6.2.11

அக்கம் பக்கம் - பராக்குப்பார்த்தல்


ஆனந்தவிகடனில் 'ஆதவன் தீட்சண்யாவின்' சிறுகதை.

 இளம் வயதிலேயே துவங்கிவிடும் பெண் ஈர்ப்பின் குழப்பமான காலம் அந்த வளர் இளம் பருவம்.அந்த அழியாத கோலங்கள் எல்லோரையும் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும்.கிராமங்களில் நுழையும் அழகிய பெண்களின் பின்னாடி ஒரு நூறு கதைகள் உருவாகும்.அதை ஒரு பத்தாவது படிக்கிற கிராமத்தானின் கண்ணாடி வழியே படம் பிடிக்கிற கதை. தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை சுசிலாக்காவை அழியாத கோலங்கள் ஷோபாவின் சாயலோடும்,ரோச்சாப்பூ ரவிக்கைக்காரி தீபாவின் சாயலோடும் அறிமுகப்படுத்தி அதைத்தாண்டி ஒரு முடிவைச் சொல்லுகிறது.எதிர்பாராத ஏவுதளத்திலிருந்து எகிப்தின் எழுச்சி.

எகிப்து தேசத்தின் எழுச்சி பிரமீடுகளின் உயரத்தைத்தாண்டி விட்டது.பத்து நாட்களுக்கு மேலாக கெய்ரோ வீதிகளில் நங்கூரமிட்டிருக்கிற சாதாரண ஜனங்களின் கோபம் விமர்சனத்திற்கானதல்ல வழிகாட்டுதலுக்கானது. பெயர் சொல்லக்கூடிய எந்த எதிர்க்கட்சிகளின் பின்புலமும் இல்லாமல் காட்டுப் பூக்களைப்போல வெடித்திருக்கிறது புரட்சி.கட்சிகள் இப்போது மக்களிடம் உறுப்பினர் அட்டை கோருகிற விந்தை நடக்கிறது.எழுத்தாளர் கோணங்கி சொன்னது போல புரட்சி எனும் ராக்கெட் கிளம்பியிருக்கிறது. எதிர்பாரத ஏவுதளத்திலிருந்து.ஹோஸ்னி முபாரக் பதவி விலகிவிட்டார்.
இந்த காட்டுப்பூக்களுக்குள் தொலைந்து திரும்பியிருக்கிறார் பதிவர் ராகவன். பணி நிமித்தம் கெய்ரோ சென்ற அவர் மக்கள் எழுச்சிக்குள் சிக்கிப் பின் வெளியேறியிருக்கிறார்.அந்த அனுபவத்தைச் சுடச்சுட எழுதினால் நல்லாருக்கும்.

நோய்நாடி நோய்முதல் நாடி.

சக்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஆகியவற்றின் கேந்திரப் பகுதியாக இந்தியா மாறிவருகிறதென்பதை உலக சுகாதார நிறுவணம் எச்சரித் திருக்கிறது. ஆகவே நூறு மாவட்டங்களில் இவற்றிற்கு எதிரான விழிப்புணர்வும்,மருத்துவமும் வழங்குகிற திட்டத்தை குலாம் நபி ஆசாத் துவக்கியிருக்கிறார்.சினிமா கல்வி அரசியல் ஆகியவற்றின் வழியே இந்த நோய்கள் பரப்பப்படுக்கிறது என்பதையும் பன்னாட்டு இந்நாட்டுக் கம்பெனி களில் அது ஊற்றெடுக்கிறது என்பதையும் சொல்லாத வரை இது இலை களுக்கான வைத்தியம் மட்டுமே.

ஒருபக்கம் அருவாப்படம்,  மறுபக்கம் பொம்மைப்படம்.

நேற்று காவலன் படம் கிடைத்தது.எதிர்பாரதாவிதமாகச் சந்தித்த நண்பர் ஒருவர் வலியக் கொடுத்தார்.வீட்டில் வந்து போட்டுப் பார்த்த பின்னாடிதான் தெரிந்தது, குப்பையில் போடவைத்திருந்ததை என்னிடம் கொடுத்திருக்கிறார் என்று.பொம்மைப்படம் விரும்பிப் பார்க்கிற எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும்.அயல் நாட்டிலிருந்து வருகிற எல்லோரும் ,மதுரை மனிதர்களை அருவாளின் மறு ரூபமாகத்தான் பார்க்கிறார்கள்.மதுரையைப் பற்றிப் படம் எடுங்கடான்னா அருவாளைப்பத்தி படம் எடுக்கிறார்கள். அதில்லாவிட்டால் நாலு வேற்று மொழிப்படம்  இல்லை ஆங்கில எட்டு கார்ட்டூன் படங்கள் பார்த்து அதில் எலிக்கு கதாநாயகன் ,பூனைக்கு வில்லன் (அல்லது பிரகாஷ்ராஜ்) வேஷம் கட்டி களத்தில் இறக்கிவிட்டு விடுகிறார்கள். அதில் நடித்து முடித்த கையோடு ’இங்கே தொகுதிப்பங்கீடு பற்றிப்பேசப்படும்’ என்று போர்டு மாட்டிவிடுகிறார்கள்.தொப்புளைச்சுற்றி பம்பரம் விடுகிற, பிரமீடுகளைச் சுற்றி சுற்றி டூயட் பாடுகிற இவர்களின் கனவும் அரசியலும் வேறெப்படி இருக்கும்.

பெருமிதம்.

போன 26 ஆம் தேதி சானலைத் திருப்பும் போது ஒரு பேட்டி தட்டுப்பட்டது.  கதநாயகர் ஒருவர் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தார். நார்வே  நாட்டுக்கு படப்பிடிப்புக்கு போனார்களாம்.அந்தப்படம் தான் நார்வேயில் டூயட் சாங்க் எடுத்த முதல் படமாம். நார்வே மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஒரே ஆச்சரியமாம்.இதுவரை ஆவணப்படம் எடுக்க வந்திருக்கிறார்கள்,சுற்றுலா வந்திருக் கிறார்கள், அரசுமுறைப் பயணமாக வந்திருக்கிறார்கள்,வாங்க விற்க வந்திருக்கிறார்கள் ஆனா டூயட் சாங் எடுப்பதற்காக வந்த மொதோ டீம் நீங்கதான் சார் என்றார்களாம். அதை சொல்லும்போது அவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்.ஊருக்குள்ள தப்பிவந்த கொரங்கப்பாத்த மாதிரிப்பார்த்திருக்கிறான் நார்வேக்காரன். அட வெங்காயம் இது கூடப்புரியலயா எத்தன வடிவேலு காமெடி நடிச்சிருக்கே, பார்த்திருக்கே. இந்தியாவின்,தமிழகத்தின் மானத்தைக்கூறுபோட்டு வித்துட்டு வந்ததைப் பெருமையாகப் பேசியபடி இருக்கிறது பாப்புலர் இலக்கியம். அதோடு கொண்டாடினான் குடியரசுத் தமிழன்.


7 comments:

சேக்காளி said...

//அதில்லாவிட்டால் நாலு வேற்று மொழிப்படம் இல்லை ஆங்கில எட்டு கார்ட்டூன் படங்கள்//.
அட நீங்க தமிழ் படமே பாக்கறதில்லைன்னு நெனக்கிறேன்.அவரே நடிச்ச வசிகரா படம் தானே நண்பர் குப்பையில் போட வைத்திருந்தது.நம்ம மறதிய அரசியல் வியாதிகள் மட்டுமா பயன் படுத்துறாங்க.திரைப்பட துறையினருந்தான்.2003ல வந்த படம் வசிகரா.

MANO நாஞ்சில் மனோ said...

//ஊருக்குள்ள தப்பிவந்த கொரங்கப்பாத்த மாதிரிப்பார்த்திருக்கிறான் நார்வேக்காரன்//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பர் ஹா ஹா ஹா ஹா.....

பா.ராஜாராம் said...

// அதில் நடித்து முடித்த கையோடு ’இங்கே தொகுதிப்பங்கீடு பற்றிப்பேசப்படும்’ என்று போர்டு மாட்டிவிடுகிறார்கள்.//

:-))

Sethu said...

அருமையான பகிர்வு. அதுவும் கடைசிலே சூப்பர் ஒ சூப்பர்.

வானம்பாடிகள் said...

அட இது வித்தியாசமாவுல்ல இருக்கு:))

க.பாலாசி said...

பராக்கு பாக்கறதுலையும் எத்தனை விசயங்களிருக்கு... அதுவும் அருவாப்படமும், பொம்மைப்படமும் நமுட்டுச்சிரிப்பு அசத்தல் ரகம்.. கடைசியொன்று கலக்கல்...

ஈரோடு கதிர் said...

\\இங்கே தொகுதிப்பங்கீடு பற்றிப்பேசப்படும்\\

கனிணித் திரையை முறைச்சிட்டிருந்த நான் இதைப் படிக்கும் போது வெடிச்சுச் சிரிச்சுட்டேன்.
எதிர்த்தாப்ல உட்கார்ந்திருந்த நண்பர் என்னை “லூசு” மாதிரி பார்த்தார்!