15.10.09

அரசு மருத்துவரும், ஆத்தா மாரியும்.

சாமத்தில் மிளக்காய்ச் செடிக்கு தண்ணி பாச்சப்போன சின்னையனை மணல்லாரி தட்டிவிட்டுப் போய்விட்டது. அறுபது ரூபாய் கிடைக்கிற அவனது சம்பாத்தியத்தோடு தீப்பெட்டியாபிஸ் போகிற மனைவியின் பொருளாதாரமும் சேர்ந்து தான் பொழப்பை நகர்த்துகிறது. வாழ்நாள் சேமிப்பு கடுகு டப்பாவுக்குள் கிடக்கிற நாப்பது ரூபா. தலைமுறைச் சொத்து ஒத்தப்பத்தி ஓட்டுவீடு.இதைவைத்துக்கொண்டு அப்பல்லோ, விஜயா, அய்யா மீனாட்சிகளை நினைத்துப் பார்க்ககூட முடியாது. அம்பது பைசா அனாசின் மத்திரையில் சொஸ்த்தமாக்குக்கிற காய்ச்சலுக்கு, அத்தனை சோதனையும் செய்து, பதினெட்டாயிரத்தைப் பறித்துக்கொண்டு ஒரு சிடியும், கொஞ்சம் ரிப்போட் பேப்பரும், கொடுத்தனுப்பிய கார்ப்பரேட் மருத்துவமனைகளை வேடிக்கை பார்க்கக்கூட முடியாது சின்னையன் வகையறாக்களுக்கு.


அங்கு பூக்களின் வாசம் இல்லை. மூத்திரக் கவிச்சையும் மாத்திரைக் கவிச்சையும் கலந்த பினாயில் நெடியிருக்கும். இதமான சினிமாப்பாடல் கேட்காது. இருமலும் அனத்தலும்தான். ஆறுதல் வார்த்தையில்லை. பேசுபொருளெல்லாம் வலியும் ரணமும் தான். தாளிப்பு வாசம் மூக்கிலேயே பசியக் கூட்டுகிற ஆவிபறக்கும் வீட்டுச்சோறு இல்லை. ஈக்கள் மொய்க்கிற, ஆறி அலமர்ந்துபோன அச்சடிச்ச சோறுதான். கனிவில்லை, அலட்சியமும் அதட்டலும் தான். ஒரு சிறைச்சாலைக்குண்டான அத்தனை அம்சங்களிருந்தாலும், தர்மாஸ்பத்திரிகள் தான் அறுபது சதமான இந்தியர்களின் கதிமோட்சம்.


இருபது நாள் ஓடிப்போனது இப்போது சுவத்தைப் பிடித்து நடக்கிறான். வாசலுக்கு வந்து இடை தரிசில்லாமல் ஓடும் வாகனங்களைப் பார்க்கிறான். மரண இருள் விலகி வாழ்வின் நம்பிக்கை ஒளி வந்துவிட்டது. கண்டம் கழிந்தது. ஆத்தா மாரியம்மாளுக்கு ஆடோ, கோழியோ வெட்ட நேமுக்கம் போடுகிறான். அதுவரைக்கும் காத்திருக்க முடியாதல்லவா? அரசுமருத்துவர் தான் ஆத்தாரூபமாகத் தெரிகிறார். காலில் விழுகிறான்.

அங்குபூக்களின் வாசத்தை உண்டாக்கும்
செயற்கை மணம் இல்லை.
வரவேற்பறையில் சாயிபாபா படமும்
அதற்குக்கீழே
தண்ணீரில் மிதக்கிற பூக்களும் இல்லை.
நுனிநாக்கு ஆங்கிலம் இல்லை.


இருந்தாலும் சானிமணக்கும் மாட்டுக்கொட்டடி போல. ஆமணக்கு சுமந்த ஆறுமுகத்தாயின் மேல் மணக்கிற வேர்வை வாசம் போல. நடுச்சாம முழிப்பில் ஆசுவாசமாக ஊதும் சொக்கலால் பீடிப்புகை போல. ஊரைக் கூட்டுகிற கறிக்குழம்பு வாசம் போல. பனையும், சகதியும்,சண்டையும் நெரிசலும் இருந்தாலும் அருள்மணக்கிற மாரியாத்தா போல அவனுக்கு அந்த தர்மாஸ்பத்திரி.

12 comments:

velji said...

...அதன் காரணம் இன்னதென்றும் அறியார் என்கிற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.60% மக்களுக்கும் சாயிபாபாவின் அருள் கிடைக்கும் வரை மாரியாத்தாவின் அருள் மணக்கட்டும்!

ராகவன் said...

அன்பு காமராஜ்,

பெயருக்கு முரனான ஒரு பெயர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு. தர்மாஸ்பத்திரி, எந்த தர்மங்களும் இல்லாமல், தர்மம் என்கிற வார்த்தை அதன் எல்லா அர்த்தங்களும் இழந்து இலவசம் என்கிற ஒற்றை வார்த்தை மாத்திரமே ஒட்டிக்கொண்டு இருக்கிறது, வாழ்ந்து கெட்டவர்களின் வழித்தோன்றல்களாய் வெறும் பெயர் மட்டுமே சொந்தம் அதற்கு. இலவசம் என்கிற பதத்தின் அர்த்தம் கூட அரசு ஆஸ்பத்திரிகளில் வேறு நிலைகளில் புரிந்து கொள்ள பழகி விட்டோம். சுஜாதாவின் 'நகரம்' சிறு கதையில் விரியும் மதுரை ராஜாஜி மருத்துவமனையின் காட்சி விவரனைகளை ஞாபகப்படுத்துகிறது உங்களின் இந்த பதிவு.
“பனையும், சகதியும்,சண்டையும் நெரிசலும் இருந்தாலும் அருள்மணக்கிற மாரியாத்தா போல அவனுக்கு அந்த தர்மாஸ்பத்திரி” என்ன ஒரு செரிவான வார்த்தைகள். சின்னையனின் நம்பிக்கை அல்லது சின்னையன் போன்றவர்களின் நம்பிக்கை பற்றிய அசாத்தியமான புரிதல், வேப்பிலை கட்டி ஆடுகிறது.

மாணிக்கம் அண்ணனுக்கும் இது போல தான் நடந்தது. விருதுநகர் மாரியம்மன் திருவிழாவிற்கு மதுரையில் இருந்து கிளம்பிய ஒரு டெம்போ வேனில் பின் பக்கம் காலை தொங்கப்போட்டு அமர்ந்திருந்தவரின் இரண்டு கால்களையும் நசுக்கி கூழாக்கியது பின்னால் வந்துகொண்டிருந்த அசுரப்பேரழிவு லாரி. மாணிக்கம் அண்ணன் அப்போது தான் தங்கராஜ் மளிகையில் இருந்து பிரிந்து தனியாக கடை துவக்கியிருந்தார். புஷ்பக்காவை கலியாணம் செய்த பிறகுதான் அவருக்கு அதிர்ஷ்டம் வந்ததாக அவரே சொல்வதுண்டு. அங்கு கூழான அவர் கால்களை சரி செய்ய தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கமுடியாமல், அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த தர்மாஸ்பத்திரியில் மாணிக்கம் அண்ணனின் வாழ்க்கையும் முடமாய்ப்போனது. அவர் மகன் ஜெகதீஷ் சின்ன வயசிலேயே சேர்மக்கனி நாடார் கடையில் பொட்டலம் மடிக்கப் போய் விட்டான். மாரியாத்தா மாணிக்கம் அண்ணனின் வாழ்க்கையை முடமாக்குவாளா, எனக்குத் தெரியவில்லை.

எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இந்த பதிவு.

அன்புடன்

ராகவன்

ஈரோடு கதிர் said...

பொருளாதாரம் குறைந்த மனிதர்களின் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கிறது...

ஒரு ஏக்கப்பெருமூச்சோடு கடந்து கொண்டே இருக்கின்றோம்

சந்தனமுல்லை said...

அழகா புரிய வைச்சுட்டீங்க...எல்லோருக்கும் எல்லாம் ஒரேமாதிரி எப்போ கிடைக்கும்?!

மருத்துவமனைச் சேவைகள் பற்றி விளம்பரங்களும் கூட வருகிறதே..!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்த இடத்தைப் பார்த்துவிட்டீர்களா நண்பரே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்கள் சென்னையில் இருந்தால் ஒருமுறை அரசு பொது மருத்துவ மனைக்கு ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டுப் போங்களேன். செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இதமான சினிமாப்பாடல் கேட்காது.//

இப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரச்சார காட்சிகள் ஓடுகின்றன. கூட்டம் குறைவான நேரங்களில் கேபிள் டி.வி.யும் கூட ஓடுகின்றன. தமிழ் நாட்டில் உள்ள எந்த ஒரு கிராமபுர மருத்துவமனைக்கும் சென்று இந்தக் காட்சியைக் காணலாம்

நண்பரே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அருள்மணக்கிற மாரியாத்தா போல அவனுக்கு அந்த தர்மாஸ்பத்திரி.//

கண்ட இடத்தில் எச்சில் துப்பும் நபர்களை ஆத்தா ஏதாவது செய்தால் எல்லா மருத்துவமனையும் நன்றாக இருக்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அந்த தர்மாஸ்பத்திரியில் மாணிக்கம் அண்ணனின் வாழ்க்கையும் முடமாய்ப்போனது. //

அவரது உயிரைக் காப்பாற்றிய என்ற பொருளில் எழுதப் பட்டதாக பொருள் கொள்ளலாமா நண்பரே..,

க.பாலாசி said...

இன்றைய அடிமட்ட ஏழைகளின் கோயிலாக திகழும் சிதிலமடைந்த இடம்தான் அரசு மருத்துவமனை. அதை தங்களின் பார்வையில் மிக அழுத்தமாக பதிந்துள்ளீர்கள்.

நல்ல சிந்தனை இடுகை....

ஆ.ஞானசேகரன் said...

//இருந்தாலும் சானிமணக்கும் மாட்டுக்கொட்டடி போல. ஆமணக்கு சுமந்த ஆறுமுகத்தாயின் மேல் மணக்கிற வேர்வை வாசம் போல. நடுச்சாம முழிப்பில் ஆசுவாசமாக ஊதும் சொக்கலால் பீடிப்புகை போல. ஊரைக் கூட்டுகிற கறிக்குழம்பு வாசம் போல. பனையும், சகதியும்,சண்டையும் நெரிசலும் இருந்தாலும் அருள்மணக்கிற மாரியாத்தா போல அவனுக்கு அந்த தர்மாஸ்பத்திரி.//


சிந்தனைகளை தூண்டும் வரிகள்(வலிகள்)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நச்சுன்னு நடு மண்டைய பொளக்கறா மாதிரி எழுதியிருக்கீங்க