8.5.10

கைம்மாறு கருதாதது அன்பும், நட்பும்

இன்னும் நினைக்கிற போதெல்லாம் அந்தப்பயணம் ஒரு கனவுபோலே கூடவருகிறது.

எத்தனையோமுறை தோற்றுப்போவதும்.'அப்பிடியா சார் தூங்றாங்க'என்று சொல்லி காம்பவுண்ட் கேட்டிலே திருப்பி அனுப்புகிற பாந்தமும் உலவுகிற இந்த உலகில்.முகந்தெரியாத நபர்கள் அன்புவைப்பதுவும், உபசரிப்பதுமானவை இந்தப்பயணங்கள் ரொம்ப இனிப்பான பொக்கிஷங்கள்.

பெங்களூரில் நேர்முகத்தேர்வு புகைவண்டி இலவச நுழைவுச் சீட்டை முன்பதிவுசெய்ய அப்போது சாத்தூர் நிலையத்துக்குப் போனேன்.மதுரை தாண்டிப்போகிற முதல் தூரப்பயணம் அது.அப்போது நிலைய மேலாளராக இருந்த உயர்திரு மாடசாமி தனது அலுவலக நடைமுறைகளை புறந்தள்ளிவிட்டு என்னை நெருங்கிவந்து தோளில் கைபோட்டார்.படிக்கிற போதே ஒரு மத்திய அரசு ஊழியம் என்னைத்தேடி வந்ததைக்காட்டிலும் அவரின் பரிவு என்னைப்பனியாய் உருகவைத்தது.'பெங்களூர் போயிருக்கியா தம்பி, இல்ல சார்,அங்க யார்னாச்சு தெரிஞ்சவங்க,இல்ல சார், எங்க தங்குவ,தெர்ல சார். சரி இந்தா இந்திரா நகர்ல என் தம்பி வீடிருக்கு அங்க போய் தங்கிக்க,நான் ட் ரங்க் கால் போட்டுச்சொல்லிர்றன்'. அப்போது குகனோடு  ஐவரானோம்.

பெங்களூர் கண்ட்டோ ன்மெண்ட் நிலையத்தில் இறங்கி,இஞ்ச் இஞ்சாக விசாரித்து வீடு சேரும்போது ஹச் ஏ எல்
இஞ்சினியரின் கதவு என்னை இருகரம் நீட்டி ஏந்திக்கொண்டது.தூக்கம் வராத அந்த இரவில் சொர்க்கம் என்பதன் நடைமுறை அர்த்தம் விளங்கிக்கொண்டேன்.மறுநாள் காலை சாப்பிட்ட பூரிக்கிழங்கின் ருசி இந்த இருபது வருடந்தாண்டியும் நாக்கிலும் நினைவிலும் நின்றுபோய்விட்டது.அதன் பின்னர் இரண்டு மூன்று தரம் மரியாதை நிமித்தம் ஐயா மாடசாமியைப்பார்க்க நேர்ந்தது.அவரின் உருவம் கூட அரிச்சலாகத்தான் நிழலாடுகிறது.அவரின் பிரதியுபகாரமற்ற அன்பு ஒரு பெரிய கான்வாஸ் ஓவியமாகி என்னோடு கூட வருகிறது.அவரை தென்னக ரயில்வே வேறு இடத்துக்கு அழைத்துப்போய்விட்டது.

அதேபோலொரு பொக்கிஷம் ஜெய்ப்பூர் பயணம்.தோழர் காஷ்யபன். மாதுவுக்கு கொடுத்த அழைப்பு விலாசம் வழுக்கி எனது கையில் கிடைத்தது.எண்பத்தேழில் பார்த்த ஒரு இலக்கிய வாத்தியார்.எண்பதுகளில் எனது சிறுகதையோடு கூடவந்த அவரது படைப்பு, தமுஎச, எல்லாம் புத்தம் புதிய காப்பியாகியது.ஒரு கைப்பை நிறைய்ய அன்போடு நாக்பூர் நிலையத்தில் காத்திருந்தார்.எழுபது வயது தாண்டிய ஒரு ரிடயர்டு எல் ஐ சி ஊழியர் பலமைல் பயணித்து கைத்தடி ஊன்றிக்கொண்டு ,ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.தனது ரத்த சொந்தங்களுக்குக்கூட இவ்வளவு சிரத்தையெடுத்திருப்பாரா என்பது ஒரு இடைக்கேள்வி. ஒருவேளை தனது இல்லத்துணைகூட எதுக்குங்க இவ்வளவு ரிஸ்க் என்று  கேட்டிருக்கலாம்.அதையெல்லாம் உதறிவிட்டு வந்து காத்திருத்தலுக்குப்
பின்னாள் எழுத்தின் மீதும், மாதுவின் மீதும், தமுஎச மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கை ஒளிந்திருந்தது.

எங்கள் ஆசிரியப் பெருந்தகை அருணா.
நான் வலையெழுத வந்த துவக்ககாலத்தில் எல்லைகள் தாண்டி பயணம் செய்த போது இடர்ப்பட்ட ரெண்டு நட்புத் தளங்கள் அன்புடன் அருணா,தாரணிப்ரியா.இன்னும் கூட வருகிற தோழர்கள் அவர்கள்.ஒரு பின்னூட்டத்தில் நானும் மாதுவும் பாலை மாநிலம் என்று சொன்னதை நினைவுபடுத்தி எங்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் பிரின்ஸ்பல் அருணா.சாத்தூரிலிருந்து கிளம்பிய நிமிடத்திலிருந்து நிறுத்தம் தவறாமல் குசலம் விசாரித்தார். ஜெய்ப்பூரில் என்னென்ன இடம் பார்க்கவேண்டும் என்கிற டிப்ஸ் கொடுத்தார்.அன்று மாலையே எங்களை வீட்டுக்கு அழைத்திருந்தார்.

நான் தம்பி அருண்,மாப்ள அண்டோ ,தோழன் சங்கர் ஆகிய நான்குபேரும் போனோம்.மார்ச் மாத ஜெய்ப்பூர் குளிரில் அந்த ஆட்டோ வில் பயணமான இடங்கள் அப்படியே நினைவிருக்கிறது.நாங்கள் நால்வரும் சுத்தத்தமிழ்,ஆட்டோ க்காரர் சுத்த ஹிந்தி.ஒவ்வொரு லாண்ட் மார்க்கிலும் நிறுத்தி நான் போன்பண்ணி பேசி அப்றம் அருணா ஆட்டோ க்காரரிடம் பேசி பிரதான சாலையைக்கடந்து இரண்டு தெருக்கள் தேடி,திரும்பவந்து அவரது வீட்டுக்கு பின்னாலுள்ள தெருவில் நின்றுகொண்டு அவரிடம் போன்ல பேசி,வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமானதாக மாறியது. ஒரு மணிநேர தேடலுக்குப்பிறகு சரி திரும்பிவிடலாம் என்கிற யோசனை வந்ததது.அட்டோ க்காரர் இந்தியில் தேட நாங்கள் தந்தியில் தேட அந்த இரவு எட்டு மணி குளிரில் இறுதியில் அருணா வீட்டைக்கண்டு பிடித்துவிட்டோ ம்.

ஒரு துப்பறியும் நவலுக்கான விறுவிறுபோடு தேடிக்கண்டுபிடித்தோம் எழுத்தையும்,நட்பையும்.ஒரு தமிழன்,ஒரு தெக்கத்திக்காரன் என்கிறதையெல்லாம் தாண்டி வலைப்பதிவர் ஒருவரைப்பார்த்து தமிழில் ஒரு ஹலோ,தமிழ்மணக்கிற வெண்பொங்கல்,தமிழ்சூட்டோ டு ஒரு கப்காபி எல்லாமும் ஜெய்ப்பூர் குளிர்,தொலை தூர பயணம்,மரத்துப்போன நாக்கு ஆகியவற்றுக்கு ஆறுதல் தந்தது. இது வலையால் சாத்தியமானது.இது வலை சாதித்தது.

17 comments:

க.பாலாசி said...

//இது வலையால் சாத்தியமானது.இது வலை சாதித்தது//

உண்மை... இன்னும் எத்தனையோ சாத்தியமாக்கும் நட்பு... வலைநட்பு...

தலைப்பும் மிகப்பொருத்தம்...

காட்சிப்படுத்தியது இடுகை.....

vasu balaji said...

அருமையான நனவோடை:)

பத்மா said...

நினைவுகள் அழகியவை .அனைவருக்கும் ஒரு hatsoff

அன்புடன் அருணா said...

/ஒரு துப்பறியும் நவலுக்கான விறுவிறுபோடு தேடிக்கண்டுபிடித்தோம் எழுத்தையும்,நட்பையும்./
ஆஹா என்னா விறு விறுப்பான நடை!இந்த வலை வினோதமானதும்...சாதிப்பதும்தான்!

சுந்தரா said...

உண்மைதான் அண்ணா...

நெகிழ்வும் மகிழ்வும்தரும் நட்புக்கள் இங்கே சாத்தியமாகிறது.

Unknown said...

"கைம்மாறு கருதாதது அன்பும், நட்பும்".

Yes, absolutely true. Nice way to thank and cherish the friendship.

vijayan said...

மீண்டும் எப்போது எங்களூர்(பெங்களூரு)விஜயம்,ஆவலுடன் விஜயன்.

அம்பிகா said...

//இது வலையால் சாத்தியமானது.இது வலை சாதித்தது//
படிக்கவே சந்தோஷமாயிருக்கு.

பா.ராஜாராம் said...

நெகிழ்வான பகிர்வு காமு.

காஷ்யப்பன் சார் எழுத்தை நன்பன் குமார்ஜி அறிமுகம் செய்திருக்கிறான்-கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் முன்பு.

இப்பவும் கூட மாது தளத்தில் அவரின் பின்னூட்டங்கள் பார்க்கிறபோது,'அவர்தானா இவர்' என்கிற மின்னல் தோன்றி மறையாமல் இல்லை.இந்த பகிர்வு பார்க்கிற போது 'இவர்தான் போல அவர்'என கூடுதல் நெருக்கமாகிறது...

அருணா டீச்சர் பெயர் எங்கு பார்த்தாலும்-கூடவே நினைவு வருகிறது பூங்கொத்தும்.

இப்படி,

ஏதோ ஒன்றை தொட்டு ஏதோ ஒன்று நீளும் போது--இனம் புரியாத சந்தோசம் புரள்கிரதுதான்.இல்லையா காமு?

இந்த வலையில் இவ்வளவு தட்டுப் படும் எனில்,

செத்த முன்னாடியே விரிச்சிருக்கலாமோ?

எம்புட்டு போச்சோ? :-)

இரசிகை said...

//
அருணா டீச்சர் பெயர் எங்கு பார்த்தாலும்-கூடவே நினைவு வருகிறது பூங்கொத்தும்.

இப்படி,

ஏதோ ஒன்றை தொட்டு ஏதோ ஒன்று நீளும் போது--இனம் புரியாத சந்தோசம் புரள்கிரதுதான்.இல்லையா காமு?

இந்த வலையில் இவ்வளவு தட்டுப் படும் எனில்,

செத்த முன்னாடியே விரிச்சிருக்கலாமோ?

எம்புட்டு போச்சோ? :-)
//

m......:)

கமலேஷ் said...

உண்மைதான் அண்ணா...

kashyapan said...

"கலையும் இலக்கியமும்"என்ற மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய கட்டுரைத்தொகுப்பு எப்போதும் என் கட்டில் தலைமாட்டிலேயே வைத்திருப்பேன்.ஒவ்வொருமுறை படிக்கும் போதும் புதுப்புது புரிதல்கள் தேளிவாகும். அது போல்தான் நண்பர்களும், தோழர்களும்.சந்திக்கச்சந்திக்க புதிய புதிய
அனுபவங்களைத் தருவார்கள்.உங்களைச் சந்தித்ததும் சுயலாபம் கருதித்தான்.........காஸ்யபன்.

செ.சரவணக்குமார் said...

//இது வலையால் சாத்தியமானது.இது வலை சாதித்தது//

உண்மைதான் காமராஜ் அண்ணா. நெகிழ்ச்சியான பதிவு. காஸ்யபன் பற்றிய பகிர்வுக்கும் மிக்க நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

வலையின் நட்பு வலை சுகம்தான்...

சந்தனமுல்லை said...

நல்ல இடுகை அண்ணா..நெகிழ்வாக இருந்தது.

அப்புறம், சந்திக்கணும்னா ஒருவேளை இப்படி தூரத்துலே இருக்கணுமோ, அண்ணா?!! :-) or :-(

Radhakrishnan said...

மிகவும் நெகிழ்வாக இருக்கிறது.

தாரணி பிரியா said...

ஹை அருணா டீச்சரை பாத்துட்டிங்களா ரொம்ப சந்தோசம் அண்ணா. வலையால் சாதித்தது உங்களை போன்ற நல்ல உறவுகளும் அவர்களின் பாசங்களும் அப்படியே சீக்கிரம் கோயமுத்தூர் பக்கமும் வாங்க.