11.1.11

அன்புக்குப் பாத்திரமாவது

காணாமல்போன இரண்டாவதுகாலை
பிரிவின் இழப்பை உணரச்செய்தது
அது உலோகத்தால் செய்யப்பட்ட வஸ்துதான்
அது உருளை வடிவமான சில்வர் குவளைதான்

அதை அவள் டம்ளர் என்று சொல்வாள்
அம்மாவோ போனி என்று சொல்லும்
அது மதுவோடிருக்கையி க்ளாஸ் ஆகும்
கண்ணதாசன்கவிதையில் கிண்ணமாகும்

என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்
அது  எட்டுவருடம் என்னோடே இருக்கிறது.
எல்லாக்காலை நேரத்திலும்  ஆவிபறக்க
அது என்னோடே இனிப்பாய் இருக்கிறது.

அளவும் சுவையும் மாறினாலும்
சரிக்கட்டும் ப்ரியமும் பந்தமும் மாறாது.
பாத்திரக்கடையில் குட்டச்சியின் பெயர்
எண்களிலும் நாணயத்திலுமிருந்தது.

அரிசிப் பைக்குபின்னாடி ஒளிந்து கிடந்த
இரண்டு நாட்கள் என் தவிப்பை எடைபோட்டது.
திரும்பக்கிடைத்த மார்கழிக்காலையில்
என்கையில் குளிர் அந்தக்குட்டச்சியுடம்பில் அனல்.

என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்
399 முறை வலைமக்களின் அன்பிற்குப் பாத்திரமாகி
கிடந்திருக்கிறேன்.கடந்த ரெண்டு வருடங்கள் எனை அன்பால்
சூழ்ந்துகொண்ட வலைச்சொந்தங்களுக்கு என்னால்
பிரதி செய்ய அன்பே கையிருப்பாக இருக்கிறது.

நன்றி.

15 comments:

Chitra said...

கடந்த ரெண்டு வருடங்கள் எனை அன்பால்
சூழ்ந்துகொண்ட வலைச்சொந்தங்களுக்கு என்னால்
பிரதி செய்ய அன்பே கையிருப்பாக இருக்கிறது.


...So sweet!


.....பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

vasu balaji said...

400வது பதிவுக்கு வாழ்த்துகள். தலைப்பு வெகு பொருத்தம்:). எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு பந்தம் இருக்கத்தான் செய்யுது.

அன்புடன் அருணா said...

/எனை அன்பால்சூழ்ந்துகொண்ட வலைச்சொந்தங்களுக்கு என்னால்பிரதி செய்ய அன்பே கையிருப்பாக இருக்கிறது.
நன்றி./
அதுவேதானே வேண்டும் வேறென்ன?
400 வது முறையாகவும் அன்பிற்குப் பாத்திரமாகிறீர்கள்!பூங்கொத்து!

சந்தனமுல்லை said...

:-) வாழ்த்துகள்...தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...

Kousalya Raj said...

400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...அதை சொன்ன விதம் அருமையாக இருக்கிறது...நிறைவாகவும். !!

பா.ராஜாராம் said...

என்னை நானும் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். எத்தனையோ முறை உம் அன்பிற்கு பாத்திரமாகி கிடந்திருக்கிறேன். கடந்த ஒண்ணரை வருடங்கள் எனை அன்பால் சூழ்ந்துகொண்ட உம் நெருக்கத்திற்கு என்னால் பிரதி செய்ய அன்பே கையிருப்பாக இருக்கிறது. அதுவும் கூட உம் அன்பிற்கு முன்னால் பற்றாக் குறையாகவே இருக்கிறது! :-)

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அய்யோ யாருமே கவிதை பத்தி ஒண்ணும் சொல்லலே... என் கையில் குளிர் குட்டச்சி உடம்பில் அனல்...

எங்க பாட்டிக்கு அது லோட்டா...

பாடுபொருள் எதுவாய் இருந்தாலும்... மிதக்கும் வரிகளில் ஆணந்த தெப்பம் விடும் காமராஜ்!

அது என்னது... அட்சயபாத்திரத்தில் இடப்படும் ஒரே விஷயம் இந்த அன்பு தானே...காமராஜ்... எடுத்துக் கொடுக்க கொடுக்க... மீனும்... மதுவும்... காணாவூரின் விருந்தென நிற்காமல் பெருகிக் கொண்டே இருக்கிறது இன்னும்...

அன்புடன்
ராகவன்

க ரா said...

கவிதை அசத்தல் சார்.. 400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)

க.பாலாசி said...

இந்த பிரியம் சுரக்கும் பாத்திரத்திற்குள்தான் எத்தனை அடையாளங்கள்.... அது அப்படியே இருக்கட்டும்...

இந்த 400க்கு மேல் இன்னும் வளர்ந்து பெருகட்டும்... வாழ்த்துக்களுடன்.

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள் தோழனே...!

Unknown said...

400வது பதிவுக்கு வாழ்த்துகள்.

எவ்வளவு அழகா உங்க கவிதையில சொல்லியிருக்கீங்க. எங்களை எல்லாம் உங்க எழுத்தில கட்டி தானே போட்டு வைச்சுருக்கீங்க.

இளங்கோ said...

நானும் டம்ளரை நேசிக்க நேசிக்க ஆரம்பித்து விட்டேன்.. :)

அம்பிகா said...

அழகான கவிதை.
400 க்கு வாழ்த்துக்கள் அண்ணா.

வினோ said...

வாழ்த்துக்கள் அண்ணா... இப்போ தான் பார்க்கிறேன்...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பாடுபொருள் நேர்த்தி.

உங்கள் அன்புக்குப் பாத்திரமே பாத்திரமானது போல நாங்களும் பாத்திரமாகிறோம்.

குளிர்வூட்டும் ப்ரியம் குட்டச்சியின் உடம்பின் அனல் பட்டு மெழுகாய் உருகுதல் போல நாங்களும் காமராஜ்.

எண்களைக் கடந்து எழுதிச் செல்லுங்கள் காமராஜ்.