12.2.11

விழா மேடையில் நட்ட மரம்.


ஆலோசனைக்கூட்டத்தில் விநாயகமூர்த்தி அரை மணிநேரம் பேசினார். எதிரில் உட்கார்ந்தவர்கள்  தூரலில் நனைந்திருந்தார்கள்.துடைத்தால் தலைவர் மனம் புண்படுமே என்று சித்திரப்பாவையின் அத்தகவடங்கியிருந்தார்கள் ஆலோசனை கேட்க வந்தவர்கள்.பேச்சு முழுவதும் மரங்களைப்பற்றியே இருந்தது. மரங்களின் மகத்துவம் குறித்து அவர் படித்துக்குறிப்பெடுத்த புத்தகங்கள் ஆறு ஏழு இருக்கும்.மகளிடம் சொல்லி வலையில் தேடி தரவிறக்கம் செய்த ஆறுபக்க செய்திகளைத் தமிழ்படுத்தித் தர சிங்கமுத்துவிடம் கொடுத்திருந்தார். அவற்றையெல்லாம் படித்து ஒரு ஆகச்சிறந்த கவிதை போல,இதுவரை எழுத்தாத சிறுகதைபோல மனதுமயக்குகிற ஒரு பனைமரக்காடே என்கிற பாடல்போல படைத்துவிடவேண்டும் என்கிற ஆசையில்தான் எல்லாவற்றையும் தனது சூட்கேசுக்குள் வைத்திருந்தார். எனினும் அதில் இரண்டு பாராக்கள் கூட அவரால் படிக்க முடியவில்லை.

சின்ன ஓடைப்பட்டியில்  வாலிபன் ஒருவன் கொடுத்த வன்கொடுமைப் புகாரை சரிசெய்யப் போகவேண்டியதாயிருந்தது. பர்ஸ்ட் அக்யூஸ்டாக சேர்க்கப்பட்டிருந்த கிளைக்கழகச் செயலாளர் அரிஸ்ட்டாட்டில் என்கிற நராயணசாமி விளாத்திகுளத்துக்கு ஓடிப்போய் நான்குநாட்கள் ஆகியிருந்தது.அங்கிருந்து தலைவருக்கு மணிக்கொருதரம் தொலைபேசியில் அழைத்து எப்படியவது முடிச்சி வச்சிருங்க தலைவரே என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்.செவல் பட்டி எங்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மகள் டாடா வயர்லெஸ் இண்டெர்நெட் கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தாள். அரிஸ்ட்டாட்டில்  மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்கிக்கொள்ளச் சொல்லியிருந்தது அப்போதைக்குப் போதுமானதாக இருந்தது.ஒரு டாட்டா சுமோ எடுத்துக்கொண்டு சின்ன ஒடைப்பட்டிக்குப்போய் காலனியில் இறங்கி சொம்பில் தண்ணீர் வாங்கிக்குடித்தார்.கம்மங்கஞ்சி இருக்குதாம்மா என்று கேட்டார்.சனம் பூரித்துப்போயிருந்தது.இப்பெல்லாம் ஒரு ரூவா அரிசிதான் சாமி என்று மாரிக்கிழவி சொன்னது அவருக்குச்சாதகமாக இருந்தது.

செருப்படி பட்ட கருப்பசாமிக்கு தனது அரசியல் அனுபவத்தையெல்லாம் திரட்டி ஒரு ஆலோசனை சொன்னார்.அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.கூட வந்த கருப்பசாமியின் தூரத்துச்சொந்தக்காரனான மேட்டமலை கருணாகரனுக்கு கோபம் என்றால் கடுங்கோபம்.தலைவர் சொல்லியும் கேட்காத கருப்பசாமியை அடிக்கப்போய்விட்டான்.மறுநாள் கருணாகரன் இல்லாமல் காவல் நிலையம் போய் ஆய்வாளரிடம் சொல்லி ஒரு பொய்வழக்கு ஜோடிக்கச்சொல்லி அவருக்கும் டாட்டா சுமோவுக்கான பணம் வாங்கிக்கொடுத்தார்.அவர் சின்ன ஓடைப்பட்டிக்குப்போய் மூனு பேரை அள்ளிக்கொண்டுவந்து அடைத்துவிட்டார். இப்போது அந்தக் காலனிச் சனங்கள் தலவர் வீட்டு வாசலில் தவங்கிடந்தார்கள்.மூன்றாவது நாள் சமாதானம் பேசி முடித்துவைத்ததில் அரிஸ்ட்டாட்டிலுக்கு  ஒரு பத்தாயிரம்  செலவாகியிருந்தது. காலனிசனங்கள் அஞ்சு நாள் வேலைவெட்டிக்குபோகாமல் பட்டினிகிடந்தார்கள்.இந்த குழப்பத்தில் தலைவர் சேகரித்து வைத்த பேசு பொருள் படிக்கப்படாமல் குப்பையாகிப் போய்விட்டது.

அதற்குள்ளே தான் தாதரா இலைகளின் மகத்துவம் கிடந்தது.இலை,பூ,காய்,பழம்,விதை,வேர்,பட்டை,பிசின் என தன்னுள் உருவான 27 பாகங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு கேட்கிற நேரமெல்லாம் அதை மக்கள் பயண்பாட்டுக்குத் தரும் மோஹ்வா மரங்களின் கதையும் அந்தக்குப்பைக்குள்ளே தான் கிடந்தது. ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களின் எழுதப்படாத குறிப்பும்.மனிதர்களைச் சந்ததி சந்ததிகளாக பார்த்துகதை சொன்ன புளியமரத்தின் கதையும். தூக்கில் இடும்போது தானே முறிந்து காப்பாற்றிவிடமாட்டோமா என்று கதறி அழுத கயத்தாத்துப் புளியமரத்தின் கண்ணீரும்,வெள்ளைக்காரனை எதிர்க்க காரணமான மருதுசகோதரர்களின் மரங்களின் சுற்றளவும் மட்கிப்போகாமல் அதர்குள்ளேதான் கிடந்தது.இனி கொஞ்ச நாளில் வீட்டுப்பக்கம் வரும் பழய்ய பேப்பர்காரரிரிடம் வீசைக்கு போய்ச்சேர்ந்துவிடும்.

ஆகவே கூட்டத்தில் துனீசியாவின் எழுச்சியைப்பற்றியும்,விலைவாசியின் கொடூரம் பற்றியும் எதிர்க்கட்சியின் அராஜகம் பற்றியுமாகப் பேசி  உலக அனுபவத்தை ஊறுகாய் இல்லாமல் ஊட்டினார்.பேச்சின் திசை ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்த இடத்துக்கும்திரும்பியது.அங்கிருந்து காடுகளுக்கும்
காடுகளில் இருக்கும் மரங்களுக்குமாகத்தாவித்தாவி வந்து கடைசியில் மரங்களை நடுவதே கட்சியின் லட்சியம் என்று முடித்தார்.கூட்டத்தின் கடைசியில் உட்கார்ந்திருந்த பூகோளன் கேட்டான்.நமது இயக்கம் கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து முந்தோன்றிய இயக்கம் திடீரென்று ஏனிந்த
மரங்களின் கரிசனம்.தலைவரின் முகம் இறுகிய நேரத்திலா அந்த குழல் விளக்கு அணைந்து எரியவேண்டும்.அடிப்படை உறுப்பினரெல்லாம் பூகோளனை முறைத்தார்கள்.இதென்ன சின்னப்பிள்ளத்தனமான கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு அதா,ஆள் பாத்து சேருங்கன்னு சொன்னோம். ரெண்டு கவிதையெழுதினவனையெல்லா கச்சியில சேத்தா இந்தக்கதிதான் என்று சாமியாடினார் மூத்த தடித்த அடிப்படை உறுப்பினர்.

அதற்குள் தலைவரின் முகம் சாந்த சொரூபமானது.புத்தன் பிறந்த உடனே போதிமரத்தடியில் உட்காரவில்லையே,பெண்ணும் ஆணும் கண்டநேரத்தில் கல்யாணம் செய்துகொள்ளவில்லையே அததற்கான காலம் இருக்கிறது நண்பரே என்று தொடங்கினார்.பிறகு உலகின் மிகச்சிறந்த மேற்கோள்களெல்லாம் வரிசைப்படுத்தினார் ஆனால் அடியில் பூகோளனை அளந்துகொண்டேயிருந்தார். நமது மாவட்ட இலக்கு இரண்டாயிரம் மரங்கள் தொகுதி வாரியாக எத்தனை மரங்கள் நட்டலாம்யார் யாருக்கு எத்தனை மரம் என்று பங்கீடு நடந்தது.எனக்கு தோது இல்லையே தலவரே  காலங்காலமாக நாங்கள் காங்க்ரீட் வீட்டிலேயே குடியிருந்து வருகிறோம்,மரம் நடத்த தோதான மண்ணும் நிலமும் இல்லையே தலவரே என்றார் கலியமூர்த்தி.அப்போது அவர் கண்கள் கலங்கியிருந்தது. மரம் நடவேண்டும் என்கிற உங்கள் இந்த ஆதங்கமே விழாவின் வெற்றி வீட்டுத்தொட்டியில்  நாலைந்து நடுங்கள் என்று ஆலோசனை வந்தது. ஆஹா ஆஹா அடிச்சாம் பாரு சிக்சரு தலைவர்னா தலைவர்தான், இப்படியாப்பட்ட தலைவர்களால்தான் இந்த இயக்கம் செழுமையடைகிறது இல்லையா என்று புழகாங்கிதப்பட்டார் மனிதநேயன்.பூகோளனின் முறைவந்தது சொல்லுங்க பூகோளன் நீங்க தான் இதற்குச்சரியான போர்வாள் எத்தனை நட்டுவீர்கள்.இருப்பது ஒரே ஒரு ஓட்டுவீடு நடக்கிற சர்க்கார் ரோடுதான் சொந்த நிலம் வேறில்லையே என்றான்.

புறம்போக்கு நிலத்தில் நடுங்கள் உங்களுக்கு ஐநூறு விழா மேடையில் அதற்குறிய பாராட்டும் பத்திரமும் முறையே வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். கூட்டம் ஆம் ஆம் என்று ஆரவாரித்தது,மேகங்கள் முழங்கின மின்னல் வெட்டியது. கூட்டம் இனிதே முடிந்தது.மகன் கேட்ட ஜியாமண்ட்ரி பாக்ஸ் ஞாபகம் வந்தது.வெளியே வந்த பூகோளன் தனது டீவிஎஸ் 50 எடுத்து உதைத்தான்.மழை வலுத்திருந்தது பூகோளனைக்கடந்து போன காரில் உட்கார்ந்திருந்த தலைவர் கேட்டார் யாரிவன் கொண்டப்ப நாயக்கன் பட்டி நம்ம கேளப்பருக்குச் சொந்தக்காரனா இல்ல கீழத்தெரு அதற்குப்பிறகான உரையாடல்கள் மட்டறுத்தலில் சிக்கிக்கொண்டு சிதைந்து கீழே விழுந்து சிதறிக்கிடந்தது.

பூகோளன் காலையில் வீஏ ஒ வீட்டுக்குப்போனான்.புறம்போக்கு நிலங்களின் பட்டியல் கேட்டான்.அவை எல்லாமே காலைக்கடன் கழிக்க அவனது தெருக்காரர்கள் போகிற இடமான ஓடை குளம்.அங்கேயே இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்கள் இருந்தன. மஞ்சனத்தி வேலி வேம்பு பூவரசு புளி எல்லாம் ஒரு ஐநூறு இருக்கும் மீதமெல்லாம் வேலிச்செடி. வேலி மரமா செடியா என்கிற கேள்வி எழுந்தது.சாயங்காலம் ஆப்பீசுக்கு போனான்
நிலைய அதிகாரி போல அமர்ந்து கணக்குப் பார்த்துக்கொண்டிருந்த பொறுப்பாளரிடம் விஷயத்தைச் சொன்னான்.அவர் அங்கிருந்து தலைவருக்கு போன்போட்டார் அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை இவர் பதிலில் இருந்து அதைக்கணிக்க முடியவில்லை.பூகோளண்ட பேசுறீங்ளா தம்பி இந்தாங்க தலைவர் ஒங்ககிட்ட பேசனுமாம்.குசலம் விசாரித்து விட்டு வேலிச்செடிகள் பற்றிய தனது விரிவுரையை ஆரம்பித்தார்.அது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும், அது ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தது, அது அழிக்கப்படவேண்டியது என்று முடித்தார்.

ஊருக்குப்போய் பஞ்சாயத்து தலைவரிடம்  விஷயத்தைச்சொன்னான்.அவர் மோவாயைச்சொறிந்தார்.அவருக்கும் அந்த புறம்போக்கு நிலத்தின் மேல் ஒரு கண்.அவரது தாத்தா பஞ்சாயத்து தலைவராக இருந்த போது அதில் நெடுநின்ற நாராயணப்பெருமாள் கோவில் கட்டவேண்டும் என்கிற முயற்சியை
பாலாக்கினார் அப்போதைய ஆர்பிஐ கட்சியின் தென்மாநிலப் பிரதிநிதி சீனிவாசன்.அதற்கு பக்கபலமாக இருந்தார் திராவிடக்கட்சி ரெங்கசாமி .அப்போது நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.கழிப்பறை இல்லாத சனங்களுக்கு அதுதான் புகழிடம் அதையும் அபகரித்தால் அவர்கள் மூனு மைல் நடக்கவேண்டும் என்கிற கலவரக்குரல் சட்டமன்றம் வரை எட்டியது.தீர்ப்பு கோவிலுக்கு எதிராக வந்தது.அதோடு பெரியாரின் தொண்டர்களும்,ஆர்பிஐ யின் தொண்டர்களும் கிராமத்துக்கு வந்து வெற்றிவிழாக்கொண்டாடினார்கள்.அந்தக்கணக்கை நேர்செய்ய இது சரியான தருணமாக இருந்தது.ஆடு வலிய வந்து சிங்கத்திடம் செத்துப்போக தேதி கேட்டது.

பஞ்சாயத்து தலைவர் தனது சதுரங்க படுதாவை விரித்தார்.அதற்கு இணங்காதது போல நாடகம் ஆடினால் பூகோளன்  கட்சிக்காரர்களைக் கூப்பிட்டுக்கொண்டு வருவான் அவர்களிடமும் முரண்டுபிடித்து, பஞ்சாயத்தாகி  தோற்றுப்போவதுபோல ஜெயித்துவிடக் காய் நகர்த்தினார். அப்படியே நடந்தது.அன்றிரவு மரங்களை அப்புறப்படுத்த பஞ்சாயத்துச்செலவிலேயே எர்த்மூவர் கொண்டுவருவது,மறுநாள் வீட்டுக்கொரு ஆள் வந்து குழி பறிப்பது என முடிவானபோது.தங்களுக்குத் தாங்களே குழி பறிக்கிற இந்த விழா குறித்த சேதி காதுகேளாத மரத்திக்கிழவிக்கு எட்டவில்லை.அவள் மட்டுமே நெடுநின்ற பெருமாள் கோவில் கட்டுவது எடுத்த எடுப்பிலே நின்று போன வரலாறு தெரிந்தவள்.மறுநாள் கீழத்தெருவுக்குள் வந்த ரெங்கசாமியின் பேரன் வந்தார் இருக்கிற வேலி மறசலையும் தூர்வாரிவிட்டால் வெளிக்கிருக்க சாத்தூருக்கா போவீக என்று பத்தவைத்துவிட்டுப்போனார். பத்திக்கொண்டது,அதை ஊதிவிட அண்ணா திமுகவின் வார்டு மெம்பர் போதுமானவனாக இருந்தான்.இந்த பிரச்சினைகளை அறிந்த தலைவர் உடனடியாக தலையிட்டு அங்குமட்டும் மரம் நடவேண்டாமென்று உத்தரவுபோட்டுவிட்டார்.

விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தது பூகோளன் பல கட்சிக்காரர்களின் காங்க்ரீட் வீடுகளில் கிடைத்த கையகல நிலத்தில்  குழிதோண்டிக் கொடுத்தான். வசூலுக்குப்போன பரிவாரவாத்தோடு தானும் அதீதி என்கிற மோஸ்தரோடு அலைந்தான்.நடுநிசி தாண்டியே வீட்டுக்கு வந்து படுத்தான்.
உறக்கம் வராத நேரத்தில் சில கவிதைகள் எழுதினான்.கவிதைகள் வராத நேரங்களில் மனையின் தூக்கத்தைக்கலைத்தான். கண்விழிக்கிற நேரம் பைக்கட்டுடன் தயாரக நிற்கும் மகனின் பார்வையை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை.தீபாவளிக்கு ஊருக்குப்போக வெண்டும் என்கிற மனைவியின் வேண்டுதலை அது தமிழ்ப்பண்டிகை இல்லை என்று நிராகரித்தான்.நாங்கொண்டாடல சாமி எங்கம்மா அப்பாவப்பாக்கணும் என்றாள்.
சாப்பாடு என்றான் ஒருநாளைக்கு ஒருதரம் தான வீட்டுல கைநனைக்கீங்க அந்த ஒருதரமும் ஓட்டல்லயே தீத்துக்கங்க என்றான். சாப்பாடு ஓட்டல்ல எல்லாமே ஓட்டல்ல கெடைக்காதே என்றான்.பைக்கடோடு நின்ற பையன் முழித்தான்.அவள் முறைத்தாள்.

சாயங்காலம் வண்டி ஏற்றி விட்டுவிட்டு அப்படியே சைக்கிளை அழுத்தி வசூலுக்குப்போனான்.என்ன பூகோளன் நீங்க இல்லாம வச்சூலே மந்தமா இருக்கு என்றான் வளவராயன்.நிஜமென்று நம்பினான்.என்ன கவிஞரக்காணோமின்னு செங்கக்காலவாசல் ஓனர் திருப்பதி கேட்டார்னே என்றான்
விஸ்வாமித்திரன்.அப்போதுதான் லேசாக உறைத்தது.வல்லபதாஸ் அந்த நேரம் பார்த்து பேச்சை திசை திருப்பினான்.நாள் நெருங்கியது.வசூலும் திட்டமிட்டதற்குமேலே ஆகியது.வாங்கா வானவேடிக்கை,வரவேற்பு வளையம்,தென்னை இலைத்தோரணம் என்று ஊர்திமிலோகப்பட்டது.
கூட்டத்தின் தேவை கருதி ஊர் ஓரமாக ஒரு காலி இடம் அரங்கமாகத் தேர்வானது.அரங்கத்துக்கு பசுமை அரங்கம் எனப்பேரிடப்பட்டது. ஆனால் அங்கே  மஞ்சனத்தி மரங்களும் வேலிகளும்  வளர்ந்து கிடந்தது. பந்தல் பரமசிவம் வந்து புல்டோசர் அமர்த்தி அவற்றைப்பிடுங்கி எறிந்தார்.அதிலிருந்த குருவிகளும் காகங்களும் பூச்சிகளும் எறும்புகளும் இடம்பெயர்ந்தன.மேடை இதுவரை இல்லாத மாதிரி வடிவமைக்க மூளையக்கசக்கினார்கள்.
ஒரு மரத்தை வரைந்தால் அழகாக இருக்குமென்று சொன்னார்கள்.வேண்டாம் ப்ளக்ஸ் போர்டில் வடிவமைத்தால் இன்னும் அழகாக இருக்கும் என்றார்கள். ஏன் ஒரு மரத்தையே கொண்டு வந்து நிறுத்தினால் என்ன என்று வல்லபதாஸ் சொன்னதும் எல்லோரும் அவனைக்கட்டி ஆரத் தழுவிக்கொண்டார்கள். அப்படியே ஆனது.

விழா நடக்க ஆரம்பித்ததும் கூட்டம் கூடியது.சென்னையில் இருந்து வந்த சினிமாப்பாடகர் இந்தியா என்பது ஆலமரம் என்று பாடினார் கேட்டு நெக்குருகிக்கொண்டிருந்தது கூட்டம்.நடுக்கூட்டத்தில் இருந்து ஒரு சித்த சுவாதீனமில்லாதவன்  இந்தியா எனபது....... என்று கெட்டவார்த்தையில் பாடினான். பெண்கள் படித்தவர்கள் முகஞ்சுழித்தார்கள் அவனை அப்புறப் படுத்தி க்கொண்டுபோய் வெட்டப்பட்ட வேலி, மஞ்சனத்திச்செடிகளோடு
கீழே தள்ளிவிட்டார்கள். தலைவர் மேடையில் 2000 ஆவது மரத்தை ஆரவாரத்துக்கு ஊடே முறைப்படி நட்டினார்.

9 comments:

சுந்தர்ஜி said...

எள்ளலும் விமர்சனமும் தூக்கலான இன்றைக்கான தளத்து சிறுகதை காமராஜ்.

மரங்கள் நடலாம்தான். எங்கே என்கிற கேள்வியின் விரிவாய்ச் செல்கிறது சாட்டை சொடுக்கலுடன் ப்ரவாகமான ஒரு நடையில்.

இந்தக் கதை சாதிகளைப் பற்றிப் பேசவில்லை. அதையொட்டிய ஒரு ஆதங்கமிருக்கிறது எனக்கு.

மக்களின் நிறத்தால் பிரிப்பது போலத்தானே சாதியின் பெயரால் பிரிப்பதும்.

அருந்ததியர் என்பதும் காலனி என்பதும் ரெட்டியார்-நாயக்கர்-பார்ப்பனர்-செட்டியார் என்பதும் அன்பை வளர்க்க மட்டுமே உதவட்டுமே.

அவற்றைத் தோற்றுவித்து அவற்றாலேயே குளிர்காயும் வழக்கம் அரசியல்வாதிகளோடேயே ஒழியட்டும்.நாம் மேன்மையான மக்கள்.நமக்குள் இந்த பேதமில்லை எக்காலமும்.

உலகம் தோன்றிய நாள் முதல் உலகின் எல்லா மூலையிலும் நிறம்- இன-மத-சாதி ரீதியான கொடுமைகள் நிகழ்ந்த வண்ணமாய் இருக்கவே இருக்கிறது.

நம்மிலிருந்து எல்லோரையும் நம்மோடு சேர்த்துப் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டுவருவோம்.மக்களைப் பெயரால் அழைப்போம்.அவர்களின் பிரச்சினைகளை சாதி என்கிற வட்டத்திலிருந்தும் விலகி தீர்வு காண்போம்.

சரிதானே காமராஜ்?

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை....

பா.ராஜாராம் said...

ஜிங்கு ஜிங்குன்னு ஆடித் தீர்த்துருக்கீர்- சாமி வந்தது மாதிரி! :-))

superb காமு!

காமராஜ் said...

அன்பின் சுந்தர்ஜி
சுமைகளை இறக்க எள்ளல் ஆகச்சரியான
வழி.
அப்பங்கூழுக்கு அழுதானாம் பிள்ளை கொப்பளிக்க பன்னீர் கேட்டதாம் என்பார்கள். இல்லாமையைச்சொலவடையால் கடத்திய மக்கள்.

நன்றி சுந்தர்ஜீ.

காமராஜ் said...

மனோ அன்பின்மனோ
வணக்கமுங்க.

காமராஜ் said...

வாங்க பாரா
பிடிச்சிருக்கா
எப்படியிருக்குமோன்னு பதறிக்கிட்டே
போட்டுவுட்டேன்.
போதுமய்யா போதும்.

ஓலை(Sethu) said...

Arumainga. Arasiyal thondargal vaazhvu amarkalamaa arengeriyirukkuthu.

ஈரோடு கதிர் said...

தூள்!

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

வாழ்த்துக்கள்..! Title is apt.. :-)