11.2.11

பால்யத்தில் பிணைந்து விளைந்த பசியும் நட்பும் .


சென்னையில் நாங்கள் தங்கியிருந்த கேகே நகரிலிருந்து கரையான் சாவடிக்கு பயணம் செய்துகொண்டிருந்தேன்.பள்ளிக்கால நண்பனும் ஊர்காரனுமான அன்பழகனைப்பார்க்க. பேருந்து இரைச்சல் மங்கி நினைவுகள் பின்னோடி க்கொண்டிருந்தது.அரசினர் விடுதியின் புழுக்கள் நெளியும்  சோற்றைத் திண்ணப் பழகிக்கொண்ட என் முன்னாடி படிக்கிற வெறி அடர்ந்து கிடந்தது. ஊரிலிருந்து வந்து ஒன்பதாம் வகுப்புசேர்ந்த ஐந்துபேரில் மூன்று பேர் இடைநின்று போனார்கள். நானும் அன்பழகனும் மட்டும் மிஞ்சியிருந்தோம். திடீரென அவனுக்கு உடம்பு ஊதிக்கொண்டது.காய்ச்சல் விட்டு விட்டு அடித்தது. விடுதிக்காப்பாளர் என்னை அழைத்து அவனை ஊருக்கு கூட்டிக் கொண்டு போகச் சொன்னார்.

நடந்தே தான் வந்தோம். காய்ச்சல் இன்னும் உக்கிரமானதால் கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு அரசினர் மருத்துவமனைக்குப் போனேன்.சீட்டு எழுதிவாங்கி ஊசி போடவைத்தேன்.பசிக்கிறதென்று சொன்னான் டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்தேன்.குடித்து முடித்த சடுதியில்  வாந்தியெடுத்தான். தனியே அவனை காபந்து பண்ண பயமாக இருந்தது.தாஸ் வாட்ச் ஆப்டிகல் வாசலில் சுருண்டு படுத்துக்கொண்டு இனி ஒரு அடிகூட நகர முடியாதென்றான். சண்டை போட்டேன்.அழுதான். போவோர் வருவோரெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே போனார்கள். அதில் யாரும் தெரிந்தவர் இல்லை. அருகே செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தாத்தாவிடம் அவனைப் பார்க்கச் சொல்லிவிட்டு ஓடிப்போய் கலா சைக்கிள் கடையில் வாட்கைச் சைக்கிள் வாங்கிக்கொண்டு அழுத்தினேன்.

அரை மணிநேரத்தில் ஊரில் இருந்தேன்.அவன் வீடு பூட்டிக் கிடந்தது.அவனது அம்மா காட்டுவேலைக்குப் போயிருந்தது. அவன் மாமவைத் தேடிக்கொண்டு போனேன்.அவரையும் காணவில்லை.அழுதேவிட்டேன்.வீட்டுக்குப் போகாமல் மறுபடியும் சைக்கிளை அழுத்தி சாத்தூருக்கு வந்து அவனைப்பார்த்தேன் ஆள் இல்லை. சுற்றிமுற்றிப் பார்த்தேன் செருப்புத்தைக்கிற தாத்தாவும் இல்லை. விடுதிக்குப்போனேன் அங்கேயும் இல்லை.மறுபடியும் அவனைத் தொலைத்த இடத்துக்கு வந்தேன்.தாத்தா இருந்தார் அவனைக் கூட்டிக்கொண்டு போய் ஊருக்கு பஸ் ஏற்றி விட்டு வந்ததாகச் சொன்னார். சைக்கிளை விடும்போது பத்துக்காசு குறைவாக இருந்தது. நாளைக்கு குடுங்க சூரங்குடி என்றார் கலா சைக்கிள் கடை ஓனர். திரும்ப நடந்து வரும்போது அநியாயத்துக்கு பசித்தது.விடுதியில் சாப்பாடு இருக்காது என்று நினைக்கும் போது பசி இன்னும் கூடியது. அரசினர் மருத்துவ மனைக்கு அருகில் வரும்போது தாத்தா ரோட்டை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.அவரும் தனது ஒரே கையிருப்பை அவனுக்காக பேருந்துக்கு கொடுத்துவிட்டு அடுத்தபடி வரப்போகும் அறுந்து போன செருப்புக்காலுக்காக காத்திருந்தார். ’’பள்ளிக்கூடத்துப் பேராண்டி சாப்பிட்டியா ’’ என்று கேட்டார். ஆமாம் என்று சொல்லிவிட்டு நடந்தேன்.

காலங்கள் அவனை ஒரு டீக்கடை ஓனராகவும் என்னை வங்கி ஊழியனாகவும் உருமாற்றியிருந்தது.

பேருந்திலிருந்து இறங்கி கரையான் சாவடிக்குள் நடந்தேன். சின்னச் சின்ன ஒரு பத்தி வீடுகள்.வாசலில் பால் மாடு. எதோ சாத்தூர் ஆர் சி தெருவுக்குள் நடக்கிற மாதிரி இருந்தது. ஆற்றிக் கொண்டிருந்த தேநீர்க் குவளையைக் கீழே வைத்துவிட்டு ஓடிவந்து கையைப் பிடித்துக் கொண்டான். சாத்தூர்ச் சேவு கொண்டு போயிருந்தேன். கொறித்துக் கொண்டே நான்கு மணிநேரம் பின்னோக்கிப் பயணமானோம். அப்படியே எஸ்பிபி குரலில் பாடுவான்.கையெழுத்து அச்சுப் பதித்தது போல இருக்கும். படிக்கிற காலத்திலேயே பெயிண்டிங் வேலையெல்லாம் செய்வான். அவனைச்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சாத்தூர் வந்து பொங்கல் விழாவுக்கு வந்திருந்த எக்கோஸ் பாட்டுக் கச்சேரியில் கெஞ்சிக் கூத்தாடி ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுத்த கதையெல்லாம் பேசினோம்.

பேச்சுக்கு இடையில் இரண்டு முறை அவளைப் பற்றிப் பேசினான்.அவன் கிறுக்குப் பிடித்து அலைந்தபோதும்,அவனது அண்ணன்மார்கள் அவனை அடித்தபோதும் நான் அவனோடு இருந்தேன்.அதனால் நீண்ட காலம் அந்த வீட்டு மனிதர்கள் என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டார்கள். எனது கருப்பு நிலாக்கதைகள் அவனது கல்லாப்பெட்டிக்கு அருகில் இருந்தது.அவன் கை என் கையைப் பற்றிக்கொண்டே இருந்தது. எப்படி எழுத வந்தாய் என்று கேட்டான். ’’எல்லாம் நண்பர்களால் தான். நாம் ஐந்து பேர் பார்த்து சுற்றித்திரிந்த ஊரைப்பற்றி என்னோடு இருந்த நன்பர்கள் எழுத்தத் தூண்டினார்கள்’’ என்றேன். வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனான். சின்ன வயசில் அவனது கண்களில் பளிச்சிடும் அதே ஒளியோடு அவன் மகள் வந்து வாங்க மாமா என்றாள். என்ன படிக்கிறே என்றேன். ஏரோநாட்டிகல் என்றாள். அவளுக்குச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை.எங்கள் இளமைக்காலத்து வறுமையைத்
தவிர.


10 comments:

nellai அண்ணாச்சி said...

கடைசி வரி கண்களை நிறைத்தது

ஓலை(Sethu) said...

"அவன் கை என் கையைப் பற்றிக்கொண்டே இருந்தது".

தினமும் இந்த எழுத்தைப் படிக்கும் எங்களுக்கும் தான். உங்கள் நண்பர் குடும்பம் முன்னேறிவருவது குறித்து மிக்க சந்தோசம்.

Mahi_Granny said...

பெருமைபட்டுக் கொள்கிறேன் (கொள்ளுங்கள் )

பா.ராஜாராம் said...

ஒரு அரை பக்கத்துக்குள் அழச்செய்து விடுகிறீர் ஓய்!

வினோ said...

அண்ணா கண்ணீர் துளிகள்.. ரெண்டு விசயங்களுக்கு...

சுந்தர்ஜி said...

நட்பின் சகல பரிமாணங்களையும் சொல்லியபடியே இருக்கிறது அன்பில் ஊறிய உங்கள் எழுத்துக்கள் காமராஜ்.அருமை.

விந்தைமனிதன் said...

வறுமையின் தடங்களை அடுத்த தலைமுறைக்கும் உணர்த்திச் செல்லும் தவிப்பு...

அன்புடன் அருணா said...

இளமையில் வறுமை!கொடுமையிலும் கொடுமை...அனுபவித்திருக்கிறேன்.

ஈரோடு கதிர் said...

நெகிழ்ச்சி!

MANO நாஞ்சில் மனோ said...

மிகவும் அருமையாக இருக்கு மக்கா......