அவர் இடது கையால் பணம் வாங்கிக்கொண்டு போகும்போது எரிச்சலாக இருந்தது. இடது கைப்பழக்கம் ஒன்றும் கொலைக்குற்றம் இல்லை. பாங்கிங் ரெகுலேசன் ஆக்ட், ஐ டி ஆக்ட், இந்தியன் பீனல் கோட் எதிலும் இடது கைப்பழக்கம் குறித்த குறிப்பேதும் இல்லை. சின்ன வயசிலிருந்தே '' துட்ட நொட்டாங்கையால வாங்காத '' சொல்லும் அம்மாவின் வார்த்தை ஆழமாக வேரோடியிருந்தது. இடது பக்கம் பயணப்பட வலியுறுத்தும் சாலை விதிகளும் கூட கூடவே வருகிறது. இந்த முரண்பாடு குறித்து யோசித்தால் நம்பிக்கைக்குக்கும் விஞ்ஞானத்துக்கும் சண்டை வரலாம். அது போகட்டும். அவர் இன்னொரு தரமும் இடதுகையாலே பணம் செலுத்தினார். ஒருநாள் பணம் எடுக்கும் ரசீதை வாங்கிக்கொண்டு தணியாக உட்கார்ந்து எழுதும் போதுதான் அதைக்கவனிக்க நேர்ந்தது. . பாரதியைப்போல முண்டாசு கட்டியிருக்க முகமும் கைகளும் வித்தியாசமாக இருந்தது. உதடு கோணலாகி மீசையில்லாமல் இருந்தார். ஒரு வேளை குஸ்ட ரோகியாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றிய உருவம். ஒரு நாள் ஆளில்லா நேரத்தில் அவர் வந்தபோது கவனமாக வலதுகை ஊனமான காரணம் கேட்டபோது தான், அது பட்டாசுத்தொழிற்சாலை விபத்தில் கிடைத்த பரிசு என்று தெரிந்தது. எங்கே எப்போது நடந்தது என்று கேட்டதற்கு விலாவாரியாக ஏதும் சொல்லவில்லை. பெருத்த யோசனையில் அந்த கருகிய முகம் மேலும் கருப்பானது. ஒரு நீண்ட பெருமூச்சோடு தலையை குலுக்கிவிட்டு 'என்னத்தச் சொல்ல' என்று கடந்து போனார். இரண்டு மாத காலம் ஓடிப்போனப்பிறகு தான் இயல்பாகப் பேசினார். அது வரையில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை.
ஒரு மாலை நான்கு மணிக்கு உப்புச் சப்பில்லாத காரணத்தோடு வங்கிக்கு வந்தார். ஆளில்லாத வராண்டாவுக்கு அழைத்துக்கொண்டு போய் பேசினார். அவருக்குத் தஞ்சாவூர்ப் பக்கம் சொந்த ஊர். விவசாயக்கூலி வேலைக்கு சன்மானத்தை விட அவமானம் தான் நிறையக் கிடைத்ததாம். ஓரளவுக்கு படித்த படிப்பினால் கோபம் நிறைய்ய வந்ததாம். அங்கிருந்து காலந்தள்ள முடியாமல் சிவகாசிக்கு மூட்டை முடிச்சோடு வந்திறங்கி பட்டாசுக் கம்பெனிக்கு கணக்கெழுதப் போனார். குட்டி ஜப்பான் என்கிற பெருமையை அடைகாத்துக்கிடக்கிற அந்த ஊரில் பத்து வருசம் கரிமருந்தும் கந்தகமும் சூழ்ந்தபடியே வாழ்கை கழிந்தது. அந்தச் சனிக்கிழமையன்று, சம்பளம் வாங்கிக்கொண்டு, அங்கேயே வேலை பார்க்கிற தனது மனைவியோடு சினிமாவுக்குப்போகிற கனவோடு நகர்ந்திருக்கிறது அவரது பொழுது. மதியம் சரியாக ஒரு மணிக்கு தன் வாழ்நாளை மொத்தமாக அதிரவைத்த சத்தம் கேட்டிருக்கிறது. தீபாவளியை ஒரு பெரு நகரம் கூடி ஒரே இடத்தில் வெடித்தது போலப் புகைமூட்டம். அந்தப்புகையினூடாகக் கேட்ட அலறலும், மரண ஓலமும் தான் அவர் கேட்ட கடைசிச் சப்தம். ஒருவாரம் கழித்து நினைவு திரும்பியபோது எல்லாமே முடிந்து போயிருந்தது. எழுந்து நடமாடியதும் தனது மனைவியைப் புதைத்த இடத்துக்குத்தான் நேரகப்போனாராம். சொல்லி முடிக்கும்போது அவரது கண்ணீரெல்லாம் காலியாகிப்போயிருந்தது. பிறகு நெடுநேரம் மௌனமாக அமர்ந்திருந்துவிட்டு இப்போது பெட்டிக்கடை வைத்து வயிற்றை நிரப்பிக்கொண்டு நஷ்ட ஈட்டுப்பணத்தை வைத்துக்கொண்டு பூதம் காத்தது போல அலைகிறேன் என்று சொல்லி விட்டுப்போனார். அந்தப் பணத்துக்குள்ளே தான் அவரது காதல் மனைவியின் கடைசி அலறல் ஒளிந்து கிடக்கிறது. அவள் கேட்ட சேலையும் கம்மலும் வாங்கப்பணமெல்லாம் நிறைய்ய கிடக்கிறது. இப்போது அவள் இல்லை.
அப்புறம் வரும்போதெல்லாம் வணக்கம் சொல்லுவதும் போகும் போது சொல்லிக்கொண்டு போவதுமாக சினேகமாகிப்போனார். தீபாவளி நெருங்கிக்கொண்டிருந்த இன்னொரு நாள் அடுத்தடுத்து இரண்டு பட்டாசு வெடிவிபத்து நடந்தது. வருசா வருசம் இப்படித்தான் நடக்குமாம். குட்டி ஜப்பானுக்குப்பதில் குட்டி ஹிரோசிமா அல்லது நாகசாகி என்றுகூட வைத்திருக்கலாம். இப்போது உற்றுக்கவனித்தால் அவரைப் போலவே இன்னும் பல பேர் அந்த வங்கிக்கிளைக்கு வந்து போகிறார்கள்.
1 comment:
நிதர்சனமான உண்மை...
அன்புடன் அருணா
Post a Comment