16.10.09

புனிதவதிகள் மேல் சுமத்தும் அறியாதோர் பழி.

விளையாண்டு களைத்து தண்ணீர் குடிக்க வீடு நுழையும்பும்போது அவள் அதை மறைத்தாள்."எனக்குத்தெரியாம என்னத்த ஒளிச்சுவச்சு திங்கெ" என்று அவளிடம் கோபித்துக்கொண்டபோது. "ஆமா ஒன்யக்காட்லயும் எனக்கு தீமண்டமா பெருசுன்னு" சொன்னாள். பதில் போதவில்லை சந்தேகப்பொறி பற்ற ஆரம்பித்தது.


பிறிதொரு வேளையில் அம்சத்தையோடு ஒளித்து வைத்த பொருளை எடுத்துக்கொண்டு ஓடக் காட்டுக்குப்போனாள்.''பொட்டச்சிக சேந்து கூத்தடிக்கீகளா இரு அய்யாட்டச்சொல்றே'' என்று சொன்ன போது ரெண்டுபேருமே சிரித்தார்கள்.பயப்படாமல், கோபப்படாமல் சிரித்த போது மர்மம் அடங்கா தேடல் முளைத்தது.


முகத்துக்கு நேரே நீ என்னத்தயோ ஏண்ட மறைக்க என்று கோபப்பட்டபோது சிரித்துக்கொண்டே போடிச்செல்லம் இது பொம்பளக சமாச்சாரம் என்று சொன்னாள். தாய்க்கும் மகனுக்கும் இடையில் கூட மறைபொருள் வைத்த இயற்கையின் வஞ்சகம் புரியாமல் காலம் கழிந்தது.


தூரம் என்றும் தீட்டு என்றும் வேலிச்செடிகளிக்குள் சுருண்டுகிடக்கும் அவைகளெல்லாம் எதோ அந்தரத்து, அல்லது மேலுலகத்து, அல்லது மேக்குடி சமாச்சாரங்களெனக் கழிந்தது காலம்.


சுறு சுறுப்பை மொழி பெயர்த்தால் சுகாசினி மேடம் தான் கண்ணுக்கு தெரிவார்கள். அவர்கள் கூடச் சுருண்டு படுக்கும் அநேக நேரங்களில் எனது நலம் விசாரிக்கும் அன்பை '' வயித்து வலி தம்பி '' என்று மழுப்புவார்கள். மாத்திரை வாங்கித் தரவா எனும் பரிவை மீண்டும் எனது அம்மாவின் சிரிப்பாலே நிராகரித்து விடுவார்.

முதல் பையனுக்கு முதல் மொட்டை. வீடும் உறவும் பரபரக்கிற சந்தோசத்தில் அவள் பங்கில்லை. கூட வரவில்லை. போ பின்னால வாரேன் சொன்னதை நம்பிக்கொண்டேன். வீடு திரும்பும் வரை வரவில்லை அப்போதுகூட எனக்கு அம்மா மேல்தான் கோபம், ஆண்டவன் மேலில்லை. சுத்தம் என்று பின்காரணங்கள் கொண்டு வரலாம். சுத்தம் ஒரு நாளும் சோறு போடாது. அது மனிதர்களைக் கூறு போடும்.

உலகவிருத்தியின் ஊற்றுகண்ணைத் தீட்டெனச்சமூகம் பழித்ததனால் வந்ததிந்தக்கேடு என்பதை முழுசாய்ப் புரிந்துகொள்ள ஒரு ஆணுக்கு கால்நூற்றாண்டு காலம் தேவையாக இருக்கிறது. சக மனுஷியை, சரிபாதியைப் புரிந்து கொள்ள மறுக்கிற தடுப்புச் சுவர்கள் தான் இங்கே அடுக்கடுகாக உயர்ந்து நிற்கிறது வர்ணங்களாலும் பேதமையாலும். புரியாத அறிவியல் மீது கோபுரங்கள் முளைத்த தேசமிது.


நாப்கின் விளம்பரத்தை கேள்விகேட்கிற சிறார்களுக்கு அல்ல சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் நாற்பது வயதைத் தாண்டிய மேலதிகாரிகள் வேலை சுனங்குகிறதென்று பெண் பணியாளர்களைத் திட்டுகிற போது அவர்களின் உடல் முளை மனவெளியெங்கும் திட்டுத் திட்டாய் படிந்து கிடக்கிறது தீட்டு.



திட்ட இயக்குனர்கள், மந்திரிகள், தலைமை ஆசிரியர்கள், மேலாளர்கள், இப்படிப்பட்ட காகிதசமூகத்திற்கு நேர மேலாண்மை,கவனகம்,மனநெறி,நெறியாள்கை என என்னென்னவோ சொல்லிக்கொடுக்கிறது அரசு. கொஞ்சம் மனிதாபிமானத்தை, புரிதலைச் சொல்லிக் கொடுக்கத் தவறிபடியே.




16 comments:

ஆ.ஞானசேகரன் said...

//தாய்க்கும் மகனுக்கும் இடையில் கூட மறைபொருள் வைத்த இயற்கையின் வஞ்சகம் புரியாமல் காலம் கழிந்தது.//

ம்ம்ம்ம்

//திட்ட இயக்குனர்கள், மந்திரிகள், தலைமை ஆசிரியர்கள், மேலாளர்கள், இப்படிப்பட்ட காகிதசமூகத்திற்கு நேர மேலாண்மை,கவனகம்,மனநெறி,நெறியாள்கை என என்னென்னவோ சொல்லிக்கொடுக்கிறது அரசு. கொஞ்சம் மனிதாபிமானத்தை, புரிதலைச் சொல்லிக் கொடுக்கத் தவறிபடியே.//

உண்மைதான் நண்பா, அதையும் புரிதலுடன் எழுதிய பாங்கு அருமை பாராட்டுகள்

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அழகான பதிவு. என் பழைய நினைவுகளில் கல்லெறிந்து சலன வட்டங்களை நிரந்தரமாக்குகிறது உங்களின் இந்த பதிவு. வாழ்த்துக்கள். எந்த படைப்பும் ஒரு எவொக்கேஷனாய் படிப்பவனைப் போய் சேர்கையில் அதன் உன்னதம் நேர்மையானதாய் இருக்கிறது. எனக்கு இது பற்றிய நினைவுகள் நிறைய பகிர்ந்து கொள்ள ஆசை வருகிறது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை, அழகர்சாமி நாயுடு காம்பவுண்டில் தான் இருந்தோம். மொத்தம் 11 வீடுகள் இருக்கும் அந்த காம்பவுண்டில் 3 வீடுகளைத் தவிர ஏனையோர்கள் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் தெலுங்கு பேசுபவர்கள் என்பதால் சம்பாஷனைகள் தெலுங்கில் தான் இருக்கும். காலப்போக்கில் எல்லோருமே அந்த காம்பவுண்டில் தெலுங்கு கற்றுக்கொண்டோம்.

இந்த பதிவின் முதல் இரண்டு பத்திகளை படித்தபோது எனக்கு செவ்வாக்கிழம கொழுக்கட்டை தான் ஞாபகம் வருகிறது. எங்க காம்பவுண்டில் உள்ள 11 வீட்டுப்பெண்களும், சில சமயம் எதிர் காம்பவுண்டின் பெண்களும் சேர்ந்து கொள்வதுண்டு. தாயம்மாக்கிழவியின் வீட்டில் இரவில் கூடி, ஔவையார் சாமியை கும்பிடுவாதாகவும் அப்போது ஔவையாருக்கு உப்பில்லாத கொழுக்கட்டையை படைத்து தாங்கள் மட்டுமே உண்பதாகவும், இதை ஆண்கள் ஒளிந்திருந்து பார்த்தாலோ, அல்லது அந்த கொழுக்கட்டை தின்றாலோ அவங்களா ஔவையார் சாமி தண்டிச்சிரும் என்றும் சொல்வதுண்டு. நிறைய நாள் கேள்விக்கு பிறகு, நச்சரிப்புக்குப் பிறகு ஜெயந்தி தான் இதைப்பற்றியான ரகசியங்களை என்னிடம் கூறியிருக்கிறாள், யாரிடமும் சொல்லக்கூடாது என்று அம்மா மேல் ஆணையிட்டதன் பிறகு. அது வரை பூட்டிய கதவுக்குள் என்ன செய்வார்கள் இந்த பெண்கள் என்று விதவிதமாய் கற்பனை செய்து கொண்டு கதை வளர்ப்போம். ஆணுக்கு எதிராக நடத்தப்பெறும் ஒரு மிகப்பெரிய ரகசியப்புரட்சியாகவே இதை பிரகடணம் செய்வதுண்டு அவர்கள். அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதையில், ஒரு வீட்டில் உள்ள பெண்கள் தாங்கள் சமையல்கட்டை ஆள்வதாகவே கற்பனை செய்துகொண்டு, ஆண் சமூகத்திற்கு இதில் பங்கு இல்லை, இது எங்கள் ராஜ்ஜியம் என்பது போல் வளய வருவார்கள். இது போன்ற எல்லா பிரிவு நிலைகளும் தான், தீட்டு, பத்து என்று வேறு, வேறு பெயர்களில் வேறு, வேறு பரிணாமங்களில், வெவ்வேறு தளங்களிலும் இயங்கி வருகிறது இன்றும் என்றே நினைக்கிறேன்.

இடம் பத்தல, தொடர்கிறேன்...

அன்புடன்,
ராகவன்

ராகவன் said...

முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி,

மீண்டும் அன்பு காமராஜ்,

அழகர்சாமி நாயுடு காம்பவுண்டில் அப்போது பாம்பே கக்கூஸ் கிடையாது, எடுப்பு கக்கூஸ் தான், அதை சுத்தம் செய்வதற்கு இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஒரு சேரியில் இருந்து வரும் தோட்டிச்சிகள், தோட்டிகள் வருவதுண்டு (பதப்பிரயோகத்திற்கு மன்னிக்கவும், அவர்கள் ஒட்டான், ஒட்டாத்தி என்று அழைப்பதை கொஞ்சம் மாற்றி, பிறருக்கும் எளிதாய் புரிவதற்காக இது போல் குறிப்பிடுகிறேன்)இந்த கழிவகற்றும் பணியில் உள்ளவர்களும் தெலுங்கு தான் பேசுவார்கள். அவர்களுக்கு உணவு, காப்பி, மற்றும் தின்பன்டங்கள் தனியாக உள்ள ஒரு ஏனத்தில் கொடுப்பார்கள் எல்லோரும். இந்த சகோதர, சகோதரிகளை யாரும் தொட்டு விட்டால் உடனே குளிக்கச் சொல்லி விடுவார்கள் எல்லார் வீட்டிலும் பாரபட்சமில்லாமல். இந்த தீட்டு சமாச்சாரம் எனக்கு புரிந்ததே இல்லை. எல்லோர் வீட்டுப் பெண்களும் மாதவிடாயின் போது தனியாக ஒதுங்கிக் கொள்ள வீட்டுக்கார கிழவி தாயம்மாவின் வீட்டில் ஒதுங்கிக் கொள்வதுண்டு. அதற்காக ஒரு ஒதுக்குப்புறமான இடம் அவள் வீட்டில் உண்டு. இந்த நேரங்களில் மாதவிடாயில் இருக்கும் பெண்களுக்கு அவரவர் வீட்டில் இருந்து மூன்று நாட்களுக்கு உணவு போவது எனக்கு ஏன் என்ற கேள்வி துளைத்தெடுக்கும். என் அம்மாவிற்கும், முத்தையா ஆசாரியின் மனைவிக்கு மட்டும் இது போன்ற பிரச்னைகள் இருந்ததில்லை. என் அப்பா இதை ஒத்துக்கொள்ளமாட்டார். முத்தையா ஆசாரிக்கு நிறைய வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் இருந்ததால், அதைப் பற்றிய பெரிதான கவனஈர்ப்பு யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த தீட்டு சமாச்சாரத்தை என் அம்மாவிடம் கேட்டால், அதுக்கு அவள் அவங்க ஓட்டாத்தியத் தொட்டுட்டாங்க என்று பதில் சொல்வாள், நானும் பதிலுக்கு தொட்டா என்ன, குளிச்சா போயிடும்ல என்று கேட்டால் அம்மா ஏதோ சொல்லி சமாளிப்பது உண்டு. இது பற்றிய போதுமான புரிதல்கள் இல்லாமலே கழிந்தது என்னுடைய பால்யம். உன்னை என்னை சுமக்கத் தயாராகும் ஒரு தாயின் உடல் ரீதியான போராட்டம் தான், ஒரு ப்ராஸஸ் தான் இந்த நிலை என்பது எத்தனை பேருக்குத் தெரியும். மேல் மருவத்தூர் கோயிலில் மாதவிடாய் உள்ள பெண்களும் கர்ப்பகிரகத்துக்குள் நுழைய முடியும், பூஜை செய்ய முடியும் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன், எனக்கு அது ஒரு பெரிய அங்கீகாரமாய்த் தெரியும். நாத்திகம் பேசுபவனாய் இருந்தாலும், அங்கீகாரம் கொடுக்கும் எந்த ஒரு விஷயமும், எந்த ஒரு அமைப்பும், எந்த ஒரு இயக்கமும், எந்த ஒரு தனி மனிதனும், போற்றுதலுக்குரியது, குரியவர்கள் என்றே தோன்றுகிறது.

இன்றும் கரூர், ஈரோடு, மதுரை போன்ற நகரங்களை, ஊர்களை சுற்றியுள்ள கிராமத்தில் இரண்டு தம்ளர்கள் உபயோகிக்கும் டீக்கடைகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆதார தாத்பரியக்கோளாறு எங்கிருக்கிறது, அதன் ஊற்றுக்கண் எது என்பதை கொஞ்சம் உற்று நோக்கினால் நம் எல்லோரிடமும் பரவிப் பெருகியிருக்கும் பற்குழிகளென, புறச்சிரிப்பை மீறி!

அன்புடன்
ராகவன்

velji said...

புத்திக்குள் புகுந்து,மனிதர்களை வேறுபடுத்தி காலம் காலமாய் கோடிக்கனக்கான மனிதர்களை கட்டுக்குள் வைத்த இந்த சமூக கட்டுமானங்களை அச்சத்துடன் தான் பார்க்க வேண்டியதாகிறது.

பெண்களை பெண்களே மேற்பார்வை இட்டுக்கொண்ட அதன் சாதுர்யமும் கவனிக்கத்தக்கது.

சென்ற வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி,சற்று வயதானவர்தான்..சட்டென்று தாலியை கழற்றி காண்பித்தார்.ஆனால் பெரிய மாற்றங்கள் சட்டென்று நடப்பதில்லை.

மகள்கள்களை சற்று அனுமதிக்கும் ஆண்களும் மனைவியை சட்டங்கள் மீற அனுமதிப்பதில்லை.
சுடிதாரும், நைட்டியும் கூட மகள்களால் நிகழ்ந்த மாற்றமாகத்தானிருக்கும்

நல்லது நடக்கும்..இல்லை நகரும்!

மண்குதிரை said...

nalla ezhithitirukkiingka sir

naanum kozhukkattai matter thaan ninaichchen

udalai arivikkanum

அன்புடன் அருணா said...

இந்த சட்டதிட்டங்கள் நம் வீட்டுக்குள் வரவிடாமல் பார்த்துக் கொண்டாலே போதும்...புரிதல் மனங்களுக்குள் புகுந்து கொண்டு விடும்....

pavithrabalu said...

அன்புள்ள தோழரே

சுருக்கமான பதிவு. ஆனால், பெண்வலியை உள்வாங்கிய உணர்வு மிகச்சரியாக வெளிப்படுகிறது. தனியார் நிறுவனங்களில், உடல் உழைப்புச் சார்ந்த பணிகளில் இருக்கம் பெண்களின் சிரமங்களைப் பற்றி பேசுவதானால் ஆயிரக்கணக்கான பக்கங்களில் பதிய வேண்டியிருக்கும். ஓரளவு படித்த, அரசுப் பணியில் இருப்பவர்களிடம் கூட மகளிர் ஓய்வறையில் பெண்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தால், அது வேலைக்கு மட்டம் போடும் செயலாகத்தான் பேசப்படுகிறது. ஆனந்த விகடன் பத்திரிகையில் நாஞ்சில் நாடன் அவர்கள் தீதும் நன்றும் கட்டுரை வரிசையில் மாதவிலக்கு பிரச்னைகளைப் பற்றி எழுதியிருந்தார். இன்றைக்கும் அது பெண்களின் உடல்ரீதியான பிரச்னை என்பதாக மட்டும் அணுகப்படுகிறது. பண்டிகை,விசேச நாட்களில் பெண்கள் மாதவிலக்காகி விட்டால், பல குடும்பங்களில் அவர்கள் ஏதோ பெரிய பாவம் செய்ததால் வந்த வினை என்று வார்த்தைகளால் சுடுவதை பார்த்திருக்கிறேன்.ஆண்கள் இந்தப் பிரச்னையைப் பற்றி பொதுவெளியில் பேசுவது தான் மனரீதியான மாற்றங்களை உருவாக்க வழிவகுக்கும்.

சற்றே பெரிய பின்னுட்டம் தான்..

நன்றி தோழர்

Deepa said...

Hats off!!

//திட்ட இயக்குனர்கள், மந்திரிகள், தலைமை ஆசிரியர்கள், மேலாளர்கள், இப்படிப்பட்ட காகிதசமூகத்திற்கு நேர மேலாண்மை,கவனகம்,மனநெறி,நெறியாள்கை என என்னென்னவோ சொல்லிக்கொடுக்கிறது அரசு. கொஞ்சம் மனிதாபிமானத்தை, புரிதலைச் சொல்லிக் கொடுக்கத் தவறிபடியே.//

200%

அமிர்தவர்ஷினி அம்மா said...

:( தலைப்பு மிகப் பொருத்தமாய்

யோகராஜ் பக்கங்கள் said...

தோழர்,

தோழர் தமிழ்செல்வனுக்கு என்று துவங்கும் கட்டுரை ஒன்றை என்னுடைய வலைப்பூவில் பதிவு செய்திருக்கிறேன்.

நேரமிருக்கும் போது வாசித்துப் பாருங்கள்
எனது வலைப் பூ

http://yogarajbabu.blogspot.com/

மிக்க அன்புடன்
யோகராஜ்பாபு

க.பாலாசி said...

//ஆனால் நாற்பது வயதைத் தாண்டிய மேலதிகாரிகள் வேலை சுனங்குகிறதென்று பெண் பணியாளர்களைத் திட்டுகிற போது அவர்களின் உடல் முளை மனவெளியெங்கும் திட்டுத் திட்டாய் படிந்து கிடக்கிறது தீட்டு.//

உண்மைதான் அன்பரே...மிக கீழ்த்தரமான செயல் என்றுகூட சொல்லலாம்.

//என்னென்னவோ சொல்லிக்கொடுக்கிறது அரசு. கொஞ்சம் மனிதாபிமானத்தை, புரிதலைச் சொல்லிக் கொடுக்கத் தவறிபடியே.//

மனிதாபிமானம் என்பது சொல்லிக்கொடுத்து வருவதில்லையே அன்பரே... அப்படி செய்பவர்களின் அன்னையும், மனைவியும் இவைகளை கடந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

தமிழ் நாடன் said...

அருமையான வெளிப்பாடு. ஆழமாக சித்திக்கவைக்கின்றன உங்கள் வரிகள்.
கலாச்சார அடர்த்திமிக்க இசுலாம் மக்கள் வாழும் இந்த தேசத்தில் கூட மாதவிடாய் என்று சொல்வதற்கு பெண்கள் தயங்குவதில்லை. ஆனால் நமது நாட்டில் மக்கள் இன்னும் பழமையில் ஊறி நிற்பதை சகிக்க முடிவதில்லை.

Unknown said...

சூப்பர் மாமா!செவிடனுக்கும் கேட்கும்...!

காமராஜ் said...

அன்பிற்கினிய எனது வலை நண்பர்களுக்கு வணக்கம்.
இயற்கையின் சுழற்சியை, ஒரு மறை பொருளாக்கி ஒதுக்கி வைத்து, பின் அதை இழிவாகவும் சாபமாகவும் கற்பிதப்படுத்தும், இந்த வழக்கத்தினை ஓரளவு மனந்திறந்து பேச முயற்சித்தேன். அன்பு மருத்துவர் ஷாலினி மாதவிடாய் குறித்து எழுதியவை மிக அபாரமானது. ஆனால் அவர் ஒரு மருத்துவர் என்கிற போர்வை வந்துவிடும். எனவே பொதுவாகவெளியில் இதைப்பேச வந்த எனது அருமை நண்பர்கள் அணைவருக்கும் தாமதமாக என் நன்றிகள்.

யோகராஜ் பக்கங்கள் said...

அன்பு நண்பர் காமராஜ் அவர்களுக்கு

வணக்கம்.

அனுதாபத்தையும், ஒத்தகருத்தையும் சுடுசொல் கொண்டு விலைக்குவாங்க முடியாது என்ற உங்களுடைய வாக்கியம் மனதில் தைக்கிறது.

இதுவரை பயன்படுத்திய சுடுசொற்களுக்காக வருந்துகிறேன்.
இனிமேல் சுடுசொற்கள் பயன்படுத்தாமல் இருக்க கவனமாயிருக்கிறேன்.

ஆனாலும் நான் எழுதும் கட்டுரைகளில் சுடுசொற்களை, மனதைச் சுடவதற்காக நான் பயன்படுத்துவதில்லை.

விவாதம் தொடர அது ஒரு காரணியாக இருக்கும் என்பதாலேயே செய்கிறேன்.

மற்றபடி தோழர்கள் என் மரியாதைக்குரியவர்கள் தான்.

என் ஆதங்கமெல்லாம் அறுபது எம்பிக்கள் வரை கொண்டிருக்கிற சிபிஎம், பாராளுமன்றத்தில் ஒருபோதும் ஈழத்தமிழர்களுக்காக பேசாமல் மௌனித்து இருப்பதும் அதை தமிழ்நாட்டில் இருக்கிற சிபிஎம் தோழர்கள் வழிமொழிந்து இருப்பதும் தான்.

இது உடைக்கப் படவேண்டிய மௌனம் என்பது என் எண்ணம்.

ஈழ விடுதலை சிபிஎம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகளிலும் தமிழ் நாட்டு சிபிஎம் தோழர்களின் மனமாற்றத்திலும் இருக்கிறது என்று நான் உளமாற எண்ணுகிறேன்.

தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி

மிகுந்த அன்புடன்
யோகராஜ்

யோகராஜ் பக்கங்கள் said...

அன்பு நண்பர் காமராஜ் அவர்களுக்கு

வணக்கம்.

நாளைந்து நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை.

இன்றுதான் நேரம் கிடைத்தது.

மாதவராஜ்- மத்தியதர வர்க்க மார்க்சிய கனவான் என்றொரு பதிவை எழுதியிருக்கிறேன்.

நீங்கள் சொன்னதைப் போல சுடுசொல்லை தவிர்த்தே எழுதியிருக்கிறேன்.

நேரம் இருக்கும் போது வாசியுங்கள்.

மிக்க அன்புடன்
யோகராஜ்
http://yogarajbabu.blogspot.com/