16.1.09

அரசின் செல்லப் பிள்ளைகளும், சிக்னல்களில் கைநீட்டும் அழுக்குப் பிள்ளைகளும்




நகர நெரிசலில், காலைப் பரபரப்பில், சிறிது இடறினாலும், சேதம் தவிர்க்க இயலாத நெல்லை வண்ணாரப்பேட்டை சிக்னல். அங்கே ஒரு உணவு விடுதிக்குப் போகும்போது ஒரு ஆறு வயதுப்பெண் வந்து வழிமறித்தாள். மாநிறம், கேள்விகளும், பாண்டசியும், விளையாட்டுக்களும் ஒளிந்துகிடக்கும் அகலக் கண்கள், அழுக்குச் சிறுமி.



" ய்ய்ய்யாயா...."



என்ற உயிர் பிடுங்கும் குரலோடு முகத்துக்கு நேரே கையை நீட்டினாள். ஒரு ரெண்டு ரூபாய் நாணயமும், இரண்டு ஐம்பது பைசா நாணயமும் கையில் இருந்தது. அவை ஒன்றோடொன்று உரசியதில் வாகன இரைச்சலை மீறி ஒரு பிச்சை சுரம் கேட்டது. உணவு விடுதிக் காவலாளி அவளை அதட்டி விரட்டினார். பயமற்று நின்று என்னிடம் வாங்கிக் கொண்டு அடுத்த நபருக்கு நகர்ந்தாள்.



" சோம்பேறிக , கையுங்காலு தெடமா இருக்குல்லா, இதுகளுக்கெல்லா எறக்கப்படக் கூடாது சார்வாள் ".


அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு வயசிருக்கிற இன்னொரு பெண்குழந்தை ஓட்டமாய் ஓடி வந்து எனது கால்சராயை இழுத்து கையை நீட்டியது. கொஞ்சம் கோபம் வந்தாலும் அதன் முகத்தில் இருக்கிற உலகறியா மழலை என்னைசெந்தூக்காகத் தூக்கிக் கண்ணத்தில் முகம் வைக்கத்தூண்டியது.அலுவலக நண்பர் குழந்தை மாதிரி, பேருந்தில், புகை வண்டிப் பயணத்தில், அருகிருக்கும் முன்பின் தெரியா சக பயணியின் குழந்தை மாதிரி அதுவும் குழந்தை தானே. என்னுடையதூய ஆடை அதைத் தடுத்தது. ஐந்து பத்துரூபாய் நோட்டைக் கொடுத்து கண்ணத்தைத் தட்டிவிட்டேன். வாங்கிய வேகத்தில் திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கு ஓடியது. ஒரூ கண நேரத்தில் பத்து வாகனங்கள் கடக்கிற அந்த பரபரப்பில் அதன் ஊடு பயணம் பார்க்கிற எவரையும் பயம் கொள்ளச் செய்யும். தூரத்தில் மறைந்திருந்த, அவளது தாயிடம் போய் பத்து ரூபாயைக் கொடுத்தது. நாங்கள் கடந்து வந்த இரண்டு விபத்துக்கள் நினைவுக்கு வர, பயமும் வேதனையுமாக அந்தக்குழந்தையை விட்டுகண்கள் வெளிவர மருத்தது. எதனாலோ பள்ளிக்குப் போகும்போது சைக்கிள் காரனிடம் இடிபட்டு கையுடைந்த மகனின் நினைவுகள் வந்து போனது.


" இப்டி பச்சக் குழந்தய நடுரோட்டில் ஓடவிட்டுச் சம்பாதிக்கிற இவங்கள யெல்லாம் நிக்கவச்சு சுடனும் ".


எனக்கருகே ஒரு கருத்தாளர் துடித்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பங்குச் சந்தை பற்றியும் ராமலிங்க ராஜு பற்றியும்கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்போது தான் சொகுசுக்காரிலிருந்து இறங்கிய இரண்டு கனவான்களின் பின்னாலே
" ய்ய்ய்ய்யாயா......"
என்றபடி தொடர்ந்தாள் மூத்தவள். சத்யம் நிறுவனம் குறித்த அவர்களின் பேச்சைத் தொடர்ந்தார்கள். ஐநூறு கோடியை அரசு விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டே நடந்தார்கள். உணவு விடுதிக்குள் அடுத்த இருக்கையில் தம்பதிகள் அமர்ந்திருந்தார்கள். குளிருக்காக கம்பளி உடை போர்த்திய, இரண்டு வயதுக்குழந்தையின் சப்பாட்டுத் தட்டில், சாம்பாரில் கிடந்த மிளகாயைக் கடிக்கக் கூடாது உரைக்கும், என்று அதட்டியபடி ஊட்டிக் கொண்டிருந்தார்கள்.
"சீக்கிரம் சாப்பிடு இல்ல இட்லிய அந்த பாப்பாவுக்கு குடுத்துருவேன்"


ஜன்னல் வழியே பார்த்தபோது மறுபடியும் அந்த இரண்டுவயதுக் குழந்தை ஒரு நண்பரின் கால்சராயைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது.


காவலாளிக்கும், கருத்தாளருக்கும், தெருவில் திரியும் அழுக்குக் குழந்தைகளுக்கும், பாதுகாக்கப்பட்ட குழந்தைகளுக்கும், எனக்கும், உனக்கும் இன்னும் நூத்திப்பத்துக் கோடிப்பேருக்கும் சத்தியமாய் சத்யம் நிறுவனத்தில் என்ன நடக்கிறதென்று தெரியாது.

5 comments:

மாதவராஜ் said...

காமராஜ்!

மிக முக்கியமான பதிவு.
இந்தக் குழந்தைகளை எந்த ஊடகங்களும் கண்கொண்டு பார்ப்பதில்லை.
ஆனால் இவர்கள் தினம் தினம் நம் கண்முன்னே வந்து நின்று நம் மனதையும், தேசத்தின் மனசாட்சியையும் உலுக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

காமராஜ் said...

நன்றி மாதவராஜ்..

எல்லாம் நாம் முன்னதாகவே அழுது, அழுது பேசியவைதான்.
சாப்பட்டுமேஜையை எவ்வி எவ்வித்துடைக்கிற சிறுவன் முகத்திலலென் மகன்
சாயல் தெரிகிறது என்று திருச்சி பேருந்து நிலையத்தில் கவிஞர் கந்தர்வன்
சொல்லும் போதும்.
அருப்புக்கோட்டை கலை இலக்கிய இரவு முடிந்து திரும்பி வந்து ச.வெ யின்
அறையில் அன்பிற்குரிய எழுத்தாளர் ஷாஜகான் சொன்ன போதும் உரைந்து
போன வார்த்தைகளின் அடர்த்தியில், விழுந்த கண்ணீரின் துளியில் கொஞ்சம்தானிது.

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்
http://www.focuslanka.com

காமராஜ் said...

வணக்கம் நிலாப்பிரியன்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ...

கோவி.கண்ணன் said...

காட்சிகளை கண்முன் விறிக்கும் எழுத்தாற்றல், அருமை அருமை !