22.10.10

பாரா சம்பாதித்த அன்பெலாம் ஒரே இடத்தில் குவிந்த மகா கல்யாணம்

முன்னமெல்லாம் அந்த ஊர்ப்பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கண்ணதாசனும்,ஜெமினிக்கனேசனும்,பத்மினியும்  நிழலாடுவது தவிர்க்கமுடியாததாகிப்போகும்.மண் சிவந்துகிடக்கும் காடுகள்,மணாவரி மனிதர்கள் புழுதிபறக்கும் சாலைகளோடு பார்த்த ஊர். இனி சிவகங்கை என்றால் அந்த பிம்பங்களெல்லாம் பின்னுக்குத்தள்ளப்பட்டு எங்கள் ப்ரிய பாரா வும் அவர் குடும்பமும் மட்டுமே முதலில் வந்து இடம்பிடிக்கும்.ஒரு ஊரால்,ஒரு இனத்தால்,ஒரு உத்தியோகத்தால் கூடுகிற தன்மைகளில் இருந்து பரிணாமாமெடுத்து வலையெழுத்தால் பிணைக்கப்பட்ட ஒரு வானவில் உருவாகியிருக்கிறது.எழுத்திலும் குரலிலும் ஸ்பரிசித்த மனிதர்கள் நேரில் பிரசன்னமாகும் போது ஏற்படும் கண்ணின் தகவமைதல் போன்ற கணத்தை   இதுவரை இலக்கியங்கள் எதுவும் பதிவு செய்திருக்கிறதா எனத்தெரியவில்லை.ஆனால் இது ஒரு புது அனுபவம்.

வலைப்பக்க சுயவிபரத்தில் இருக்கும் நிழற்படங்கள் ஒரு பக்க பரிமாணத்தைத்தான் காண்பிக்கும் என்பதை நேரில் பார்க்கையில் ஒருவருக்கொருவர் உற்சாகத்தோடு பகிர்ந்து கொண்ட நேரம்.ராஜசுந்தாராஜன் அண்ணா,மணிஜீ,ஜெரி ஈசானந்தா,கும்கி,மாது,அக்பர்,சிவஜிசங்கர்,செ.சரவணக்குமார் எல்லோரின் குரலும் மதுரை இறங்கும் போதே எனை அழைத்தது.எழுத்தால் மட்டுமே ஆன ஸ்னேகத்துக்கு மனதில் வரைந்து வைத்த ஓவியங்களை ஒப்பீட்டுப் பார்க்கப்போகிற ஒரு பரீட்சைக்கான ஆவல் அது. பேருந்தின் சக்கரத்துக்கு முன்னாடி, முன்னாடி ஓடிப்போய்  நின்று பிள்ளைக்குதூகலம் கொண்டது.சிவகங்கைப்பேருந்து நிலையத்தில் நடமாடும் மனிதர் முகத்திலெல்லாம் வரைந்து வைத்த ஓவியத்தை ஒட்டிப் பார்த்துக்கொண்டு கல்யாணவீட்டுக்குள் நுழைந்த போது பந்தி களைகட்ட ஆரம்பித்திருந்தது.

அந்த நேரத்தில் தானே சொந்தபந்தங்களை அழைத்து அருகில் இருத்தி நிழற்படம் எடுத்துக்கொள்வார்கள். அதுவும் நடந்து கொண்டிருந்தது.சாப்பிடாதாவர்கள் வெறும்வாயில் கதைபேச சாப்பிட்டவர்கள் வெற்றிலை வாயில் கதைபேசுகிற சாவகாசம் அலாதியானது.வருகிறவர்களை வரவேற்பதுவும்,புறப்படுகிறவர்களை வழியனுப்பவுமான தகப்பனுக்கான நேரம்.அப்போது  கடமை முடிந்தது என்றல்ல, கனவு கனிந்தது கல்யாணமாக என்கிற ஒரு அயற்சியும் சந்தோசமும் கலந்த பாட்டு ஒலிக்கும் முகத்தோடு  'பாரா' உட்கார்ந்திருந்தார்.ஒரு இளைஞன் வேஷ்டி சட்டை உடுத்திக்கொண்டு உட்கார்ந்திருந்த தோரணையில்.பொன்னோட அப்பா என்று தயங்க அது நான் தான் என்றார் நான் தான் காமராஜ் சொன்னதும் இழுத்து அணைத்துக் கொண்டார்.உடைந்து, உருகி உருவமற்றுக்காற்றில் மிதக்க காத்திருந்த நேரம்.குடும்பம் மொத்தத்தையும் கூப்பிட்டு  கூப்பிட்டு முகம் கான்பித்தார் எல்லோரின் முகத்திலும் என் குடும்பத்தின் சாயல் கிடடைத்தது.

சரவணனுடன் பேசிக்கொண்டிருந்த தோழர் பத்மாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி விட்டு ஓடோ டிப்போய்
குழுமத்தில் ஐக்கியமாகிக்கொண்டேன்.தீவிர இலக்கியம்பேசாமல்,தீவிர அரசியல் பேசாமல் தீவிர அன்பைப்பகிர்ந்துகொண்டோ ம்.உள்ளுக்குள் கிடந்த சின்ன சின்ன தடங்கல்கள் கறையக்கொஞ்சம் திரவமும்,கொஞ்சம் பேச்சும் போதுமானதாக இருந்தது.பெண்ணோடு மாப்பிள்ளை உட்கார்ந்து பந்தி நடக்கும் நேரம் கிண்டலும் கேலியும்,சாப்படுமாக பரிமாறப்படுமே அந்த கடைசிப்பந்தியில் தான் பதிவர்களுக்கு இடம்போட்டுக்கொடுத்தார் பாரா.

அங்கிருந்து விடுதி அறைக்கு வந்ததும் வழக்கம்போல மாதவராஜ் ஆரம்பித்த வர்த்தைகளின் நுனி பிடித்துக்கொண்டு
சற்று இலக்கியம் அரசியல் அதோடு தூக்கம் மாலைவந்தது.மாலை துவங்கும் நேரத்தில் விடிகாலை ஆலமரத்து பறவைகளின் கீச்சல் சத்தத்தோடு ஒவ்வொருத்தராய்ப் புறப்பட்டார்கள்.பாரா அப்படியொரு ஆலமரமாய் கைவிரித்துச் சிரித்து அனுப்பிக்கொண்டிருந்தார்.அவரது மைத்துனர் முத்துராமலிங்கம் நிற்காத பம்பரமாய்  கல்யாண வீட்டின் ஒவ்வொரு அசைவிலும் பங்கெடுத்துக்கொண்டிருந்தவர்களில் முக்யமானவர்.

கல்யாணங்களின் எல்லாவிதமான லட்சணங்களோடுதான் நடந்தது என்றாலும் இந்தக்கலயாணத்துக்கு கூடுதல் சிறப்பொன்று உண்டு.வானலைகளினூடே வியாபித்த பாராவின் எழுத்தை நுகர்ந்த எல்லா அன்புள்ளங்களுக்கும் பாராவீட்டுக் கல்யாணச்சேதி போகும்.அவர் சம்பாதித்து வைத்த பிரியங்கள் கூடி பூச்சொரியும்.  தூரத்தேசத்திருந்தும் மனசார வழ்த்துகிற வைபோகமும் சேர்ந்து வாய்க்கபெற்ற இது நம் பிரிய பதிவர் வீட்டுக்கல்யாணம்.

21 comments:

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...இந்த அன்பையெல்ல்லாம் சேர்த்துக் கொள்ள..சேமித்துக் கொள்ள உங்களுக்கெல்லாம் கொடுப்பினை!!!!பூங்கொத்து மணமக்களுக்கு!

தமிழ் அமுதன் said...

நன்றி பதிவிற்க்கு வாழ்த்துகள் மணமக்களுக்கு....!


//"பாரா சம்பாதித்த அன்பெலாம் ஒரே இடத்தில் குவிந்த மகா கல்யாணம்"//

தலைப்பே மனதை வருடுகிறது..!

Unknown said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வளவு நண்பர்கள் நேரில் வந்து வாழ்த்தியது பா.ரா. வின் உயர்ந்த குணத்தை பன்மடங்கு வெளிப்படுத்துகிறது. நண்பர் மாதவராஜ் பதிவிலும் இதே தான். அவர் போட்டோவும் போட்டு அசத்திட்டார். அதில் உள்ள உங்க போட்டோக்கும், உங்க profile ல் உள்ள போட்டோவும் பார்க்கும் போது சுலபமா ஏமார்ந்துவிடுவோம்

Jerry Eshananda said...

காமராஜ் அண்ணாச்சி சௌக்கியமா...ஆளு சும்மா ஹீரோ மாதில இருக்கீக..

Jerry Eshananda said...

உங்களை பார்த்தது...பழகியது மனசுக்கு சந்தோசமாய் இருக்கிறது..

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
இவ்வளவு அன்பு கலந்த மனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது நமக்கு.

பத்மா said...

அழகான பதிவு ..நியாபகங்கள் மீண்டும் மலர்கின்றன

சாந்தி மாரியப்பன் said...

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

rajasundararajan said...

//எழுத்திலும் குரலிலும் ஸ்பரிசித்த மனிதர்கள் நேரில் பிரசன்னமாகும் போது ஏற்படும் கண்ணின் தகவமைதல் போன்ற கணத்தை இதுவரை இலக்கியங்கள் எதுவும் பதிவு செய்திருக்கிறதா எனத்தெரியவில்லை//

//எழுத்தால் மட்டுமே ஆன ஸ்னேகத்துக்கு மனதில் வரைந்து வைத்த ஓவியங்களை ஒப்பீட்டுப் பார்க்கப்போகிற ஒரு பரீட்சைக்கான ஆவல் அது. பேருந்தின் சக்கரத்துக்கு முன்னாடி, முன்னாடி ஓடிப்போய் நின்று பிள்ளைக்குதூகலம் கொண்டது.சிவகங்கைப்பேருந்து நிலையத்தில் நடமாடும் மனிதர் முகத்திலெல்லாம் வரைந்து வைத்த ஓவியத்தை ஒட்டிப் பார்த்துக்கொண்டு...//

தான் படைப்பாளிதான் என்று இதில் கூடவா இப்படி மிரட்டவேண்டும்!

//உள்ளுக்குள் கிடந்த சின்ன சின்ன தடங்கல்கள் கறையக் கொஞ்சம் திரவமும்,//

இது கொஞ்சமும் முறையல்ல. வாங்கிக் கொடுத்தவர் வருத்தப்படப் போகிறார்.

//அவரது மைத்துனர் முத்துராமலிங்கம் நிற்காத பம்பரமாய் கல்யாண வீட்டின் ஒவ்வொரு அசைவிலும் பங்கெடுத்துக்கொண்டிருந்தவர்களில் முக்யமானவர்.//

இதுதான் தோழருக்கு அழகு.

என் பெயர்தான் உங்களுக்கும் முன்னைப் பெயர் என்று அறிந்ததில் ஏன் வாஞ்சை கூடுகிறது என்று புரியவில்லை!

நல்ல எழுத்து, தம்பி. வாழ்த்துகள்!

Menaga Sathia said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!!

vasu balaji said...

இன்னொரு அழகான பரிமாணம். மணமக்களுக்கு வாழ்த்துகளும் உங்களுக்கு நன்றியும்.

மணிஜி said...

உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தோழர்..அதுவும் மக்கா வீட்டு விசேஷத்தில் ..இரட்டிப்பு மகிழ்ச்சி....

சிவாஜி சங்கர் said...

அண்ணே.., எல்லா சொந்த காரங்களையும் ஒரே இடத்துல பார்த்தது மிகுந்த சந்தோசம்....
அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்..!

ரோஸ்விக் said...

நல்லதொரு தருணத்தில் உங்கள் அனைவருடனும் உரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி அண்ணா...

ராகவன் said...

அன்பு காமராஜ்,

மனசெல்லாம் கனமாகி கொண்டே இருக்கிறது என்னால் அங்கு இருக்க முடியாத கணங்களின் இறுக்கத்தில். கல்யாண தினத்தன்று மனசெல்லாம் சிவகங்கையிலேயே கிடந்தது, யார் போயிருப்பா என்று எனக்கு தெரிந்த எல்லோருக்கும் தொடர்பு கொண்டேன், இன்னும் ஒரு மணி நேரத்தில போயிடுவேன், இன்னும் பத்து கிலோமீட்டர் தான் என்று ஆளுக்காள் சொல்ல எனக்கு ஒரு மாதிரி அழுகை தான் வந்தது.

எல்லோரும் பதிவை போடுவார்கள் இதைப்பற்றி என்று தெரியும் இருந்தாலும், நேரில் பார்க்க நமக்கு வாய்க்காமல் போய்விட்டது என புலம்பிக் கொண்டே இருந்தேன். உங்கள் பதிவுகளை படிக்கும் போது இழந்தது இன்னும் எத்தனையோ என்று தோன்றுகிறது. முடிந்த வ்ரை எல்லோரிடமும் திருமணம் நடந்த விதம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன்.

எல்லோருக்கும் பாராவின் அன்பும், அவரின் இளமையும் பேசுபொருளாய் இருந்தது. எத்தனை சாசுவதமான அன்பை தந்திருக்கிறது இந்த வலை உலகம் என்று ஆச்சரியமாய் இருக்கிறது. எல்லோரையும் பார்க்கும்போது எப்படி இருந்திருக்கும் என்பது எனக்கு விவரிக்கமுடியாத அனுபவமாய் விரிகிறது.

நன்றியும் அன்பும்,
ராகவன்

சுந்தரா said...

மணமக்களுக்கு வாழ்த்துக்களும்,நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகளும் அண்ணா.

vasan said...

ம‌ணமக்க‌ளுக்கு வாழ்த்துக்கள்.
ப‌திவுக்கு இனி பாரா ப‌ராக்.
we missed him in the blog and Vikatan

க.பாலாசி said...

என்னன்னு சொல்றதுங்க... ஒரு இனிமையான அனுபவம் கிடைத்திருக்கிறது இதை வாசிக்கும்பொழுதும்...

உயிரோடை said...

என்னால் வர இயலவில்லை. ஆனாலும் அங்கேயே இருந்து நானும் நடத்தி கொடுத்தேன் என் மருமகளின் திருமணத்தை.

செ.சரவணக்குமார் said...

உங்களோடு இருந்த அற்புதமான சில மணி நேரங்களை எப்போதும் மறக்கவே முடியாது. அந்த மோட்டார் பைக் பயணம் நினைவுக்கு வருகிறது காமு அண்ணா. எத்தனை நெகிழ்ச்சி எத்தனை அன்பு.. இது போதும் அண்ணே இன்னும் ரெண்டு வருஷத்துக்கு.

பா.ராஜாராம் said...

குளிரக் குளிர சிரிக்க வாய்த்திருக்கிறது காமு உமக்கு. நீர் paarttha neram, paarkkaatha neramellaam kooda ummaiye paartthuk kondirunthen. um kaathali maathiri.. :-)

eppadiyo ungalaiellaam paarthuttene...

ithu pothum. ini antha paalaiyil pothi sumakkalaam. innum rendu moonu varusatthukku. romba நன்றி ooi!

நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் miguntha nandriyum anbum மக்களே!