8.2.11

புதிய பூதம் - எஸ்.பாண்ட், அடுத்த கற்றை


இந்தியாவில் ராக்கெட் ஏவுகிற ஒவ்வொரு முறையும் மெகா பட்ஜெட் தமிழ் சினிமா மாதிரி ஊரைக்கூட்டி விருந்து வைத்து,ஹோமம் வளர்த்து, முக்கியஸ்தர்களை கூப்பிடுப் புகழச்சொல்லி மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவார்கள்.அந்த ராக்கெட் நாள் நட்சத்திரம் பார்த்துக்கிளம்பும்.ஆனால் நடத்திரத்துக்கு போய்ச்சேராது. கிளம்பி சிவகாசி ராக்கெட் போகிற தூரம் போய் பிறகு புசுக்கென கடலில் குதித்து விடும். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று குழம்பிப் போனதுண்டு.ஒரு நூத்திப் பத்துக்கோடி மனிதர்கள் இருக்கிற இந்தியாவிலிருந்து ஒழுங்காக ஒரு ராக்கெட் அனுப்ப 2000 வருஷம் பிடிக்கிறதே என்கிற கவலை வரும்.இதே போலத்தான் சர்வதேச விளையாட்டுக்கள், ஒலிம்பிக், கிரிக்கெட் சூது ஆகியவற்றிலும் குப்புற விழுந்து எழுந்து ’சிங்கம்டா’ என்று சொல்லிக்கொண்டே திரும்புவார்கள்.

இங்கே எதையும் ஒழுங்காக உண்மையாகச்சொல்லுவதில்லை.அவரவர் அவரவர்க்கான நியாயங்களோடும்,சார்புத்தன்மையோடும் அணுகுவதால் வரும் பிரச்சினை.இதோ இந்த வருடம் விக்ருதி வருடம் என்று சொன்னாலும் இந்தியாவுக்கு ஊழல் வருடம் என்றே சொல்லலாம். ஒன்றன் பின் ஒன்றாகபூதங்கள் கிளம்பியபடி இருக்கிறது.ஆதர்ஷ்,போபர்ஸ்,கொடநாடு என்கிற ஊழல் பெயர்களெல்லா வற்றையும் சிறியதக்கி விட்டு ஸ்பெக்ட்ரம் வந்தது. திருச்சி அளவுக்கே இருக்கும் ஒரு நாட்டைத்தேடி அங்கு கொண்டு போய் மூட்டை மூட்டையாய் இது பழய்ய அளவு, கற்றை கற்றையாய் குவித்திருக்கிறார்கள்.நேற்று அவர்களில் 15 சதனையாளரகளின் பெயர்கள் வெளியானது.அதையும் சிறியதாக்கிபடி கிளம்பியிருக்கிறது எஸ்.பேண்ட் அலைக்கற்றை ஊழல். இரண்டு லட்சம் கோடியாம்.

விக்ரம் என்கிற ஒரு தமிழ்சினிமா வந்தது.அந்தப்படத்தில் ஒரு ராக்கெட்டை தூக்கிக்கொண்டு வருவார்கள்.நாலே நாலு பேர் வந்து வழிமறித்து சின்னப்பிள்ளையிடம் கிலு கிலுப்பையைப்பறித்துக்கொள்வது போல ராக்கெட்டைப்பறித்துக்கொள்வார்கள்.அப்புறம் ஒரு ஹெலிகாப்டர் வந்து கோலிக்குஞ்சைத் தூக்குவது போல தூக்கிக்கொண்டு பறந்து போகும். அந்தப் படம் வந்த சமயத்தில்  பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ராக்கெட்டை எப்படி ஜஸ்ட் லைக் தட் தூக்கிச்செல்ல முடியும் என்கிற அறிவார்ந்த விமர்சனம் வந்தது.அந்த விமர்சனம் உண்மையும் கூட.அப்போது இந்தளவுக்கு நாட்டைத் தனியாருக்கு சோரம் போக விடவில்லை. இந்த 2011 ல் தனியார்களுக்கு குத்தகை விடப்பட்ட அரசு இலாகாக்கள் தான் இந்தியா என்று ஆகிப்போனது.
அதுதான் அந்த எம்.ஜி.சந்திரசேகர் 2 லட்சம் கோடியை இஸ்ரோவிலிருந்து கோழிக்குஞ்சைத் தூக்கிக்கொண்டு போவது போல் தூக்கிக்கொண்டு போயிருக்கிறார்.

இதில் என்ன கொடுமையென்றால் நடுத்தரவர்க்கமும் ,பணக்காரவர்க்கமுமான  20 சதமானம் போக எஞ்சியிருக்கிற எண்பது சதமான மக்களுக்கு இந்தச்செய்தி எதுவும் போய்ச்சேர்ந்து விடாதபடிக்கு மிகப்பெரிய ஊடுசுவர் ஒன்று எழுப்பப் பட்டிருக்கிறது.நமக்கு எப்படி உத்தப்புரம் சுவர்களைப்பற்றித் தெரியாதோ அதே போல அவர்களுக்கு இந்த ஊழல் மறிப்பு சுவர் பற்றியும் தெரியாது.இதை எப்படி அம்பலமாக்குவது என்பதை நுண் அறிவு படைத்த ஊடகங்கள் பார்த்துக்கொள்ளும்.மிகச்சரியாக தேர்தலுக்கு முந்தின இரவுதான் பூதங்கள் கிளம்புவது இந்தியாவின் விதி. வழக்கம்போலஅந்தச் சதுரங்க விதி அரங்கேறும்.

அப்போது இதுவெல்லாம் அம்பலமாகி இன்னொரு அரசாங்கம் வரும். அது ஜெயலலிதாவுக்கோ அல்லது அம்பானியின் பினாமிகளுக்கோ தான் பட்டா எழுதித்தரப்படும். அப்போது இதைவிடப்பெரிய எண்ணமுடியாத இலக்கங்களோடு ஒரு உழல் கிளம்பும். அதற்குள் அவர்கள் ஐந்தாண்டு ஆண்டு முடித்திருப்பார்கள்.

3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் அலசல் மக்கா....

Unknown said...

அருமையான விவரிப்பு. எல்லாம் இயலாமை தான்.

உலகத்தில எவன் வேணா என்ன வேணா ரூம் போட்டு யோசிச்சு கண்டுபிடிக்கட்டும். நாம அதை வைச்சு எப்பிடி ஊழல் பண்ணி சம்பாதிக்கலாம்னு ரூம் போட்டு யோசிச்சாப் போதும்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வடிவேலுவோட காமெடிதான் நினைவ்க்கு வருது காமராஜ்.

என்னமோ ரெண்டு அடி அட்ச்சுப்புட்டு பீத்திக்கிடாதீங்க தம்பீ.ஊருக்குள்ளாற போய்க்க் கேட்டு பாருங்க.நாங்க அடி வாங்காத எடங்கெடையாது.......

அது மாதிரி இவங்க இனிமேல் கைவைக்காத இடம்னு ஒண்ணு இருக்குமான்னு தெரியல காமராஜ்.

மாட்டிக்காத வரைக்கும் எல்லாரும் யோக்கியன்.இப்பிடி ஆயிடுச்சு நம்ம தேசம்.