6.9.09

மென்மையைத் திரட்டி முட்களாக்கும் சாதுர்யம் - நாகதாளி - ( எஸ்.தேன்மொழியின் சிறுகதை )








படிக்கிற போது ஒரு அறுபது எழுபது பக்கங்களில் எதாவது ஒரு சொல் நம்மை நிறுத்தி விடுகிறது. வெண் பொங்கலுக்குள் தட்டுப்படும் மிளகு போலவும், பாயசத்தில் தட்டுப்படும் முந்திரி போலவும் அவை ஆர்வம் கூட்டும். அந்தப் புள்ளியிலிருந்து அந்த வார்த்தை குறித்து தேடக் கட்டளையிடுகிறது மனசு. இப்படித்தான் விவேகானந்தரைப் படிக்கும் போது "ரத்தபீஜன்கள்'' என்னும் சொல் என்னை அலைக்கழித்தது. வெட்டுப் பட்டுத் தெறிக்கும் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் லட்சக்கணக்கான பீஜன்கள் தோன்றுவார்களாம். அது என்னை "பீனிக்ஸ்" பறவையின் சாம்பலோடு எடைபோடக் கூட்டிசென்றது. சென்ற தமுஎச விருதுநகர் மாவட்ட மாநாட்டில் எழுத்தாளர் கோணங்கி "தாதர இலைகள்" பற்றிச் சொன்னார். கடுமையான பஞ்ச காலங்களில் அந்த இலையைக் காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் பலநாள் பசிதாங்குமெனச் சொன்னார் அதுவே வந்தனா சிவாவின் " உயிரோடு உலாவ" எனும் நூலில் ஒரு வரிச்செய்தியாய் வந்துபோனது. "காலகந்தி" என்ற பதிவில் மாதவராஜும் கூட இலைகளற்ற மரங்கள் கால்நடைகளோடு மனிதப்பசியும் தீர்த்த கவிதை காட்டினான்.



இப்படி ஒரு தேடலை உருவாக்கியது எஸ்.தேன்மொழியின் சிறுகதை நாகதாளி. செப்டம்பர் 09 தீராநதியில் வெளிவந்துள்ள இக்கதை. யுகாந்திரமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களின் சொல்லை எடுத்து வெளியில் கொட்டுகிறது. கதை ஆரம்பிக்கிற போது இரவு குறித்த விகசிப்பு " // இரவுகள் என்பது பொழுதுகள்கூடடையும் அடர்ந்த காடு, இரவுக்குப்பகை நிலவு, தயக்கம் குடித்துவெட்கம் தொலைத்த உயிர்களின் சுதந்திர உலாக்காலம், தன்னை ஊற்றி நிரப்பி உயிரை உறங்க வைக்கும் உலகின் தாலாட்டு. சப்தங்களாலும் சலனங்களாலும் கற்பழிக்கப்பட முடியாதது இரவு //



இப்படியே ஒரு நீள் கவிதையாய் விரிகிறது. இவ்வளவு பீடிகை எதற்கு என மனது கேட்கிற கேள்விக்கு ஒரு அடத்தியான பதிலாக அவள் மண வாழ்வு விவரிக்கப்படுகிறது. அந்த விவரணைக்கு இடையில் ஒரு சொல்லாய் வந்துபோகும் " ராட்சஷி சுரஸா " யார் எனத்தேடச் சொல்லுகிறது சிறுகதை. மஹாபாரதக்கதையை வழிமறிக்கும் அவளுக்கு வெட்ட வெட்ட துளிர்க்கிற வாழ்வு வரம் இருந்ததாம்.



அதே போல நாதியற்றுக் கொட்டாரத்தில் நீண்டு கிடக்கும் கற்றாழை பற்றிய தெளிவும் கிடைக்கிறது. நீரற்ற பாலைவாழ்வின் துணிச்சலுடன் முளைக்கும், இலையின் மென்மையைத் திரட்டி முட்களாக்கும் சாதுர்யம் அதற்கு வசப்பட்டிருந்தது. என்பதான அறிமுகம் இயற்கையின் மீதும் பெண்மையின் மீதும் கர்வமேற்றி வைக்கிற வரிகள். நாட்பட்ட கற்குவியலின் அடியில் இருந்து வரும் விநோதங்களாய் வந்து ஆண் மீது சுமத்துகிற குற்றச்சாட்டு. தர்க்கங்களை செட்டையுடைத்து செயலிழக்க வைத்து ஒப்புக் கொள்ளச் செய்யும் குற்றப்பத்திரிகை. ஏற்றுக்கொள்வதே சிலாக்கியமும் இலக்கியமும் ஆகும்.



பாண்டஸிகளுக்குள்ளும், புராணங்களுக்குள்ளும், சாகசங்களுக்குள்ளும் புதைத்து வைக்கப்பட்டிருப்பது எது. அசாத்தியங்களைச் சாத்தியமாகும் துணிச்சல் தீ. அதை அணைத்துவிட்டு இல்லாதவற்றைத்தேடும் திசை திருப்புதலுக்கு எதிர் நிற்கவேண்டும் இலக்கிய விசை.

14 comments:

அன்புடன் அருணா said...

எழுதப்படும் விமரிசனங்களனைத்தும் உடனே படிக்கத் தூண்டுகிறது புத்தகத்தை...கதையை...அந்த வித்தை எனக்குப் பிடித்திருக்கிறது.

ஈரோடு கதிர் said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றி

காமராஜ் said...

நன்றி அருணாமேடம்.

காமராஜ் said...

வாருங்கள் கதிர், வணக்கம்.

காமராஜ் said...

என் வலைப்பக்கத்தில் இணைந்த பாலாவுக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா,... நல்ல அறிமுகம் படிக்க தூண்ட செய்கின்றது பாராட்டுகள்.. முடிந்தால் என் பக்கம் வந்துவிட்டு செல்லுங்கள்.....

thiyaa said...

படிக்கத் தூண்டும் நல்ல அறிமுகம்

thiyaa said...

படிக்கத் தூண்டும் நல்ல அறிமுகம்

Kumky said...

அறிமுகத்திற்க்கு நன்றி காமராஜ்.
அவசியம் படிக்கவேண்டுமென தோன்றுகிறது.

காமராஜ் said...

நன்றி என் நண்பா, ஞானசேகரன் படித்தேன்.
பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

காமராஜ் said...

வாருங்கள் தியா, நன்றி.

காமராஜ் said...

வணக்கம் கும்க்கி, கருத்துக்கு நன்றி.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி