25.1.11

கீழே கிடந்த உளியின் சிற்பி.


ஷாஜஹான் மாமாவின் ’கருவேல மரங்கள்’ சிறுகதையை நினைவுபடுத்தியபடி அவர் வந்தார்.வசல் வரை வந்து கொஞ்சம் தயங்கி நின்றார் யாரோ ஊர்லருந்து வந்துருருக்காங்க சொல்லி எழுப்பிவிட்டாள். அவர்தான் பாக்கியத்தாத்தா.முப்பதுவருடமாகப்பார்த்த அதே தலைப்பாகை.குளிக்கும்போது கூட கழற்றமாட்டார்.சாப்பிடும்போது தலைத்துண்டை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு மரியாதை செய்வது பொதுவாக கிராமத்து வழக்கம். ஆனால் பாக்கியத்தாத்தா அப்போதும் கழற்ற மாட்டார்.
கவசகுண்டலம் போல கூடவே இருக்கும் ஒரு மஞ்சப்பை.இரண்டு உளி.
ஒரு சுத்தியல்.சாப்டுறீகளா என்றதும் தலைகவிழ்த்து மௌனம் காத்தார்.சாப்பாட்டு மேஜையில் வைத்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் மஞ்சப்பையை வைத்துவிட்டு கீழே உட்கார்ந்தார்.மிச்சமிருந்த மூன்று ஆப்பமும் கொஞ்சம் தேங்கய்ப்பாலும் வைத்தாள் கூட்டிப்பிடித்தால் ஒரு கவளத்துக்கு வராது.ஆனாலும் அவருக்கு பதவிசாய் நுனிக்குச்சாப்பிட வராது.மதியத்துக்கு ஆக்கி இறக்கிய சுடுச்சோத்தில் கொஞ்சம் வைத்தாள். பின்னும் வைத்தாள்.அவருக்கு வயிறு நிறைந்திருக்காது.ஆனாலும் மனசு நிறைந்திருந்தது.

விடு விடுவென்று க்ரைண்டரில் இருக்கிற கல்லை எடுத்துக்கொண்டு வாசலுக்குப்போய் வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டார். உளிச்சத்ததுக்கு பயந்து காகங்கள் மிரண்டு பறந்து ஓடியது.தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த குழந்தைகள் ஓடிவந்து அருகிருந்து வேடிக்கை பார்த்தார்கள்.தாத்தா அவர்களோடு பழக்கம் பேசினார்.ஒரே சிரிப்புச் சத்தமாகக்கேட்டது. ’தாத்தா அது எள்ளுக்ஞ்சியில்ல எல் கே ஜீ.’ தென்னம்பட்டையில் நாலு இதழ் உருவி ஆளுக்கொரு பீப்பியும் பொம்மையும்
செய்துகொடுத்தார்.கடைக்கு வந்த எஞ்சீனியரின் மனைவி

’இந்தாப்பா க்ரைண்டர் கொத்த எவ்வளவு’

என்று கேட்டார். தாத்தா அவர் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் குழந்தைகளோடு பழமை பேச ஆரம்பித்தார்.

‘இந்தாப்பா ஒன்னியத்தான காதுல விழல கூலி எவ்வளவு’
’இல்ல தாயி கூலிக்கு கொத்துறதில்ல’
’பின்ன’
அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து பிரேமாவதி ஓடிவந்து
’ரமேஷம்மா அது எங்க வீட்டுக்காரரோட தாத்தா’
என்று சொன்னதும்
‘சாரி பெரியவரே’

என்று சொல்லிவிட்டு அவளை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு நகர்ந்தார்.குழந்தைகளுக்கு இந்த சம்பாஷனையில் எந்த நாட்டமுமில்லை. அவர் கையில் படிந்திருந்த கருங்கல் தூசியைப் பார்த்தார்கள். குழவிக்கல்லில் மீது உதடு குவித்து தாத்தா ஊதியதும்  ஒரு பெரிய்ய பெருமூச்சின் சத்தம் கேட்டது. அதிலிருந்து கிளம்பிப் பறந்த துகள்களோடு சிறுவர்கள் காற்றில் பயணமானார்கள். தாத்தா எழுந்து கொல்லைப்பக்கம் போய் ஒரு பீடி பற்றவைத்துக் கொண்டு நின்றார். ரமேசு அந்த நேரம் கீழே கிடந்த உளியெடுத்து குழவிக்கல்லில் வைத்து அடித்துக்கொண்டிருந்தான். ’தம்பி சின்னவரே கீழ போடுங்க கையிலபட்டுச்சி ரத்த வந்துரும்’ கூட இருந்த குழந்தைகள் நான் நீயெனப்போட்டி போட்டுக்கொண்டு சுத்தியல் கேட்டன.இன்னொருவன் வெறும் உளியெடுத்து குழவிக்கல்லில் அடித்துக்கொண்டிருந்தான். பாதிப்பீடியை கீழே போட மனசில்லாமல் தூக்கியெறிந்துவிட்டு ஓடிவந்து குடுங்க சின்னவரே குடுங்க என்று கேட்டுக்கொண்டிருந்தார் பாக்கியத்தாத்தா.

திரும்பவந்த ரமேசம்மா  ’டாய் ரமேஷ்  இண்ட்டிசண்ட் ராஸ்கல் கிவ் த ஹாம்மர்’ என்று அரட்டிக்கொண்டே வந்தாள். கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனாள். கையிலிருந்த பொம்மையும் பீப்பியும் கீழே விழுந்தது குனிந்து எடுக்கப்போனான். குனிய விடாத படிக்கு லாவகமாக கூட்டிக்கொண்டு போனாள். ரமேசு திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே போனான். பொம்மை பீப்பியும் அழுதுகொண்டே கீழேகிடந்தது.தாத்தா இன்னொரு பீடி பற்றவைத்து ஆழமாகப்புகை விட்டார்.

திங்கள் கிழமை காலையில் பள்ளி வாகனங்களும் ரிக்‌ஷாக்களும் ஆட்டோக்களுமாக குதூகலத்தை அடைத்துக்கொண்டு அந்த வீதி பரபரப்பாகிக் கொண்டிருந்தது.அந்த மஞ்சள் நிற பள்ளிவாகனம் நின்றது ரமேசு கீழே இறங்கினான்.கீழேகிடந்த பொம்மையையும் பீப்பியையும் எடுத்துக்கொண்டு அங்கிள் போகலாமென்றான். ப்பீப்பி சிரித்தது பொமை குதித்துக் குதித்து ஆடியது.

12 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

ஆத்தீ வடையும் எனக்கேவா....

எல் கே said...

good one :)

பா.ராஜாராம் said...

அருமை காமு!

Unknown said...

நல்லா இருக்குங்க.

ஈரோடு கதிர் said...

அருமையோ அருமை!

Mahi_Granny said...

இந்த சிற்பிக்கு என் பாராட்டுக்கள்

பத்மா said...

அட அட அட ....
இப்போ எனக்கு ஒரு பொம்மை வேணும் போல இருக்கு ..
மறைந்து கிடக்கும் நம் குழந்தை தனத்தை வாழ வைக்க சிலபேர் தேவை ..
அதை சாகடிக்க பலபேர் காத்துக்கொண்டிருந்தாலும்..
அவர் வலிக்கும் புகையின் நீண்ட இழுப்பில் எத்தனை கதைகளோ ?

Unknown said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

காமராஜ் said...

mano
Lk
PA.RA
SETHU SIR
KADHIR
MAHI AKKA
PADMA......

NANTRI

சிவகுமாரன் said...

அருமை.
எள்ளுக்கஞ்சி ரசிக்க வைத்தது.
பூவரச இலையில் பீப்பி செய்து ஊதிய நினைவுகளும். என் அப்பாவின் சித்தப்பா ஒருவர் எங்களிடம் காட்டிய வெள்ளந்தியான பாசமும் அலைக்கழிக்கின்றன மனதை.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!