( ஒரு பழைய்ய கதை )
பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த மாநாட்டுக்கு மாதவராஜ், மாப்பிள்ளை ஆண்டோ, பாலுசார், மணியண்ணன் ஆகியோரோடு ஒரு இருபது பேர் போனோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். நீரோடிப் பயமுறுத்தும் அகலமும் ஆழமுமான பெயர் தெரியாத ஆறுகள். புகை வண்டிப் பயணமெங்கும் கிடைத்த காட்சிகள் இது. இரவு இரண்டரை மணிக்கு காலகண்டி ரயில் நிலையத்தில் இறங்கும் போது கடும் குளிர். பாதுகாப்புக் கருதி விடியும் வரை அங்கிருந்து யாரையும் கிளம்ப வேண்டாமென்று காவல் துறை தடுத்துவிட்டது. நாங்கள் ரயில்வே ஊழியர் சங்கத்தின் அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டோம். அலுவலகத்துக்கு நடந்து போகையில் தரையெங்கும் பயணிகள் சுருண்டு படுத்துக்கிடந்தனர். காலையில் ஐந்தரை மணிக்கு கிளம்பிய போதுதான் தெரிந்தது சுமார் மூவாயிரம் பேர் வெட்டவெளியில் மொட்டைக் குளிரில் படுத்துக் கிடந்தார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாய் கூலி வேலைக்கு இடம் பெயர்ந்து செல்பவர்கள் என்று சொன்னார்கள். மண் செழித்து மக்கள் வறுமையில் வாடுகிற முரணும் விநோதமும் கொண்ட தேசம் எனது இந்தியா. தனித் திறனாளர்களாக கிரிக்கெட் வீரர்கள் முதலிடத்தில் இருக்கும்போது இந்திய அணி அதள பாதாளத்தில் கிடக்குமே அது போல. நகரங்கள் எல்லாம் குண்டு பல்பில் மங்கிக் கொண்டிருக்க கிராமங்கள் இருளில் கிடக்கிற பிகார். இன்னும் முறுக்கிய மீசையோடு நிலச்சுவாந்தார்கள் குதிரையில் வலம் வரும் மாநிலம். பகலிலே ஓடும் வாகனங்கள் எல்லாம் தனியாருக்குச் சொந்தமான ட்ரக்குகள். நினைத்தால் போகும் இல்லையென்றால் வேறு ஏற்பாடுகள் தான். ஐந்து மணிக்குமேல் அதுவும் இல்லை. சாலையில் வாகனங்கள் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்தால் சௌஜன்யமாக இருக்கலாம் என்று சோதிடம் சொல்லும் நண்பர்கள் ஒரு மாதம் பீகரைச்சுற்றிப் பார்க்கலாம். அங்குதான் உலகின் அதிக மக்கள் தொகை வழிபடும் புத்தர் கோவிலும் போதிமரமும் இருக்கிறது. நம்ம ஊர் தொழில் நுட்பக் கல்லூரிகளை நினைவுபடுத்தும் பெரிய பெரிய தர்மசாலாக்கள் இருக்கிறது. அங்கிருந்து அறுபது கிலோ மீட்டரில் வாரணாசி இருக்கிறது. எண்பத்தி ஏழு கிலோ மீட்டரில் நாலந்தா இருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் பரப்பளவு. முப்பது மீட்டர் அகலமுள்ள நடைபாதை. சுமார் இரண்டாயிரம் ஆசிரியர்களோடு பத்தாயிரம் பௌத்த மாணவர்கள் தூரக்கிழக்கு நாடுகளில் இருந்து வந்து தங்கிப்படித்த உலகின் முதல் பல்கலைக்கழகம் நாலந்தா. ஐந்தாம் நுற்றாண்டுக்கும் பனிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்று கணிக்கப்படுகிறது. அந்தக்காலத்திலேயே அங்கே இறையியல், இலக்கணம், தர்க்கசாஸ்திரம், வானவியல், இயல்பியல், மருத்துவம், மனோதத்துவம் ஆகியவை கற்றுத் தரப்பட்டிருக்கிறது. உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் சீன யாத்திரிகருமான யுவான் சுவாங் நலாந்தாவின் பழைய மாணவர். சீக்கிய மதகுரு குரு நானக், ஜனநாயக விதை போட்ட நல்லரசன் அசோகன், மஹாத்மா காந்தி, இஸ்லாத்தின் சூவ்பி தத்துவம், இவற்றுக்கு ஊற்றுக்கண் நாலந்தா. இன்றைக்கும் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்ற பௌத்த விகாரைகளுக்கு இங்கிருந்து தான் பிடி மண்ணெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இரண்டடுக்கு தங்கும் அறைகள், ஏழு அடுக்கு தியான மண்டபம், கல்வி சாலை, கோவில்கள் யாவும் தனித்தனியே அமைந்திருக்கிறது. ஒருகிலோமீட்டர் பரப்பளவில் எங்கு தண்ணீர் விழுந்தாலும் மைய மண்டபத்துக்கு அருகிலுள்ள தெப்பத்துக்கு வந்துசேரும் ஏற்பாடு. இடிபாடுகளில் தப்பித்து இன்னும் உருக்குழையாத கட்டைச்சுவர்கள் கட்டிடக்கலையைப் பெருமைப் படுத்துகிறது. பதிவுலகினருக்கு கொட்டாவி வரும் இந்த ஒட்டை ரிக்காட்டுத் தகவல்கள் அவசியமாவெனத் தெரியவில்லை. ஆனால் ஒரு கேள்வி மட்டும் அத்தியாவசியமாகிறது.இவ்வளவு சிறப்புமிக்க ஒரு கல்வி சாலை ஏன் பாதுகாக்கப்படவில்லை ?.உலகத்துக்கு ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்த இந்தியா இன்று ஒரு கலர் பிக்சர் டியுப்புக்கும், மைக்ரோ சாப்டுக்கும்கையேந்துவதன் காரணமென்ன ?.இன்னய தேதி வரை நம்மால் ஒரு சிறு குண்டூசியைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன் ?. அடுத்தடுத்து நடந்த படையெடுப்பில் தரைமட்டமாக்கப்பட்டது நாலந்தா. அங்கிருந்து கிளம்பிய சமண பௌத்த துறவிகள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள். போதி மரம் வளர, வளர வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட உடல்களிலிருந்து பீறிட்ட குருதியோடு தர்க்க ஞானமும், பரிணாமத்தேடலும் உறைந்து போனது. உலகின் மிகப்பழம் பெரும் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று மாதங்கள் தழல் விட்டு எறிந்திருக்கிறது. பற்றி எறிந்த தீயில் இந்திய மெய்ஞானமும்,அறிவியலும்சமூகக் கேள்விகளும் சாம்பலாகிப்போனது. அந்த இடத்தில் இப்போது ஒரு உயர்நிலைப் பள்ளிகூட இல்லை. இந்தியாவின் மொத்தக் கல்விமுறையே அதன் பழைய மாணவர்களாக மாறியிருக்க வேண்டிய ஒரு மாபெரும் வாய்ப்பு இனப் படுகொலையோடு மறுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் வந்த குருகுலக்கல்வி முறைதான் உலகமறிந்ததே. ராஜாக்களுக்கும், பண்ணையார்களுக்கும் முதுகு சொரிந்து கொடுத்த கல்வித்திட்டம். அந்தக்கல்வி முறையைக் காப்பியடிக்கக்கூட சாமன்யர்களுக்கு உரிமையில்லை என்று சம்பூகனையும், ஏகலைவனையும் தண்டித்தது. அப்புறம் நம்ம மெக்காலேயின் அடிமைக் கல்வித்திட்டம் இதோ இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. மெக்காலேவைப் படித்த யுவன்களும், யுவதிகளும் கூட்டம் கூட்டமாய் நாலந்தாவுக்கு வந்து போகிறார்கள். வரலாற்றுப்பாடத்தில் ஒரு மதிப்பெண் கேள்வியாகக் கடந்து போகிற அந்த நாலந்தா மீது கடலைத் தோல்களையும் அது மடித்த காகிதத்தையும் வீசிவிட்டுப் போகின்றனர். பிரமிப்போடு அந்த இடிபாடுகளிலிருந்து ஒரு துகள் செங்கல்லையாவது எடுத்துக்கொண்டுவர ஆசையிருந்தது. ஆனால்நம் பேரப்பிள்ளைகளும் வந்து கால் வைத்துவிட்டுப் போகும் போது கருப்பும் சிகப்பும் கலந்த அந்த செங்கற்கள் மிஞ்சிநிற்கட்டும் என்று மனம் மாறித்திரும்பி வந்தோம். |
17 comments:
பழைய வரலாற்று படங்களில் வந்த ஊரின் பெயர்களை மீண்டும் படித்தது போல இருக்கு. நல்ல பகிர்வு. மேலும் பயணியுங்கள்.
மிக நல்ல பகிர்வு நண்பா
அதென்ன நூலகத்தை எரிக்கும் காட்டுமிராண்டித்தனம்.நூற்றாண்டுகள் கடந்த பின்னும்,யாழ்ப்பான நூலகத்தை எரித்தது அதே காட்டுமிராண்டித்தனம்.எதிரியின் கலாச்சார மிச்சம் கூட இருக்க கூடாது என நினைக்கும் கேவலத்தை என்ன சொல்வது.மீதமிருக்கும் இடிபாடுகளுக்கு இருக்கும் பெருமை இடித்தவர்களுக்கு இருக்கிறதா என்ன!
பேரர்கள் காலத்தில் ஏதாவது காந்தி நடத்தும் நாளந்தா நட்சத்திர விடுதியில் அதன் replica இருக்கலாம்!
நாலந்தா பற்றிய சிந்திக்க வைக்கும் அருமையான பகிர்வு...
நன்றி
//பற்றி எறிந்த தீயில் இந்திய மெய்ஞானமும்,அறிவியலும்சமூகக் கேள்விகளும் சாம்பலாகிப்போனது.
அந்த இடத்தில் இப்போது ஒரு உயர்நிலைப் பள்ளிகூட இல்லை.//
நாலந்தாவின் இன்றைய நிலையை நினைக்கும் பொழுதே வருத்தமாகத்தான் இருக்கிறது.
//ஒரு மதிப்பெண் கேள்வியாகக் கடந்து போகிற அந்த நாலந்தா மீது கடலைத் தோல்களையும் அது மடித்த காகிதத்தையும் வீசிவிட்டுப் போகின்றனர்.//
பல வரலாறுகளின் இன்றைய நிலை இப்படித்தான் இருக்கிறது.
நல்ல தகவல் பகிர்வு அன்பரே...
நாளாந்தா பல்கலையை அழித்தது, நூலகத்தினை எரித்தது யார்?. குப்தர்களா இல்லை படையெடுத்த
துருக்கிய இஸ்லாமியர்களா.விக்கிபீடியா
கூறுகிறது.இந்த உண்மைகளை சொல்லாமல் எழுதும உங்களைப் போன்றவர்களை முற்போக்கு என்று சொல்வது பின் லாடனை மனித நேயம் மிக்கவர் என்று சொல்வது
போல்தான். போலி மதசார்பின்மை
பேசும் உங்களுக்கு நாளந்தாவை
தாக்கி அழித்தது ஒரு முஸ்லீம் என்று எழுத முடியாமல் போவது ஏன்?.
In 1193, the Nalanda University was sacked by Bakhtiyar Khalji, a Turk;[22] this event is seen by scholars as a late milestone in the decline of Buddhism in India. Khilji is said to have asked if there was a copy of the Koran at Nalanda before he sacked it. The Persian historian Minhaj-i-Siraj, in his chronicle the Tabaquat-I-Nasiri, reported that thousands of monks were burned alive and thousands beheaded as Khilji tried his best to uproot Buddhism and plant Islam by the sword;[23] the burning of the library continued for several months and "smoke from the burning manuscripts hung for days like a dark pall over the low hills."[24]
:( தங்களின் 'ஏன்'கள் யோசிக்க வைக்கின்றன!
பதிவு அருமை.
ஆனால் நிதிஷ்குமார் ஆட்சியில் ஓரளவு பீஹார் மாறி உள்ளது என நினைக்கிறேன்.
நாலந்தா வரை நாம் ஏன் போக வேண்டும், நம் ஊரில உள்ள மதுரை, தஞ்சை, பூம்புகார், காஞ்சி போன்ற ஊர்களில் உள்ள சிறப்பையே நாம் போற்றாமல் , இன்று அங்கு எல்லாம் டாஸ்மாக் , இலவச டி வி.
நன்றி லாவண்யா
நன்றி என் தோழா ஞானசேகர்
நன்றி கதிர்
நன்றி சந்தனமுல்லை
நன்றி பாலாஜி
வேல்ஜி வணக்கம்.
ஒரு நாட்டை அதன் கலாச்சாரத்தை அடியோடு அழிக்கிற கொடூர புத்தி வரலாறு நெடுகிலும் இருக்கிறது.
அது சமீபத்தில் ஈராக்கின் புகழ்பெற்ற நூலகத்தை, யாழ் நூலகத்தை என இன்னும் அழித்துக் கொண்டேயிருக்கிறது.
நான் அழிந்து போன கல்வியியல் குறித்துப் பேசுகிறேன். நீங்கள் இன்னொரு அழிவைப் பற்றிப் பேசுகிறீர்கள்.
பேசலாம். காபூலில் இருந்த மொகலாய மன்னர்களை டெல்லிக்கு மத்தியஸ்தம் பண்ண அழைத்து வந்தது யார். அதுவும் வராலாறு தான் அது பேசப்படுவதில்லையே ஏன். வாஸ்கோட காமா வுக்குப்பிறகு இரண்டாம் முறையாக கோழிக்கோடு வந்த யூதர்களுக்கு பதின்மூன்று அரச மரியாதைகளைப் பட்டயம் எழுதிக்கொடுத்தது யார் ? . திரும்பிப்போன பாபரை அழைத்து வந்தது யார். எல்லோருக்குப் பக்கத்திலும் மதி மந்திரிகளாய் இருந்தவர்கள் யார் ?. இன்றைக்கும் கூட மைசூர் அரண்மனைக்குள்
சகல மரியாதைகளுடன் ஒரு தேவாலயம் இருக்கிறதே அதைப்பராமரிப்பது யார் ? .
ஊர் ஒற்றுமையாக இருந்தால் கடவுள்கூட கடவுச்சீட்டு இல்லாமல் நுழைய முடியாது. ஊர்ல பிரச்சினை என்றால் தாட்டிக்கமான சாதிக்காரரைக் காவலுக்கு வைத்துக்கொள்ளுகிற வழக்கம் எப்படி வந்தது ?. பாவம் படிப்பறிவு இல்லாத ஜனங்களை அவர்கள் ஆங்கில சரித்திர புத்தகங்கள் படிக்கமாட்டார்கள் என்கிற மதர்ப்பில் என்னென்ன புருடாவிடமுடியுமோ விடுங்கள்.
எல்லாவற்றையும் காலம் தீர்க்கமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.
அன்பிற்கினிய குப்பன் யாஹூ சார் வணக்கம்.
வெறும் ஐந்து ரூபாய்க்கு ரிக்சா ஓட்டும் தொழிலாளிகள். சாலைகளே இல்லாத கிராமங்கள். நிஜமாகவே குதிரையில் வந்த ஜமீந்தார், மாலை ஐந்து மணிக்குமேல் வண்டி ஓட்டமாட்டேன் என்று சொன்ன சுமோ ஓட்டுனர் எல்லாமே ஒன்றரை வருடத்திற்கு முன்னாள் பார்த்தவை. அதற்குள் மாற்றம் நிகழ்ந்திருந்தால் ஆரத்தழுவிக்கொள்ளலாம் மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்களை. ஆனாலும் என்ஹச்ஏஐ எனும் பெயரில் நடக்கிற ந்நாற்கர சாலையின் இருமருங்கிலும் பீகாரிகளின் வியர்வைகளே
தெப்புத்தெப்பென்று நிறைந்து கிடக்கிறது.
மாமா!நல்ல பகிர்வு...அந்த இடிபாடுகளுக்குள் மீண்டும் போய் வந்தது போல் உள்ளது.அந்த பயணத்தின் முடிவில் நமக்குள் இருந்த அந்த வெறுமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.....மீண்டும் வெறுமை....
எங்கு பயணம் என்றாலும் எழுதணும் எனும் முனைப்பு யார் தருகிறார்கள் தோழர்?எழுத்துக்கென பிரியும் பார்வையையும்!..அருமையான பதிவு காமராஜ்.இன்னும் உங்கள்,சிரிப்பில் இருந்து விடுபடவில்லை...அளவெடுத்து தைத்தது மாதிரியான ஒரே மாதிரியான பாலம்,பாலமாய் வெட்டும் சிரிப்பு,நண்பர்கள் இருவருக்கும்...இதில் ரொம்ப முக்கியம்.."இந்தா மாதவன் இப்பத்தான் வண்டியை நிறுத்திட்டு உள்ள போறான்"...என்று பேசிக்கொண்டிருப்பவர்களுக்கான ஜன்னல் திறப்பு பிரித்தியகமானது..பேச்சு,சிரிப்பு,எழுத்து,பயணம்,பார்வை,...என்ன சொல்லட்டும் மக்கா...
நல்லா இருக்கணும் எல்லாரும் என்பதை தவிர..
Post a Comment