12.1.09

துடைப்பங்களின் அளவும் தேவையும் அதிகரிக்கிறது


மதுரை, அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர் இந்த ஐந்து ஊர்களில் உள்ள தங்கும் விடுதிகளில் இடம்கிடைக்கவில்லை. அதே போல உணவு விடுதிகளிலும் எப்போதும் கூட்டம். மதுரையை நோக்கி பயணிக்கிற எல்லா வாகனங்களும் குறைந்தது ஒரு மணிநேரம் காலதாமதமாகவே இலக்குகளை அடைய முடிந்தது. சுற்றுப்புறக் கிராமங்கள் எல்லாவற்றிலும் புதியரக சொகுசு வாகனங்கள் புழுதியைக்கிளப்பிக் கொண்டு திரிந்தன. கிட்டத்தட்ட தமிழகத்தின் அணைத்து துறைஅமைச்சர்களும் சென்னையில் இல்லை. இதே கதிதான் எல்லா அரசியல் கட்சிகளுக்கும்.அதனால் எந்தப் பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரே ஒரு செய்திதான் பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன. மொத்த தமிழகமே திருமங்கலத்தை மையம் கொண்டிருந்தது.



திருமங்கலம் இடைத்தேர்தல் தான் இத்தனை கலேபரத்துக்கும் காரணம். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டிபோட்டு ஒரு வாக்குக்கு குறைந்தது ஐயாயிரம் ரூபாய் கொடுத்ததாகப் பேச்சு நடக்கிறது. தொகை முன்னப்பின்ன இருக்கலாம் ஆனால் பணம் கொடுக்கப்பட்டது. வறுத்த கோழியும், சீமைச்சாராயமும் திரும்பிய திசையெல்லாம் கிடந்திருக்கிறது. வாக்குப் பதிவன்று திருப்பரங்குன்றம் மலை உயரத்துக்கு பிரியாணி குமிந்து கிடந்ததாம். கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக்கொண்டு படியுங்கள்.இந்த இடைத்தேர்தலுக்கு செலவழிந்த மொத்தத் தொகை நூறு கோடி இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் அங்கலாய்க்கின்றன.



ஒரு இடைத்தேர்தல் என்ன சமூக பொருளாதார அரசியல் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என்று தெரியவில்லை.ஆனால் செலவழிந்ததாகச் சொல்லப்படுகிற நூறு கோடியில். லட்சோப லட்சம் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி கொடுக்கலாம். ஆயிரம் பேருக்கு வேலை உத்திராவாதம் கிடைக்கிற உற்பத்தி கேந்திரங்கள் நிறுவலாம். அல்லதுமருத்துவ மனைகளில் கிடைக்காத மருந்துகளைத் தருவிக்கலாம். அல்லது குடிநீர், போக்கு வரத்து மேம்பாட்டுக்கு கொள்ளையடித்தது போக மீதியைச் செலவிடலாம்.



இப்படியெதும் இல்லாமல் தங்களின் கொழுப்பை தனித்துக்கொள்ள கோழிச்சண்டை நடத்துகிறது ஆளும், எதிர் அரசியல். உற்றுக் கவனித்தால் ரத்த அழுத்தம் உயர்கிறது.


சுத்தப்படுத்த முடியாதோ எனது தெருவில் ஓடும் சாக்கடையை.

4 comments:

Anonymous said...

//செலவழிந்ததாகச் சொல்லப்படுகிற நூறு கோடியில். லட்சோப லட்சம் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி கொடுக்கலாம். ஆயிரம் பேருக்கு வேலை உத்திராவாதம் கிடைக்கிற உற்பத்தி கேந்திரங்கள் நிறுவலாம். அல்லதுமருத்துவ மனைகளில் கிடைக்காத மருந்துகளைத் தருவிக்கலாம். அல்லது குடிநீர், போக்கு வரத்து மேம்பாட்டுக்கு கொள்ளையடித்தது போக மீதியைச் செலவிடலாம்.//

செய்யலாம்தான்.அதனாலென்ன தனிப்பட்ட ஆதாயம் கிட்டும்?

ஆதாயமில்லாத செயல் எதுக்கு?

காமராஜ் said...

நன்றி வடகரைவேலன்...
இங்கு எல்லாமே தனது, தனி என்ற
புள்ளியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது
ரொம்ப விசனப்பட வேண்டும்.
மிக மிக அதிகமாக மெனக்கெடவும் வேண்டும்.

அன்புடன் அருணா said...

//சுத்தப்படுத்த முடியாதோ எனது தெருவில் ஓடும் சாக்கடையை//

முடியாதது எதுவும் இல்லை....நல்லவர்கள் சுத்தப் படுத்தக் கூட சாக்கடைப் பக்கம் வருவதில்லை.....அதுதான் வருத்தம்.
அன்புடன் அருணா

காமராஜ் said...

வணக்கம் அருணா...
சரிதான். ஆனால்
நல்லவர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள்..
அது கடலில் கரைத்த பெருங்காயம்போல
எந்த விளைவும் இல்லாமல் கரைகிறது