5.11.10

தீபாவளியின் வரலாற்றுப் பின்னணி -எஸ்.ஏ.பெருமாள்

எங்கள் ஆசான்,யதார்த்தத்திற்கும் மார்க்க்சீயத்திற்கும் ஊடுசரடாய் விளங்கியவர். எண்பதுகளில் காமராசர் மாவட்டத்து மத்தியதர உழைக்கும் மக்களின் மத்தியில் ஒரு மூத்த சகோதரனின் வாஞ்சையோடு மார்க்சீயத்தை அறிமுகப்படுத்தியவர். இசை, இலக்கியம்,கதை,காமம்,காதல் குறித்து தோளில் கைபோட்டுப்பேசிய ஒரு மாவட்டச் செயலாளர்..ஜோக்கடிக்கிற மார்க்சீயவாதி. ஜோக்கை ரசித்து வெடித்துச் சிரிக்கிற கம்யூனிஸ்ட். எங்களுக்கெல்லாம் ஒரு நடமாடும்  'வாழ்கா முதல் கங்கைவரை' புத்தகமானவர். எங்கள் தோழர்.
' எஸ் ஏ பி ' யின் தீபாவளி இது . அவசியம் படிக்கணும்


தமிழகத்தில் ஆரம்பக் காலத்தில் பண்டமாற்றில் ஈடுபட்டு வந்தவர்கள் நாள டைவில் வணிக வர்க்கமாய் உயர்ந்தனர். வளர்ச்சிப் போக்கில் தமிழகத்தில் வணிகர் கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுக ளோடும் வணிகம் செய்தனர்.

வணிகம் பெருகப் பெருக துறைமுகங்கள், நகரங்கள் உருவாகி வளர்ந்தன. வணிகர்கள் செல்வத்தில் திளைத்தனர்.

“கலம் தந்த பொற்பரிசம்” என்றும் “யவ னர் தந்த வினைமாண் நன்கலம் பொன் னொடு வந்து கறியொடு பெயரும்” என்று புறப்பாடல்கள் கூறுகின்றன. வணிகர்கள் செல்வத்தில் திளைத்ததால் “மன்னர் பின் னோர்” ஆகி அரசருக்கு நிகராயினர். போடி நாயக்கனூரிலும், சென்னை மாம்பலத்திலும் கிடைத்துள்ள பொன் நாணயங்கள் மீன் இலச் சினையோடு உள்ளன. இவற்றைப் பாண்டிய நாட்டு வணிகர்கள் வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வணிகர் தம் பெருமை களை சிலப்பதிகாரமும் மதுரைக்காஞ்சியும் செப்புகின்றன.

தங்கள் வளர்ச்சிக்குத் துணை நின்ற சமணத்துறவிகளுக்கு மடங்கள், பள்ளிகள், குகைகள், குடவரைகள் உருவாக்க வணிகர் கள் உதவினர். செல்வ வளம் பெற்று, சமூகச் செல்வாக்குப் பெற்ற வணிகர்களைப் பின்பற் றிப் பொதுமக்களும் சமணத்தைத் தழுவினர். இதனால் அரசர்களும் சமணத்தைத் தழுவி டும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வணிகர்கள் உற் பத்தியில் நேரடியாய் ஈடுபடாதவர்களாவர். வேளாளரே நிலவுடமையாளராய் உற்பத்தி யைக் கையில் வைத்திருந்தனர். இவ்வேளாண் பெருமக்களின் வீடுகளில் உணவு தானியங் கள் மலைபோல் சேமித்து வைக்கப்பட்டிருந் தன. நிலக்கிழார்களான வேளாளரில் அரசர் களுக்கு ஆதரவாகப் படைதிரட்டி ஆள் அனுப்பி உதவினர். “படை வேண்டுழி படை யுதவியும் - வினை வேண்டுழி வினையுதவி யும் செய்ததாய்” புறப்பாடல் கூறுகிறது.

கடவுளை மறுத்த சமயங்களான புத்த, சமண சமயங்களை வளர்த்ததில் வணிகர் கள் பங்கு மகத்தானது. நாட்டுப்புறத்தெய்வங் களுக்கு ஏராளமான சிலைகள் வைக்கப் பட்டு, ஒவ்வொரு சிலையின் பேராலும் பூசா ரிகள் ஆடு, மாடுகளைப் பொதுமக்களிடம் பலியாய் கேட்டனர். இந்தக் கொடும் சுரண் டலிலிருந்து மீள மக்கள் புத்த, சமண சமயங் களில் கூட்டம் கூட்டமாய் சேர்ந்தனர். வணி கர்களின் தயவில் புத்த மடாலயங்களும் நிறு வப்பட்டன. நாகையில் பெரும் புத்த விகார் நிறுவப்பட்டிருந்தது.

சமூகத்தில் வணிகர்கள் ஒரு வர்க்கமாய் உருவெடுத்தனர். வணிக வர்க்கத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையே முரண் பாடுகள் வளர்ந்தன. இந்த இரு பெரும் பிரிவு களும் தமது நலன் கருதி ஒருமித்தும் சென் றன; மோதவும் செய்தன. உற்பத்தியில் ஈடு பட்ட வேளாளரும், அந்த உற்பத்திப் பொருட் களைப் பரிமாற்றம் செய்த வணிகர்களும் சமூகத்தில் அருகருகேதான் வாழ்கின்றனர். இரு பிரிவினருக்குமே அரசனிடத்தில் செல் வாக்கு உண்டு. இருவரும் தமது முரண்பாடு களை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத் தினர். இந்த முரண்களையும் மோதல்களை யும் சிலப்பதிகாரம் பிரதிபலிக்கிறது.

பொதுவாக ஆளும் வர்க்கங்களின் கருத் துக்களையே மதங்கள் கூறி வந்துள்ளன. மனிதகுல வரலாற்றில் முரண்பட்ட இரு வர்க் கங்கள் சேர்ந்தே வாழ்கின்றன. ஒன்றோ டொன்று போராடுகின்றன. முரண்பாடு முற் றும் போது அது பகை வடிவமாய் வெளிப்படு கிறது. ஒரு காலத்தில் பாங்கறிந்து பட்டிமண் டபம் ஏறித் தங்கள் கருத்து முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டனர். முரண்பாடு பகையான தும் “அனல் வாதங்களும் புனல் வாதங்களும் எழுந்தன. அதில் தீர்க்க முடியாது போய் “கழு வேற்றங்களில்” முடிந்தது.

இதுவரை உற்பத்திப் பொருட்கள் மீது மட் டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த வணிக வர்க் கம், உற்பத்திச் சாதனமான நிலங்களையே பறித்து மதபீடங்களுக்கு வழங்கியது. வேளா ளர்களின் நிலங்களை மதப் போர்வையில் பறிக்கும் போது பகை முரண்பாடு முற்றுகிறது.

தங்கள் நிலங்களை மீண்டும் மீட்டு, உற்பத்தியில் தாங்கள் இழந்த கட்டுப்பாட்டை நிலை நிறுத்தும் முயற்சியில் வேளாளர்கள் இறங்கினர். சமண மதப் பிடிக்குள் இருந்த அர சர்களையும் குறுநில மன்னர்களையும் தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்தனர். எனவே கருத்துலகிலும் தங்கள் போராட்டத்தை நடத்த களமிறங்கினர்.

பொருளாதார அடித்தளத்தில் மேலிருந்த மேற்கட்டுமான இலக்கியம், மொழி, இசை, தத்துவம், மதம் போன்ற பல அம்சங்களில் வணிகர்களுக்கு எதிரான போராட்டமே சம ணத்திற்கு எதிரான போராட்டங்களாய் மாறின. வணிக வர்க்கத்துக்கு எதிரான நிலப்பிரபுத்து வத்தின் பொருளாதாரக் குரோதம் சமண சம யத்திற்கு எதிரான போராட்டமாய் உருவெடுத் தது. அடித்தளம் மேற்கட்டுமானத்தைத் தகர்த்துப் புத்துருவாக்கம் செய்தது எனலாம்.

சமணம், கடவுளை மறுத்தது. பந்தங்களி லிருந்து விடுபட்டு மோட்சமடைந்த உயிரே கடவுளாகும். உயிர்களைக் கடவுள் படைக்க வில்லை. உயிர்கள் தமது சொந்த முயற்சி யாலே மோட்சம் எய்த முடியும். இதுவே உயி ரின் இயல்பாகும் என்பதே கடவுள்- உயிர் குறித்த சமணக் கோட்பாடாகும். இதை சைவம் கடுமையாய் எதிர்க்கிறது. இறைவன் உயிர்களுக்காகவே உலகைப் படைத்தான். உயிர்களின் கர்மத்தைப் பக்குவப்படுத்தி அறியாமை, ஆணவமயத்தைப் போக்குகி றான். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழில்களும் உயிர்களின் பொருட்டு இறை வனால் நிகழ்த்தப்படுகின்றன என்றது சைவம்.

சிலர் உயர் குடியாய் வணிகராய் வாழ்வதற் கும், பெரும்பாலோர் கூரைக்குடியாய் ஏழ்மை யில் வாழ்வதற்கும் அவர்தம் வினைப்பயனே காரணம் என்று சமணம் கூறியது. ஏழ்மை யில் வாழ்தல் வினைப்பயன் என்று கூறி அவர்களைச் செயலற்றவர்களாக்கியது. சிலப் பதிகாரம் கூட ஆள்வினையை விடச் சூழ்வி னையே வலிமையானது என்று கூறுகிறது. சமணர் என்று கருதப்படும் திருவள்ளுவர் கூட வினைக் கோட்பாட்டை வலியுறுத்து கிறார். இதற்கு எதிர்க் கோட்பாட்டை நிறுத்த வேண்டிய அவசியம் சைவத்துக்கு ஏற்பட் டது. மக்களைச் செயலிழக்கச் செய்யும் வினைக் கோட்பாட்டினை அடிப்படையில் தகர்ப்பது தங்களுடைய வர்க்க நலனுக்கும் எதிரானது என்று சைவர்கள் கருதினர். இத னால் வினையை எதிர்க்காது, அவர்கள் வினையின் முதன்மைத்தன்மையை மட்டும் எதிர்க்கின்றனர். வினைக்கும் மேலாய் இறை வனை நிறுத்தினர். வினையின் வெம்மைத் தன்மையை நீக்கி இறைவனின் கருணைத் தன்மையை வைத்தனர். இறைவனை வணங்கினால் வினைகள் அகலும் என்று பிரச்சாரம் செய்தனர்.

பக்தி இயக்கம் கண்ட நாயன்மார் தமிழ் மொழிக்கு ஏற்றம் கண்டனர். தத்துவவாதிகள் எல்லாக்காலங்களிலும் மொழியை ஒரு சிறந்த கருவியாய் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல் நாயன்மாரும் தமிழின் புகழைப் பாடியே தமது தத்துவங்களைக் கூறினர். மொழி செவிவழியோடி, கண் வழிகண்டு மனிதரின் மனத்தை நிறைக்கிறது. தமிழைப் புகழ்ந்து அவர்கள் அதற்குத் தெய்வத்தன்மை கொடுத்தனர். தமிழையே தாய்த் தெய்வமாக் கினர். “மறையிலங்கும் தமிழ்” என்றும், “தவம் மல்கு தமிழ்” என்றும் பாடிப் புகழ்ந்தனர். இதன் மூலம் சமணரின் வடமொழி, பிராகிருத மொழிகளை எதிர்த்து நின்றனர். தமிழை ஏற்றிப் போற்றி மக்களை உணர்ச்சி வெள்ளத் தில் ஆழ்த்தினர்.

தமிழையும் புலமையையும் கடவுளாக்கி யது போல் கடவுளையே புலவராகவும் தமிழ் மேதையாகவும் ஆக்கினர். இதை சிவனுக் கும் நக்கீரனுக்கும் நடந்த சொற்போரினால் அறியலாம். சமண சமயத்தின் தர்க்கவியல் அணுகுமுறையான எரிந்த கட்சி, எரியாத கட்சிப் பட்டிமண்டபங்களைச் சைவரும் தொடரவேண்டிய அவசியம் இருந்தது. இது ஏற்கனவே இருந்த தமிழர் சிந்தனை மரபைப் பின்பற்றியதாகும்.

போராட்டங்கள் நடைபெறும் போது அவற் றின் ஏற்ற இறக்க திசைவழிக்கேற்ப கருத்துக் களும் மாறுதல் அடையும். கி.பி. ஏழாம் நூற் றாண்டில் உருவான சங்கம் அதற்குப் பின்பு வந்த சமண சமய எதிர்ப்பாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்டது. நூற்றாண்டுகளில் கால மாறுதலுக்கேற்ற கருத்துக்களும் வளர்க்கப் பட்டன. கி.பி.8ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டாள், திருமங்கையாழ்வார் போன்ற வைணவக்கவிஞர்களாலும் , கி.பி 9ம் நூற் றாண்டில் மாணிக்க வாசகராலும் வளர்க்கப் பட்டது.

பொன்னையும் பொருளையும் குவித்து பண்ட மாற்றில் மட்டுமே ஈடுபட்டு, உற்பத்தி யையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வணிக வர்க்கம் வீழ்ச்சியடைந்தது. வேளா ளர் வர்க்கம் வெற்றி பெற்று உற்பத்தியையும் பங்கீட்டையும் தானே செய்தது. பொருளியல் ஆதிக்கம் வேளாளர் கைக்கு வந்தது. சமயப் போர்வையில் வணிகர்கள் கைப்பற்றிய நிலங் களை வேளாளர்கள் பரந்த மக்கள் சக்தியைத் திரட்டி மோதி வெற்றி பெற்று மீட்டுக்கொண்ட னர். ஒரு காலத்தில் கோலோச்சிய சமண, பவுத்த சமயங்கள் அடியோடு வேரறுக்கப்பட்டு சைவமும், வைணவமும் தமிழகத்தில் தழைத்தன.

பவுத்த ஆலயங்கள் வைணவக் கோவில் களாய் மாற்றப்பட்டன. புத்தரின் அனந்த சயனச் சிலைகள், பள்ளிகொண்ட பெருமா ளாக்கப்பட்டது. அதே போல் சமணக் கோவில்களும் பள்ளிகளும் சிவ, முருகக் கோவில்களாய் மாற்றப்பட்டன. பவுத்த, சமணத் திருவிழாக்கள் வைதீக மதத்தால் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டது. அதில் ஒன்று தான் தீபாவளியாகும்.

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

எனது ஆசான் சொன்ன வரலாறு.

நரகாசுரன் என்ற கொடிய அரசனின் இருண்ட ஆட்சி நீங்கி வெளிச்சம் பிறந்த நாள் தீபாவளி நாள் என்பது

venkat said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

hariharan said...

தீபங்களின் வரிசை தான் தீபாவளியாக மாறிவிட்டது, அதற்கு பல கதைகள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கதை. ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து திரும்பிய நாளை சில இடங்களில் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

பெரியார் பார்வையில் நம்முடைய இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் தேவ-அசுர யுத்தம். அது அந்த காலகட்டத்தில் வாழ்ந்த இன்க்குழு மோதல்களின் கதை. தோற்ற இன்க்குழுக்களும் இன்று வெற்றிபெற்றவர்களின் பண்டிகைகளை கொண்டாடுகிறோம்.

எப்படியானலும் பண்டிகை என்பது மக்களின் ஒற்றுமைக்காக இருந்தால் சரி.

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பின் தோழா..........

தீபாவளிப் பண்டிகை சமணர்களின் எச்சங்களில் ஒன்று என்பதை நீண்டகாலமாக கூறிவருகின்றேன்.
மகாவீரரின் நினைவு நாளை கொண்டாடும் விதமாக மக்கள் தீப ஒளி ஏற்றி வழிபட்டிருக்கலாம். பின்னாளில், இந்துத்துவ அயோக்கியர்களால் நரகாசுரன் கதை பின்னப் பட்டிருக்கலாம்.

இலக்கியங்களில் எந்த இடத்திலும் இப்பண்டிகை குறித்து பேசப்படவில்லை.

சமய இலக்கியங்களில் கூட ஐப்பசி தீபாவளி குறித்து பேசப்படவில்லை.

ஐப்பசி ஓணத்திருவிழா காணோது போதியோ பூம்பாவாய்-
கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்-
திருஞான சம்பந்தர்

மார்கழித் திங்கள் மதிநிறை நன்னாளாம்- ஆண்டாள்

சைவ வைணவ தீப ஒளி வழிபாடு கூட மார்கழி மாதப் பவுர்ணமியில் தொடங்கி தை முதல் வரை கொண்டாடப்பட்டிருப்பதை அறியமுடியும்.

நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

இதைத் தவிர மற்ற விடயங்களில் தோழர் பெருமாள் அவர்களின் கருத்துக்களோடு பெரிதும் மாறுபட வேண்டிருக்கிறது.

கி.மு.3ஆம் நூற்றாண்டில், சந்திர குப்த மெளரியன் காலத்தில், சமண முனிவர் பத்திரபாகு கருநாடக மாநிலம் சரவணபெளகொளா வழியாக கொங்குநாட்டுக்குள் தான் முதன் முதலில் நுழைந்தனர். பின்னர் தான் சோழ, பாண்டி, தொண்டை நாட்டிற்குச் சென்றது என்பது சரித்திர ஆய்வாளர்கள் பலரும் ஏற்ற கருத்து.

கொங்கு நாட்டில் சமணர்கள் எச்சங்கள் இன்றும் இருப்பதை காண முடியும். விசய மங்கலம் சமணப் பள்ளிகள் இன்றும் இருப்பதை பார்க்க முடிகிறது. புரட்டு இத்துத்துவ வாதிகள் சமண கொள்கைகளை, பள்ளிகளை, விழுங்கி ஏப்பம் விட்டு, சமண தீர்த்தங்கர்களையும் இந்து கடவுள்களாக்கி, அவர்களுக்கும் பூணூலும், நாமமும் போட்டுவிட்ட கதையைச் சொல்லத் தொடங்கினால் நாட்கள் பல எடுக்கும்.

வணிகச் சமூகங்களுக்கும், நில உடமைச் சமூகத்திற்கும் ஏற்பட்ட மோதல்கள் குறித்துப் பேசியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

சமண சைவச் சண்டைகளின் அடிப்படை மதவாதமே தவிர, சமூகங்களுக்கிடையே நடந்த மோதல்களின் வெளிப்பாடு என்பதை ஏற்க இயலவில்லை.

வணிகச் சமூகங்கள் என்பது ஏதுமில்லை. வேளாளர்களில் ஒரு பகுதியினரே உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்தும் வேலையைச் செய்தனர் என்பது கீழ்க் கண்ட பாடல்களால் விளங்கும்.

”வளம் பெற வாழ்வே ளாளர் வைசியர் தம் பொதுப் பேராறாங் ”

” வந்தகோ வலருடன்கோ வர்த்தன ரிப்பர் முப்பேர்
முந்துகோ வைசியரென்று மொழிந்திடும் வணிகர் நாய்கர்
தந்தநூற் பரதர் முப்பேர் தனவைசியர்கே சாற்று
முந்து பூ வைசியர் முப்பேருழவர் மேழியர் வேளாளர்”

9 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் இந்த வர்ணாசிரமக் கொள்கைகளெல்லாம். அதற்கு முன் இவையெல்லாம் இருந்தற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.

//வணிக வர்க்கத்துக்கு எதிரான நிலப்பிரபுத்து வத்தின் பொருளாதாரக் குரோதம் சமண சம யத்திற்கு எதிரான போராட்டமாய் உருவெடுத் தது. அடித்தளம் மேற்கட்டுமானத்தைத் தகர்த்துப் புத்துருவாக்கம் செய்தது எனலாம்.//

கொங்கு மண்ணில், வேளாளர்களாலேயே சமணம் வளர்க்கப் பட்டது. இதற்கு காரணம் மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.

//இதன் மூலம் சமணரின் வடமொழி, பிராகிருத மொழிகளை எதிர்த்து நின்றனர். தமிழை ஏற்றிப் போற்றி மக்களை உணர்ச்சி வெள்ளத் தில் ஆழ்த்தினர்.//

சமணர்கள் அடிப்படையில் வடமொழி சார்ந்தவர்களாக இருப்பினும், தமிழுக்கு அவர்கள் ஆற்றிய பணி அளவிடமுடியாதது.

சமணர்களின் தமிழ் பணி காரணமாக நமக்குக் கிடைத்த நூல்கள்:

இலக்கியம்:

1. பெருங்கதை
2. சீவக சிந்தாமணி

இலக்கண நூல்கள்:

1. நேமிநாதம்
2. வச்சணந்தி மாலை
3. நன்னூல்

உரை:

1. நன்னூல்- மயிலைநாதர் உரை
2. சிலப்பதிகாரம்-அரும்பத உரையாசிரியர் உரை
3. சிலப்பதிகாரம்- அடியார்க்கு நல்லார் உரை

வரலாற்று இலக்கியம்:

கொங்கு மண்டல சதம்

நீதிநூல்:
கல்வி ஒழுக்கம்

நன்றி: கல்வெட்டறிஞர் புலவர். செ.இராசு அவர்களின் “கொங்குநாடும் சமணமும்”.

//இதுவரை உற்பத்திப் பொருட்கள் மீது மட் டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த வணிக வர்க் கம், உற்பத்திச் சாதனமான நிலங்களையே பறித்து மதபீடங்களுக்கு வழங்கியது. வேளா ளர்களின் நிலங்களை மதப் போர்வையில் பறிக்கும் போது பகை முரண்பாடு முற்றுகிறது.//

வணிக வர்க்கத்தின் உதவியால், வேளாளர்களின் விளைநிலங்கள் சமண பீடங்கள் கைப்பற்றியதாகக் கூறியது அடிப்படை ஆதாரமற்றது. பிச்சை பாத்திரம் கூட வைத்திருக்காமல், வெறும் கைகளால் பிச்சை பெற்று உண்டவர்களை இப்படி சொல்லியிருப்பது வருந்தத்தக்கது.

சமண மதத்தின் அழிவிற்கு அடிப்படைக் காரணம், ஆட்சியாளர்களும், அவர்கள் சார்ந்த இந்து மத தீவிரவாதிகளுமே.

இங்கு இதை வெளியிடும்போது, உங்கள் இடுகையின் அடிப்படை நீர்த்துப் போகும் என்று நினைத்தால், இதை வெளியிட வேண்டாம்.

அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்.

சாமக்கோடங்கி said...

ஆஹா... இந்த ப்ளாக் என்ற ஒரு விஷயம் இல்லாவிட்டால், இத்தனை தமிழ் தெரிந்த வரலாறு தெரிந்த மக்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டாமல் போய் இருக்கக்கூடும்..

ப்ளாக் உலகிற்கு நன்றி..

ஆரூரன் விசுவநாதன் அவர்களுக்கும் ஒரு நன்றி..

Unknown said...

உங்கள் ஆசானுக்கும் உங்களுக்கும் வணக்கம்.