21.9.09

விளையாட்டுக்காக மட்டும் அல்ல ( சமரசம் உலாவாத இன்னொரு இடம் )








அமைதியாக அலைதாலாட்டும் கடல் சிலநேரம் எழுந்து வந்து நிலம் அழிக்கிற காட்சிபோல இரண்டு விளையாட்டு வீரர்கள்உலகத்தின் அமைதியைக் குலைத்தனர். 1968 ஆம் ஆண்டு மெக்சிகோ வில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. வழக்கமாக ஓட்டப்பந்தய வீரர்கள் ஓடுகளத்தில் சூறாவளியைக்கிளப்பி வெற்றி மேடையில் பூங்கொத்துகளையும், தங்கப்பதக்கங்களையும் குவிப்பார்கள். மாறாக டாமி ஸ்மித்தும் கார்லோசும் ஓடுகளத்தில் மட்டுமல்ல விழமேடையிலும், சூறாவளியை உண்டாக்கினார்கள்.



19.83 நிமிடத்தில் இலக்கை எட்டி உலக சாதனை படைத்த ஸ்மித், 20.07 நிமிடத்தில் இரண்டாவதாக வந்த ஆஸ்திரேலியாவின் பீட்டர் நார்மன். 20.10 நிமிடத்தில் இலக்கை அடைந்த ஜான் கார்லோஸ் மூவரும் மேடையில் ஏறும்போது பார்வையாளர்கள் அதிர்ச்சியானார்கள். அமெரிக்க வீரர்கள் இருவரும் தங்கள் பாதனிகளைக் கழற்றிவிட்டு வெறுங்காளோடு போடியத்தில் எறினார்கள். கருப்புத்துணியை கழுத்துப்பட்டையாகச் சுற்றிக்கொண்டார்கள். தலை தாழ்த்தி வீரவணக்கம் ( power salute ) செய்த பின்னர் விருதுகளைப் பெற்றுக்கொண்டார்கள்.



முன்னது கருப்பின மக்களின் வருமையைக் குறிப்பதாகவும், பின்னது கருப்பின மக்களின் பெருமையைக் குறிப்பதாகவும் பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். எங்கெல்லாம் கருப்பின மக்கள் சிறுமைப்படுத்தப் படுகிறார்களோ, எங்கெல்லாம் கொலை செய்யப்படுகிறார்களோ, எங்கெல்லாம் தூக்கிலிடப்பட்டு பிரார்த்தனையில்லாமல் புதைக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக இந்த விருதை சமர்ப்பிக்கிறோம் என்று பேட்டியளித்தனர்.



1968 அக்டோபர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தச் செய்தி படிக்கப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டின் ஆரவாரங்களின் மேல் கல்லெறிந்த இந்த நிகழ்வு 113 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு பேரதிர்வை ஏர்படுத்தியது மட்டுமல்லாமல் கருப்பின இழிவுகளின் பால் உலகைத் திருப்பியது. நான் ஜெயித்தால் கருப்பு அமெரிக்கனல்ல, நான் வெறும் அமெரிக்கனாவேன். தோற்றுப்போகிற பட்சத்தில் நான் ஒரு நீக்ரோவாக மட்டுமே அடையாளப்படுத்தப்படுவேன். நாங்கள் கருப்பர்கள் எங்கள் நிறமே எமது பெருமை என பிரகடனப்படுத்தினார்கள்.



அகில உலக ஒலிம்பிக் குழுவின் தலைவர் அவெரி ப்ருண்டேஜ் அந்த இருவரையும் அமெரிக்க அத்லெடிக் குழுவிலிருந்துநீக்கப்பரிந்துறைத்தார். அமெரிக்கா மறுத்தது. மொத்த அமெரிக்க ஓட்டப்பந்தய நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார். அந்த மிரட்டலுக்கு அடிபணிந்த அமெரிக்கா இரண்டு கருப்பின வீரர்களையும் அந்த நிமிடத்திலிருந்து ஒலிம்பிக் கூடாரத்தை விட்டு வெளியேற்றியது. இதே போல 1936 ஆம் ஆண்டு நடந்த பெர்லின் ஒலிம்பிக்கில் நாஜி வணக்கம் செலுத்தப்பட்டபோது வாயை மூடிக்கொண்டிருந்த ஆவெரி ப்ருண்ட்டேஜை மனிதாபிமனமுள்ள பத்திரைகையாளர்கள் எலோரும் விமர்சனம் செய்தார்கள்.



அவர்கள் குவித்த எண்ணிக்கையில் அடங்காத பதக்கங்களின் பெருமை, அவர்களை இன வெறி எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்த உதவியது என 2008 ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பை உண்டாக்கிய இந்த சம்பவத்தை டைம் பத்திரிகை ஒலிம்பிக் இலச்சினையின் துரிதம், உயரம், வலிமை எனும் மூன்று வட்டங்களுக்கான அர்த்தத்தை கோபம், அசுத்தம், அருவருப்பு என்று கருத்துப்படம் வெளியிட்டுத் தீர்த்துக்கொண்டது.



ஓபெர்லின் கல்லூரியில் விரிவுறையாளராகவும், பின்னர் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்ட டாமி ஸ்மித் 1999 ஆண்டு நூற்றாண்டின் விலையாட்டு வீரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இப்போது ஒரு மேடைப்பேச்சாளாராக மாறி விளையாட்டு அரசியலையும், அரசியல் விளையாட்டையும் விளாசுகிறார். அதே போல கார்லோசும் ஒரு உயர்கலாசாலையில்ஆசிரியராக பணியாற்றுகிறார். சான்ஜோஸ் பல்கலைக்கழகம் தங்கள் பழைய்ய மாணவர்களான அவர்களிருவருக்கும்20 அடி சிலை நிறுவிக் கௌரவித்திருக்கிறது.



இந்தியத்துணைக் கண்டத்தில் விளையாட்டுத்துறையில் ஒதுக்கப்பட்டவர்களின் பங்கு என்ன ?



1958 ஆம் ஆண்டு கமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற மில்கா சிங், சொல்லுவது போல அதுவரை ஓட்டப்பந்தயங்களுக்கான பாதணிகள் இந்தியாவில் தயார்செய்யப்படவில்லை, ட்ராக் சூட் என்பது இந்தியர்களுக்கு என்னவென்றே தெரியாது. 1960 ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் மயிரிலை வித்தியாசத்தில் தங்கம் இழந்த மில்கா சிங்.பின்னாட்களில் சோத்துக்கு லாட்டரியடித்ததாக தகவல்கள் சொல்லுகின்றன.




1990 களில் ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் அபார ஆட்டம் ஆடி நானூறு ஓட்டங்கள் குவித்த ஜோடி சச்சினும் வினோத்காம்ளியும். சச்சினுக்குப்பின் ஒரு வருட இடைவெளியில் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார் காம்ப்ளி. அதுவும் சச்சினின் உயர் அழுத்த சிபாரிசின் பேரில்தான் என்று வய்வழிச்செய்திகள் புழங்குகிறது. ஆனாலும் அவர் தாக்குப்பிடிக்க முடிந்தது வெறும் ஒன்பது வருடங்கள் தான். தனது 24 வது வயதில் 2000 ல் பத்திரிகையாளர்களை அழைத்து போகிறேன் என்று கிளம்பிவிட்டார்.



சமீபத்தில் புதுக்கோட்டை சாந்தியைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல, அதை விவரிக்க இயலாது.



கல்வியில் வேலை வாய்ப்பில் தகுதி, திறமை நிர்ணயிக்கப்படுகிறது அதற்கான நுட்பமான தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை எதுவும் உண்மையில்லை என்பதை உலகம் சிறிது சிறிதாக உணர்கிறது. அதே தகுதி திறமை விளையாட்டுத்துறையில் தேவையற்றதாக கருதப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் பற்றி சிறப்புக்கட்டுரை வெளியிட்ட இந்தியா டுடே. பாகிஸ்தான் வீரகள் தடித்தடியாய் இருப்பதாகவும் நமது வீரர்கள் பக்கத்து வீட்டுக்காரரைப்போல, ஒரு குமாஸ்தாவைப்போல, வங்கி ஊழியரைப்போல ஸ்மார்ட்டாக இருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொண்டது.விளையாட்டுகளில் உழைக்கிற ஜனங்கள், விவசாயிகள், மலைமக்கள் போன்றவர்களுக்கு பயிற்சி அளித்தால் இந்தியா அந்தத்துறையில் அபரிமிதமாக வளரும் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னது வெறும் வார்த்தையில்லை.



இந்த நூற்றுப்பத்துக்கோடி இந்தியர்களில் உடல்வலிமையும், ஓட்டத்திறனும், நுணுக்கமும் அமையப்பெற்ற பதினோரு பேர் இல்லாமலா போய்விட்டார்கள். கிரிக்கெட் போர்டை சரிக்கட்டுகிற வித்தை தெரிந்தவர்கள் அல்லது அதை நெருங்கமுடிந்தவர்களின் கூடரமாக மாறிவிட்டது கோடிஸ்வரவிளையாட்டு. சச்சின் அவுட்டானவுடன் ஒட்டுமொத்த இந்தியாவே சோர்ந்து போவதை உலகம் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஐம்பது ரன் அடித்த இந்திய வீரர்கள் கேசுகேசுன்னு இளைக்கிற சத்தம் அண்டமெல்லாம் கேட்கிறது. தப்பித்தவறி நூறு ஓட்டம் எடுக்கிறவர்களை வளைத்துப்போட பல்பொடி, பவுடர், பிளேட்டுக்கம்பெனிகள் தயாராக இருக்கிறது. இப்போது சச்சின் உல்கக் கோடிஸ்வரர்களின் பட்டியலில் ஒருவர். இந்தியபெரும் பணக்காரர் இருபதுபேரில் ஒருவர்.



சுற்றிச்சாக்கடை கிடந்தால் நடுவில் கிடக்கிற பொருள்மீது சந்தனமா மணக்கும். ?




6 comments:

க.பாலாசி said...

அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட பதிவு...ஆயினும் இறுதியில் ஒரு விளையாட்டை மட்டுமே மையப்படுத்தியது ஏற்புடையதாக இல்லை. (பிரபலமான விளையாட்டாக தாங்கள் இதை கருதியிருப்பினும்)

//சச்சின் அவுட்டானவுடன் ஒட்டுமொத்த இந்தியாவே சோர்ந்து போவதை உலகம் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.//

இந்த வரிகளை 2000 வது ஆண்டில் குறிப்பிட்டிருந்தால் மிகச்சரியாக பொருந்தியிருக்கும். இன்றைய நிலையில் இந்திய கிரிக்கெட் அணி சச்சின் என்ற கௌரவ ஆட்டக்காரரை நம்பி இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து...

velji said...

உலகின் ஒட்டு மொத்த வரலாறையும் கவனிக்கும் பொழுது,ஆண்டான், அடிமை காலம் முடிந்து தனி மனித சுதந்திரத்தை நோக்கி வேகமாக போவது போல் தோன்றியது.உலகப் பொருளதாரம் நடைமுறைக்கு வந்த பின் நாடுகள் யாவும் சந்தைகளாக பார்க்கப்படுவதால் ஈராக் போரும் பின் இலங்கைக் கொடுமையும் நிகழ்ந்தன.உலக நாடுகள் இந்திய சந்தையை நினைத்து மெளனம் காத்தன. நாமும் கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்தோம்!1968ல் மெக்சிகோவில் ஓடிய அந்த ஆண்மகன்கள் வாழ்க!

நல்ல பதிவு!

காமராஜ் said...

வாருங்கள் பாலாஜி வணக்கம்.
மிக நேர்மையோடும் அன்போடும் வந்திருக்கிறது உங்கள் பின்னூட்டம்.
நன்றி.
உண்மையில் பழைய்ய நாட்களை வைத்தே எழுதினேன்.
இப்போதைய கிரிக்கெட் குறித்து சொன்ன தகவலை ஏற்கிறேன்.
என்றாலும் இரண்டு நாட்களுக்கு முன் சாய்னா நோவல் சொன்னதும்,
70 களில் மில்காசிங் சொன்னதும் ஒரே மாதிரியான விமர்சனம்.
மற்ற விளையாட்டுக்கள் கவனிப்பாரற்றுப் போனது பொய்யில்லை.
அந்தக்காலத்தில் இந்தியர்கள் ஹாக்கி மட்டையைத்
தூக்கினால் உலகம் நடுங்குமாம்.
இப்போது நிலைமை தலை கீழ்.

காமராஜ் said...

வேல்ஜி.வணக்கம்.
அசத்தலான பின்னூட்டம்.
ஆம்,
இன்றும்கூட எதிர்ப்பின் அடையாளமாக முஷ்டி உயர்த்தும் போது,
நமது கைகளின் நிழல் கருப்பாகவே விழுகிறது.
இது இந்த உலகிலுள்ள தன்மானமுள்ளவர்களுக்கு
கருப்பின மக்கள் தந்த கொடை.

யோகராஜ் பக்கங்கள் said...

திரு நண்பர் காமராஜ் அவர்களுக்கு,

வணக்கம்.
தங்களின் பதிலிடுகைகள் என்னை உற்சாகப் படுத்துகின்றன.

ஈழம் – என்ன செய்ய வேண்டும்? என்ற தலைப்பிலான என்னுடைய புதிய பதிவை வாசியுங்கள். அதில் நான் தங்களிடம் கேட்டிருக்கும் பணி தங்களுக்குச் சம்மதம் எனில் செயல் படுங்கள்.

மிக்க நன்றி.

மிகுந்த நேசத்துடன்
யோகராஜ் பாபு
http://yogarajbabu.blogspot.com/

அன்புடன் அருணா said...

/இந்த நூற்றுப்பத்துக்கோடி இந்தியர்களில் உடல்வலிமையும், ஓட்டத்திறனும், நுணுக்கமும் அமையப்பெற்ற பதினோரு பேர் இல்லாமலா போய்விட்டார்கள்./
வித்தை வசமாகவில்லையே...என்ன செய்ய???