21.2.11

பினாயக்சென் விவகாரம்:ஊடகம்,ஜனநாயகம்,வெகுமக்கள்


வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி முதல் தர மாணவர்.அதே மருத்துவ மனையின்  நிர்வாகத்துக்கும், ஏழை எளிய நோயாளிகளுக்கும் ஒருசேர பிடித்துப்போன மக்கள் மருத்துவர்.ஜவஹர்லால் நேரு பலகலைக் கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பொறுப்பு. இவை யாவும் அவரின் தாகத்தை அடக்க முடியவில்லை.அங்கிருந்து சட்டீஸ்கர்  டல்லி ரஜ்ஹாரா இரும்புச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் செய்யப்புறப்பட்டுப் போனார். அவருடன் அவரது மனைவி இலினாவும் பயணமானார். இயல்பிலேயே ஏழைகள் மீதும் விடுபட்ட ஜனங்கள் மீதும் அளவுகடந்த அக்கறை கொண்ட அவருக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆதிவாசிகள் மேல் அக்கறை வந்ததில் வியப்பேதும் இல்லை.

ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு மேல் எளிய மக்களுக்கு மருத்துவம் செய்வதை மட்டுமே லட்சியமாகக் கொண்ட அவருக்கு சிஎம்சி மருத்துவமனை இம்மாதிரியான பணிகளுக்கு அளிக்கப்படும் ’பால்ஹாரிஸன்’ விருது தருகிறது. 1981 ல் சத்தீஸ்கரில் பிரபலாமான தொழிற்சங்கத் தலைவர் சங்கர்குஹா நியோகியுடன் நட்பு உண்டாகி இரும்புச் சுரங்கத் தொழிலாளத் தோழர்களுக்கென பிரத்யேக மருத்துவமனை ”ஷாகித்தை” உருவாக்குகிறார். பின்னர் சுரங்க நிர்வாகமும் அடியாட்களும் இணைந்து  சங்கர்குஹா நியோகி யைக் கொலை செய்கிறது. அதற்கு நீதி கேட்டுத் தெருவில் இறங்கிய அப்பாவி மக்களைத் துப்பாக்கிக் குண்டுக்கு இறையாக்குகிறது அரசு.அதில் இறந்து போன, அங்கஹீனமான ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவும் அமைப்பை நிறுவுவதிலும் சென் இணைந்துகொள்கிறார். இதன் தொடர்ச்சியாய் பியுசிஎல் அமைப்பின் மாநில பொறுப்பும்,அகில இந்திய பொறுப்பும் வருகிறது சென்னுக்கு.

உலகமயமாதலின் நேரடிக்கொடூரமாக இந்திய கனிமவளங்கள் அயல் முதலாளிகளுக்கும் உள்ளூர் முதலைகளுக்கும் தாரை வார்க்கப்படுகிறது. எந்தேசம் கொள்ளைபோகிறதே எனும் கோபம் ஆதிவாசிகளுக்கு வருகிறது.அதற்கு எதிராக எழும்பும் மக்கள் கிளர்ச்சியைத் தடுக்க சல்வாஜூடும் என்கிற எதிர்ப்புரட்சி அமைப்பு உருவாகிறது. சல்வாஜூடும் என்கிற கைக்கூலிகள் ஆதிவாசிகளல்லாத உயர் சமூகத்திலிருந்து தயாரிக்கபடுகிறார்கள்.வெறும் மூவாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்துக்கு பணியிலமர்த்தப்படும் அவர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்களாகிறார்கள்.
அது போக அவர்களுக்கு உள்ளூர் முதலாளிகள்,அவர்களின் எடுபிடிகளான காங்கிரஸ்,பாஜக,மற்றும் உள்ளூர் அரசியல் வாதிகளின் தார்மீக ஆதரவும் நிதி உதவியும் கிடைக்கிறது. அவுட்சோர்சிங் முறையில் ஜாதியப் பற்றை, முதலாளித்துவப் பற்றை உருவாக்கி அவர்களுக்கு வெறியூட்டுகிறது.

இப்படி அரசு மற்றும் ஆளும் எதிர்க்கட்சிகளின் செல்லப்பிள்ளைகளான அவர்கள் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் இந்த தேசத்தில் நடக்கும் வன்கொடுமைகள் மொத்தத்தையும் ஆதிவாசிகளின் மீது நிகழ்த்துகிறார்கள். குறிப்பாக ஆதிவாசிப் பெண்கள் மீது சொல்லக்கூசும் செயல்கள் நடந்தேறுகிறது. பியுசிஎல் அமைப்பின் மாநில பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கரம் நீட்டுகிறார் பினாயக்சென். இதன்மூலம் இந்திய அதிகார,ஜாதிய,முதாலாளிகளின் கோபத்துக்கு ஆளாகிறார் மருத்துவர் சென். தன்னை ஆதரிக்கவேண்டும் அல்லது அடிபணியவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவதொருவழியில் தீர்த்துக்கட்டப்படுவாய்.இது அதிகார மையங்களின் விதி.அது சென் மீதும் செலுத்தப்படுகிறது. குறி வைக்கப் படுகிறார். வழக்கு ஜோடிக்கப்படுகிறது.பிடிபட்ட மாவோயிஸ்டுகளோடும், ஆதரவாளர்களோடும் தொடர்புபடுத்தி கதைதிரித்து வழக்கு  நடக்கிறது. வளமை போல் வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்மானிக்கப் படுகிறது.

2007 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு மூன்று வருடம் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில், அதாவது  2008 ஆம் ஆண்டு உலகசுகாதார நிறுவனம் அவருக்கு மனித உரிமைகளுக்கான  ‘ஜோனதன்மான் ‘ விருது கொடுத்து கௌரவிக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற அறிவியல் அறிஞர்கள்,நோபல் விருதுபெற்றவர்களடங்கிய 22 பேர் குழு சென்னுக்காக பிரத்யேக கடிதம் ஒன்றை இந்திய ஆட்சியாளர்களுக்கு அனுப்புகிறது. இருந்தும் சென்ற 2010 டிசம்பர் மாதத்தில் அவரோடு மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு குறுகிய பிரதேசத்தில் மருத்துவ பணியாளராகவும்,ஜனநாயக ஆர்வலராகவும் இருந்த சென் இந்த தீர்ப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட இளைஞர்கள்,ஜனநாயக அமைப்புக்கள்,உலக அறிஞர்கள் தூக்கிப்பிடிக்கும் பதாகையாக மறிக்கொண்டிருக்கிறார்.

(நன்றி காலச்சுவடு பிப் 2011,பினாயக்சென்: ஜனநாயகவாதிக்கு இழைக்கப்பட்ட அநீதி: க.திருநாவுக்கரசு)

எத்தனை காட்சி ஊடகங்கள் இதை பொருட்படுத்தியது.எத்தனை அச்சு ஊடகங்கள் விலாவாரியாக, பத்திபதியாய் எழுதியது.எத்தனை டீக்கடை பெஞ்சுகளில் பேசுபொருளானது.எத்தனைபேர் இதை எழுதி ஹிட் வாங்கினார்கள்.

இந்த தேசம் எதைப் பேசுவது எதைப் புறந்தள்ளுவது என்கிற நுண்ணரசியலில் கெட்டிக்காரத்தனமாக நடந்துகொள்கிறது. காங்கிரஸ்  அல்லது  பாஜக -, திமுக அல்லது அதிமுக இந்த இரண்டில் ஏதாவதொன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட அரசியலுக்கு நாம் ஜனநாயகம் என்றும் பேர் சூட்டிக்கொள்கிறோம்.உலகின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும்  அதைக்கண்டு பொங்குவாயானால் நீ என் தோழன் என்று சொன்னான் உலக புரட்சி நாயகன் சே.ஆனால் இங்கே கிடைக்கும் புரட்சிக் கருத்துக்கள் தன்வயப்பட்டவையாகவே இருக்கிறது. தீர்ப்பு வெளியாகி இரண்டு மாதங்களில் வெளியிலும் வலையிலும் சென்னைப்பற்றிய பிரமாதமான எந்தக்குறிப்பும் இல்லை. ஒருவருக்கு வழங்கப்பட்ட அநீதி ஒரு ஜாதிக்கு, ஒருகட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு மட்டும் நடந்த அநீதியாக சுருக்கிப் பார்க்கிற வியாதி நீடிக்கிறது இங்கே.

இலங்கை இடர்பாடுகள்மேல் வைத்திருக்கிற உக்கிரப் பார்வை உள்ளூர் கொடுமைகளில் பிசகுகிறது, பின்வாங்குகிறது வாளா விருக்கிறது.மீனவர் படு கொலைநடந்த அதே காலக் கட்டத்தில்தான் உத்தப்புரம் கோயில் நுழைவும், தாமரைக் குளம் தலித் வீடுகள் சூறையாடப்பட்டதும் நடந்தது.ஆராசா தலித் என்பதால் குறிவைக்கப்படுகிறார் என்று முதல்வர் சொன்னதும் உலகம் முழுக்க எள்ளி நகையாடப்படுகிறது. மிகச்சரி. தவறு செய்தவர்களுக்கு என்ன ஒதுக்கீடு வேண்டிக்கிடக்கிறது மிக மிகச் சரி.ஆனால் ஒரே ஊருக்குள் இருக்கிற சகோதர தமிழனை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறாயே தமிழா,தமிழக அரசே என்று ஒரு பலத்த குரல் எழும்பியிருக்கிறதா.2000 வருடங்களாக இப்படி ஒரு ஓங்காரக் குரல் ஒலிக்காதா என்று இந்திய தலித்துகளின் காதுகள் ஏக்கத்தில் இருக்கிற விஷயம் தெரியுமா ?

அது தெரிந்துகொள்கிற வரை புரட்சிக் கருத்துக்கள் தழல் வீரம் குன்றிப்போய் வெறும் சுயசொறிதல்களாக மட்டுமே நீடிக்கும்.பொங்குகிற கடல்மாதிரி,
பற்றி எரிகிற காடு மாதிரி, வானிடிந்து பேய்கிற பெருமழை மாதிரி புரட்சி எல்லோரையும்  ஏந்திக்கொள்ளவேண்டும். இதில் ஒதுக்கீடு கேட்பது நகைப்புக்குறியது. எனில்  ஒதுக்குவது ? அது புரட்சி என்கிற வார்த்தையைக் கொச்சைப்படுத்துவது.

4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்குது...

நிலவு said...

http://powrnamy.blogspot.com

vasan said...

பினாயக்சென் அவ‌ர்க‌ளுக்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ நீதிம‌ன்ற‌ ஆயுள் த‌ண்ட‌னை கேள்விக்குறிக்கான‌தா?
அல்ல‌து ம‌னித‌நேய‌த்தின் மீதான‌ கேலிக்குறிய‌தா? பிஜெபி அர‌சின் கீழிருக்கும் மாநில‌மாயினும்,
ராம் சேத்மாலினி மேல் முறையீட்டுக்கு தீர்ப்பை எதிர்த்து போகிறார் என்ப‌து ஒர்‌ ஆறுத‌லான செய்தி. திரும‌தி சென், நாங்க‌ள் இங்கே குழ‌ந்தைகளோடு வாழ்வ‌து அபாக‌ர‌மான‌து, வேறு நாட்டுக்கு அக‌திக‌ளாய் போய்விட‌லாம் என வ‌ருந்தும‌ள‌வுக்கு இந்திய‌ ஜ‌னநாய‌க‌ம், ம‌க்க‌ளுக்காய் ஆட்சி செய்கிற‌து. க‌லிகால‌ம்ப்பா, இங்கே நல்ல‌வ‌னுக்கு கால‌மில்லை என்ப‌தே நிருப‌ண‌மாகிற‌து.
இளையத‌லைமுறை அமெரிக்க‌கார‌ர்க‌ள் கேட்கும் கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ தூக்க‌ம் தொலைத்து பிபிஓ விற்கு ஓடுகிற‌து. லீவியில் உல‌க‌க்கோப்பை கிரிகெட் பார்க்கிற‌து அல்ல‌து பார்க‌ளில் குழுமுகிற‌து, குழ‌றுகிற‌து.

விமலன் said...

சரியாக எதையும் கற்றுத் தருகிற,அறிவுறுத்துகிற அமைப்பு நம்மில் இல்லாதவரை இந்தக் கொடுமை நிகழ்ந்து கொண்டே இருக்கும்தானே?