வராதபடி வேலி போட்டுக்கொள்கிற உத்தி அது.

ஒரு நாள் திருச்செந்தூர் முருகன் கோவில் காட்டேஜுக்கு கூட்டிக்கொண்டு போயிருந்தார்கள். மூன்று நான்கு பிரமுகர்களோடு இரவு குடியும் கூத்துமாகக் கழிந்தது. விடிகிற நேரம் மிகையான போதையில் தூங்கிப்போய் விட்டாள் கண்விழித்தபோது மீண்டும் இருட்டியிருந்தது. எவ்வளவு குடித்தோம் யார் யார் கூட இருந்தார்கள் என்கிற எதுவும் மனசில் இல்லை. ஊரின் மிகப்பெரிய புள்ளி ஒருவரின் மூஞ்சியில் காரித்துப்பியது மட்டும் நினைவிலிருந்தது. உடல் முழுக்க அடிபட்ட காயமும், நகப்பிராண்டல்களுமாக வலித்தது. அதோடு தலை வலியும், பசியும் கலந்த கிரக்கத்தில் நீண்ட நேரம் காத்திருந்தாள். உடன்  வந்த யாரும் இல்லை. முதல் நாள் இரவோடு இரவாக அவர்கள் ஊர்போய்ச் சேர்ந்துவிட்டார்கள். நெடுநேரம் அழுகையும் வேதனையுமாக உட்கார்ந் திருந்தாள். கைபிடித்தபடியே நடந்து வரும் அய்யாவும், மடிக்குள் வைத்து பேன்பார்க்கிற அம்மாவும், காரணமில் லாமல்  நினைவில் வந்து மீண்டும் மீண்டும் கண்ணீர் வந்தது.  அங்கிருந்து பேருந்து நிறுத்தம் வந்து சில பேரிடம் சொல்லிப் பணம் கேட்டாள் பலனில்லை. பிறகு ஒரு குதிரை வண்டிக்காரர் எந்தப்பிரதி உபகாரமும் இல்லாமல் அவளுக்கு சாப்பாடும், பஸ் செலவுக்குப்பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். திருச்செந்தூரிலிருந்து திரும்பி வருகிற போது இவ்வளவு நாள் தேக்கி வைத்த வீராப்பும் வைராக்கியமும் உடைந்தது. அப்போது ஒரு ஆண் துணை தேவை என்று உணர்ந்தாள். அதுவும் தாட்டிக்கமான ஆண் துணை.


அந்தக் காலங்களில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த அம்மாசி தான் அவளுக்கு துணையாளாகவந்தான். முதலாளி மார்கள் கூப்பிடும் இடத்துக்கு கூட்டிக்கொண்டு போவதற்கும். திரும்பக்கூப்பிட்டு வருவதற்கும் அவனுக்கு சரக்கும் சம்பளமும் உண்டு. அவள் வைக்காத விலை, அவள் கேட்காத பணம், இரண்டுமே மறை முகமாக அவனுக்குச் சாதகமாகியது. சச்சிக்கோ அது குறித்து  ஏதும் தெரியாது. ஆனால்  முதல் முதலில் அவளுக்காக ஒரு ஆண் மெனக்கிடுவதை, சாப்பாடு வாங்கித்தருவதை, டிக்கட் போட்டு கூட்டிப்போவதை. பயணங் களில் அருகிருந்து, தூங்கும் நேரங்களில் தோள் தருவதை ஒரு வித்தியாசமாக உணர்ந்தாள்.  காலம் கடந்து , காமம் கடந்து ஒரு சிநேகம் முளைக்கத் தொடங்கியது அப்போது தான் எல்லோருக்கும் வருகிற குடும்ப ஆசை அவளுக்கும் வந்து வந்து போனது. ஆனால் அம்மாசிக்கோ கல்யாணம் ஆகி வயசுக்கு வருகிற பருவத்தில் பெண்ணிருந்தது.

இந்தக்காலத்தில் பல முறை கருவேந்திக்கொண்டாள்,  அதைக்கலைக்க நாட்டு மருத்துவச்சிகளைத் தேடிப் போனாள். அப்போது மாரிக்கிழவிதான் அவளோடு கூட இருப்பாள்.எப்போதுமே துணையாக இருந்தவள் காசில்லாத நேரங்களில் ஒரு டீ வாங்கி பகிர்ந்து சாப்பிடுகிற ஒரே ஜீவன் அவளுக்கு மாரிக்கிழவிதான்.சில நேரம்  அம்மாசி வந்து செலவுக்கு பணம் தந்துவிட்டுப் போவான். அதிக கருக்கலைப்பினால் அதிக உதிரம் விரயமாகியது. அதிக உதிர விரயத்தால்  உடலில் பெலமில்லாமல் போனது. சாப்படும் சாராயமும், அம்மாசியின் தயவால் கிடைத்தது. ஒரு குற்ற வழக்கில் மூன்றுமாதம் சிறைக்குப்போன அம்மாசியில்லாத அந்த நாட்களில் தொழிலும் மந்தப்பட்டுப்போனது. அறைவயிற்றுக்கஞ்சிக்கு கூட அவதிப்பட்டாள். அப்போது நகரில் இவளுக்கு போட்டியாக இன்னும் சில பேர் அறிமுகமானர்கள்.

வேற்று ஊர்களில் இருந்து தருவிக்கப்பட்ட அவர்கள் தொழில் நிமித்தமாக இரவு வந்து  தங்கி பகல் திரும்புகிறவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு தனது போட்டிக்காரியைப் பார்க்க விடிய விடிய கிருஷ்ணன் கோயில் பஸ் நிறுத்தத்தில் காத்துக்கிடந்தாள். வாடிக்கையாகச் சவாரி செய்கிற ஆட்டோ  ஓட்டுநரிடம் அவள் எப்படியிருப்பாள் என்று கேட்டாள். நல்ல ஒசரம் நல்ல நெறம் என்று சொன்னதும் வதங்கிப்போனாள். மாரிக்கிழவியிடம் சொல்லிச் சொல்லி புளம்பிக்கொண்டேயிருந்தாள்.   வயித்துப்பாட்டுக்கு வேறு எதாவது செய்யென்று சொல்லிவிட்டு மாரிக்கிழவியும் செத்துப்போனாள். ''ஆமா அப்பனு ஆத்தாளு ரெண்டு தேட்டரு, ஒரு சாராயக்கடை, நாலு தீப்பெட்டியாபீசு உட்டுட்டு செத்துப்போனாகளாக்கு இந்தத்தொழில விட்டுட்டு வேற தொழில் பாக்க ?  திருப்பியு அந்தப் பீயள்ற பொழப்புத்தான  த்தூதூ....'' என்று காரித்துப்பி விட்டு விபச்சாரத்துக்குக் கிளம்பினாள்.

மிக உறுதியாக இனி சம்பாதிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினாள். ஆனால் அவளிடம் இருந்த ஒரே மூலதனமான அந்த இளமை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு கடந்து போய்க்கொண்டிருந்தது.  கிராக்கியில்லாத எந்தப்பொருளும் லாபம் சம்பாதிக்காது என்பதே வியாபார விதி. அந்த விதியின் பிரகாரம் அவள் மீண்டும் வயிற்றுப்பிழைப்புக்காக மட்டுமே சம்பாதிக்க முடிந்தது.  சீனி நாய்க்கர் புரோட்டாக்கடையில் காசைக்காட்டித்தான் சாப்பிட முடிந்தது. சில நாட்கள் அதுவும் இல்லாது பட்டினியாய்க் கழிந்தது. அம்மாசி வரும் வரை நாட்கள் நகருவது வேலிப்புதருக்குள் நடக்கிற மாதிரியே இருந்தது. அம்மாசி வந்தபிறகு மூன்று நாள் வீட்டில் சண்டை நாடந்ததாகவும் அங்கு அவனை வீட்டுக்குள் யாரும் சேர்க்க வில்லையென்றும்  சொல்லி  இவளிடம் வந்தான். ரெண்டு பேரும் சென்னைக்கு ரயிலேறிப்போனார்கள் அங்கு சரக்கு செல்லுபடியாகாமல், திரும்பி வந்து திருச்சியில் ஒரு புரோக்கர் மூலம் குறி சொல்லப் போவதாக விசா எடுத்து சிங்கப்பூர் அணுப்பி வைக்கப்பட்டாள்.

மூன்று மாதம் கழித்து கைநிறையப் பணத்தோடும் கொஞ்சம் உடல் தேறி மினு மினுப்பாகத் திரும்பி வந்தாள். சாத்தூரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு வாடகை வீடெடுத்து அங்கேயே அம்மாசியும் அவளும் வாழ்ந்தார்கள். பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட சேதியைச்சொல்லும் போது தான் அம்மாசி தன்னை அம்மனமாகக் காட்டினான்.  தனக்கு பிள்ளை பெறுவதற்கும் ரேசன் கார்டில் பேர் போடவும் ஊரில் ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கிறது, நீ அதற்கு கிடையாது என்று சொல்லி விட்டான். அதற்குப்பிறகு  வாரிசு என்கிற வார்த்தை அவளை நிறையச் சிந்திக்க வைத்தது. ஆண்கள் சேத்தில் மிதித்து ஆத்தில் கால் கழுவுகிறவர்கள். அப்போதும் கூட மிதி படுகிற கேவலப் பொருளாகப் பெண்ணே இருக்கிறாள். இன்னுமொரு சேறு வேண்டாம் எனத்தீர்மானித்து ஒரு நாள் நடு இரவில் காட்டு வழியே இலக்கில்லாமல் நடந்துகொண்டிருந்தாள்  நடக்க எசக்கில்லாமல் கால்வலித்து இருக்கங்குடி மரியம்மாளே நீயே கதி என்று போய் கோயிலில் படுத்துவிட்டாள். 

மாசக்கணக்கில் அங்கேயே இருந்து கோயில் சோறு சாப்பிட்டு காலம் கழித்தாள். வெள்ளி செவ்வாய் விரத மிருந்து குறிசொல்ல ஆரம்பித்து விட்டாள். ஜனங்களின் முகங்களில் தெரிகிற சஞ்சலம் பார்த்து கொஞ்சம் போதாத காலம் என்றும், சந்தோசத்தைப்பார்த்து ஏறுகாலம் என்றும் அவளுக்குத் தெரிந்த வானசாஸ்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது தான் மனிதர்களின் முகத்தையும் கையையும் பார்க்கிறாள். இப்பொழுது தான் குடும்பம், உறவு விரிசல் பணம், வறுமை, ஆதிக்கம், சாதி எல்லாம் மெல்ல மெல்ல அறிமுகமாகிறது. அவளைக்கடந்து போகிற பத்து வயசுக்குழந்தை களைக் கூப்பிட்டுப் பேசவேண்டும் போல் சில நேரங்களில் ஆசை வருகிறது. பழைய இரவுகளில் பழக்கமான அந்த இளகிய ஆண் முகங்கள், இப்போதைய பகலில் மிக இறுக்கமாகத் தெரிகிறது. கோபம் தலைக்கேறி வாயில் கெட்டவார்த்தைகள் வருகிறது. ஆத்தா மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அடங்கிப்போகிறாள். முதலில் கொஞ்ச நாளாய்த் தூசன வார்த்தைகள் இல்லாத மொழி பழகு வதற்கு நிறையச் சங்கடப்பட்டாள். நெற்றி நிறைய திருநீரு பூசிக்கொண்ட முதல் நாள் திருநீரு ம்பக் கணமாகத் தெரிந்தது பழைய ரணங்களின் கணங்களை விட மிக மிக லேசாகிப்போனது. இப்போதும் கூட அவலைக்கடந்து போகிறவர்கள் பார்வை மையம் அவள் பக்கம் திரும்பிப் பின் கடந்து போகிறது.

அவளது வீடு எது, அவளது  குடும்பம் எது அவளது கனவு எது, எதிர்காலம் எது என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் ஜனங்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகிற இடங்கலுக்குள் தன்னை இருத்திக்கொள்ள நடந்து கொண்டிருக்கிறாள். வெள்ளி செவ்வாய்க்கு கருப்பசாமி வந்து அவள் மேலிறங்குவதாகவும், அந்தக்கருப்பசாமி யின் வார்த்தைகள் தான் அவளுக்கு அருள் வாக்கு எனவும் உலகத்துக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். தானொரு மானுடப்பிறவியல்ல சாதாரண மனுஷியல்ல என்னும் பிம்பம் ஒன்றை தானே உருவாக்கி அதை அவளே சித்திரமாக்குகிறாள். தொலைந்து போன பால்யகாலம், தொலைந்து போன இளமை, காதல்  எல்லா வற்றுக்கும்  அவள் மேல் விழுந்த பாறாங்கல் போன்ற சமூகம் என்பது அறியாமல் கருப்பசாமி என்னும் கற்பனை யோடு வாழ்கிறாள்.  கடந்த காலம் மேலெழும்பி வரும்போதெல்லாம் பழைய நினைவுகள் மேலெழும்புகிற நேரமெல்லாம் கிளம்பி சாத்தூர் நகரத்துக்கு வருவதும்,  ப்ரியா ஸ்டுடியோவில் உட்கார்ந்து பேசிச்சிரிப்பதும். அப்படியே எழுந்து பேருந்து நிலையத்துக்கு அவசர நடை நடப்பதுவும் அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.

( நன்றி. புதுவிசை ஏப்- 2007 ) 
சிறுகதை

2 comments:

நிலாமகள் said...

ஆண்கள் சேத்தில் மிதித்து ஆத்தில் கால் கழுவுகிறவர்கள். அப்போதும் கூட மிதி படுகிற கேவலப் பொருளாகப் பெண்ணே இருக்கிறாள்.//

அவளின் வயது மிஞ்சி மிஞ்சிப்போனால் இருபத்து எட்டிருக் கலாம். ஆனால் நூறு வயது வாழ்ந்து கடந்து விட்ட கால முதிர்ச்சி அவளின் முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றியிருக்கும் உலகத்தை அலட்சியப் படுத்துகிற அந்த பார்வையில் ஆயிரம் ஞானிகளின் ஒளி குடிகொண்டிருக்கிறது//

ரெண்டு வேளைச்சோறு சாப்பிடு வதற்கு ஊரின் ஒட்டு மொத்த அழுக்கைச் சரிசெய்ய வேண்டும். //

காமராஜர் மாவட்டத்து பெண்களின் சந்தோசம் துக்கம் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் கொட்டிக் குவிக்கப்பட்ட இடங்களாக தீப்பெட்டி ஆபீசுகள் மாறிக்கொண்டிருந்த காலம் அது.//

க‌ருப்ப‌சாமியாவ‌து நிலைத்திருக்க‌ட்டும் ச‌ச்சியிட‌ம்.

பத்மா said...

மருளாடி கதைக்கு ஒரு தனி பதிவே போட வேண்டும் ..தான் தொலைத்த சுயத்தை ,அவளின் கனவை,அவளின் அழிந்த அபிலாஷைகளை வேறொன்றின் மேல் பொருத்தி வாழும் ஜீவன் ...மருளாடி மட்டுமல்ல பல பெண்களின் நிலைமையும் இது தான் ...தன் மீது கவனத்தை திருப்ப ஏதேதோ செய்து கொண்டிருக்கும் பாவப்ப பட்ட ஜீவன்கள் பல ,,,இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர்களின் தவிப்பை உணர்ந்து மதிக்க யாருமே கிடையாது ..போலியாய் பிறந்து போலியாய் இறக்கும் ஜீவன்கள் இவர்கள் ..
இதை உணர்வு பூர்வமாக வடித்த காமராஜ் சார் அவர்களுக்கு ஒரு பெரிய சபாஷ்