22.1.11

இன்னும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது.


ஒரு பின்மதிய நேரத்தில் சாத்தூர் பெருந்து நிலையத்துக்கு முன்னாடி வாகன நெரிசலில் காத்திருந்தேன் அப்போது ஒரு காவலர் ஓடிவந்து முகமன் சொல்லினார்.வங்கி வாடிக்கையாளரா தமுஎச ஆர்வலரா என்று நிதானிக்குமுன் அந்தச்சிரிப்பு அவனைக்காட்டிக் கொடுத்தது.எங்கள் கிராமத்தைச்சேர்ந்த தம்பி.அங்கிருந்து என்னைப்புடுங்கி நட்டி 25 வருடங்கள் ஓடிப்போனபின் நகரத்தில் விழுகிற ஒவ்வொரு அடியின் வலிக்கும் நான் மருந்து தடவ அங்கேதான் போவேன்.அப்படியொரு தரம் போயிருந்தபோது பொங்கல் நடந்துகொண்டிருந்தது. பொங்கல் விழாவை முன்னிறுத்தி நடக்கும் வேடிக்கை மற்றும் விளையாட்டுக்களுக்கு அன்பளிப்பு கேட்டுவருவார்கள். ஆனால் ஒரு இளைஞர் கூட்டம்  கிரிக்கெட் போட்டிக்கு  என்னை தலைமை தாங்க அழைத்தது. அன்பினால் இழுக்கப்பட்டுப் போனேன். அங்கு போய் கிரிக்கெட்டுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லி அவர்களைத் தர்ம சங்கடத்தில் நெளியவிட்டு வந்தேன்.

அந்த விளையாட்டுப் போட்டிகளின் பிரதான இடத்தில் இருந்தவன்தான் அந்தக் காவலர் என்று தெரிந்ததும் நெகிழ்ந்துபோனேன். அவன் எனக்கு தம்பி முறை. கிராமங்களுக்கு வெளியிலும் சரி ஊருக்குள்ளும் சரி ஒரு ஆயிரம் பாதைகள் இருக்கும். கடவு கொட்டாரம் களம் கண்மாய் ஓடை மடம் கடை உரல் கிழவங்கோவில் நஞ்சை புஞ்சை காடு மயானம் என பரந்துகிடக்கும் பொது இடங்கள்.இவைகளை மனிதர்களோடு இணைக்கும் பாதைகள் ஆயிரம் இருக்கும். கிராமத்து மனிதக் கூட்டத்துக்கு இருக்கிற விசால மனசு போலவே எந்த வீட்டுக்கும் சுற்றுச்சுவர் இருக்காது.இருக்கிற மானாவாரிச் செவக்காட்டு வரப்புத் தகறாருக்காக இதுவரை ஒரு சுடுகஞ்சி கூட கச்சேரிக்குப் போனதில்லை என்பதை என்னால் திடமாகச் சொல்லமுடியும்.

சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னாடி நடந்த ஒரு கொலைச் சம்பவத்துக்குப் பிறகு அந்த ஊரில் சொல்லிக்கொள்கிற மாதிரி எந்தப்பெரிய குற்றமும் பதிவாகாத கிராமம். இழந்த எட்டு உயிர்களுக்கு பலிகேட்டு முன்விரோதக் கொலைகள் நடந்திருந்தால் இந்நேரம் அந்தக்கிராமத்தின் மக்கட்தொகை ஐயாயிரத்திலிருந்து ஐம்பதுதாக பொசுங்கி இருக்கும். இவை ஏதும் இல்லாத ஒரு கிராமத்திலிருந்து ஒருவன் காவலானாக வந்தால் எப்படியிருப்பான். வசிக்க ஒரு இடம் தேடிக்கொள்ளக்கூட நினைவில்லாமல் வரும் வருமாணத்தில் மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு அதிகாரியாக இருக்க முடியும்.

சென்னையின் பிராதான காவல் நிலையங்கள் பலவற்றில் உதவி ஆய்வாளாராகவும் தற்போது ஆய்வாளராகவும் பணிபுரிகிற ஒரு காவல் அதிகாரிக்கு ஊரில் இருந்த ஒரே ஒரு பழைய்ய மண் வீடும் இடிந்து விழுந்துவிட்டது. வந்து போனால் உட்கார ஒரு இடம் வேண்டும் அதை எடுத்துக்கட்டு என்று சொல்லியும் கட்ட சுனங்குவதற்கு பொருளாதாரம் தவிர வேறு எந்தக்காரணமும் இருக்க முடியாது.அப்படிப்பட்டவர்களும் இந்த தேசத்தில் இருக்கிறார்கள் என்பது தெம்பான செய்தி. எனது கதைகளில் எனது பத்தி எழுத்துக்களில் வேறு வேறு பெயர்களில் இடம் பெற்றிருக்கும் அவன் கிட்டத்தட்ட ஒரு 25 ஆண்டுகாலம் என்னோடு காடுமேடுகளில் சுற்றித்திரிந்தவன்.அதுபோல ஆறு ஏழுபேர் அலைந்தோம். சிலர் அரசுப்பதவிகளுக்கு வந்த போதும் யாரும் சொல்லிக்கொள்கிற மாதிரி இடத்தில் இல்;லை. ஆனால் எதற்காகவும் அலுவலக கட்டிடத்துக்கு வெளியே கைநீட்டாத பெருமை வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது இன்னமும் உரக்கத் தம்பட்டம் அடித்துக்கொள்ளமுடிகிற சேதி.

சுற்றிலும் சூழ்ந்திருக்கிற நாற்றமெடுத்த சமுதாய அமைப்புக்குள் இருந்து கொண்டு தூய்மையாய் வாழமுடிகிற அணைவருக்கும் ஒரு சல்யூட்.

13 comments:

அழகிய நாட்கள் said...

தோழர் காமராஜ்!
கல்யாணமாகிக் காரைக்குடியில் வீடு பார்த்த போது என்னைக்கேட்டார்கள் நீங்கள் எந்த ஊர் நான் சொன்னேன் விருதுநகர். நீங்கள் நாடாரா என்றனர். ஆம் என்று பொய் சொன்னேன். இல்லையென்றால் குடியிருக்க வீடு கிடைத்திருக்காது. இதன் காரணமாகவே விருதுநகர் முத்துராமன்பட்டியில் இருக்கும் மண் வீட்டுக்கு(அந்த போலிஸ் அதிகாரியின் வீடு போல இருந்த)மாற்றலாகி வந்தேன். என் நிலைமையில் மற்றும் மாற்றலில் வந்திருக்கிற போலிஸ் அதிகாரி போல் இன்னும் எத்தனை பேரோ? பட்டியலின மக்களின் பட்டியலையும் மீறுமோ!

பத்மா said...

அருமை நம்பிக்கையான கட்டுரை ..எனக்கு தெரிந்த ஒருவரும் இப்படித்தான் ....integrity is the basic of life ...
நல்ல கட்டுரை சார்

ராம்ஜி_யாஹூ said...

நம்பிக்கையை ஊட்டும் பகிர்விற்கு நன்றிகள் பல

Kousalya Raj said...

என்னுடன் நேரில் பேசுவது போல் இருந்தது பதிவை படிக்கும் போது...ஊரின் மண் வாசம் உங்கள் எழுத்துக்களில்...

நெகிழ்ச்சியாக இருந்தது. நன்றி

சக்தி கல்வி மையம் said...

கட்டுரை அருமை...
http://sakthistudycentre.blogspot.com/

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான பதிவு...

அன்புடன் அருணா said...

/தூய்மையாய் வாழமுடிகிற அணைவருக்கும் ஒரு சல்யூட்./
ஹை!நன்றி!

Unknown said...

"எதற்காகவும் அலுவலக கட்டிடத்துக்கு வெளியே கைநீட்டாத பெருமை வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது இன்னமும் உரக்கத் தம்பட்டம் அடித்துக்கொள்ளமுடிகிற சேதி"

ரொம்ப சந்தோசப் பட வேண்டிய செய்தி. இந்த பதிவு படிக்கவே ஒரு நிறைவாக இருக்கு.

குறைந்த கட்டணங்களில் படித்து வரும் மற்றும் கிராமப்புற வாழ்க்கை அறிந்தவர்களால் மட்டுமே ஒரு எளிய வாழ்க்கை வாழவும் முடியும்; ஒரு ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவும் முடியும்னு நினைக்கிறேன். பல லட்சங்களைப் போட்டு மருத்துவனாகவும் engineer ஆகவும் வருபவர் போட்ட காச எடுப்பதில தான் குறியா இருப்பாங்க. இவர்கள் சமுதாயத்துக்கு செய்யும் பணி குறைவாகவே இருக்கும்.

Mahi_Granny said...

''சுற்றிலும் சூழ்ந்திருக்கிற நாற்றமெடுத்த சமுதாய அமைப்புக்குள் இருந்து கொண்டு தூய்மையாய் வாழமுடிகிற அணைவருக்கும் ஒரு சல்யூட்.''நானும் சேர்ந்து கொள்கிறேன் உங்களுடன் .

மதுரை சரவணன் said...

பெருமைக்குரிய காவலரே அவர். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Unknown said...

எப்பவும் உங்க பதிவுகளை ரீடரில் படித்து விடுவேன். இந்த பதிவுக்கு என் கருத்தைப் பதியாமல் போகமுடியவில்லை. மனதை நிறைத்துத் தளும்ப வைத்தது...

//அப்படிப்பட்டவர்களும் இந்த தேசத்தில் இருக்கிறார்கள் என்பது தெம்பான செய்தி............எதற்காகவும் அலுவலக கட்டிடத்துக்கு வெளியே கைநீட்டாத பெருமை வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது இன்னமும் உரக்கத் தம்பட்டம் அடித்துக்கொள்ளமுடிகிற சேதி.//

சாதிகளையும் மதங்களையும் கடந்து, இந்த மனிதர்களைத் தெரிந்ததாலேயே இன்னும் வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கையும் பற்றும் இருக்கிறது. இந்தப் பதிவுக்கு நன்றி.

vimalanperali said...

சுவர்களை தாண்டிய வாழ்க்கை நிறையவே கற்றுத் தருகிறது.

ஈரோடு கதிர் said...

மனது நிறைந்திருக்கிறது