31.1.11

நல்லதோர் வீணை செய்தே


வடபழனி முருகன் கோவிலுக்குப்போகும் தெரு நெடுக பக்தி,பக்தி சார்ந்த கடைகள். மெலிதான குரலில் பக்தர்களை அழைக்கும் கடைக்காரர்கள்.கார்களில் வந்திறங்கும் மேட்டுப்பக்தர்களுக்கென அழகுற நிர்மானிக்கப்பட்ட பக்தி ஸ்தாபனம்.பளிங்குத்தரை துருப்பிடிக்காத உலோகங்களிலான கிராதிகள் கொண்ட தடுப்புச்சுவர்கள்.அழுக்கு தூசி அதுசார்ந்த எதுவும் கண்ணில் படாத முருகனின் ஆலயம்.
அடித்தட்டு மக்கள் புழக்கமில்லாததால் முருகனுக்கு பெரிதாக வேண்டுதல்கள் ஏதுமற்ற பொழுதுபோக்கு தரிசனம் தருவது மட்டும் தான் பிரதான காரியம்.உருமிமேளம்,குலவைச்சத்தம்,அன்பென்றால் கூட ஆங்காரத்தோடு கூடிய அன்பு,சின்னச்சின்னச்சண்டைகள்,சிதறுகிற தேங்காய்,பூ பத்தி சந்தணமணத்தோடு பொங்குகிற சக்கரைப்பொங்கல் வாழ்நாள் முழுக்க இவைகள் தான் வழிபாட்டுத்தலமாகி இருந்ததால்.
வடபழனி கோவில் எதோ அறியாத பணக்காரப்பங்களாவுக்குள் நுழையும் உணர்வைக்கொடுத்தது.

அங்கே முழுக்கால்சராய் அணிந்த சேவைக்காரர்கள் இரண்டு மூன்று பேர் இருந்தார்கள்.கால் சரிவர இயங்காத,பேசவராத பார்வைப்புலன் இல்லாத அந்த மாற்றுத்திறனாளிகள் குங்குமம்,விபூதியை கீழே போடாமல் எடுத்துச்செல்ல காகிதங்கள் கொடுத்தும்,அவர்கள் தரும் சில்லறைகளை வாங்கிக்கொண்டும் கோவில் பிரகாரம் முழுக்க வியாபித்திருந்தார்கள்.அத்தோடு கூட சீர்காழியின் உயிர் உருக்கும் குரலும் அந்த கோவில் முழுக்க வியாபித்திருந்தது.தங்கச்சி சின்னப்பொன்னு தலை என்ன சாயுது,வஞ்சகன் கண்ணனடா கர்ர்ர்ர்ணா,சின்னஞ்சிறு பென்போலே சிற்றாடை இடையுடுத்தி இப்படிக்காலத்தோடு இனிப்புத்தடவிய கீதங்களை கேட்டுக்கொண்டே கிடக்கலாமெதுவும் ஒட்டாத போது அந்தக்குரல் மொத்தமாக வந்து ஒட்டிக் கொள்ளாதா.

வெளி வந்து டெரக்கோட்டாவில் வடிவமைக்கப்பட்ட இரண்டு குட்டிப் பாண்டங்கள் வாங்கினோம்.பளீரென்ற செம்மண்ணில் செய்த அந்த சாம்பிராணி குடுவையைக்கையில் வாங்கியதும் பேராசிரியர் ரவிச்சந்திரனின் சூரியச்சக்கரம் என்கிற கவிதையும்,எங்க ஊர் முத்துவேல் செட்டியாரும் நினைவுக்கு வந்தார்கள்.வண்டி நிறைய்ய மண்பானைகள் கவிழ்ந்திருக்கும்.மேக்காலின் நுனியில் செட்டியாரின் மனைவி செட்டியாரம்மா உட்கார்ந்திருப்பார்.செட்டியார் மாடுகளோடு கூட நடந்து ஊருக்குள் வருவது கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். பானைகளின் மகத்துவம் சொல்லி அதைக்கவிழ்த்தி அட்காட்டி விரலை மடக்கி தட்டுகிற ஓசை கணீர் கணீரென்று கேட்கும். ’இந்தா தாயி
படக்குனு உருவாத கேட்டா எடுத்துத்தருவேனெ’ன்று புகை மணக்கும் மண்சட்டிகளை பிள்ளைகளிப் போல கவனித்துக்கொள்வார்.

கடையை விட்டு வெளிவந்த போது ஒரு பிச்சைக்காரக்கிழவியை ஒரு வேஷ்டி உடுத்திய ஆள் உருட்டுக்கட்டையால் அடித்து விரட்டிக்கொண்டிருந்தார்.அவள் சென்னைத்தமிழில் அர்ச்சனை பண்ணிக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினாள்.வற போற சேவார்த்திககட்ட பைய இயுக்கா,துட்டுக்குடுக்கலேண்ணா பேஜார் பண்றா என்று சொல்லியபடி இன்னும் கெட்டவார்த்தைகள் சொன்னார்.
அவர் அங்கிருந்து போனதும் இவன நேத்து கடக்காரங்க அடியான அடி அடிச்சாங்க இன்னிக்கி பாருங்க இது பேஜார் பண்ணுது என்று கடைக்காரர் சொன்னார். கோவிலுக்கு வந்த பக்கத்து தெரு பெண்பக்தர் ஒருவர். இவுரு யார் தெர்தா நம்ப பாரதியாருக்கு பேரப்புள்ள,
பாவம் இப்படி ரோட்டுல அலையுது என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து கடந்து போனார்.கையில் வைத்திருந்த நினைவுகள் நொறுங்கிப்போக அங்கிருந்து உடனே காலிபண்ணிக்கொண்டு வீடு வரவேண்டியதாயிற்று.  

8 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

// பக்கத்து தெரு பெண்பக்தர் ஒருவர். இவுரு யார் தெர்தா நம்ப பாரதியாருக்கு பேரப்புள்ள,///


அடடா..............!!!

அன்புடன் அருணா said...

அய்யய்யோ நிஜம்மாவேவா????

Unknown said...

நிஜமாவா? வேணாங்க. பாரதி மிக உயர்ந்த ஸ்தானத்திலே இருப்பவர். வேண்டாங்க. இது மாதிரி விஷயங்கள கேட்க்காம இருப்பதே நல்லுதுங்க. நம்ம மக்களை இன்னும் கேவலமா சொல்லிடுவாங்க. வேணாங்க.

Vasagan said...

பாரதியாரின் படைப்புகளுக்கு ராயல்டி ஏதும் கிடையாதா ? அவர் குடும்பம் இன்னமும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருகிறதா?
எப்பொழுதோ கல்லூரில் படிக்கும் பொழுது அவருடைய பேத்தியின் பேட்டி படித்த ஞாபகம்.

Unknown said...

அடடா, நிஜமா? ;-((

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இரு பின்னூட்டங்களிலும் பாரதியின் பேரனைப் பற்றிய செய்தி விடுபட்டிருக்கிறது காமராஜ்.

முயற்சியில் தளராமல் மறுபடியும் இது.

அது பாரதியின் பேரனாக இருக்கக்கூடாது என்கிறது கண்ணீர்.

இப்போதெல்லாம் என் கடவுள்கள் கோயில்களிலோ தேவாலயங்களிலோ இருப்பதில்லை.அதனால் நான் கோயில்களுக்குச் செல்வதில்லை.

ஆள்நடமாற்றமற்ற பாழடைந்த கோயில்களை மனம் தேடிச் செல்கிறது.நீங்கள் காண நேரிட்ட அவலங்கள் அங்கு நிகழ்வதில்லை.

தவிரவும் கடவுளின் வடிவங்களை மனிதர்களிலும் விலங்குகளிலும் இசையிலும் கவிதையிலும் காணப் பழகிவிட்டேன்.அது மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது.

அஹம் ப்ரம்மாஸ்மி காமராஜ்.