6.10.09

ரசனை வித்தியாசமானது, அறிவு விசாலமானது .

புகழ்பெற்ற முல்க்ராஜ் ஆனந்தின் சிறுகதை ஒன்றுண்டு. மக்கள் திரள் மேவுகிற வாரச் சந்தையில் ஒரு குழந்தை தனதுதாய் தந்தையோடு செல்லும். அப்போது அந்தச்சந்தையில் தான் பார்த்த அத்தனை பொருளையும் கேட்கும். தாயைத்தவற விட்டு விட்டு அழுது கொண்டிருக்கும். காவலர்கள் அவனை பாதுகாத்து அவனுக்கு விளையட்டுப் பொருள்களும் இனிப்பும் வாங்கித்தருவார்கள். எதுவும் வேண்டாம் எனக்கு அம்மா வேண்டும் எனச்சொல்லி அவன் அழுகையை நிறுத்தமாட்டான். விளையாட்டுக் காட்டுவார்கள் மீண்டும் மீண்டும் அழுகை பெரிதாகும். உன் ஊரெங்கிருக்கிறது, அதன் பெயரென்ன, அடையாளமென்ன எதுவும் அவனுக்குச் சொல்லத் தெரியாது. அம்மா அப்பா பெயர் எதுவும் தெரியாது. ஆனால் அவன் அம்மா மிக அழகாக இருப்பாள் என்கிற சின்ன க்ளூ மட்டும் தருவான். அந்த சந்தையில் இருக்கிற அத்துணை அழகிய பெண்களிடமும் அழைத்துப் போவார்கள். இல்லையென்று சொல்லிவிடுவான் இந்த தேடுதலில் பொழுது சாய்ந்து விடும்.அப்போது அவனை அழைத்துக்கொண்டு அலுவலகத்துக்கு திரும்புவார்கள். எதிரே ஒரு பெண் வருவாள் அவளைப் பார்த்ததும் குழந்தை காவலர் கையை உதறிவிட்டு அவளைப்போய் அணைத்துக்கொள்ளும். அவள் அவலட்சணமாக இருப்பதாக காவலர்கள் நினைத்துக் கொள்வார்கள்.


ஈடுபாடுதான் அழகு. அதற்கு அளவை கிடையாது. அது நிறம், வடிவம் சார்ந்ததக ஒப்புக் கொள்வதற்கில்லை. மங்கோலியர்களின் சராசரி உயரம் நான்கு அடி. ஆப்பிரிக்கர்களின் நிறம் ஆதிக்கருப்பு. அலெக்ஸ்ஹேலி சொல்லுவதைப் போல முடைநாற்றம் அடிக்கும் உரித்த கோழி மதிரி உலக வெள்ளையாய் இருக்கும், மேலைத் தேசத்தவரிடம் மருந்துக்கும் கருப்பில்லை தலைமுடி உட்படட. நீங்கள் கேலி செய்யும் கருப்பு என் கண்ணுக்குள் இருக்கிறது, நீங்கள் போற்றும் வெளுப்பு என் பாதத்தில் இருக்கிறதென்று எனது அண்ணன் மகள் சொல்லுவாள். இதுதான் அழகென்று நிர்ணயித்தால் அந்தந்த நிலப்பகுதியில் அழகிகள் இல்லையென்பதாக மாறக்கூடும். இந்தியாவில் இதம் என்பதைக் குளிரும் மேலை நாட்டில் இதம் என்பதை வெப்பமுமாக அவரவர் புரிந்து கொள்கிறார். இப்போது கூட சரக்கடிக்கிறபோது கடைப்பிடிக்கிற தினுசுகள் குறித்த வலைக் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.


எனது சிறுவயதில், அல்லது கிராமக் காலத்தில் இவள் அழகில்லை, இவன் அவலட்சணம் என்று தீர்மாணித்த இரண்டு பேரது சாயல் கொண்டவர்களை நான் சற்றேரக்குறைய பதினைந்தாண்டுகள் கழித்துப்பார்த்தேன். ரொம்ப வியப்பானது ஒருத்தி ஜெனிபர் லோபஸ், இன்னொருவன் பர்ஸ்ட் ப்ளாட் ராம்போ. அந்த இருவரின் சாயலிலும் எனக்கு நெருக்கமான இரண்டு பேர் இன்னும் இருக்கிறார்கள். இள்ளிக் கண்களும், பெரிய உதடும், சீரற்ற பற்களும், எடுப்பற்ற தனமும் ஆண் நடையுமாக இருந்த அவளை எங்கள் குழுவில் உள்ள ஒருவன் காதலித்த போது அழுகிற அளவிற்கு அவனைகேலி செய்திருக்கிறோம். ஆளாளுக்கு காதல் தோற்றுப்பின் வெவ்வேறு திசைகளில் பயணமானோம். அனால் அவன் அவளைக் காதலித்து மணமுடித்து இன்னும் சந்தோசம் மாறாத வாழ்க்கை வாழ்கிறான். டொக்குவிழுந்த கன்னம், நியான் விளக்கு கம்பத்தைப்போல மேல்கூன் விழுந்த உயரம், பேசுகிற போது பல வார்த்தைகள் கட்டுப்பாடில்லாமல் கீழே விழும். கோக்காலி யெனும் பட்டப்பெயர் கொண்ட காந்தன் மாதிரியே சில்வஸ்டர் ஸ்டெலன் இருப்பான். நிறைய்ய வருடம் கழித்து ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்து ஜெனிபரின் இரண்டு மூன்று படங்கள் தான் பார்த்திருப்பேன். அவளைப்பார்க்கிற போதெல்லாம் எங்களூர் சின்னத்தாயைப் பார்க்கிற நினைவுகள் தடைபடுவதில்லை.


ஒரு நாள் எனது கிராமத்துக்குப் போனேன். காலாற நடப்பதாகச் சொல்லிக்கொண்டு அவள் வீட்டுப்பக்கம் போனேன் " வாங்கண்ணா எப்ப வந்தெக, மயினி பிள்ளகள்ளா வல்லயா "என்பதான கேள்விகள் என்னை இளக்கியது. வார்த்தைகளற்ற மன்னிப்புக்கடிதம் ஒன்று அவளுக்கு முன்னாள் கிடந்ததை அவள் அறிய இயலாது. ரசனைகள் மாறும், கற்பிதங்கள் மாறும், எல்லாம் மாறும்.

20 comments:

காமராஜ் said...

எனது வலையில் இணைந்த திரு அந்தோணிமுத்துவுக்கு நன்றி.

ஈரோடு கதிர் said...

அறிவையும் தாண்டி ரசனைதான் பல சமயம் மேலோங்குகிறது

பிரபாகர் said...

நீங்கள் சொல்வது மிகக் சரி. அழகுக்கு இலக்கணமே கிடையாது. நமக்கு அழகாயிருப்பது மற்றோருக்கு அவலமாயும், மற்றோரின் அவலங்கள் நமக்க அழகாயிருப்பதும் இயற்கையே...

நல்ல பதிவு...

பிரபாகர்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அகமிளிரும் அழகு மிகுந்த ரசனைக்குண்டானது. எனக்கு சுசீலா என்றொரு தோழி இருந்தாள். சிவந்த நீள் முகத்தில் பருக்கள் அடர்ந்து, முன் துருத்திய பற்களும், சமணில்லா உடம்புடனும், யாருக்கும் ஈர்ப்பில்லாமலே அழகாய் இருந்தாள், கொஞ்சம் மெனக்கெட்டால், அவளை சில பென்சில் திருத்தங்களுடன் புறத்தோற்றத்தில் மாற்றங்களுடன் ஓரளவு அழகாய் காட்ட முடியும், ஆனால் அவள் அதுபோன்ற எந்தவித பிரயத்தனங்களும் நான் பழகிய நாட்கள் வரை செய்ததில்லை.

என் தங்கை (உடன் பிறவா) ஐஏஎஸ் கோச்சிங் படிப்பதற்காக, மதுரை காமராஜ் யூனிவர்சிட்டி வளாகத்தில் தங்கி பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டு இருந்த போது, அவளின் அறைத்தோழியாக சுசீலா எனக்கு அறிமுகமானாள், என் தங்கை அவளை அறிமுகம் செய்யும்போதே, உன் போன்ற ரசனைகள் உள்ள பெண் என்ற போது எனக்கு அவளுடன் பேசுவதற்கான ஈடுபாடு எந்தவித முஸ்தீபுகளும் இல்லாமல் ஏற்பட்டது. பேச, பேச கடல் போல விரிந்த அவளுடைய நாலேட்ஜ் பேஸ் என்னை வியக்க வைத்தது. ராம கிருஷ்னர், விவேகானந்தர், பிங்பாங்க் தியரி, குவாண்டம் தியரி, ராமானுஜர், ஜேகே என்ற என்னுடைய எல்லா வாசல்களையும் திறந்துவிட்டாள் அவள்.
எனக்கு அதிகபட்சமாக 68 பக்கங்களில் கடிதம் எழுதியிருக்கிறாள், வரிக்கு வரி சீனு, சீனு என்று. ஒரு முறை என்னை பார்க்க வீட்டிற்கு வந்தாள், வழக்கத்திற்கு விரோதமாய் ஒரு சரசரக்கும் பனாரஸ், ஆரஞ்சு கலர் புடவையில் தகதகவென்று ஒரு பெரிய சுடர் போல, சுடருக்கு முகமுண்டா,இல்லை அவளின் புறத்தோற்றத்தை பொசுக்கிய ஒரு பெரிய ஜுவாலாமுகியாய் அகப்பிரகாசத்துடன், சீனு என்று உள் நுழைந்தாள். என் அம்மாவுக்கு அவளின் புறத்தோற்றம் ஒரு முகசுழிப்பைத் தந்தது, என்னடா இப்படி இருக்கா, என்று கேட்டாள். அம்மாவை அடக்கி உள் அனுப்பினேன், அவள் என்னுடன் பேசாமலே, விஷயப் பகிர்வு இல்லாமல் இருந்திருந்தால் எனக்கும் அவளுடைய புறத்தோற்றம் கவலை கொள்ளச் செய்திருக்கும். என்னுடன் வெளியே போக வேண்டும் என்றாள், நான் அவளை அழைத்துக் கொண்டு கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சென்றேன், இரண்டு பேரின் பெயருக்கும் அர்ச்சனை செய்தாள், மணிக்கணக்காய் பேசினாள், நான் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன், என்னை நோக்கி நீயும் பெருமாள் மாதிரி என்ன சொன்னாலும் இடைமறிக்காமல் கேட்டுக்கொண்டே இருப்பாய், அதனால் தான் எனக்கு கடவுள் என்கிற கேட்பாளரை ரொம்ப பிடிக்கும், he is a good listener, like you. என்ற அவளின் சின்ன சின்ன சித்தாந்தங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தும்.
உடன் நடக்க ஆசைப்பட்டு இங்கே இருந்து பழங்கா நத்தத்திற்கு நடக்கலாமா, உன் கைய பிடிச்சுக்கவா? என்று என்னை கேட்கும்போதே கையை பிடித்துக் கொண்டாள். அங்கே இருந்து திரும்பவும் பேசிக்கொண்டே நடந்தாள் என்னை வழி நடத்தி. சீனு கொஞ்சம் பூ வாங்கித் தரயா? எனக்கு கனகாம்பரம் ரொம்ப பிடிக்கும், தோற்றப்பொலிவோ, வாசனையோ இல்லாமல் எளிமையாய் பூ என்கின்ற அடையாளத்துடன் மட்டும் என்று ஞாபக அடுக்குகளில் மலர்களை செருகிக் கொண்டே நடந்தாள். அவள் காதலிக்கும் எதிர்வீட்டு மரக்கடைக்காரன் மகனைப்பற்றி முதல் முறையாக பேச ஆரம்பித்தாள், தன் ஒரு பக்கக் காதலை இன்னும் அவனிடம் சொல்லவில்லை என்றும், அவன் பார்க்க கருப்பா அழகா இருப்பவன் என்றும் கூறினாள், அவன் பார்க்காத போது இவள் அவனைப்பார்க்கும் தருனங்களை அவள் விவரித்தது எந்தவித வரையறைக்குள்ளும் அடங்காமல், காற்றில் பறக்கும் முன் நெற்றி மயிராய் வாளிப்பாய் இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளிடம் இருந்து கடிதம் வந்தது. அவளுடைய கணவன் மெடிக்கல் ரெப் வேலை செய்வதாகவும், அபினயா என்று ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், அது அவரைப்போலவே அழகாய் இருக்கிறது என்றும் கூறினாள். அவளின் மிகப்பெரிய அழகு அவள் மற்றவரை நேசிக்கும் விதம், எந்தவித நிஷ்களங்கமும் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் நகர்கிறது அவளின் காதற் பெருவாழ்வு.

you kindled me...

அன்புடன்
ராகவன்

மண்குதிரை said...

unmaithaan sir

avarkalum azhakaanavarkal

naamumthaan

க.பாலாசி said...

பார்வை கொண்ட அகங்காரம் சில அழகுகளையும் அகோரமாய்தான் காட்டுகிறது. அதை மனதுடன் நோக்கின் மிக அழகாய் இருப்பது புலப்படும்...

நல்ல இடுகை அன்பரே....

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல படைப்பு. வித்தியாசமாக ரசிக்குமாறு இருக்கிறது.

சந்தனமுல்லை said...

மிகவும் ரசனையான இடுகை! தங்கள் அண்ணன் மகளுக்கு எனது வாழ்த்துகள்!!

அன்புடன் அருணா said...

/ஈடுபாடுதான் அழகு. அதற்கு அளவை கிடையாது. அது நிறம், வடிவம் சார்ந்ததக ஒப்புக் கொள்வதற்கில்லை/
அருமையா அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் காமராஜ்!

அன்புடன் அருணா said...

இது ராகவனுக்கு.........
உஙகள் பதிவில் உங்கள் மனம்
தெரிகிறது நெகிழ்ந்தேன்!

ஆ.ஞானசேகரன் said...

[[ஒரு நாள் எனது கிராமத்துக்குப் போனேன். காலாற நடப்பதாகச் சொல்லிக்கொண்டு அவள் வீட்டுப்பக்கம் போனேன் " வாங்கண்ணா எப்ப வந்தெக, மயினி பிள்ளகள்ளா வல்லயா "என்பதான கேள்விகள் என்னை இளக்கியது. வார்த்தைகளற்ற மன்னிப்புக்கடிதம் ஒன்று அவளுக்கு முன்னாள் கிடந்ததை அவள் அறிய இயலாது. ரசனைகள் மாறும், கற்பிதங்கள் மாறும், எல்லாம் மாறும். ]]

வணக்கம் நண்பா., ரசனைப்பற்றிய அழகா சொல்லிவிடீர்கள் பாராட்டுகள்

velji said...

ந்ல்ல பதிவு!

ஒரு நீரோட்டம் மணல் திட்டை கடந்து வரும் பொழுது இன்னொன்றும் சேர்ந்து கொள்ள சலசலத்து ஓடுமே..,அப்படி ராகவனும் இணைந்து கொண்டார்!

நாங்கள் ரசித்தோம்!

Pradeep said...

/***
இந்தியாவில் இதம் என்பதைக் குளிரும் மேலை நாட்டில் இதம் என்பதை வெப்பமுமாக அவரவர் புரிந்து கொள்கிறார்
***/
/**
வார்த்தைகளற்ற மன்னிப்புக்கடிதம் ஒன்று அவளுக்கு முன்னாள் கிடந்ததை அவள் அறிய இயலாது
**/
ரசித்தேன்

பா.ராஜாராம் said...

விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோசம் எனக்கு.அது இங்கே: http://karuvelanizhal.blogspot.com/2009/10/blog-post.html

காமராஜ் said...

இரண்டு நாள் வெளியூர்.
பதிவுக்கு வந்த நண்பர்கள்,
பின்னூட்டம் இட்ட
அன்பு உள்ளங்களெல்லோருக்கும்
நன்றி.

காமராஜ் said...

அன்பினிய ராகவன்....
அருணா மேடம், வேல்ஜி சொன்னது போல
உங்கள் பின்னூட்டம் இந்தப்பதிவை
இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறது.
நன்றி ராகவன்.

காமராஜ் said...

நன்றி பாரா.....
அன்பே பெரிய விருது.
விருது தரும் விருது

Deepa said...

aRpudhamaana pathivu!
varikku vari rasithhen!

mulk raj anand n anthak kathai engaLukkup paaadamaaga vandhathu ninaivukku varukiRathu!

Jennifer Lopes, Sylvester stallone udhaaRaNangal padu yadhaartham.

பா.ராஜாராம் said...

வேலைப்பளு காமராஜ்.முதலாளி வீட்டில் விருந்து வேத்தும் நெருதூளியா இருக்கு.நமக்கு பசியாத்துற வேலை.அதான் வர இயலாமல் போனது.விருதை கூட நண்பர்தான் சேர்த்தார் எல்லாதளங்களுக்கும் -புறா மாதிரி.அதை விடுங்கள்...உங்களை மாதவனை,இப்ப,இந்த ராகவனை எல்லோரையும் பார்க்கணும் மக்கா..பார்த்துக்கிட்டு இருக்கேன்தான் என்றாலும்,முகம் பார்த்து எப்படிய்யா இப்படில்லாம் எழதுறீங்க என ஒரு பார்வை பார்க்கணும்.அதுக்கு வெறும் புகைபடம் பத்தலைதான் காமராஜ்...

அருமை!

ராகவன் said...

காமராஜ்,
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்கு நான் எழுதிய பின்னூட்டத்திற்கு இத்தனை பேர் சிலாகித்திருந்தது. என்னை எழுதத்தூண்டிய காமராஜுக்கு நன்றிகள். உங்கள் தோள்களில் ஏறி திருவிழா பார்க்கும் நான், மற்றவர்களுக்கும் தெரிவது சந்தோஷம் தான். என்னை தோளில் சுமப்பதற்கும் நன்றி!

அப்புறம், அருணா, வேல்ஜி, பா.ரா. மற்றும் மாதவராஜுக்கு என் வந்தனங்கள்.

அன்புடன்
ராகவன்