5.5.10

வேரை விரட்டிய மண்

அதோ கண்மாய்த் தண்ணீரில் மூன்று மணி நேரம் கும்மாளம் போடும் ஆறு சிறுவர்களில் ஒருவன் சாலமுத்து. அவன் யார் என்பதை  புதியவர்கள் கண்டுபிடிக்க முடியாது. ஏன் கண்டுபிடிக்க வேண்டும். விளையாண்டு முடித்து எல்லோரும் அவரவர் வீட்டுக்கு சாப்பிடப் போகும்போது சாலமுத்து மட்டும் அங்கேயே உட்கார்ந்து விடுவான். அப்போது நீங்கள் கண்டுகொள்ளலாம். அல்லது தெற்குக்கரையில் முங்கி வடக்குக்கரையில் வந்து எந்திரிக்கக்கூடிய வல்லமை மிக்க இரண்டு மூன்று பேரில் அந்த ஏழு வயது சாலமுத்து ஒருவன் என்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். அவன் தாயும் தந்தையும் இடுப்புக் கயிறு கட்டுகிற போது வைத்த பெயர் சாலமுத்து. அந்த ஊர் அவனுக்கு வைத்த பெயர் கில்லாடி.கிலாடி என்பது சுத்தமான வடமொழிச் சொல் ஆனாலும் அது இந்த தென்தமிழ் நாட்டுக் கடைக்கோடி கிராமத்துக்குள் எப்படி வந்தது. கிடக்கட்டும். சாலமுத்துக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது.

சாலமுத்து விளையாட்டுக்கள் மட்டிலுமல்ல பெரியவர்களோடு போட்டிபோட்டு வேலை செய்வதிலும் மிக்கக் கெட்டிக்காரன்.ஆஞ்சான் இழுப்பது அந்தக் காலத்தில் ரொம்பக் கஷ்டமான வேலை. கிணறு தோண்டும்போது உடைபடுகிற கல்லும் ஜல்லியும் வெளியே கொண்டுவர தண்ணீர் இறைக்கிற கமலையில் கூடைகளைக் கட்டிவைத்து மனிதர்கள் மாடுகள் போல முன்னோக்கி கமலைக் குழியில் இழுக்கவேண்டும். கல் ஜல்லிகளை ஒரு நபர் மேலே வாங்கி இறக்கிவைக்க இன்னொருவர் துக்கிசுமந்து கொண்டு போய் தட்ட வேண்டும். இந்த வேலைகளுக்கு வலிமையுள்ள பெண்ணும் ஆணும் மட்டுமே போவார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற நேரங்களில் சாலமுத்து உவந்து வந்து தன்னை மாடாக்கிக் கொள்வான். முரட்டுப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நிகராக அதை கச்சிதமாகச் செய்துமுடிப்பான். மேலக்குடி சம்முகம் பிள்ளை மனைவி  வீட்டிலிருந்த அந்த வெள்ளிக் குடத்தை கை தவறிக் கிணத்தில் போட்டு விட்டாள். காலையில் விழுந்த அந்தக்குடத்தை பாதாள கரண்டி கொண்டு துழாவி துழாவி எடுக்கவே முடியவில்லை.

 " குதிச்சு கொடத்த எடுடா ஒன்ன கயறு கட்டித் தூக்கிருவோம் "

 என்று  யாரோ சொன்ன மறுகணமே உள்ளே குதித்துவிட்டான் அந்தப் படியில்லாத கிணற்றில். வெள்ளிக்குடம் முதலில் கைக்கு வர இரண்டாவது தன்னை கயிற்றால் கட்டத்தெரியாத சாலமுத்து அந்தக் கயிற்றைப்பிடித்து. உன்னி உன்னி மேலேறிய காட்சி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஊரின் பேசு பொருளானது. மலையகத்தி மரத்தின் உச்சிக்கிளையில் உட்கார்ந்து கொன்டு பறக்கமறந்து கத்திக்கொண்டிருந்த சின்னச்சாமி வீட்டுக் கிளியை பத்திரமாக இறக்கிக்கொண்டு வந்தபோதுதான் கூட்டத்துக்குள்ளிருந்த சன்னாசிக் கிழவன் " எலே நீ கில்லாடிதாண்டா" என்று சொன்னார். மறுகனமே சாலமுத்து என்கிற அவனது பெயர் ஊரின் பதிவுகளில் கில்லாடியாக மாற்றமானது.

தனது ஆறாவது வயதில் ஒரு பழைய மஞ்சள் பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் போக எத்தனித்த போது அவனை அப்பனும் அம்மையும் வினோதமாகப் பார்த்தார்கள். தனது விளையாட்டுத் தோழன் தேவேந்திரனோடு தானும் படிக்கப் போகவெண்டும் என்னும் அவனது ஆசையைச் சொன்னான். அம்பட்டப்பயலுக்கு படிப்பெதுக்கு, கழுத நெனச்சதாங் கந்தழுங் கதக்களும்  என்று சொலவடையால் மண்ணள்ளிப் போட்டாள் அவனது அம்மை. கஞ்சி தண்ணி குடியாம அன்று முழுக்க அழுத சாலமுத்துவால் எதுவும் சாதிக்கமுடியவில்லை.


தேவேந்திரன் என்றால் சாலமுத்துவுக்கு உசுரு.ரெண்டுபேரும் காட்டுக்குள் போனால் கஞ்சித்தண்ணி மறந்து திரிவார்கள்.பொட்டக்காட்டுக்குப் போய் பனைகளில் ஏறி நுங்கு பறித்துப்போடுவது சாலமுத்துவின் வேலை
அதைச் சீவித் தருவது தெவேந்திரனின் வேலை. கவட்டைக் கல்லடித்து குருவி பிடிப்பது சாலமுத்துவின் வேலை.அதைச்சூட்டாம் போடுவது,மொட்டைக் கிணறுகளில் இறங்கி மைனாக்குஞ்சுகள் எடுத்து  வருவது, புறாக்குஞ்சுகள் எடுத்து வருவது அதற்குக்கூண்டு  தயாரிப்பது தேவேந்திரன்.தேவேந்திரனின் வீட்டில் கடும் பிராதாகிப்போனாது.அவனோடு சேரக்கூடாதென்று கால் கையயெல்லாம் கெட்டிபோட்டுப் பார்த்தார்கள்.அடி உதை சூடெல்லாம் செனாய்க்கல. "எந்த நேரமும் அவங்கூடயே சுத்திக்கிட்டு அலைஅயிறயே நீயு ஊர்க்கஞ்சி ருசி கண்டுக்கிட்டயா" என்றெல்லாம் கேட்டுப்பார்த்தார்கள் நட்பின் ருசியறியாப்பெற்றோர்கள். "அப்புறம் என்னவேனாத் தொலஞ்சி போ அவன வீட்டுக்குள்ள மட்டுங்கூட்டியாறாத " எனும் புரிந்துணவு ஒப்பந்தத்தோடு முடித்துக்கொண்டார்கள்.சாலமுத்துவீட்டில் தேவேந்திரரனைத் தடுக்கிற பெருஞ்சுவரேதும் எழுப்பப்படவில்லை.இருக்கிற பலகஞ்சியில் நல்ல கஞ்சியாக ஒதுக்கியெடுத்து,வட்டப்பிளேட்டை விளக்கிக்கழுவி உப்புத்தண்ணி ஆனம் வச்சு ஒரு சாமிக்குப்படைப்பதுபோலப் படைப்பார்கள்.என்ன பண்டமிருந்தாலும் முதல் பங்கு தேவேந்திரனுக்குத்தான்.

"யெய்யா ஏ சாமி கண்ணுதொறக்காத குஞ்சுகள மட்டும் கொண்டராதீக"
"ஏ லச்சுமிம்மா"
"தாக்குருவி கெடந்து அலையும்யா,பிள்ளயுந்தாயு பிச்ச பாவம் நமக்கு வேண்டா"

சாலமுத்தோட அம்மா சொன்னதுக்கப்புறம் அவர்கள் அப்படிச்செய்யவேயில்லை.ஆனாலும் ஊர் சாலமுத்துவையும்
தேவேந்திரனையும் பிரித்தேவிட்டது.பக்கத்து வீட்டுச் சண்டையில்

"பெத்தபிள்ளய வளக்கத்துப்பில்ல வண்ணாக்குடியில ஊர்க் கஞ்சிகுடிக்க வச்சிக்கிட்டு ரோச.. பாரு"

என்று வஞ்ச வசவு மறுநாளே  பூதமாகிப் பிரித்தது.சாலமுத்து வீட்டுக்குப்போய் தேவேந்திரனின் அம்மை பேயாட்டம் ஆடினாள்.அடிக்க அடிக்க ஓடினாள்,அன்றிலிருந்து  தேவேந்திரனும் அவனும் எதிரெதிர் பார்த்தாலும் சண்டை ஞாபகத்தில் வர விலகிப் போனார்கள்.சாலமுத்துவுக்கு ஒரு வாரம் காய்ச்சலடித்தது.காட்டுக்குள் அலைந்து காத்துக் கருப்பப்பாத்துப் பயந்திருப்பானென்று சுடல மாடசாமி கோயில் திருநீறு போட்டார்கள்.காலம் கறைத்து விட்ட நினைவுகளில்,வயிறு நிறப்புகிற நிர்ப்பந்தத்தில் தேவேந்திரனுக்கான இடம் காலியாகவே கிடந்தது.

எதாவது சினிமாப்பாடலைப் பாடிக்கொண்டும் சீட்டியடித்துக் கொண்டும் அவனுக்கிட்ட வேலைகளில் முழுகிப் போகும் அவனைஅந்த ஊருக்குப்பிடிக்கும். ஆனால் அவன் சோட்டுப் பையன்களுக்குத் தான் பிடிக்கவே பிடிக்காது. ஜெயித்துவிடுவான் என்கிற பயத்தில் அவன் புறந்தள்ளப்படுவான். ஒரு சின்ன முகமாற்றத்துக்குப்
பின் இயல்பாகி இன்னொரு வேலையில் அந்த ஒதுக்குதலை ஒதுக்கிவிடுவான். பங்குனிப்பொங்கல் முடிந்ததும் காடும் ஊரும் கிணறுகளும் கருகிப்போகிற வெயிலடிக்கும்.வெள்ளாமை எடுத்த பின் நிலத்துக்காரர்கள் திரும்பிப் பார்க்காத வெற்றுக் காடுகளில் வெள்ளெலி தேடி மம்பட்டியோடு பயணம் போகிற சாலமுத்துவின் அய்யா மருதய்யாவின் பின்னால் கட்டாயம் அவனிருப்பான். அன்றும்கூட நல்ல பாம்பு எலிப்பொந்துக் குள்ளிருந்து வெளியேறியதும் கையிலிருந்த வேலிக்கம்பால் படக்கென தலையை அமுக்கி தந்தையின் உயிர் காத்த சாலமுத்துக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க யாரும் அவதானிக்கவில்லை. அது அவசியமில்லை என்பதே அந்த ஊரும் அவனது பெற்றோரும் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கம்.

'' சோவிவி....ஏ சோவி....ய்யாங் "

என்று ராகம் பாடிக்கொண்டே பிழிந்து, முறுக்கேறிய அழுக்கற்ற துணிகளை தூக்கி
வீசுகிற அய்யாவின் வேகத்தை கையில் ஏந்திப்பிடித்து, ஓடிப்போய் உதறிக் காயப்போடுகிற லாவகம் கற்றுக்கொண்டான் இளவயதிலேயே. முன்னங்கால்களைக் கட்டிப்போட்டபின் காடுகளில் மேயப்போகும் கழுதைகள் தத்தித் தத்திக் கடந்து போகும். அப்போது அதன் கழுத்தில் சேலையைச்சுற்றி கால்கட்டை அவிழ்த்து விட்டு தாவி ஏறி முதுகில் அமர்ந்து விரட்டி ஒரு சுற்று ஓட்டிவருவான். தனது முப்பது வயது அனுபவத்தில் மருதைய்யாவுக்கு வராத லாவகம் அவனிடம் இருக்கும். ஊரே பொறாமைப்படும் ஒரு ராஜகுமாரனைப் போல கழுதையின் வேகத்துக்கு காலை விரித்துக்கொண்டு குதித்து குதித்துப் பவனி வரும் அவனை ஓரக்கண்ணால் பார்த்து மார்பு குறுகுறுக்க சந்தோசம் எய்துவாள் அவன் அம்மை. அப்படிப்பட்ட ஒரு புத்திக் கூர்மையானவன் இந்த வண்ணாக்குடியில் வந்து பிறந்துவிட்டானே என்று எண்ணியபடி துணியை யய்.. யய் என்று அடிவயிற்றுக் குரலோடு துவைப்பார் மருதய்யா.

பசிக்கிற நேரமெல்லாம் கஞ்சி குடிக்கவும் மீதி நேரங்கள் முழுவதையும் உழைக்கப் பயன்படுத்துகிற அந்தக்குடும்பத்தில் சாலமுத்துவுக்கு அப்பனின் தொழிலே விளையாட்டாக மாறியது.  கழுதை மூத்திர நெடியும், உவர்மண்ணின் வாசமும் கலந்து கிடக்கிற வீட்டின் இருண்ட மூளையில், அழுக்குத்துணிகளின் மேல் ரட்டினக்கால் போட்டுத்தூங்குவான். கரட்டாண்டிகளையும், சில்லான்களையும் அடித்து விரட்டி ஓடுவான். கம்மாக்கரையில் தண்ணீரின் அலம்பலில் கரை ஒதுங்கும் நண்டுகளை விரட்டுவான். நண்டுப் பொந்துக்குள் அனாயசமாகக் கைவிட்டு  பிடிக்கும் போது கடிக்கிற நண்டுகளை அப்பன் அம்மையிடம் காண்பித்துச் சிரிப்பான். வெளுத்த துணிகளைப்பிரித்து வீடுவாரியாக மருதய்யா தரும்போது சிரட்டையில் இருக்கும் கருப்பு மசியால் குறியிடுவது அவனது விளையாட்டாகவும் வேலையாகவும் கடக்கும். இரவு நேரங்களில் கஞ்சியெடுக்கப் போகும் தன் தாயோடு போவதே அவனுக்கு விருப்பமான நேரம்.

இரவென்றால்

'' எம்மா கஞ்..சி போடுங்கம்.....மா ''   என்று பசிக்குரலில் இறைஞ்ச வேண்டும்.

பகலென்றால்

" எம்மா கஞ்சி போடுங்கம்மா, அழுக்கெடுத்துப் போடுங்கம்மா "

என்று மறக்காமல் சொல்லவேண்டும். அழுக்குத்துணிகளை எடுத்து எண்ணி ஒரு மூட்டையாகக் கட்டிப்போட்டு பத்து வீட்டுக்கு இடையில் ஒரு திண்ணையில் வைக்கவேண்டும். இந்த வேலைகளுக் கிடையில் சுடுசோறு போடுகிற வீட்டில் உட்கார்ந்து கொஞ்சம் குழம்பும் கேட்டுவாங்கி சாப்பிட நேர்கிற தருணத்துக்காக சாலமுத்துவின் வயிறு கிடந்து ஏங்கும், இறையும். வாத்தியார் வீடு, சிங்கம்மக்கா வீடு, பிரெசிடெண்ட் வீடு, பூச்சம்மா வீடு என்று ஒரு பத்து வீடு சுடு சோறு கிடைக்கிற வீடுகள். காந்தன் வீட்டிலும், கருப்பன் வீட்டிலும் இவர்களுக்குப் போடுவதற்கென்றே முந்திய நாளின் சலிச்சுப்போன பழய்ய கஞ்சியை எடுத்து வைத்திருப்பார்கள்.

" ஏம்மா ரெண்டுமைல் நடந்து அழுக்குத் துணிகளையும் தீட்டுத்துணிகளையும் தொவச்சித்தர்ர எங்களுக்கு சம்பளமா தாயி குடுக்கீக, இந்த கஞ்சிதானம்மா போடுதிக, பன்னிகூடக் குடிக்காத இந்தக்கஞ்சிய மெனக்கெட்டு எடுத்துவச்சிருக்யே நாச்சியா"

சொன்ன மறுகணமே சண்டை வெடிக்கும்,

 '' மத்தவள மாரி பகுலுக்காக சுடு சோறு போடமிடியாது, இருக்றதத்தாம் போடுவம், இஷ்டமின்னா வாங்கு
இல்லாட்டா ஓடு ",

" ஏம்மா பிச்சயா கேக்காக, வெளுத்ததுக்கு கூலி தானம்மா இந்த எச்சி சோறு''

" எச்சி சோறா என்ன ராங்கியாப்பேசுறா பாரு, எல்லா இந்த தங்கிலியாங் குடுக்கிற தெம்பு, வண்ணாக்.... திமிரப்பாரு"

இப்படித்தினம் ஒரு வீட்டில் எச்சிச்சோத்தோடு அவமானத்தையும் சேர்த்து வாங்கிக்கொண்டு வந்து வயிறு நிறப்பவெண்டும். இது சாலமுத்துவுக்கு புரிந்தும் புரியாமலும் காலம் நடந்தது. பிள்ளைப்பெத்த வீடுகளிலும், பெரிய மனுஷியான வீடுகளிலும் இருந்து மறுநாள் காலை ஒரு ஆள் வரும். வந்து மாத்து துணி எடுத்துட்டுப்போ என்கிற கட்டளையை வாசலில் நின்று பிறப்பித்துவிட்டு திரும்பும். கைவேலைகளைப் போட்டது போட்டபடி விட்டு விட்டுப் போகவேண்டும். அப்படியான நாட்களில் சாலமுத்து தான் அம்மாவோடு போவன் எதாவதொரு மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்த வெடவெடத்த சேலையை அம்மாதான் எடுத்து ஒரு வேலிக்குச்சியில் தலைப்பாகை கட்டுவதுபோல சுற்றுவாள்.பார்ப்பதற்கு கருணாகர நாடார் பஞ்சுமிட்டாயை குச்சியில் சுற்றித்தருகிறது போல அவனுக்குத் தோன்றும். அம்மையிடம் அதை நான் சுற்றுகிறேன் என்று கேட்பான்

'' சின்னப்பிளைக இத தொடக்கூடாது ''

'' போன வாரம் கூட இதே வீட்டில் இதே குறி போட்ட சேலையை நாந்தான எடுத்து அழுக்கு கட்டிவச்சே இப்ப ஏ வேண்டாங்க ''

" சின்னப்பிள்ளைக தொடக்கூடாதுன்னா, தொடப்பிடாது, தொனத்தொனன்னுக்கிட்டு, இந்தா போ, வட்ட ரொட்டி வாங்கித்திண்ணு"

என்று சொல்லி பத்துப்பைசாவை சுருக்குப்பையிலிருந்து எடுத்து எறிவாள்.தனது கேள்விகள் திசை திருப்பப் பட்டதறியாமல் கடைக்கு ஓடுவான். வீட்டிலும் அந்த சேலையை  ஒதுக்கி வைத்திருப்பாள். அன்றே சலவைத் துரைக்கு எடுத்துச்செல்லும் அவள் அப்பனையும் தொட விடமாட்டாள். தானே துவைத்து அதை மட்டும்தனியாக எடுத்து வைப்பதன் மர்மம் புரியாமல் அவனது சிறு பிராயம் கழிந்தது.

" நா தா சின்னப்பிள்ள அப்பனயு தொடவிடமாட்டேங்றே"
" இப்டியெல்லா கேட்டா சாமி கண்ணக்குத்திரு, பேசாமக்கெட "

சாமி பயத்தில் கொஞ்ச நாள் கழிந்தது. ஆனாலும் சுற்றிவைத்திருக்கும் வெடவெடத்த சேலையின் புதிர் புரியாத நமச்சல். நெடுநாள் அவனை சீண்டிக்கொண்டிருந்தது. அப்பனம்மை இல்லாத நாட்களில் இருட்டியபிறகும்கூட சுடுகாட்டுவழியாக கழுதை பத்திக்கொண்டு சாவகாசமாக வரும் அவனுக்குள் சாமி குத்தத்தை சந்தித்துவிடுவதென தீர்மானம் எழுந்தது. ஆளற்ற ஒரு நாளில் கனகமனியம்மா வீட்டில் இருந்து ஆள்வந்து மாத்துத்துணி டுக்க வேண்டுமெனச் சொல்லிப்போக விடுவிடுவென சாலமுத்து பின்னாலே போனான். அன்று சாயங்காலம் கையில் கிடைத்த வேலிக்குச்சியால் செனந்தீரப்போட்டு வெளுத்தாள்.கடைசியில் ." அது தீட்டுத்துணி நீதொடப்பிடாதுன்னு சொன்னாலுங்கேக்க மாட்டுக்யேடா" அவனைக்கட்டிக்கொண்டு அழுதாள். அந்தக்குடும்பத்தின் மீது கவிழ்ந்திருக்கிற யுகாந்திர அழுக்கின் முடைநாற்றம் தெரியத்தொடங்கிய நாள் அது.

இன்னொரு நாள் மழை பெய்து ஓய்ந்த நேரத்தில் செவக்காட்டு தரிசில் அமுக்குச்சண்டை விளையாட்டு நடந்தது. விளையாட்டு விதிப்படி, அடிக்கக்கூடாது, குத்தக்கூடாது, கிள்ளக்கூடாது காலை வாரிவிட்டு விழவைத்து, எதிராளியின் மேல் உட்கார வேண்டும் இதையெல்லாம் கண்கானிக்க தங்கச்சாமி ரெபிரியாக இருந்தார். ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்த்த சாலமுத்துவை வம்பிழுத்த அவனை விட நான்கு வயது மூத்த சிங்கராஜை மக்காடச் சேத்து தூக்கி அமுக்கிவிட்டான்.சுற்றியிருந்தவர்கள் சிரித்ததில் ரோசப்பட்டு அடித்தான் சிங்கராஜ். அடிபொறுக்காத சாலமுத்து கல்லெடுத்து எறிந்து மண்டையுடைந்து போனதில் நாலு நாள் சண்டை ஊர்க்கூட்டம் என்று அமர்க்கலமானது. இறுதியில் மருதய்யா காலில் விழுந்து அபராதம் கட்டவேண்டியதானது. அன்று இரவு முழுவதும் குடும்பம்  உட்கார்ந்து அவனுக்குச் சில உபாயங்கள் சொல்லித் தந்தார்கள். நிறய்ய விசயங்கள் புரியாமல் போனது. இந்த ஊரு பூராம் வேற, நம்ம வேற. என்று சொன்ன வார்த்தைகள் அவனுக்கெப்படிப் புரியும்.

மறு வாரம் சாத்தூரில் கல்யாணவீட்டுக்குப் போனார்கள். அவனது மாமா வீட்டில் அழுக்குத்துணிகள் இல்லாமல் இருந்தது. இரண்டு மூன்று அறைகள் கொண்ட அந்தவீட்டில் காத்தாடியும், ரேடியோப்பெட்டியும் இருந்தது. மூன்று வேளையும் சோறு பொங்கினார்கள். காலையிலும்   மாலையிலும் டீக்கடையில் பால்காப்பி வாங்கிக் குடிக்கத் தந்தார்கள். ஒரு இரவில் எல்லோருமாகச் சேர்ந்து சினிமாவுக்குப் போனார்கள். மாமாவின் மகன் காக்கிக்கலர் டவுசரும்,வெள்ளைச் சட்டையும் போட்டுக் கொண்டு புத்தகப்பை தூக்கி நடந்து போவதை இவனது குடும்பம் பூரித்துப்போய் பார்த்தது. அங்கேயே தங்கிவிட ஆசைப்பட்டவனை அடித்து இழுத்து மீண்டும் பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்தார்கள். பின்னர் வருசம் ஒரு தரமாவது கல்யாணம் பொங்கல் என சாத்தூர் போவதே அவனது கனவாகவும் வாழ்நாள் சாதனையாகவும் கடந்தது.

மூக்குக்குகீழே உதட்டில் ரோமங்கள் வளர ஆரம்பித்தநாட்களில் வெகு நேரம் கண்ணாடியில் அதைப் பார்த்துப் பூரித்துக் கிடந்தான். எட்டாத உயரத்தில் இருந்த வீட்டு ஜன்னல் இப்போது எட்டியது. அதன் வழியே அன்னாமலைச்சாமிநாடார் பம்புசெட்டில் குளிக்கிற பெண்களை பார்க்கிற தருணங்கள் வாய்த்தது. திருத்தங்கல்லிலிருந்து  வருசாவருசம் குலசாமி கும்பிட வரும் முனியாண்டிமகள் காளியம்மா இப்போதெல்லாம் அவனிடமிருந்து எட்ட நின்றே பேசினாள். டவுசர் பாவாடை இல்லாமல் இருவரும் கம்மாத் தண்ணியில் குதியாட்டம் போட்டது, அவளுக்கு இவன் நீச்சல் சொல்லிக் கொடுத்ததெல்லாம் பழைய காலங்களானது. அவளது கழுத்துக்குக் கீழே நிலைத்து விடுகிற இவனது பார்வை அப்போது இவனுக்குள் வெப்பம் படரும். தனியாக பீடி வாங்கிப் பதுக்கி வைத்துக் குடிக்கிற சாலமுத்துவின் கனவில் எப்படியும் ஒரு பெண் வந்தே தீருவாள்.

இப்போதெல்லாம் அவன் கஞ்சி வாங்கப்போவதில்லை. குமரிப்பிள்ளைகள் இருக்கிற வீடுகளின் முன்னாள் நின்று எம்மா கஞ்சிபோடுங்கம்மா என்று குரலெழுப்புவது லாஞ்சனையான விஷயமாகக் கருதினான்.அம்மையும் அப்பனும் இல்லாத ஒரு நாளில்  கஞ்சி வாங்கப்போய்விட்டு, திரும்ப வந்து

 " இந்தப்பொழப்புக்கு மருந்தக்குடிச்சி செத்துப்போகலாம் "

என்றுசொல்லி நங் என்று கஞ்சிப் பானையைகீழே வைத்தான். துறைக்குப்போவது துணி வெளுக்கிற வேலைகளில் ஒத்தாசனையாக இருப்பது எல்லாம் இனி தன்னால் செய்யமுடியாது என்று சொன்னபோது.

 " பின்னெ அங்கெ ஒனக்கு கலெக்டர் வேல காத்திருக்காக்கும், வண்ணாக்குடில பெறந்துட்டு நீ என்ன பெரிய்ய அய்யரு வீட்டு பிள்ள மாதிரிப் பவுசு பாக்கெ''

மருதய்யா அவனை அடிக்க ஓடினார். தடுத்த அம்மையின் மேல் விழுந்த அடியில் மனம் வெதும்பி அன்று மட்டும் துறைக்குப் போனான். அன்று இரவு வெள்ளாவிக்கு முன்னாள் உட்கார்ந்து தீவிர சிந்தனை கொண்டான்.

மறுநாள் அனந்தபுரி துரித வண்டியில் நெரிசலுக்கு மத்தியில் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான். நின்றிருந்த பயணி ஒருவர் உட்கார்ந்திருந்தவரோடு சண்டைபோட்டார். பக்கத்தில் இருந்த கனவான் அவனை ஒதுங்கி நிற்கச் சொன்னார். அவன் ஒற்றைக் காலில் நிற்பதைச் சொன்னான்.ரொம்ப நேரம் சலித்துக்கொண்டு வந்தார். இன்னும் கூடுதலாக இரண்டு வண்டி விடலாமே என்னும் தனது  யோசனயையும் சொன்னார்.  இப்படி ஆளாலுக்கு குரைபட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த நெரிசல் அவனுக்கு உலகச் சந்தோசமாக இருந்தது. அவனுக்குப் பின்னால் நின்றிருந்த பெண்ணின் கை அவன் மேல் பட்டது ஒதுங்கிக் கொண்டான்.அதனால் என்னப்பா நா ஒங்கம்மா போல என்று சொன்னாள் அவனுக்கு கண்ணில் நீர் கோர்த்தது.

மதுரையில் இறங்கி ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து தந்தான். அப்போதிருந்து அந்தப்பெண் அவனோடு பேச ஆரம்பித்தது. சென்னையில் அவனுக்கு யாரும் தெரியாது, சென்னையே தெரியாது என்பதைச் சொனான். செங்கல்பட்டில் வண்டி நிற்கும்போது காலை மணி எட்டாகி விட்டிருந்தது. அந்த அம்மாவுக்கு இட்லிப் பொட்டலம் வாங்கிக் கொடுத்தான்.கூட்டம் குறைந்து உட்காரும் இருக்கைகள் காலியாகக்கிடந்தது."வாப்பா தம்பி ..ஏ தம்பி, முத்து ஒன்யத்தான் வந்து இங்க உக்காரு" அந்தம்மா கூப்பிட்டார்கள்.நெளிந்தான்."வா ஏம்பையம் மாதிரி" சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் உட்காரச் சொன்னார்கள்.அவனுக்குப் பயமாக இருந்தது.ஒரு ஒதுக்குப்புறத்தில் அறைப்பிருஷ்டம் பதிய உட்கார்ந்தான்."நல்லா ஒக்காரு இந்தா நீ ரெண்டு இட்லி திண்ணு" மைனாக் குஞ்சுச் சத்தம் ஒலித்தது.இனி ஊர் திரும்புவதில்லை என்கிற தீர்க்கமான முடிவோடு செங்கல்ப்பட்டிலிருந்து ரயில் நகர்ந்தது.

25 comments:

vasu balaji said...

சாலமுத்து மனசுல அழுத்தமா உக்காந்துட்டார். அம்மோவ். என்ன ஒரு வீச்சு. கி.ரா.வின் அழுத்தம் ரொம்ப நாளைக்கப்புறம் அனுபவிக்கிறேன். மனசு சுகிச்சிப் போச்சு உங்க எழுத்தில். நன்றி காமராஜ்.

எல் கே said...

arumai sir

க.பாலாசி said...

மண்ணுடன் சேர்த்துக்குழைத்த கதை... எத்தனைவிதமான புது வார்த்தைகள்..

//'' எம்மா கஞ்..சி போடுங்கம்.....மா '' என்று பசிக்குரலில் இறைஞ்ச வேண்டும்.//

இப்படித்தான் கஞ்சி வாங்குவார்கள் என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். காலம் கடந்து வந்துவிட்டேன்.

இப்படியான குரல்களையும், ஏக்கங்களையும், மேல்குடிகளின் அதிகாரத்தனத்தையும் கொஞ்சமேனும் இந்தக்காலம் கடத்திவிட்டதையெண்ணி மகிழலாம்.

சாலமுத்துவைச் சுமந்து என் இன்றையப்பொழுது நகர்கிறது.

கடைசியில் தொக்கி நிற்கும் மைனாக்குஞ்சின் சத்தம் இனிமையாகவே இருக்கும் என்று எண்ணுகிறேன்...

Unknown said...

"ஜெயித்துவிடுவான் என்கிற பயத்தில் அவன் புறந்தள்ளப்படுவான். ஒரு சின்ன முகமாற்றத்துக்குப் பின் இயல்பாகி இன்னொரு வேலையில் அந்த ஒதுக்குதலை ஒதுக்கிவிடுவான்".
"கூட்டத்துக்குள்ளிருந்த சன்னாசிக் கிழவன் "எலே நீ கில்லாடிதாண்டா" என்று சொன்னார். மறுகனமே சாலமுத்து என்கிற அவனது பெயர் ஊரின் பதிவுகளில் கில்லாடியாக மாற்றமானது. "ஓரக்கண்ணால் பார்த்து மார்பு குறுகுறுக்க சந்தோசம் எய்துவாள் அவன் அம்மை".
"இறுதியில் மருதய்யா காலில் விழுந்து அபராதம் கட்ட வேண்டியதானது" .
இவற்றை விட இயல்பான வார்த்தைகளால் பாராட்ட நினைத்தாலும்,எல்லோரும் சாலமுத்துவாகி(காமராஜ்) விட முடியாதல்லவா.வாழ்த்துக்கள்.

AkashSankar said...

//கஞ்சி தண்ணி குடியாம அன்று முழுக்க அழுத சாலமுத்துவால் எதுவும் சாதிக்கமுடியவில்லை.//

என் வாழ்கையில் பல சமயம் நடந்திருக்கிறது -- யதார்த்தம்...

சந்தனமுல்லை said...
This comment has been removed by the author.
சந்தனமுல்லை said...

முன்னாடி போட்ட கமெண்ட் தவறுதலாக இங்கே வந்துவிட்டது! கதையை வாசித்துவிட்டு ஒன்றும் தோன்றாமல் கதையையே யோசித்துக்கொண்டு அமர்ந்ததில் நிகழ்ந்த பிசகு! மனம் பாரமாகி இருக்கு..முடிவில் நெகிழ்ந்தாலும்! அருமை அண்ணா..தலைப்பும் தான் எவ்வளவு பொருத்தம்!

பனித்துளி சங்கர் said...

மிகவும் நேர்த்தியான எழுத்து நடை . மீண்டும் கண்முன் நிறுத்தியது இளமைகால நினைவுகளை . பகிர்வுக்கு நன்றி !

பா.ராஜாராம் said...

காமு,

காலையில் வேலை இருந்ததால் வாசிக்காமல் ஓட்டு மட்டும் போட்டு போனேன்.

இப்ப வாசித்திருக்கிறேன்..

ச்சான்சே இல்லை மக்கா..

மீண்டும் வேலை அவசரம்.வந்து விரிவாக மனசு இறக்கணும்.ஒண்ணு மட்டும் சொல்லிப் போகிறேன்.

காலையில் இருந்து நேசன் உட்பட மூன்று பேர் இது குறித்து அழை பேசிவிட்டார்கள்

.todays-talk of the town! congrats buddy!

☼ வெயிலான் said...

ப்ச்! என்ன சொல்லண்ணே?

க ரா said...

சார் நான் சொல்ல நினைத்த வார்த்தையெல்லாம் எல்லாரும் சொல்லிடாங்க. சாலமுத்துவ இப்போதைக்கு ஏன் மன்சுலேந்து இறக்கி வைக்க முடியாது என்னால. ரொம்ப நன்றி காமு சார்.

செ.சரவணக்குமார் said...

பா.ரா ஃபோன்ல சொன்னார் 'நம்ம காமராஜ் தளத்துல ஒரு கதை இருக்கு போய் படிங்க, மிஸ் பண்ணிடாதீங்கன்னு' வந்து வாசிச்சா அப்படியே மனசக் கட்டிப்போடுது கதை.
சாலமுத்து பாத்திரமும், 'இந்த ஊர் பூராம் வேற நாம வேற' என்ற வரியும் நெஞ்சில் ஆழமாகப் பதிகின்றன.

நன்று காமராஜ் அண்ணா.

ஈரோடு கதிர் said...

ஏனோ, திரும்ப திரும்ப ஏதேதோ தட்டித்தட்டி மீண்டும் அழித்து அழித்து பின்னூட்டமிடத் தடுமாறுகிறேன்.

அந்த தலைப்பு மனதை உறுத்திக்கொண்டேயிருக்கிறது...

உங்கள் கைகளை ஏந்தி கண்களில் ஒற்றிக்கொள்ளத் தோன்றுகிறது

*இயற்கை ராஜி* said...

அருமை.. மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது

Unknown said...

படிக்கப் படிக்க மனதில் ஒரு இறுக்கத்தை கொண்டுவந்துட்டிங்க! அருமையாக எழுதி இருக்கீங்க. நன்றி. - சுவாமி

நேசமித்ரன் said...

கோவேறு கழுதைகள்,அகநாழிகையில் வந்த வண்ணான் குறி
அப்புறம்
இந்தக் கதை
**********************
இந்தப் பின்னூட்டம் ஒரு வித மனவியல் தூரத்தில் இருந்து பிறக்கிறது
காமு சார் . புரிந்தால் மிக மகிழச் செய்யும்
*******************



மூடிய இமைகள் சோழிகளாகவும்
திறந்தால் சிப்பிகள் என்றும்
துப்பும் சமுத்திரம்

எலும்பும் பிண்டமும் கரைப்பவனுக்கு
தாம்பூல சன்மானம்
பிறக்காத உயிர் பிரேதமாகும்
பிசுப்பு வெளுப்பதும் பிதுரார்ஜிதம்

நீரெல்லாம் ஆகாசம் போகும்
நிலம் மிஞ்சும் நீச அழுக்கு
உடல் மட்கும் உயிரெல்லாம் காற்றே

இருபது கண்ணில் இரண்டு மட்டும் விழிக்கலாம்
இருந்தும் என்ன
ராவணன் கண்கள்

காமராஜ் said...

அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்.பெயர் பெயராய் நன்றி சொல்லவேண்டும்.பின்னிரவில் வந்து ,பார்த்து, அன்பில் உறங்கிப்போனேன்.

இதுவும் கிட்டத்தட்ட பிரசுரிக்கவா வேண்டாமா என்று யோசித்து பின் விசை இதழுக்கு அனுப்பி காத்திருக்க முடியாமல் பதிவாக வெலியிட்டேன்.

ஒரே காரணம், அந்த கதாநாயகன் சாலமுத்து, பத்துநாட்களுக்கு முன் மரித்துபோனான்.

கரைந்து போன ஏக்கங்களுக்கான எனது சிறிய அஞ்சலி.

ஆடுமாடு said...

நெகிழ்ச்சியான கதை. நல்லாருக்குன்னு சொல்றதைவிட, நெஞ்சை தொட்டதுன்னு சொல்லலாம்.

''ஏம்மா ரெண்டுமைல் நடந்து அழுக்குத் துணிகளையும் தீட்டுத்துணிகளையும் தொவச்சித்தர்ர எங்களுக்கு சம்பளமா தாயி குடுக்கீக//

ஒவ்வொரு அறுவடைக்கு்ம் (பூவுக்கும்) இவர்களுக்கு நெல் உண்டு. அதுமட்டும்தாம் கூலி எங்க பகுதியில்.

வாழ்த்துகள்.

Vidhoosh said...

என்னன்னு எழுத.. நேத்துலேந்து யோசிக்கிறேன். யோசிக்கிறேன்..

சுந்தரா said...

அதே திணறல்தான் எனக்கும்...

வயிற்றில் பிள்ளையும் முதுகில் அழுக்குத்துணி மூட்டையும் சுமந்தபடி, தூக்குச்சட்டியுடன் கூட ஒரு சிறுவனுமாய் வாசநடையில் வந்து நின்றுகொண்டு அழுக்குத்துணி கேட்கும் அந்த அம்மா, விசேஷ நாட்களில் பலகாரத்துக்காக தூக்குச்சட்டியுடன், ஒதுங்கி நிற்கும் அந்தப்பையன்...

நல்லவேளை, இப்ப அதெல்லாம் இல்லை.

Vidhoosh said...

//மூடிய இமைகள் சோழிகளாகவும்
திறந்தால் சிப்பிகள் என்றும்
துப்பும் சமுத்திரம்

எலும்பும் பிண்டமும் கரைப்பவனுக்கு
தாம்பூல சன்மானம்
பிறக்காத உயிர் பிரேதமாகும்
பிசுப்பு வெளுப்பதும் பிதுரார்ஜிதம்

நீரெல்லாம் ஆகாசம் போகும்
நிலம் மிஞ்சும் நீச அழுக்கு
உடல் மட்கும் உயிரெல்லாம் காற்றே

இருபது கண்ணில் இரண்டு மட்டும் விழிக்கலாம்
இருந்தும் என்ன
ராவணன் கண்கள்///


என்னண்ணே... !!!

Unknown said...

"எலும்பும் பிண்டமும் கரைப்பவனுக்கு
தாம்பூல சன்மானம்
பிறக்காத உயிர் பிரேதமாகும்
பிசுப்பு வெளுப்பதும் பிதுரார்ஜிதம்"

Striking lines!!!

பா.ராஜாராம் said...

திருப்பியும் வந்து வாசிச்சேன் மக்கா.

திருப்பியும் வருவேன்.

Vidhoosh said...

இந்த நிகழ்வுக்கு நீங்கள் கொடுத்த தலைப்பு.. இன்னும் மனதில் நெருடிக் கொண்டே இருக்கு. வந்தேன். மீண்டும் வேறு ஏதும் வார்த்தைகள் இல்லாத திகைப்பு மட்டும்.. என்னோடு. :(

பா.ராஜாராம் said...

//மூடிய இமைகள் சோழிகளாகவும்
திறந்தால் சிப்பிகள் என்றும்
துப்பும் சமுத்திரம்

எலும்பும் பிண்டமும் கரைப்பவனுக்கு
தாம்பூல சன்மானம்
பிறக்காத உயிர் பிரேதமாகும்
பிசுப்பு வெளுப்பதும் பிதுரார்ஜிதம்

நீரெல்லாம் ஆகாசம் போகும்
நிலம் மிஞ்சும் நீச அழுக்கு
உடல் மட்கும் உயிரெல்லாம் காற்றே

இருபது கண்ணில் இரண்டு மட்டும் விழிக்கலாம்
இருந்தும் என்ன
ராவணன் கண்கள்//

இப்படி கொழுந்து விட்டு எரிய,முடிந்திருக்கிறதே ரெண்டு ரேஸ்கள்களுக்கும்... :-)