1.2.11

உத்தப்புரம், தாமரைக்குளம். வெட்ட வெட்டத் தழைக்கும் விஷச்செடிகள்.


திரும்புகிற திசையெலாம் கணினி வளர்ச்சியைத்தம்பட்டம் அடிக்கும் காட்சிகள். வாகன நெரிசலும்  மனித கூட்டமுமக தமிழகத்தின் தலை நகரம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது. நேற்று மஹாத்மா காந்தி  நினைவு தினம் ஒருபக்கம். இன்னொருபக்கம் உத்தப்புரம் முத்தாரம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவை அலுங்காமல் குலுங்காமல் பாதுகாக்கிற பண்பாடு இருப்பதை இந்தச் செய்திகள் செவிட்டிலறைந்து உணர்த்துகின்றன.

இதே நாளில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு அருகில் உள்ள தாமரைக்குளத்தில் இருந்த சுமார் 30 தலித் வீடுகளில் 23 வீடுகளை அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கியிருக்கிறது அருகில் இருந்த தமிழ் இனம். இந்த செய்தி ஆளும்கட்சி எதிர்க்கட்சி நடுநிலை ஊடகங்கள் எதிலும் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார்கள். எட்டுக்கோடியா பத்துக்கோடியா தெரியவில்லை. எம் தமிழர்களுக்கு மத்தியில் இருக்கிற எரியும் பிரச்சினைகளில் இந்த இடிப்பு பிரச்சினை எங்கே வெளிவரப்போகிறது.காரணம் என்னவாக இருந்து விடப்போகிறது. 1975 ஆம் ஆண்டு கூடக் கொஞ்சம் நெல் கேட்டார்கள் என்பதற்காக உயிரோடு வைத்து எரித்தார்கள். இப்போது சுவரொட்டி ஒட்டினர்களாம் அது பிரச்சினையாகி இருக்கிறது. இது சகஜம் தானே. ஆனால் என்ன சுவரோட்டி என்று கேட்டால் இன்னும் விநோதமாக இருக்கும். தமிழர் இறையாண்மை மாநாடாம். இதையெல்லாம் பேச உனக்கென்ன அருகதை இருக்கிறது என்கிற கொடூரமான கேள்விதான் இந்த 2011 ன் வெண்மணிச் சம்பவம்.

இதிகாசங்களிலும் வரலாறுகளிலும் ஒதுக்கப்பட்டவர்கள் தங்கள் நெஞ்சைப்பிளந்து பிளந்துதான் தங்களின் பற்றுதலை அறிவிக்கவேண்டிய கொடூரம் நீடிக்கிறது. ஆனாலும் கூட நானும் தமிழன் நீயும் தமிழனா என்கிற ஆன்ம விசாரணை சக தமிழர்களின் மத்தியில் நடந்து கொண்டே இருக்கிறது. இது உனக்கான வேலையில்லை கோரிக்கையில்லை என்பதை திட்டவட்டமாக சொல்லியிருக்கிறது தமிழ்ச்சமூகம்.

ஜாதி மத பிரதேச கல்வி கலாச்சார பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து கனகனவென எரிந்துகொண்டிருக்கிறது தலித்துகள் மீதான வெறுப்பு. இதுவேறு இதிகாசம் ஆவணப்படத்துக்காக பாப்பாப்பட்டி கீரிப்பட்டிக்கு ஆறுமுறை சென்ற போதும் உத்தப்புரம் ஆவணப் படத்துக்காக இரண்டு முறை சென்ற போதும் மிகத் துள்ளியமாக இந்த அதிர்வுகள் தெரிந்தது. குறிப்பாக திருமாவளவன் கிருஷ்ணசாமி  ஜக்கையன் என்கிற பெயர்களைக்கேட்ட மாத்திரத்திலேயே தலித்தல்லாதவர் முகத்தில் ஒரு  ஒவ்வாமை கொப்பளித்துவிடுகிறது. அவர்களின் பேச்சிலும் பேட்டியிலும் தெரிந்த இயல்பு ஒருகனம் ஸ்தம்பித்துப் பின்னர் தொடர்வதை அவதானிக்க முடிந்தது. நாங்க எப்போதும் போல சகஜாமாத்தா இருக்கோம் இவிங்க வந்துதா கலவரத்த உண்டு பண்றாய்ங்க என்று ஒரு சொல்லிக்கொண்டிருக்கும் போதே  ’எப்பா ஏ தோழரு ஒங்க கட்சிக்காரய்ங்க வந்துருக்காங்க’ என்று சொல்லுகிறார் ஒரு இருவத்தி எட்டு வயதுக்காரர் அறுபத்தெட்டு வயது முதியவரைப் பார்த்து. ஒரு வலிபர்  இன்னும் ஒருபடி மேலே போய் அந்தா பாருங்க ’அவிங்க தலித் அவிங்களையும் எங்களையும் ஒண்ணா நிக்க வச்சா கண்டு பிடிக்க முடியாது’ என்று சொன்னார்.ஆஹா அழகாகச்சொல்லுகிறானே அரிஸ்டாட்டில் என்று நினைத்தோம்.’அவிங்க போட்ற செருப்ப பாத்தீங்களா அவிங்க போட்ற பேண்ட பாத்தீங்களா எங்கள விட அவிங்கதான் நால்லாருக்காங்க’ என்று ஒரு போடு போட்டார்.

கழுதைகளும் நரிகளும் நாய்களும் வாசம் செய்கிற இடத்திலே தான் வசிக்கவேண்டும். கிழிந்த உதாவாத ஆடைகளைத்தான்  அணிய வேண்டும். இறந்தார்களில் எலும்புகளில் கோர்க்கப்பட்ட அணிகலன்களைத்தான் அணியவேண்டும். அவர்கள் கல்வி கற்கக்கூடாது. மீறிக் கற்பாரேயாகின் ஈயத்தைக் காய்ச்சி  அவர்கள் காதுகளில் ஊற்றவேண்டும். இது அனுலோமா பிரதிலோமாக்களுக்காக வரையறுக்கப்பட்ட மனுஸ்மிருதி. அந்த வாலிபர்களுக்கு மனுஸ்மிருதி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அதைப் படித்திருக்கவே முடியாது. எனினும் அதன் சாரம் இன்னும் அவர்களிடம் மிச்சமிருக்கிறதை அவர்களே அறிய வாய்ப்பில்லை.

வெண்மைப்புரட்சி பசுமைப்புரட்சி நீலப்புரட்சி குடும்பக் கட்டுப்பாடு தொழுநோய் ஒழிப்பு அம்மைநோய் ஒழிப்பு ஆகியவற்றில் இந்தியா எட்ட முடிந்ததை இந்த தீண்டாமை விஷயத்தில் மட்டும் முடியாமல் போனது ஏன் என்று முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு உதயச்சந்திரன் அவர்களின் பேட்டியின்போது கேட்டோம். அதற்கு அவர் 2000 வருட நோயை இருபது வருடங்களில் குணப்படுத்துவது கடினம் என்று சொன்னார்.
ஒரு ஆட்சியர் அப்படித்தான் கருத்துச் சொல்லமுடியும். அதை மீறிச்சொல்ல முடியாத கோடுகள் நிறைந்ததிந்த அமைப்பு. இது மேலோட்டமாக பார்க்கையில் கேட்கையில் துல்லியமான லாஜிக்காக தோன்றும். ஆனால் அது இயற்கையல்ல அது விஞ்ஞானம் அல்ல அது புரட்சிஅல்ல. மாற்றங்களின் குணாம்சம் அப்படிப்பட்டதும் அல்ல.

4 comments:

திலிப் நாராயணன் said...

காமராஜ்!
'நெல்லுக்கூலி' கூடக்கேட்டது அதன் விளைவாக மனித உயிர்களை எரிக்க ஆரம்பித்தது ஜாதீ. அது அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் 1968 இல் தஞ்சை மாவட்டம் வெண் மணியில். இப்போதும் கூட அறிஞர் அண்ணாவின் பெயரில் மறுமலர்ச்சித்திட்டம் ஒன்று கிராமங்களில் காண்ட்ராக்ட் மூலம் நடைபெறுகிறது. வேறொன்றுமில்லை உங்கள் அருகில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தைப்பார்த்தாலே புரியும். இரண்டு மயானங்கள்.அதில் எழுதி இருக்கிறார்கள் "ஆதி திராவிடர்" "மற்ற வகுப்பினர்". எனது அண்ணன் அந்த சுடுகாட்டில் ஒரு வேலை செய்தான் செத்துப்போன ஒரு அனாதைப்பிணத்தை மற்ற வகுப்பினருக்கான சிதையில் வைத்து எரித்தான்.

சேக்காளி said...

//இந்த தீண்டாமை விஷயத்தில் மட்டும் முடியாமல் போனது ஏன் //
பாதிக்கப் பட்டோரை தவிர மற்றவர்கள் அது ஒழியாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதால்.

Sethu said...

ஜாதீய கொடுமை தீரனும். சுத்தமா மக்கள் மனதை விட்டு மறையனும். மறைய வைக்கணும்.

kashyapan said...

காமராஜ்! அண்ணல் காந்தி அடிகள் தீண்டாமையை எதிர்த்தார். மதத்தை எதிர்க்கவில்லை.மனுவை எதிர்க்கவில்லை.எவ்வளவு அயோக்கியத்தனமான முரண்!---காஸ்யபன்.