25.10.09

டக்ளஸ் ஹச். மார்க்வெசும், மூலைவீட்டு முருகேசனும்.

ஊர் ஒதுக்கத்தில் திருட்டுத் தம்மடித்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி ஒரு பொடியன் வந்தான். ''ஊர் மடத்தில் கூட்டம் கூடிருக்கு ஒன்ய ஊர்த்தலைவர் வரச்சொன்னார்'' சொல்லிவிட்டு வந்த வேகத்தில் திரும்பி ஓடிவிட்டான். வீட்டுக்குத்தெரியாமல் செய்த தவறுகளின் பட்டியல் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து அலைக்கழிக்க. எதுவும் டாலியாகவில்லை. போனவாரம் எதோ குருட்டுத் தைரியத்தில் அவள் கன்னத்தில் உரசியதை முத்தம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உதறிவிட்டுக் கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டு ஓடிய அவள் ஊரைக் கூட்டியிருப்பாளோ எனும் சந்தேகம் வேகமெடுத்தது. போகிற வழியில் அவளது சித்தியும் கூட முகத்தைத்திருப்பிய காட்சி இன்னும் கூடுதல் உதறலைக்கொடுத்தது.


சனம் திரண்டு நிற்க நடுவில் இரண்டு பேண்ட் போட்ட படித்தவர்கள் இச்சிப்பட்டை,ராப்பட்டை போல நின்றிருந்தார்கள் அவர்களில் ஒருவர் கார்த்தி அண்ணன். அங்கே எப்போதும் இப்படித்தான். குரங்கு,கரடி,கிளிஜோசியம்,ஊர்தவறிய பிச்சைக்காரர்கள், போலிஸ்ஜீப்,கார்,கலைக்கூத்தாடி எல்லோருக்கும் ஒரே மாதிரியான கூட்டம் கூடும். ஓசிப்பொழுது போகஎப்போதும் நடக்கிற தெருச்சண்டையை விட்டால் இப்படி ஏதாவது எப்போதாவது விசேஷமாகக் கிடைக்கும்.


கார்த்தி அண்ணன் சாத்தூரில் இருந்து வந்து எங்கள் ஊரில் தீப்பெட்டி ஆபீஸ் நடத்தும் பட்டாதாரி. அவர் ஒரு பிரபல நடிகரின் கூடப் பிறந்தவர். அந்த நடிகரும் நானும் ஏவீஸ்கூலில் ஒன்றாகப் படித்ததால் என்மேல் கூடுதல் பிரியமாக இருப்பார். மற்றபடி ஊர்க் குமரிப்பிள்ளைகள் கிண்டலடிக்க நிறைய்ய சுவாரஸ்யங்கள் அவரிடம் உண்டு. போனிஎம், அப்பா இசை கேட்பார். ஆங்கிலப் படங்களை, நடிகர்களை சுட்டிக்காட்டித் தெரியுமா எனக்கேட்பார். சொக்கலால் பீடிக்கம்பெனி விளம்பரத்துக்கு ஓசியாய்க் காட்டப் படும் வீரத்திருமகள்,நல்லதங்காள்,படங்களை பார்க்கிற ஊர்ச்சனங்களுக்கு அவர் பேசுகிற எல்லாமே சிரிப்பாணிதான். அவரைப்போல கறுப்பான கலரில் பனியனும் அரைகால் டவுசரும் போட்டுக் கொண்டு அலைவார்.நாய்களுக்கு அப்போதெல்லாம் ஒரே குதியாட்டம் தான்.


அவரோடு வந்திருந்த பொழுதுபோக்கு ஒரு வெள்ளைக்காரன். ஊர்க்காரர்களுக்கு அன்று அவர்தான் குரங்கு. அவருக்கு ஊர்க்காரர்கள் குரங்கு. ஒரு வெள்ளைக்காரன், ஒரு பட்டணத்துக்காரன், ஒரு கடைக்கோடிக்கிராமம். இவர்களுக்கு நடுவில் உரையாடல்களை மொழிபெயர்க்கிற வேலை எனக்கு. நான் பேசிய ஓட்டை இங்லீசை ஊரே கொண்டாடியது. கார்த்தி அண்ணன் என்ன சொல்லி அவனைக் கூட்டிக் கொண்டு வந்தாரோ தெரியவில்லை. உலக அலட்சியம் அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் செயலிலும் இருந்தது. தனக்கு எல்லாம் தெரியும் உங்களுக்கு என்ன தெரியும் என்று சொன்னான். இமயமலைப் பக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வரும்போது இடைமறித்த ஆறு திருடர்களை தனக்குத்தெரிந்த தற்காப்புக் கலைகளால் விரட்டியடித்ததாகச் சொன்னான். யாராவது தைரியசாலி இருந்தால் என்னோடு சண்டைக்கு வாருங்கள் என்று சவால் விட்டான். பெண்கள் பக்கம் சலசலப்பு அதிகமானது.


அந்தப்பக்கமாய் தண்ணிபாச்சிவிட்டு வந்த முருகேசனைக் கூப்பிட்டு நான் செய்வதெல்லாம் உன்னால் செய்ய முடியுமா என்று சீண்டினான். சங்கோஜப்பட்ட அவர் சுதாரித்துக்கொண்டு களத்தில் இறங்கினார். முதலில் அவன் நின்ற இடத்திருந்து எவ்விக்குதித்து மார்க் பண்ணிவிட்டு முருகேசனைக் கூப்பிட்டார். முருகேசன் சாவகாசமாக அவனை விட இரண்டு மடங்கு தாண்டி விட்டு மம்பட்டியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார். தான் ஜீன்ஸ் கால்சராய் அணிந்திருப்பதால் அப்படியனது எனச்சாக்குச்சொல்லிக்கொண்டிருந்த போது எட்டு வயசே இருக்கிற கருப்பசாமி தடாலென்று அவனெதிரே வந்து நின்று கம்புக் கூட்டுக்குள் கைவைத்து டர் டர்ரென்று ஓசை வரச்செய்தான் கூட்டம் கிடந்து சிரித்தது.

5 comments:

velji said...

கடைசியில் வாய் விட்டு சிரித்து விட்டேன்...!

காமராஜ் said...

அன்புக்கு நன்றி வேல்ஜி.

ஈரோடு கதிர் said...

ரசித்தேன்
சிரித்தேன்

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நிறைய சிரித்தேன் காமராஜ்! “வீட்டுக்குத்தெரியாமல் செய்த தவறுகளின் பட்டியல் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து அலைக்கழிக்க” வீட்டுக்குத் தெரியாமல் செய்யும் தவறுகள் சின்ன வயசில் இருந்து ஒரு ரகசிய தழும்பாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது இன்று வரை. முன்னே அப்பா, அம்மா இன்று மனைவி, சுவாரசியமாய் வாழ்க்கையை நகர்த்த இதுபோன்ற தவறுகள் தேவையாயிருக்கிறது.

அதென்ன இச்சிப்பட்டை, ராப்பட்டை எனக்கு என்னான்னு தெரியலை. எல்லாவற்றையும் அதிசயமாய் பார்க்கும் ஊரில் என்னுடைய சவுராஸ்ட்ரா நன்பனையே வெள்ளைக்காரன்னு சொன்ன ஊர் தானே நானும்.”கறுப்பான கலரில் பனியனும் அரைகால் டவுசரும் போட்டுக் கொண்டு அலைவார்.நாய்களுக்கு அப்போதெல்லாம் ஒரே குதியாட்டம் தான்”
மஹா ரசனையுடன், நகையுணர்வுடன் சேர்க்கப்பட்ட வரிகள், ஞாயிறு கோழி செரித்தது, வெத்தல சுருள் பாக்கு இல்லாமல்.

அன்புடன்
ராகவன்

சந்தனமுல்லை said...

:-))) மனதை லேசாக்கியதற்கு நன்றி!