28.5.10

தந்தையர் காடெனும் போதினிலே.

எல்லாம் தயாராக இருந்தது பால் பானையில் மஞ்சள் கட்டலையே என்று அப்பா சொன்னதும் 'நேரம் ஆகுது 7.30 க்குள்ள அடுப்பு பத்தவைக்கணும்'என்று தமிழரசன் சொன்னார். 'மங்கள காரியம்டா மஞ்சள் கட்டணும்ல என்ன  சின்னப்பிள்ளவெளாட்டா இது, மங்களகரமான நாளப்பா'
'எதுக்கு வழக்காடிக்கிட்டு எடுங்க ரெண்டு மஞ்சத்துண்டு, நூல்ல கட்டிர்ரலாம்'
'தாத்தா வேஷ்டில இருக்கிற ப்ரைஸ் ஸ்லிப்ப கிழிக்கலையா'பேத்தி கிண்டலடித்தாள்.
'என்ன வேஷ்டி பெரிய்ய பட்டுவேஷ்டி'மருமகள் ஜீவரத்னம் ஏறிட்டுப்பார்த்தாள்.
'மைக்செட்காரர கொஞ்சம்  நேரத்துக்கு சவுண்டக் கொறைக்கச்சொல்லு'
'ஐயர் வரல்லயா'
'பத்திரிக்க வச்சிருக்கு வருவார்'ஆளாலுக்கு கட்டளைகளும்,ஏவல்களும்,ஓட்டமும் நடையுமாக அந்தப்புதுவீடுலாமளி துமளிப்பட்டது.ஊரிலிருந்து வந்தவர்கள்
'ஏ இங்க பாருவிள குளிக்கிற ரூம்ப. தண்ணி மழ பேய்ற மாதிரிக்கொட்டும்,சலங்கை ஒலில ஜெயப்ரதா குளிக்கும்ல அதும்மாதிரி.'
'கோயில்பட்டில எங்க மாமா வீட்லயு இப்டித்தான் கட்டிருக்காக'.

பால்ராஜிடம் சந்தணம் கறைக்கச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே  சூட டப்பா மறந்து போயிருந்தது. பால்ராஜைக்கூப்பிடுக்கொண்டே பின்னாடி நடந்து போன தமிழரசனுக்கு காந்தி மாமா வீட்டு வாசலில் அம்மா நிற்பது தெரிந்தது. இவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டிருந்தது.தலையைக் கவிழ்த்திக்கொண்டே போய் சாக்குப்பைக்குள்
தேடினான்.
'ஏப்பா சூட டப்பாதான அப்பதயே ஒம்மக கிட்ட குடுத்தாச்சி, நல்லா சாமியெ நெனச்சிக்கிட்டு சந்தோசமா பத்தவையிங்கய்யா மனங்குளுரப்பொங்கும்'.வாசல் வரைக்கும் வந்தவன் திரும்பிப்போய் மடாரென்று தாயின் காலில் விழுந்தான்.'ஏய்யா, இங்கரு வேண்டாமுய்யா, கண்ணத் தொடச்சிக்கோ நல்ல நாளும்பொழுதுமா'
கந்திமாமா வீட்டுப்படியை விட்டு இறங்க மனசில்லை.கொஞ்ச தூரம் நடந்ததும் வேகமெடுத்து ஓடினான்.புதுவீட்டு வாசலில் எல்லாரும் இவனுக்காகக் காத்திருந்தது தெரிந்தது.
'கூறு கீறு இருக்காடா,இண்ணு ரெண்டு நிமிசந்தா இருக்கு,எல்லாத்தியு ரெடியா எடுத்து வச்சிருக்கணுமா இல்லியா '
'சும்மா எதுக்கெடுத்தாலு குதிக்காதிங்கய்யா,நா ஒத்தாளுதான,ஒமக்குத்தா யாரும் ஆகாது'
'நீ என்ன சொல்ற,சிரிக்கியுள்ள'.புது வீடு அதிர்ந்தது.வந்தவர்களின் முகங்கள் கொஞ்சம் வெளிறியது.ஆனால் வனுக்கு பழகிப்போயிருந்தது. 

இருபது வருடங்கள் ஓடிப்போயிருந்தது. சதா சண்டையும்,அடிதடியும் அழுகையுமாக கிடந்த அம்மா பக்கத்துவீட்டு பாக்கியத்தையிடம் வழிச்செலவுக்கு காசு வாங்கிக்கொண்டு ரயிலேறிப் போய்விட்டாள்.பள்ளிக்கூடத்திலிருந்து சாயங்காலம் வீடு திரும்பிய அவனுக்கு அம்மா ஊருக்குப்போனது தெரியவில்லை.சண்டைகளில்லாத வீடு கொஞ்சம் நிம்மதியைத் தந்தது.விளையாடிவிட்டு இரவு சாப்பிட வந்தபோது அப்பா புரோட்டாவும் சால்னாவும் வாங்கிவைத்திருந்தார்.காலையில் எழுந்திருக்கும்போதும் அடுப்பங்கரையில் சட்டியை உருட்டுகிற சத்தமில்லை.வீட்டுக்கும் வாசலுக்குமாக அலையும் அம்மாவின் புலம்பல்களும் இல்லை.வருசத்தில் இரண்டு மூன்று முறை காணாமல்போகும் அம்மா,வெள்ளை மீசைத்தாத்தாவோடு வந்து மூலையில் உட்கார்ந்திருப்பாள்.அப்பா ரெண்டு நாளுக்கு யாரோடும் பேசமாட்டார்.மூணாவது நாள் தாத்தாவுக்கும் சேர்த்து வசவு கிடைக்கும். அப்படிக் காணாமல்போன ஒரு நாளில் அம்மாவோடு போயிருந்தான் கேள்விப்பட்டு வந்த அப்பா பேருந்து நிலையத்தில் வைத்தே அம்மாவை கன்னத்திலடித்துவிட்டு தமிழரசனை இழுத்துக்கொண்டு வந்துவிட்டார்.அதிலிருந்து அம்மா இவனைக் கூட்டிக்கொண்டு போவதில்லை.பிறகு ஒரு மாசத்துக்கு ஓட்டல் சாப்பாடும் பாக்கியத்தை வீட்டுச்சாப்பாடும் தான்.

இப்படியே போகவர இருந்த அம்மா ஒரேயடியாக வரவில்லை.அம்மா எங்கே என்றுகேட்டால் இடுப்புவாறால் அடிவிழும்.அக்கா தலையெடுத்த பிறகு,அம்மாவின் நினைவு நிறையவே வந்தது.அக்கா வயதுக்கு வந்த பின்னாடி அவளைப்படிக்க அனுப்பவில்லை.பக்கத்துவீட்டு கன்னடக்காரனிடம் பேசினாளென்று அன்று அக்காளுக்குக் கிடைத்த அடி கொஞ்ச நஞ்சமல்ல.அம்மாவுக்காவது தாத்தா வீடிருந்தது.அக்கா எங்கே போவாள்.பண்டிகை நாட்களில் ராத்திரி துணிகளும்,பகலில் கசாப்பும் வாங்கிவந்து கொடுத்துவிட்டுப் போகிற அவருக்கென எடுத்துவைத்த சாப்பாடு மறுநாள் நாய்க்கு கொட்டவேண்டும்.அக்கா அப்பாவின் அதிகாரத்துக்கு வளைகிற மாதிரி வளர்க்கப்பட்டாள்.அப்பாவுக்கு சொந்த ஊர் நாகலாபுரம்.எட்டுப்படித்த அவருக்கு பெங்களூர் மில்லில் வேலை.அம்மாவுக்குச் சொந்த ஊர் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள வெங்கடாசலபுரம்.ஆனா,ஆவண்னா தெரியாத ஆட்டுக்காரக் குடும்பம்.  
தண்ணியப்போட்டுவிட்டு வந்து ஆடுமாடு பின்னால அலையிறவதான,என்று சொல்லிவிட்டு தொடர்ந்து கெட்டவார்த்தைகள் உபயோகப்படுத்துவார்.

அப்புறம் அக்காவின் சடங்குக்கு வந்திருந்த அம்மாவை வீட்டுக்குள் நுழைய விடவில்லை.அந்த மில் குடியிருப்பில் பத்துவீடு தள்ளியிருந்த ஒருவீட்டின் மூலையில் உட்கார்ந்திருந்த அம்மாவைப்பர்க்க அக்காவோடு போயிருந்த போது அக்காவின் தலையை வருடிக்கொண்டே அழுதது.ரெண்டு மூக்கிலும் மூக்குத்தி காது வளர்த்திருந்த அம்மாவை எட்டநின்றே பார்த்தான் தமிழரசன்.'எய்யா தம்ழு என்னய்யா படிக்கெ' என்று கேட்டபோது அந்த தமிழ்க் குடும்பம் 'அம்மாட்ட பேசு தமிழ்' என்று பந்தயத்தில் உற்சாகப்படுக்கிற தோரணையில் மொத்தமாய் சொன்னது.ஒங்கப்பா தேடுறார் என்று யாரோ சொல்ல அல்றிப்பிடித்துக்கொண்டு ஓடின  பொழுது பின்னர் அக்க கல்யாணம் வரைக்கும் குசுகுசுப்பேச்சானது. அக்கா பிள்ளைப்பேறுக்கு மமியா வீட்டுக்குபோகிறேனென்று சொல்லி வெங்கடாசலபுரம் போய்விட்டதை அறிந்த அப்பா அக்காவோடு பேசுவதையும் நிறுத்திவிட்டார்.

அப்போது சூலக்கரை ஐடிஐயில் மெக்கானிக் படித்துக்கொண்டிருந்தான்.லீவுக்கு வீட்டுக்குப்போனால் சமைக்கிற வேலை தலையில் விழும்.அக்கா இருந்து பூமணத்த அந்த வீடு மீண்டும் பீடிப்புகையும்,சாராய நெடியும் குடிகொண்ட வீடாகியது.லீவு நாட்களில் காலையிலேயே ரெண்டு தேரத்துக்கும் சேர்த்து ஆக்கிவைத்துவிட்டு.அங்கிருக்கிற மெக்கானிக் செட்டுக்குப் போய்விடுவான்.எப்போதாவது வருகிற அக்கா ஒருவாரம் தங்கியிருப்பாள் அவள் காலடியிலே கிடந்து ஒரு நாளைக்கு நாலைந்து தரம் தின்று தீர்ப்பான்.அத்தானுடனும்,பிள்ளைகளோடும் சினிமாவுக்குப்போய்,கப்பன் பார்க் போய் நாட்கள் திருவிழாவாகக் கழியும்.ஒரு மாசத்துக்கு வருகிற மாதிரி கொறிக்க சீடை,தொட்டுக்க ரெண்டுவகை ஊறுகாய்,காயப்போட்ட கறித்துண்டு எல்லாவற்றையும் எலிப்பொந்தில் சேர்த்துவைத்தமாதிரி சேர்த்துவைத்துவிட்டு போய்விடுவாள்.ரயிலடியில் இருந்து வரமனசில்லாமல், பெஞ்சிலேயே உட்கார்ந்துவிடுவான்.பார்க்கிற பெருவயதுப்பெண்களெல்லாம் தாயாய்த்தெரியும்.வீட்டுக்கு வந்தால் சாமிபடத்திலிருக்கும் பூவுக்கும் கூட மீசை வளர்ந்த மாதிரிதோன்றும்.கிட்டத்தட்ட அம்மா என்றொரு பிம்பம் இல்லாமலே போனது.அவள் வெங்கடாசலபுரத்தில் காட்டு வேலைகள் பார்த்துக்கொண்டு, ஆடுவளர்த்து உயிர் பிடித்துக்கொண்டிருந்தாள்.

சாத்தூரில் வீடு கட்டுவதானால் இருக்கிற பணத்தில் கொஞ்சம் கொடுக்கிறேன் என்று சொன்ன தகப்பனின் சொல்கேட்டு பெரிதாகவே கட்டினான்.ஒருவாரம் லீவுபோட்டு சாத்தூருக்கு வந்து காந்தி மாமா வீட்டில் தங்கி பத்திரிகை கொடுத்தான். முதல்நாள் ராத்திரி வந்த அப்பா அவ வல்லயே என்று கேட்டு சமாதானமாகிக்கொண்டார்.அவரைப் புதுவீட்டு மொட்டை மாடியிலேயே படுக்கவைத்தார்கள்.அம்மாவை அப்பாவுக்குத் தெரியாமல் காந்தி மாமா வீட்டில் ஒளித்து வைத்தார்கள்.காலை பால்காய்ச்சும் பரபரப்பில் தன்னந்தனியாக காந்தி மாமா வீட்டு போர்டிகோவில் இருந்து மகனின் புது வீட்டுத் திசை பார்த்துக்கொண்டிருந்தாள்.

'அது நொள்ள இது இல்லன்னு சொல்லத்தெரியுது பெத்த தாயி இல்லயே அதச்சொல்லத்தெரியுதா மனுசனுக்கு' என மனசுக்குள்ளே புழுங்கிக்கொண்டு பால்காய்ச்சினார்கள்.

12 comments:

ராம்ஜி_யாஹூ said...

இது உண்மையா அல்லது புனைவா என்று தெரிய வில்லை.

உண்மையாக இருக்குமேயானால், அப்படி ஏன் அந்த குழந்தைகள் அந்த தந்தையை பொறுத்து கொள்ள வேண்டும், அவர்கள் அனாதை விடுதிகளில் தங்கி நன்கு படிக்கலாம்.

நீங்கள் பதிவிற்கு பதிவு பாராட்டி எழுதும் கிராம மக்கள், தெரு மக்கள் இந்த தகப்பனின் கொடுமையை கண்டு சந்தோயசப் பட்டதை தவிர வேறு ஏதும் செய்ய வில்லையா.

Mahi_Granny said...

அந்த அப்பாவை ஒன்றும் செய்ய முடியாமல் போயிருக்கலாம் . ஆனால் பிள்ளைகள் அநாதை விடுதியில் வளரவில்லையே .நன்றாக உள்ளது.

vasu balaji said...

போர்ட்டிகோவிலிருந்து நோக்கும் அந்தத் தாயின் வலி நெஞ்சில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டது.

/அது நொள்ள இது இல்லன்னு சொல்லத்தெரியுது பெத்த தாயி இல்லயே அதச்சொல்லத்தெரியுதா மனுசனுக்கு' என மனசுக்குள்ளே புழுங்கிக்கொண்டு பால்காய்ச்சினார்கள்.//

பால் நல்லா பொங்குதோ இல்லையோ. இந்த வரிகளில் கண் பொங்குது.

செ.சரவணக்குமார் said...

கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.. அப்படி ஒரு எழுத்து. ரொம்ப நாள் மனசில் நிற்கும்படியாக ஒரு கதை.

நட்சத்திர வாரத்தை மண்வாசனையோடு அலங்கரிக்கிறீர்கள் காமராஜ் அண்ணா.

தொடருங்கள்..

Hakuna matata said...

//ரயிலடியில் இருந்து வரமனசில்லாமல், பெஞ்சிலேயே உட்கார்ந்துவிடுவான்.பார்க்கிற பெருவயதுப்பெண்களெல்லாம் தாயாய்த்தெரியும்.வீட்டுக்கு வந்தால் சாமிபடத்திலிருக்கும் பூவுக்கும் கூட மீசை வளர்ந்த மாதிரிதோன்றும்.// :-) வாழ்த்துக்கள்!!

ஈரோடு கதிர் said...

என் சின்ன வயதில் பார்த்த ஒரு குடும்பத்தின் கதையாகவே தோன்றுகிறது...

இது போல் ஆயிரமாயிரம் கதைகள் குடும்பம் என்ற கூட்டுக்குள்

க ரா said...

கதை தாயை பிரிந்த மகனின் சோகத்தை சொல்லுகிறது. படிக்கும் நமக்கும் அந்த சோகம் வந்து மனதில் உட்கார்ந்து விடுகிறது.

Unknown said...

பல சமயம் யதார்த்தங்களை நேரில் படிக்கும் போது கதாபாத்திரங்களை நினைத்து மனது கனக்கிறது. இது மாதிரி கதைகள் பலருக்கும் நல்ல பாடமாக அமையும்.
என்ன! நீங்களும் உங்கள் நண்பர் மாதவராஜும் ஒரே மாதிரி கதை கணவன்-மனைவி உறவு பற்றி எழுதி உள்ளீர்கள். நன்றாக உள்ளது. நன்றி.

எம் அப்துல் காதர் said...

உள்ளாடும் உயிர் போல- இந்த தாய், தந்தை, மகன், மகள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட மாட்டர்களா- என்று மனம் துடிக்கிறது. வீடு குடி புகும் போதாவது சேர்த்து வைத்து விடக் கூடாதாய்யா-காமராசய்யா ..

காமராஜ் said...

அப்துல் காதரும்,ராம்ஜியும் சொன்ன விமர்சன ஆதங்கமே இந்தக்கதை. இந்தக் கேள்விகளை அன்று பதினோரு மணிக்கே ஒரு பதினெட்டு வயதுக் கல்லூரிப்பெண் நடுக்கூட்டத்தில் போட்டு உடைத்தாள். இப்போது போலவே,அப்போதும் வயடைத்துப் போயிருந்தது கூட்டத்தோடு அந்தக்கிழவரும்.நன்றி தோழர்களே.

மாதேவி said...

மனத்தை நெகிழவைத்தது.

அன்புடன் அருணா said...

/காலை பால்காய்ச்சும் பரபரப்பில் தன்னந்தனியாக காந்தி மாமா வீட்டு போர்டிகோவில் இருந்து மகனின் புது வீட்டுத் திசைபார்த்துக்கொண்டிருந்தாள்./
மனம் கனத்துப் போனது படித்தவுடன்.