28.1.09

செம்புலப் பெயல்நீர் போல விரோதமும் அன்பும்


இருபத்தியோரு முறை அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டு அலைக்கழிக்கப் பட்டது சென்னையிலிருந்து டெல்லிசெல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ். சுமார் இரண்டு மணிநேரம் நாக்பூரைவிட்டு கிளம்பமுடியாமல் திணறியது. ரயில்வே காவலர்கள் விரட்டியபோது ஓடுவதும் பின்னர் திரும்ப வந்து ஏறமுடியாமல் போவதுவும் அவர்களின் நண்பர்கள் அபாயச் சங்கிலி இழுப்பதுவுமாக விளையாட்டுப் பொருளானது அந்த துரித வண்டி. தலையிலும் கைகளிலும் காவித்துணிகட்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்த அத்துமீறல்களை ரயில்வே நிர்வாகம் கைபிசைந்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. குளிரூட்டப்பட்ட பெட்டி தவிர எல்லா முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் அணுமதிக்கும் படி பயணிகளிடம் நிலைய மேலாளர் கைகூப்பிக் கேட்டுக்கொண்டார். ரயில் நகர்ந்தது.


அதன் பின்னர் சட்டைப் பொத்தான்களைத் திறந்துவிட்டபடி அவர்கள் அடித்த லூட்டிகளை மாணவர்கள் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எல்லா நிலையங்களிலும் அவர்களுக்கு உணவும், தேநீரும் வழங்குவதற்கு அப்போதைய ஆளுங்கட்சி ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்கள் மேலதிகத் தெனாவட்டோடு அலைந்தார்கள். எங்களைப் பார்த்து ஒரு மாணவன் " நீங்கள் என்ன மதராசியா" என்று கேட்டான். " இல்லை நான் இந்தியன் " என்று சொன்னேன், " அப்படியானால் நான் இந்து " என்று முறைத்துக் கொண்டு சொன்னான். " நான் மனிதன் " என்று அவனுக்குச் சொன்னேன். ஒருவரை ஒருவர் அறியாது முறைத்தபடி பகல் கடந்தது.


அந்தக் கூட்டத்திலொரு மாணவன் சோர்வாய் இருந்தான் அவனை அழைத்து எங்கள் அருகே உட்கார வைத்தோம். நெடுநேர மௌனத்தை மாது தான் முதலில் கலைத்து விட்டான். எங்களின் பேச்சும் சிரிப்பும் அவனை எங்கள் பக்கம் இழுத்தது. பின்னர் தமிழையும் ஹிந்தியையும் ஆங்கிலம் மூலம் பறிமாறிக் கொண்டோம். எங்கள் கூட்டத்தில் ஒருவர் ஹிந்தி திரைப்படப் பாடலைப் பாடியதும் இன்னும் அதிகப்பேர் வந்து எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். ஒரு பன்னிரெண்டு மணி நேரத்துக்குப் பின்னர் ஒருவரையொருவர் புரிய முயன்றோம். டெல்லியில் இறங்கும்போது எல்லோரும் " போய் வருகிறோம் மாமா " என்று சொல்லிவிட்டு பிரிந்து போனார்கள் செம்புலப் பெயல்நீர் போல

4 comments:

தேவன் மாயம் said...

ஒரு பன்னிரெண்டு மணி நேரத்துக்குப் பின்னர் ஒருவரையொருவர் புரிய முயன்றோம். டெல்லியில் இறங்கும்போது எல்லோரும் " போய் வருகிறோம் மாமா " என்று சொல்லிவிட்டு பிரிந்து போனார்கள் செம்புலப் பெயல்நீர் போல///

அழகாக எழுதியுள்ளீர்கள்!!!
தேவா......

அன்புடன் அருணா said...

//ஒரு பன்னிரெண்டு மணி நேரத்துக்குப் பின்னர் ஒருவரையொருவர் புரிய முயன்றோம்//

இது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான்..நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
அன்புடன் அருணா

காமராஜ் said...

வணக்கம் அருணா மேடம்,
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

வணக்கம் தேவா சார்.
நன்றி